"உனக்கு பிரசவமா? எனக்கு பிரசவமா?''

"உனக்கு பிரசவமா? எனக்கு பிரசவமா?''

அன்று காலை, ‘முதுகு வலிக்கிறது, சிறிது பிடித்து விடுங்கள்’ என்றார்  எனது நிறை மாத கர்ப்பிணி மனைவி.  நானும் அன்று நடக்கவிருக்கும் சம்பவம் உணராமல் “இது எப்பவும் வர வலிதான்” என்று கூறியபடி மசாஜ் செய்துவிட்டு எனது காலை கடமைகளை முடித்துவிட்டு அலுவலகத்துக்கும் சென்றுவிட்டேன்.

பிறகு சுமார் 9:30 மணி அளவில் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. ‘வலி அதிகமாக இருக்கிறது, உடனே மருத்துவமனை செல்ல வேண்டும், விரைந்து வாருங்கள்’ என எப்பொழுதும் போல் அமைதியாக கூறினார். நான் பதறி அடித்து ரயிலில் செல்வதா அல்லது கேபில் செல்வதா என்று ஓரிரு நிமிடங்கள் யோசித்து காலைப் போக்குவரத்து நெரிசலை கணக்கில்கொண்டு, ரயிலில் செல்வதுதான் சரி என்று ஒரு மைல் தொலைவில் உள்ள ரயில்வே நிலையத்தை நோக்கி ஓடினேன். லோக்கல் ரயில் உடனே கிடைக்க இருபது நிமிடத்தில் வீட்டிற்கு வந்து சேரும் பொழுது மனைவியும் எனது பெற்றோரும் பையும் கையுமாக மருத்துவமனைக்குச் செல்ல தயாராக இருந்தார்கள்.

கன்சல்டேசன் மருத்துவமனை வீட்டிலிருந்து ஐந்து நிமிட கார் பயணம்தான். அங்கு இருந்த மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு குழந்தை எப்போழுது வேண்டுமானாலும் பிறக்கும். உடனே உங்கள் பதிவு செய்துள்ள மருத்துவமனைக்கு (registered nursing hospital) செல்லுங்க என்று முடுக்கிவிட்டார்.

ஓ மேன்!... முதுகு வலி பிரசவலியாக மாறிவிட்டதைப் பற்றி பேசிக் கொண்டே இருபத்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனை நோக்கி விரைந்தோம். சுமார் பாதி தூரம் சென்றிருப்போம். என் மனைவி ஏதோ ஈரமாக இருக்கிறது, பனிக்குடம் உடைந்துவிட்டது என்று நினைக்கிறேன் என்று கூறினார். ஓ மேன்..! பதற்றம் என் பெற்றொருக்கும் தொற்றிக் கொள்ள ஆஸ்பிட்டல் செல்வதற்குள் ஒன்றும் ஆகக் கூடாது என்று பதறிக் கொண்டே விரைந்தோம். நல்ல வேளையாக வலியையும் பதற்றத்தையும் பொறுத்துக் கொண்டு எந்த அசம்பாதவிமும் ஆகாமல் ஆஸ்பிட்டல் வந்து சேர்ந்து பனிக்குடம் உடைந்த விபரத்தை வரவேற்பு அறையில் கூற, அவர்களுக்கும் பதற்றம் பற்றிக் கொள்ள உடனே அட்மிட் செய்து வீல் சேரில் அமரவைத்து நேரடியாக ஆப்ரேஷன் தியேட்டருக்கு ஓடினார்கள்.

சிறிது நேரம் கழித்து நர்ஸ் ஒருவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். நான் என் மனைவி உள்ளே போன வேகத்தை வைத்து குழந்தை பிறந்துவிட்டது. அதை தெரிவிக்கதான் வருகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் “பிரசவத்தின்போது உங்கள் மனைவி நீங்களும் அவருடன் இருக்க விரும்புகிறார். உடனே வாருங்கள்” என்று கூறினார். நானும் ஒரு புது பதற்றத்துடன் அவருடன் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்றேன். அங்கே என் மனைவியை சுற்றி ஒரு மருத்துவர் இரண்டு மூன்று நர்ஸூம் “புஷ்… புஷ்” என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். அவரும் முயற்சி செய்து கொண்டிருந்தார்.

பிறகு நான் வருவதை பார்த்து அனைவரும் ஒரு புன்முறுவல் செய்துவிட்டு மறுபடியும் “புஷ்… புஷ்” என்று சொல்ல, எனது மனைவி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது முயற்சியை செய்ய ஆரம்பித்தார். நேரம் ஆக ஆக நானும் மருத்துவர் மற்றும் நர்ஸ்களுடன் சேர்ந்து கொண்டு “புஷ்… புஷ்” என்று கூறத் தொடங்கினேன்.

சிறிது நேரம் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்… ஆபரேஷன் தியேட்டர் நெடியும் ரத்த வாடையும் சேர்ந்து என்னை கிறுகிறுக்க செய்தது. பிறகு என்ன நடந்தது என்று நினைவில்லை. விழித்துபொழுது என்னை ஆபரேஷன் தியேட்டரில் இருந்த சோபாவில் படுக்க வைத்திருந்தார்கள். சற்று நிதானித்து அமர்ந்தவுடன் நர்ஸ் ஒருவர் ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தார்.  சற்று நிதானித்து சுற்றும் முற்றும் பார்த்தேன். இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று புரிந்தது. மனைவியைப் பார்த்தேன், அவர் பார்வை, “எனக்கு பிரசவமா, இல்லை உனக்கு பிரசவமா?” என்று கேட்பது போல் இருந்தது. அருகில் இருந்த மருத்துவர், “மீண்டும் தொடங்கலாம்” என்று கூறினார். நான் சற்று சங்கடத்துடன் மனைவியின் கையை பற்றிக் கொள்ள “புஷ்” மீண்டும் தொடர்ந்தது. ஒருமணி நேரம் சென்றிருக்கும், ஒரு சிறிய உருவம் வெளி வர தொடங்கியது. மிருகங்களின் பிரசவத்தை பார்த்திருப்பீர்கள் என்றால் அதை போன்றுதான். உலகில் பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் சமம் என்று உணரும் தருணம். ஓரிரு நிமிடங்களில் ரத்தமும் சதையுமாக ஒரு பிஞ்சுக் குழந்தையை நர்ஸ் மனைவியிடமும் என்னிடமும் காண்பித்தார். அந்த நொடியில் அடைந்த படபடப்பும், ஆச்சரியமும் அடங்க சில நிமிடங்கள் ஆகின. அந்த உணர்ச்சி அடங்குவதற்குள் நர்ஸ் என்னை தொப்புள் கொடி கட் செய்கிறாயா என்று கேட்டார். நான் அதிர்ச்சியுடன் தலையை ஆட்டி, மாட்டேன் என்று கூறினேன். உடனே அவர் வெட்டி கட்டி குழந்தையை ஓரிரு சுண்டு சுண்டினார். குழந்தை அழத் தொடங்கியது. நானும் அழத்தொடங்கினேன். மனைவிக்கு நன்றியையும் வாழ்த்தையும் கூறிவிட்டு என் பெற்றோரிடம் குழந்தையின் பிறப்பை அறிவிக்க அவர்களும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

காலங்கள் பல ஓடிவிட்டன. இன்றும் சில பல சமயங்களில் பிரசவத்தின்போது நான் மயங்கி விழுந்ததால்தான் குழந்தை வெளிவருவதற்கு நேரம் ஆகியது என்று மனைவி என்னை வெறுப்பேற்றுவார். என் காலம் முழுவதும் நினைவு கூற இந்த அனுபவத்தை விட வெறு என்ன வேண்டும்?

(மரவா, அமெரிக்காவில் பணிபுரிகிறார்)

logo
Andhimazhai
www.andhimazhai.com