திரை உலகில் தமிழில் உருவானதைப் போன்ற நகைச்சுவை நடிகர்கள் மற்ற மொழிகளில் இல்லை என்று பலர் எழுதி படித்திருக்கிறேன். தமிழ் நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவின் இடம் மிகவும் தனித்துவமானது.
என்.எஸ்.கிருஷ்ணன், எம். ஆர்.ராதா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி இவர்களை ஸ்டார் அந்தஸ்து கொண்ட நகைச்சுவை நடிகர்கள் எனலாம். இதில் நாடகப் பின்னணி கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன், எம். ஆர்.ராதா, கே.ஏ.தங்கவேலு ஆகியோர் பேசிய கருத்துகளும், வசன உச்சரிப்பும் நகைச்சுவையை உருவாக்கின. சந்திரபாபு , நாகேஷ் இருவரின் உடல் மொழியிலும் ஆங்கில நடிகர்களின் தாக்கம் உண்டு. கவுண்டமணியும் நாடக உலகிலிருந்து வந்தவர்.அவரின் குரல் மாடுலேஷனில் இருந்து பிரதானமாக அவரின் நகைச்சுவை உருவானது. ஆனால் வடிவேலு மிகவும் ஒரிஜினலானவர். அவரின் உடல்மொழி, குரல், முகபாவம், நடக்கும் விதம், கைகளை ஆட்டும் தோரணை எல்லாமே ஒருங்கிணைத்து ரசிகர்களை வசீகரித்து சிரிக்க வைக்கும் மாய வித்தையை அவர் நிகழ்த்தினார். மதுரை வட்டார மொழியின் இயல்புத் தன்மை அவரின் பெரும்பலம். அதனை மொத்த தமிழகமும் ரசிக்கும்படி செய்த வித்தைக்காரர் அவர்.
எளிய மனிதர்களை ரசிக்க வைக்கும் சொற்பிரயோகங்கள் அவரிடமிருந்து கிளைத்தன. `சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?,` வடை போச்சே!’ வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்’ ,’ இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு’, ‘இவன் ரொம்ப நல்லவன்டா’ போன்ற சாதாரண வார்த்தைப் பிரயோகங்கள் வடிவேலுவிடம் இருந்து வருகையில் பெரும் நகைச்சுவைத் தொடர்களாக மாறின. அவை இப்போது மக்களின் பேச்சு வழக்கில் பிரயோகப்பபடுத்தப்படும் ‘applied phrase’ ஆக மாறி விட்டன.
வடிவேலுவின் வளர்ச்சி சீரான, இயல்பான ஒன்றாக இருந்தது நாலு படங்களில் அவர் தனது ஸ்டார் அந்தஸ்தை அடையவில்லை. சிறிய வேடங்களில் வந்த அவர் தேவர் மகன் இசக்கியில் கவனம் பெற்றார். அதன் பின் வி.சேகர் படங்களில் தொடர்ந்து நடித்தார். வெற்று சவடால், கோவை சரளாவிடம் உதை வாங்குல் போன்ற காட்சிகளில் அவரது நகைச்சுவை அம்சம் வெளிப்பட்டு மெருகேறியது. அதன்பின் பார்த்திபன் உடனான அவரது காம்பினேஷன் சில படங்களில் சிறப்பாக அமைந்தது, பாரதி கண்ணம்மா , வெற்றிக் கொடி கட்டு ஆகிய படங்களை குறிப்பாகச் சொல்ல வேண்டும். அதிலும் வெற்றிக்கொடி கட்டு வில் வந்த அந்த துபாய் ரிட்டர்ன் கதாபாத்திரம் வடிவேலு எப்பேர்ப்பட்ட திறமைசாலி என்று உறுதிப்படுத்தியது. ரசிகர்கள் வடிவேலுவைக் கொண்டாடத் தொடங்கினர்.
அதே காலகட்டத்தில் வெளிவந்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் கான்ட்ராக்டர் நேசமணியில் அவர் வெளிப்படுத்திய உடல்மொழியும், வசனங்களும் அவர் ஒரு பிறவி நடிகன் என்பதற்கான நிரூபணம்.
அதன் பின் தொடர்வெற்றிகள். எம்டன் மகன், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. எம்டன் மகன் சித்தப்பா பல வீடுகளில் இருப்பவர். மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.
வெளியே அலட்டல், உள்ளே பயம், வாய்ப்புக் கிடைத்தால் வீரம் காட்டுதல். இல்லையேல் பொத்திக் கொண்டு போவது, பலித்த மட்டும் பார்ப்பது என்று இருக்கும் மனிதர்களின் இயல்பை வடிவேலு தன் பாத்திரங்களில் பிரதிபலித்ததாலோ என்னவோ அவர் நம்ம ஆளு என்ற எண்ணம் ரசிகனிடம் சீக்கிரமே வந்து விட்டது.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி வடிவேலுவின் உச்சம் என்று எனக்குத் தோன்றி இருக்கிறது. அதுவரை நாம் பார்த்த வடிவேலு அந்த பயந்தாங்கொள்ளி அரைக்கிறுக்கு ராஜாவிடம் நூறு சதவீதம் பொருந்திப் போனார். தமிழ் சினிமாவின் ஒரு க்ளாஸிக் இம்சை அரசன்.
அந்த உச்சம் தொட்ட கொஞ்சநாளில்தான் சந்திரமுகி விழா மேடையில் ரஜினி சொன்னார். ‘இந்தப் படம் தொடங்கும்போதே வடிவேலு கிட்ட டேட் வாங்குங்க என்று சொன்னேன்,’ என்று . அந்தத் தேதியில் வடிவேலு தமிழ்சினிமாவில் ரஜினியாலும் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறி இருந்தார்.
அதன்பின்னர் சூழல்கள் மாறாமல், வடிவேலு திசை மாறாமல் ஒரு நடிகராக மட்டுமே தொடர்ந்து இயங்கி இருந்தால் அவர் அடைந்திருக்கக் கூடிய உச்சம் என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று என்று தோன்றுகிறது. அது நிகழவில்லை. ஆனால் வடிவேலு உறுதி செய்த அவர் இடத்தைத் தொட அவர் பின்னால் வந்த எவராலும் முடியவில்லை.
வெறும் சொற்கள் அல்ல
சுனாமி, ஈழம், முத்துக்குமார், தானே, இடிந்தகரை, சென்னைப் பெருமழை, நெடுவாசல், தூத்துக்குடி ஸ்டெர்லைட், வர்தா, விஜயகாந்த், ஒக்கி, ஜல்லிக்கட்டு, அனிதா, கஜா, நீட், கூவத்தூர், தியானம், ஆம்ஸ்ட்ராங், நாதக, மநீம, தவெக, வேங்கைவயல், 2ஜி, கொரோனா, வடக்கர்கள்