"உலகுக்கு ஒளியாக வந்தேன்!"

"உலகுக்கு ஒளியாக வந்தேன்!"

முதல் குழந்தைப் பேறு என்பது எல்லோருக்குமே பரபரப்பையும் நெகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒன்று. இது தொடர்பான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அந்திமழை சார்பாக பலரிடம் கேட்டோம். உள்ளத்தை உருக்கும் அழகான எழுத்துச் சித்திரங்கள் உருவாகி இந்த சிறப்புப்பக்கங்களை அலங்கரிக்கின்றன. -ஆர்.

திருமணமான அடுத்த மாதத்திலேயே என் மனைவி கர்ப்பமானாள். நான் உலகிற்கு ஒளியாக வந்தேன் என்ற தேவவாக்கியம் மனதில் தோன்றியது.

திருமணத்திற்கு முன் இடையறாது பகலிரவாக நீண்ட தொலைபேசி உரையாடலில் கொஞ்சம் காதல், கொஞ்சம் கொஞ்சல், கொஞ்சம் காமம், கொஞ்சம் கவிதைகளோடு சேர்த்து முதல் குழந்தை சம்பந்தமாகவும் மனைவியுடன் உரையாடியிருந்தேன்.

திரைப்பட வாய்ப்புகளுக்கான போராட்டம்,  வெற்றி... இரண்டுமே திருமணத்தை பல காத தூரம் தள்ளிப்போட்டவண்ணம் இருந்தன.

மீளமுடியாத பாலைவன வெம்மையில் தள்ளியது.

முப்பதுகளில் தான் திருமணம் சாத்தியமானது.

பையன் கல்லூரிக்கு போகும் போது, வேலை செய்ய நம் உடலில் வலு இருக்கவேண்டும் என்ற கணக்கை மனைவியிடம் பேசியிருந்தேன்.

பெருங்கொடையாக திருமணமான அடுத்த மாசத்திலேயே மனைவி கருவுற்றாள்.

”இதே வேலையாத் தான் இருந்தீங்க போலயே….முதல் பந்தே சிக்ஸர் தானா” என்று நண்பர்கள், உறவினர்கள் கிண்டல் செய்தனர்.

சென்னை கேகே நகரில் பெண் பிரசவ மருத்துவர் எங்கிருக்கிறார்? யாரிடம் காண்பித்தால் நல்லது என்று தேடியலைந்தேன்.

அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பெண் மருத்துவரின் விளம்பரப்பலகையைப் பார்த்த நினைவு.

மாலை மனைவியை அழைத்து சென்றேன். கர்ப்ப உறுதி வழிகாட்டியின் உதவியுடன் மனைவி சூலுற்றதை உறுதி செய்த மருத்துவர் வாழ்த்துகள் என்று என் கையைக் குலுக்கினார்.

மகிழ்ச்சி துளியுமில்லை.

இரண்டு மாதங்களில் என் முகத்தை கவனித்து என் மனதை வாசிக்க பழகியிருந்த மனைவி “சந்தோசமில்லையா” என்று கேட்டாள்.

“இல்லை இன்னும் அடுத்த படம் கமிட் ஆகல...வேலை இல்ல இந்த நேரத்துல கல்யாணம். இப்ப குழந்தை வேற, புதுப் பொறுப்ப சுமக்க முடியாமன்னு கவலையா இருக்கு” என்றேன்.

கணவனிடம் கோபித்துக் கொண்டு செல்லும் கோடிப்பெண்களோடு ஒரு பெண்ணாக அவளும் சரக்கொன்றை பூத்துக் கிடக்கும் பால்வீதியில் நடக்கத் தொடங்கினாள்.

கணவனின் எந்த சமாதானமும் பெண்களிடம் செல்லாப்பணமாகும். ஆணின் எவ்வித ஆயுதங்களுமின்றி சரணடைந்தேன்.

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். சண்டை, சமாதானம், அமைதி, அன்பு பூக்க இரண்டு நாள்கள் ஆனது.

வெயில் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தேர்வானது. பிலிம்பேர் விருது, தேசிய விருது, தமிழக அரசு விருது என விருதுகள் குவியத் துவங்கின. மாருதி ஸ்விப்ட் காரை இயக்குநர் ஷங்கர் அவர்கள் பரிசளித்தார். அங்காடித்தெரு படம் இயக்க ஒப்பந்தமானேன்.

ஒன்பதாவது மாதம் வரை என் மனைவி என்னுடன் இருந்தாள். விருதுநகரில் வைத்து வளைகாப்பு நடந்து அவள் சாத்தூருக்கு சென்றாள்.

கவிஞர் நா.முத்துக்குமார் பிறக்கும் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தத்தைப் பாதுகாத்து நாளைய ஸ்டெம் செல் சிகிச்சைக்கு பயன்படும் முறையைப் பற்றிச் சொன்னார். நம் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தத்தைப் பாதுகாப்பதே, நாம் நம் குழந்தைக்குக் கொடுக்கக்கூடிய பெருஞ்செல்வம் என்று விளம்பரத் தூதுவர் போன்று அடிக்கடி வலியுறுத்தினார்.நடிகர் சூர்யா தொப்புள் கொடி ரத்தத்தை பாதுகாக்கும் திட்டத்தில் இணைந்துள்ளார் என்ற கூடுதல் தகவல் சொன்னார்.

லைவ் செல் மேலாளர் என்னிடம் கவர்ச்சியூட்டி பேசி சம்மதிக்க வைத்தார். நடுத்தர வர்க்கத்திற்கு இதெல்லாம் பேராசை தான். நம் பணத்தை நம்மிடமிருந்து பிடுங்க இதுவொரு நவீன வழிமுறை. ஒரு லட்சம் கட்டி பதிவு செய்தேன்.

சாத்தூரில் உள்ள பெண் மருத்துவர் என் மனைவிக்கு டிசம்பர் முதல் வாரத்தில் பிரசவம் நடக்கலாம் என்று கூறினார்.

நான் அங்காடித்தெரு கதை நாயகனைத் தேடி திருநெல்வேலி சென்றேன். நடிகர் தேர்வுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான முகங்களில் என் ஜோதிலிங்கம் யாருமில்லை. ஒருவித குழப்பத்துடன் சாத்தூருக்கு வந்தேன்.

நவம்பர் 27 ஆம் தேதி மனைவியுடன் இருந்து விட்டு டிசம்பர் முதல் வாரஇறுதியில் வருகிறேன் என்று கூறிவிட்டு அன்றிரவு சென்னை கிளம்பினேன்.

நான் நவ.28 சென்னை வந்திறங்கி அலுவலகத்தில் வேலைகளை செய்யத்  தொடங்கினேன். நவ 28 மாலை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற என் மனைவியை ஸ்கேன் செய்து சோதித்த மருத்துவர் கர்ப்பப்பையில் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது, உடனடியாக மருத்துமனையில் சேர்ந்து விடுங்கள், வலி வந்து விட்டால் சுகபிரசவம் அல்லது ஆப்ரேசன் செய்துதான் குழந்தையை எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

மனைவி தொலைபேசியில் அழுகையும் கண்ணீருமாக பேசினாள். அவளை சமாதானப்படுத்தினேன். அன்றிரவு மருத்துவமனையில் என் மனைவி சேர்க்கப்பட்டாள். நான் அலுவலகத்திலிருந்து சுழல் காற்றில் பறக்கும் காகிதம் போல கோயம்பேடு வந்து சேர்ந்தேன். தனியார் பேருந்தில் ஏறி சாத்தூருக்குக் கிளம்பினேன்.

கோயம்பேட்டிற்கு வந்த என் உதவியாளர் பேருந்து நிலையத்தில் விற்ற குழந்தைகள் பயன்படுத்தும் கிலுக்கையை வாங்கி பரிசளித்தான், கிலுக்கை கிராமங்களில் பனைஓலைகளில் செய்யப்பட்டிருக்கும், நகரம் பிளாஸ்டிக்கில் செய்து விற்கிறது.

அந்த கிலுக்கையை கையில் வைத்து கொண்டு ஆட்டிக்கொண்டே குழந்தை பற்றிய நினைவுகளுடன் சுகப்பிரசவமாக பிறக்கவேண்டும் என்று வேண்டுதலுடன் பயணத்தைத் தொடங்கினேன்.

காத்திரு மகனே/மகளே அப்பா வந்தவுடன் உன் உலக பிரவேசம் நிகழட்டும் என்று என் வாரிசிடம் காற்றின் வெளியில் பேசினேன். காற்று என் செய்தியை அவன்/ள் காதுகளில் சேர்க்கட்டும்.

இந்த சமயத்தில் மனைவியின் அருகில் ஆதரவாக இருக்கமுடியவில்லையே என்று ஏக்கமும் கவலையும் சொல்லொண்ணாத் துக்கமானது. தொடர்ந்து அலைபேசியில் மனைவியுடன் பேசிக்கொண்டேயிருந்தேன்.

சுகபிரசவம் நிகழ முதலில் பிரசவ வலி வரவேண்டும். வலி பெரும்வலியாக மாறி பனிக் குடம் உடைந்து வலித்து வலித்து பிறக்கும் குழந்தை நம் வாரிசாகும் என்பார்கள்.

ஆனால் இங்கே வலியை உடனடியாக வரவைக்க மருத்துவர் ஊசி போட்டுள்ளார் என்று மனைவி கூறினாள். இரவுக்குள் வலி வராவிட்டால் காலையில் ஆப்ரேசன் தான், மருத்துவர் கூறிவிட்டார்.

வலி வருதா என்று கேட்டேன். ஒரு வலியும் இல்லை…ஒன்பதாவது மாசத்துல எப்படிங்க வலி வரும்? டிசம்பர்ல 10 தேதிக்கு பிறகு தாங்க ஒரிஜினல் டேட் என்றாள்.

கர்ப்பப்பையில் தண்ணீர் குறைவாக உள்ளது என்பதே அவசர பிரசவத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஆலோசனைக்கு கேட்க இன்னொரு மருத்துவர் அருகில் இல்லை. விருதுநகருக்கு இந்த இரவில் துணிந்து யாராவது அழைத்து செல்லவேண்டும் அல்லது மதுரை செல்லவேண்டும். நான் அருகில் இல்லாமல் யாரும் அந்த முடிவு எடுக்க தயங்குவார்கள்.

கையறுநிலையில் என் பயணம் தொடர்ந்தது. இன்னும் ஒருநாள் மனைவியுடன் தங்கியிருந்தால் இன்று மனைவியின் அருகே இருந்திருப்பேன். ஏன் அவசரப்பட்டு சென்னைக்கு வந்தேன் என்று குறைப்பட்டுக்கொண்டேன்

பேருந்து என் மனஓட்டத்திற்கு முன் மிக மெதுவாக ஓடியது.

அந்த பேருந்து புஷ்பக விமானமாக உருமாறி, வேகமாக பறந்து சாத்தூருக்கு சென்று, என் மனைவியின் கைகளை இறுக பற்றியவாறு, அந்த பெரிய வயிற்றில் முத்தமிட்டவாறு என் பிள்ளையிடம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று எத்தனையோ கனவுகள் அந்த இரவை ஆனந்த இரவாக்கியது.

துளி உறக்கமில்லை. பேருந்துக்குள் என் இருக்கையில் அமர மனமின்றி டிரைவர் சீட்டுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டு நிலவு வெளிச்சத்தில் நீண்டு கிடக்கும் தார்ச்சாலையை பார்த்தவண்ணம் வந்தேன். ஒரு நீண்ட கருப்பு மலைப்பாம்பாக அந்த சாலை வளைந்து கிடந்தது.

இப்ப எங்க போயிட்டு இருக்கோம், எப்ப போய் சேர்வோம் என்று விசாரித்தவண்ணம் வந்தேன். அடிக்கடி தொலைபேசி செய்து வலி வந்துடுச்சா என்றேன்.

வலியுமில்ல ஒரு மண்ணுமில்ல… எங்கம்மா, சித்தி, பெரியம்மா, அத்தை, காளீஸ்வரி அக்கா எல்லாரும் வந்திருக்காங்க. உக்காந்து பேசிட்டு இருக்கோம் என்றாள் மனைவி.

வழக்கம் போல பேருந்து திருச்சியைத் தாண்டி திண்டுக்கல் வரும் போதே விடிந்து விட்டது.

விருதுநகரில் உள்ள எங்கப்பா அம்மாவிற்கு போன் செய்து சாத்தூருக்கு கிளம்புங்கள் நான் வந்துகிட்டிருக்கேன் என்ற தகவல் சொன்னேன்.

பேருந்து டிரைவர் மீது கோபம் கோபமாக வந்தது. ஏன் மெதுவாக பேருந்தை இயக்குகிறார்? ஏன் இந்த வாகனநெரிசல் ஆமை போல நகருகிறது? பேருந்துக்குள் தூங்குபவர்கள், சாலையைக் கடப்பவர்கள் மீதெல்லாம் கோபம் கோபமாக வந்தது.

எனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை. எல்லோரும் எனக்கென்னவென்று இருக்கிறார்கள். என்று தோன்றியது.

ஒருநாளில் இந்தியாவில் 67,385 குழந்தைகள் பிறக்கிறார்கள். அந்த அறுபத்தி ஏழாயிரத்தில் உன் குழந்தையென்ன அப்படியொரு அதிசயமா என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

பஸ் மதுரையை நெருங்குவதற்குள் என் மனைவி ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்து செல்லப்பட்டாள். வாடிப்பட்டி என்ற கிராமத்தை பேருந்து கடக்கையில் என் மச்சினன் போன் செய்து உங்களுக்கு பையன் பிறந்திருக்கிறான் என்ற தகவலை சொன்னார்.

ஊறிப்போன ஆணாதிக்க மனநிலை ஆம்பளப்பிள்ளை என்றவுடன் சந்தோசமானது.

மெல்ல மெல்ல பேருந்து சாத்தூரை அடைந்தது அப்படியே ஒரு ஸ்வீட் பாக்கெட் வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கிருஷ்ணா மருத்துவமனைக்கு விரைந்தேன்.

மாடியில் உள்ள சிறிய அறையில் என் உறவினர்கள் சூழ, என் மனைவி இன்னும் மயக்கமாக இருந்தாள். என் அம்மா தன் மடியில் என் மகனை ஏந்தியிருந்தார்கள்.

“இந்தா உன் மகனப்பாரு, விஜிய எங்கன்னு பொறந்திருக்கான் பாரு” என்றார்கள்.

“ரோஸ் கலருல இருக்கான். விஜி மாதிரி கலரா வருவானோ“ என்று அங்கிருந்த செலம்பர அத்தை கேட்டார்கள்.

“குஞ்சா மணிய பாரு, கருத்து கெடக்கு. பாலன் மாதிரி கருப்பா தான் வருவான்” என்றாள் சீதை ஆச்சி…

கருப்போ செவப்போ ஆயுசு கெட்டியா பொழச்சு கெடந்தா சரி தான் என்றாள் பொன்னாச்சி.

என் பெயரன் அவுங்கப்பன விட நல்லா படிச்சு ராசா கணக்கா இருப்பான் என்றாள் அம்மா.

சிணுசிணுவென்று ஒரு காதுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் சிணுங்கினான் என் மகன்….

அப்படியே அவ ஆத்தாவோட வட்ட முகம், உருட்ட கண்ணு, யாரு வந்துருக்கான்னு பாரு, உங்கப்பாடா, யாரு வந்துருக்கானு பாரு உங்கப்பாடா செல்லக்குட்டி…இந்தா உன் பையன கைல வாங்கு என்று அம்மா குழந்தையை என் கைகளில் திணித்தாள்.

அந்த பச்சிளம் குழத்தை புத்தம்புது ரத்தச்சிவப்பாக என் கைகளில் இருந்தது. என்ன விதமான உணர்ச்சி அது என்று தெரியவில்லை.

அப்பாவாகிட்டேன் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் எந்த உணர்ச்சியும் மனசுக்குள் மேலெழுந்து வரவில்லை. பூனைக்குட்டியை கையில் ஏந்தியது போன்ற உணர்வு எழுந்தது. அவன் கை கால்களை மெல்லியதாக அசைக்கத் தொடங்கினான்.

சீனித்தண்ணியை என் கையில் தந்த என் அம்மா “பையன் வாயில உன் கையால குடுப்பா” என்றாள். சீனித்தண்ணியை தொட்டு அந்த சின்னஞ்சிறு உதடுகளில் வைத்தேன்.

வாழ்க்கை முழுக்க இந்த இனிப்பு போல இனிச்சு கிடக்கட்டும் மகனே, துக்கத்தின் சாயல் உன் மீது படாது இருக்கட்டும்… ஆனந்தத்தின் மழை உன் மீது இடையறாது பெய்யட்டும் என்று இறைவனிடம் வேண்டிகொண்டேன்.

குழந்தை லேசாக சிணுங்கியது.

எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. எங்காவது தொலைதூரமாக சென்று யாரும் பார்க்காத அடர் கானகத்திற்கு சென்று அழவேண்டும் என்று தோன்றியது.

அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு பாலகனை பாலன் பார்த்தவண்ணம் இருந்தான்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com