’சந்தர்ப்பவாதம்’ என்ற வார்த்தையை எப்படி நமது வாழ்க்கையில் எடுத்துக் கொள்கிறோம்? யாரையாவது பார்த்து ‘இந்த நபர் ஒரு சந்தர்ப்பவாதி’ என்று நாம் நினைக்கிறோம் என்றால், ஒரு குறிப்பிட்ட தருணத்தை எடுத்துக்கொண்டு டக்கென்று நமக்கு எதிராக ஏதோ ஒரு செயலையோ கருத்தையோ மடாரென்று அந்த நபர் உடனே செய்துவிட்டார் என்பதே பொருள். அது நம்மை நிலைகுலைய வைக்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நம்மைச் சுற்றி இப்படி எங்கு பார்த்தாலும் சந்தர்ப்பவாதம் தலைவிரித்து ஆடும்போது தமிழ் சினிமாவில் மட்டும் அது இல்லாமல் இருக்குமா?
சந்தர்ப்பவாதத்தில் அனைத்துப் பாலினமும் சமமே என்பதால் முதலில் இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்களைப் பற்றி பார்த்துவிட்டு மேலே செல்வோம்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய முதல் படமான ஆரண்ய காண்டத்தில், சுப்புலட்சுமி என்கிற சுப்பு என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் யாஸ்மின் பொன்னப்பா நடித்திருப்பார். இந்த சுப்பு எப்படிப்பட்ட கதாபாத்திரம்? சிங்கப்பெருமாள் என்கிற அய்யாவிடம் சிறைப்பட்டு இருக்கும் பெண் இவள். தனக்கென்று எந்த விருப்பங்களும் இல்லாமல் சிங்கப்பெருமாளின் ஆண்மையை அனைவருக்கு முன்னாலும் நிரூபிக்கத் தேவையான ஒரு பொருளாகவே நடத்தப்படுகிறாள் சுப்பு. அது அவளுக்கு நன்றாகப் புரிந்தாலும் அங்கிருந்து தப்பிக்க முடியாத சூழல். பொறுமையாகக் காத்திருக்கிறாள். அவள் எதிர்பார்த்த வாய்ப்பு தானாக வந்து அமைகிறது – சப்பை என்ற கதாபாத்திரத்தின் மூலம். இந்த சப்பையுமே சிங்கப்பெருமாளின் அடிமையே. எனவே இரண்டு அடிமைகள் இணைகிறார்கள். சப்பைக்கு, சுப்பு தன்மீது உண்மையாகவே அன்பாக இருக்கிறாள் என்று தோன்றுகிறது. இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள். சப்பையிடம் தன் மனதில் இருக்கும் ஆசைகளையெல்லாம் சுப்பு பேசுகிறாள். சப்பை இதனால் சுப்புவை முழுதாக நம்புகிறான்.
அப்போது பசுபதியால் உருவாகும் ஒரு பிரச்னையால் சிங்கப்பெருமாளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட, குழப்பங்கள் உருவாகின்றன. இவற்றையெல்லாம் சுப்பு நன்றாகக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். அவள் எதிர்பார்த்த ஒரு வாய்ப்பு வருகிறது. பொம்மலாட்டக் கயிற்றை சுப்பு ஆட்டுகிறாள். தன்னிடம் இருக்கும் பணத்தை சப்பைதான் எடுத்திருக்கிறான் என்று நினைத்து சிங்கப்பெருமாள் சப்பையை அடிக்க, சப்பை சிங்கப்பெருமாளை சுட்டுக் கொன்றுவிடுகிறான். உடனே அங்கே வரும் சுப்பு, சப்பையை எந்தவிதமான இரக்கமும் இல்லாமல் சுட்டுக்கொன்றுவிடுகிறாள். அப்போதுதான் எல்லாவற்றுக்கும் மூலகாரணமே சுப்புதான் என்பது புரிகிறது. பணத்தை எடுத்துக்கொண்டு மிக இயல்பாக அங்கிருந்து வெளியேறுகிறாள் சுப்பு. அப்போது அங்கே வரும் பசுபதி, சிங்கப்பெருமாளும் சப்பையும் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார்கள் என்று நினைத்து, அதுவரை அப்பாவியாக இருந்த சுப்புவை விட்டுவிடுகிறான்.
இத்தனை நாள்கள் தனது வாழ்க்கையில் இருந்த அத்தனை ஆண்களையும் எளிதாக சமாளித்துவிட்டு, கிடைத்த சந்தர்ப்பங்களை விடாமல் பயன்படுத்தி விடுதலையாகும் சுப்பு, ‘சப்பயும் ஆம்பளதான் – எல்லா ஆம்பளையும் சப்பைதான்’ என்று சொல்லிக்கொண்டு, தனது திட்டங்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் கிளம்பிச் செல்வதோடு படம் முடியும்.
எத்தனை பெரிய ஒரு சந்தர்ப்பவாதியாக, அட்டகாசமாக எழுதப்பட்டிருக்கும் கதாபாத்திரம் இது என்று யோசித்துப் பாருங்கள். அவள் செய்த சந்தர்ப்பவாதம் என்பது அவள் கண்முன்னர் இருந்த வாய்ப்புகளை ஒன்றுவிடாமல் பயன்படுத்தி அவளது விடுதலைக்கு வழிவகுத்தது. அது மட்டும் இல்லாமல், ‘ஆண்களின் உலகத்தில் ஒரு பெண்ணாக இருப்பதுதான் மிகச் சிறப்பானது’ என்பதுபோல ஒரு வசனத்தை சுப்பு பின்னணியில் பேசுவது அவளது நோக்கத்தை எளிதாகப் புரியவைக்கிறது. சிங்கப்பெருமாளின் பிடியில் இருந்து விடுபட்டு, கைநிறையப் பணத்துடன் தெனாவெட்டாக அங்கிருந்து செல்லும் சுப்பு, இனி எப்படிப்பட்ட ஆணையும் எளிதில் சமாளித்து, அவள் நினைப்பதை நடத்திவிடுவாள் என்பது நமக்கு நன்றாகவே புரிந்துவிடும்.
அதுவே ‘கொடி’ திரைப்படத்தில் வரும் ருத்ரா (த்ரிஷா) கதாபாத்திரம் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதி? ஒரு வகையில் பார்த்தால் ஆரண்ய காண்டத்தின் சுப்பு போலவே ருத்ராவும் அவளைச் சுற்றியுள்ள ஆண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளது காதலன் கொடியும் ருத்ராவும் எதிரெதிர் கட்சிகளில் இருக்கிறார்கள். ஆனால் ருத்ராவிடம் பணம் இல்லை. ஆண்களே அதிகாரம் செலுத்தும் ஒரு கட்சியில் இருக்கிறாள். அவளது குடும்பத்தில் யாரும் பெரிய அரசியல்வாதி இல்லை. எப்போதுமே பிறருக்கு அடங்கியே இருக்கவேண்டிய நிலையில் இருக்கிறாள். இந்த அம்சங்களில் மட்டும் சுப்புவும் ருத்ராவும் ஒன்றுபோல இருக்கிறார்கள்.
ஆனால் ருத்ரா சுப்புவைப் போல, தனது விடுதலைக்காக, தன்னைச் சுற்றியிருந்த கொடியவர்களை ஒழித்துத் தப்பிக்கத் திட்டம் போடவில்லை. மாறாக, ருத்ராவின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் – அவளுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது? எந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை அரசியலில் தனக்கு சாதகமாக உபயோகித்துக்கொள்ள முடியும்? இது ஒன்றே ஒன்றுதான் ருத்ராவை முன்னோக்கிச் செலுத்துகிறது. அதில் நல்லது கெட்டது எதுவுமே பாராமல் ருத்ரா செய்யக்கூடிய துரோகச் செயல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. அறிவழகன் என்கிற எம்.எல்.ஏவை அவள் எப்படியெல்லாம் உபயோகித்துக்கொள்கிறாள் என்று கவனியுங்கள். அதுபோலவே, பல வருடங்களாக நிஜமாகவே காதலித்துவந்த கொடியிடம் எப்படி நடந்துகொள்கிறாள்? கொடியை அவள் காதலித்தது அரசியல் ஆதாயத்துக்காக இல்லை. உண்மையாகவே அவனை ருத்ரா காதலித்திருக்கிறாள். ஆனால் அன்பு கொடுக்கும் ஆவணங்களில் இருந்து அவனது சொந்தக் கட்சியே கிராம மக்களுக்கு மெர்க்குரிக் கழிவுகள் மூலமாக துரோகம் செய்திருக்கிறது என்று அறிந்து கொடி அதிர்ச்சியாகி, அதை ருத்ராவை நம்பிச் சொல்லும்போது அதை ருத்ரா எப்படி எடுத்துக்கொள்கிறாள்?
அது அவளுக்கு ஓர் ஆதாயம். தகவல். அதனால் அவளால் அரசியல் செய்து தனது அரசியல் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள முடியும். இவ்வளவுதான் அவளது கணக்கு. கொடி எல்லாவற்றையும் உணர்ச்சிபூர்வமாக, நல்லது கெட்டது என்று பகுத்தறிந்து பார்க்கும்போது, ருத்ராவுக்கு அப்படி எந்த உணர்வுகளும் இல்லாமல், முற்றிலுமாகவே தனக்கு என்ன ஆதாயம் என்று பார்க்கும் குணமே பெரிதாக இருப்பது கொடி படம் பார்க்கையில் நன்றாகப் புரியும். அதுதான் ருத்ராவை ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பவாதியாக மாற்றுகிறது.
சுப்புவுக்கும் ருத்ராவுக்கும் இருக்கும் இன்னொரு வேற்றுமை என்னவென்றால், தனது வாழ்க்கையை அடிமைப்படுத்திய கயவர்களைக் கொன்றுவிட்டுப் புதுவாழ்க்கையை நோக்கி சுப்பு செல்கையில், தனது அரசியல் முன்னேற்றம் என்பதற்காக மட்டும் இரக்கமே இல்லாமல் பல துரோகங்களைச் செய்த ருத்ராவுக்கு, கொடி திரைப்படத்தின் இறுதியில் தக்க தண்டனையும் கிடைக்கிறது. இருவருமே சந்தர்ப்பவாதிகள் என்றாலும் இதுவே இரண்டுபேருக்கும் வித்தியாசம்.
இப்போது மூன்றாவதாக இன்னொரு பெண் கதாபாத்திரமும் நினைவு வருகிறது. ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் வரும் துளசி கதாபாத்திரம்தான் அது. துளசி, அழகரைக் காதலிக்கிறாள். அது நிஜமான காதல்தான். அழகர் அவளை முழுமையாக நம்புகிறான். ஆனால் இறுதியில் என்ன நடக்கிறது? கனகுவாக வரும் சமுத்திரக்கனி கதாபாத்திரம், துளசியை மூளைச் சலவை செய்து, அழகரை ஒரு இடத்துக்கு வரவைத்து வஞ்சகமாகக் கொல்கிறது. அந்தக் காட்சி எத்தனை துயரமாக இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். தன்னைச் சுற்றி இருக்கும் ஆண்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துளசி வேறு எதையுமே செய்திருக்கவே முடியாது. அவளது ஒரே முடிவு அழகரைக் காட்டிக்கொடுப்பதாகவே இருக்கமுடியும் என்பது அந்தப் படத்தைப் பார்க்கையில் தெரிந்துவிடும். வேறு வழியே இல்லாமல் இந்தத் துரோகம் என்ற சந்தர்ப்பவாதத்தைத் துளசி செய்யவைக்கப்பட்டிருப்பாள்.
இப்போது தமிழ் சினிமாவில் இடம்பெற்றிருக்கும் வேறு சில சந்தர்ப்பவாதக் கதாபாத்திரங்களை நினைவுகூரலாம்.
‘மங்காத்தா’ திரைப்படத்தில் வரும் வினாயக் மகாதேவன் எப்படிப்பட்ட கதாபாத்திரம்? யாரைப் பற்றியும் எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. நான் நன்றாக இருந்தால் போதும் என்பதே வினாயக்கின் நோக்கம் என்பது ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல’ என்ற ரஜினி பாட்டைப் பாடி ஆடும்போதே ஓரளவு தெரிந்துவிடுகிறது. தனது காதலியையே தூக்கி எறிந்துவிட்டுப் போகும் நபர் வினாயக். தன்னுடன் இருக்கும் கும்பலைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், மொத்தப் பணத்தையும் அபேஸ் செய்துவிட்டு எல்லாருக்கும் பெப்பே காட்டிவிட்டுச் செல்லும் வினாயக் ஒரு வடிகட்டிய சந்தர்ப்பவாதியா இல்லையா? மொத்த வாழ்க்கையிலும் அப்பட்டமான, வெளிப்படையான சந்தர்ப்பவாதியாக இருப்பவன் தான் வினாயக் என்பது முழுப்படமும் பார்த்தால் தெரியும். அந்த சந்தர்ப்பவாதத்தில் அவன் வெற்றியும் பெறுகிறான். காரணம் ஆரண்ய காண்டம் சுப்பு போல, அவன் ஏமாற்றுபவர்கள் அனைவரும் கெட்டவர்கள். ஆனால் அவர்களைவிட அவன் இன்னும் பெரிய கெட்டவன் என்பதால் வினாயக் அனைவரையும் வீழ்த்தி வெற்றி பெறுகிறான்.
’செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் இப்படி ஒரு சந்தர்ப்பவாதக் கதாபாத்திரம் வருகிறது. அதுதான் இன்ஸ்பெக்டர் ரசூல் இப்ராஹிமாக நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம். அது ஏன் சந்தர்ப்பவாதியாக இருக்கிறது? காரணம் ரசூலுக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியமான பணியே, சேனாபதியின் குடும்பத்தை வளைத்துப் பிடிப்பதுதான். தொடக்கத்தில் இருந்து சேனாபதியின் மகனான வரதராஜனுடன் நட்பாக இருந்து, சேனாபதி வீழ்ந்தபின்னர் அவரின் மகன்களுடன் பழகி, திருகுவேலை செய்து மெல்ல மெல்ல முன்னேறி இறுதியில் அந்த மாஃபியா குடும்பத்தையே போட்டுத் தள்ளுகிறார் ரசூல். அது அவருக்கு வழங்கப்பட்ட பணி என்பதால் யாருக்கும் தெரியாமல் தனது சந்தர்ப்பவாதத்தை நல்ல நோக்கங்களுக்காக ரசூல் பயன்படுத்துகிறார்.
அதுவே அதே மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் நந்தினி எப்படிப்பட்டவள்? சோழர் குடும்பத்திலேயே சிறுவயதில் வளர்ந்தாலும், குந்தவை, அவள் கரிகாலனுடன் பழகக்கூடாது என்று கண்டிப்புக் காட்டி நந்தினியை வெளியேற்ற, அதன்பின் வீரபாண்டியனைக் கரிகாலன் கொல்லும்போது எத்தனை சொன்னாலும் அவன் கேட்காமல் போக, வீரபாண்டியன் மரணத்துக்காகப் பழிவாங்க சோழர் குடும்பத்தில் புகுந்த நந்தினி செய்யும் சந்தர்ப்பவாதச் செயல்கள்தான் எத்தனை? அவளால் எத்தனை கொடிய சம்பவங்கள் அரங்கேறுகின்றன? எல்லாவற்றையும் அவள் வேண்டுமென்றே செய்கிறாள். பெரிய பழுவேட்டரையரை மயக்கிக் கைக்குள் போட்டுக்கொள்கிறாள். அதனால் அவரது பணம் நந்தினியின் தீய செயல்களுக்கு உதவுகிறது. பொன்னியின் செல்வன் படித்தாலே நந்தினி எத்தனை பெரிய சந்தர்ப்பவாதி என்று தெரியும். ஆனால் அதற்குப் பின்னர் ஒரு துயரமான பின்னணி இருப்பதும் எளிதில் புரியும். அந்தக் கதாபாத்திரத்தினால் உந்தப்பட்டே படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி உருவாக்கப்பட்டதாக ரஜினி சொல்லியிருக்கிறார்.
’விருமாண்டி’யில் வரும் கொத்தாளத் தேவன் சந்தர்ப்பவாதியா இல்லையா? விருமாண்டியுடன் பழகி, மெதுவே நல்லம நாயக்கர் மீது விரோதம் வரவைத்து, விருமாண்டியின் நிலத்தை ஆட்டையைப் போடப்பார்க்கும் கொடூரமான கதாபாத்திரம் அது. உடலில் நாடி நரம்பு எங்கும் சந்தர்ப்பவாதம் ஓடும் ஒரு நபர். விருமாண்டியின் நம்பிக்கைக்கு முற்றிலும் பாத்திரமாகும் ஆள். ஆனால் இறுதியில் அந்த விருமாண்டியை வஞ்சகமாகப் பழி வாங்கி, அன்னலட்சுமியைக் கொடூரமாகக் கொல்லும் அரக்கனைப் போன்ற கதாபாத்திரம். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சந்தர்ப்பவாதிகளில் ஒருவன். மிக நன்றாக எழுதப்பட்ட இன்னொரு கதாபாத்திரம்.
இப்படி இன்னும் பல சந்தர்ப்பவாதிகளை நம்மால் பட்டியல் இடமுடியும். சிலரை இங்கே குறிப்பிடுகிறேன். பீட்சா படத்தில் வரும் மைக்கேல் கார்த்திகேயனும் ரம்யா நம்பீசனும் சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான உதாரணங்கள். தளபதி திரைப்படத்தில் அம்ரீஷ் புரி நடித்த கலிவரதன் கதாபாத்திரம் இன்னொரு உதாரணம். தேவராஜைப் போட்டுத்தள்ள அது செய்யும் தந்திரங்கள் நன்றாக எழுதப்பட்டிருக்கும். ’ஆவாரம்பூ’ படத்தில் வரும் கவுண்டமணியின் கதாபாத்திரமான ஆச்சாரி இன்னொரு உதாரணம். இதுதவிர, பழைய தமிழ்ப்படங்கள் என்று எடுத்துக்கொண்டால் சந்தர்ப்பவாதி கதாபாத்திரத்தில் டாக்டரேட் செய்யும் அளவு நடிகவேள் எம்.ஆர்.ராதா அத்தனை கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார். இவைதவிரவும் இன்னும் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த சந்தர்ப்பவாதி கதாபாத்திரங்கள் பற்றி நீங்களும் யோசித்துப் பாருங்கள்.