நல்ல நேரமா கெட்ட நேரமான்னு நாமதான் முடிவு பண்ணனும்!

நல்ல நேரமா கெட்ட நேரமான்னு நாமதான் முடிவு பண்ணனும்!
Published on

வாழ்க்கையில நிறைய நேரம் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தோணும். இந்த தருணத்தை கடக்காதவங்க இருக்கவே முடியாது. அப்படி ஒரு தருணம் தான் எனக்கு போன வருஷம். பிறந்த நாள் கொண்டாடி முடிச்ச அடுத்த மாசமே பதினஞ்சு நாள் ஹாஸ்பிட்டல் போராட்டத்துக்கு பிறகு எங்க அப்பாவை இழந்தேன். எங்க அப்பா உயிர் போன நிமிஷத்தை விட கொடுமையான நிமிஷம் சொந்த ஊருக்கு அழைச்சுட்டு போயி அவரோட இறுதி காரியத்தை நடத்தும் போது சொந்தகாரங்க செஞ்ச பிரச்சனை, கிட்டத்தட்ட ஆம்புலன்ஸ்ல எட்டு மணி நேரம் எங்க அப்பா உடம்போட ஊருக்கு போயி இறங்கின உடன அந்த இறுதி காரியத்தை நிம்மதியா நடத்த விடாம என்னென்ன பண்ணணுமோ அவ்வளவும் பண்ணி மன உளைச்சல் செஞ்சாங்க.

கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆச்சு, அவரோட இழப்புல இருந்து மீண்டு வர, அடுத்து மன நிலையை சரி பண்ணிட்டு வழக்கம் போல வேலைகள்ல கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன், வேலை தான் எல்லாம்னு முழு உழைப்பையும் போட்டு வேலையில என்னோட கவனம் முழுசையும் திசை திருப்பினேன். அப்போ தான் அடுத்த அடி, ரெண்டு மாசத்துல என் வேலையில இருந்து நான் காரணமே இல்லாம விலக வேண்டிய சூழல் அதுலயும் எந்த வேலையில எனக்கு அவார்ட் கொடுத்தாங்களோ எந்த வேலையில என்ன தூக்கி வச்சு கொண்டாடினாங்களோ அங்கிருந்து நானே பேப்பர் போட்டு வர வேண்டிய நிலைமை இருந்துச்சு.

யாரெல்லாம் பிரண்டு பிரண்டுன்னு நினைச்சேனோ அவங்க எல்லோரும் ஓவர் நைட்ல எதிரிகளா மாறிப் போனாங்க. யாரை என் கூட பிறந்த தம்பின்னு நினைச்சு எல்லாம் பண்ணினேனோ அவன் தான் என் இடத்துக்கு வந்து உக்கார்ந்தான். வேலையில எல்லாமே தலை கீழா மாறி போச்சு.

அதுக்கு அப்புறம் வேலைக்காக அலையாத இடமே இல்லை ஆனா கிட்டத்தட்ட சரியான வேலை ஆறு மாசம் அமையல. சரி வீட்ல ஏதோ இட்லி தோசை போட்டு கொஞ்ச நாள் அமைதியா ஹவுஸ் வைபா இருக்கலாம்னு நினைக்கும் போது தான் என் குழந்தைக்கு உடம்பு சரிஇல்லாம போச்சு, என்ன பண்றதுன்னே தெரியல, நிம்மதின்னா எப்படி இருக்கும்னே தெரியாத சூழல அனுபவிச்சேன். பத்து நாளா நானும் என் கணவரும் ஹாஸ்பிட்டலே கதின்னு கிடந்து குழந்தைய மீட்டு கொண்டு வந்தோம், மனசு கொஞ்சம் லேசாகும் போது எனக்கும் நான் தேடின இடத்துல வேலைக்கான வாய்ப்பு வந்துச்சு. ஆனா நான் சேருற நேரம் பார்த்து, எங்க கார் ஆக்சிடென்ட் நடந்துச்சு.

அந்த ஆக்சிடென்ட்ல எங்க மேல தப்பு இல்லேனாலும் கோர்ட் கேஸ் வழக்குன்னு சில நாள் அதுல போச்சு, என்னடா ஒண்ணுமாத்தி ஒண்ணு நடக்குதேன்னு ரொம்ப கோபமா இருக்கும், வெறுமையா இருக்கும். நல்லா இருக்கீங்களான்னு யாராவது கேட்டாலும் பதிலே சொல்ல தோணாது. பொதுவா ராசி நட்சத்திரம் இது எது மேலயும் நம்பிக்கையே இருந்தது இல்லை... ஆனா அஷ்டம சனி நேரம் சரி இல்லை நடு தெருவுல நிப்பீங்கன்னு  என்னென்னவோ சொன்னாங்க. ஆனா அந்த நல்ல நேரம் எப்போ வரும்னு தெரியவே இல்லை. கோர்ட் கேஸ்ல இருந்து கொஞ்சம் மீண்டு வரும் பொழுது கால்ல ஒரு சர்ஜரி பண்ண வேண்டிய சூழல் வந்துச்சு. மொத்தமா நம்பிக்கைய இழந்தேன். எல்லா ஓவர்னு தோணிச்சு.

ஆனா ஒண்ணு மீண்டு வரணும் வந்தே ஆகணும்னு ஆழ் மனசு சொல்லிச்சு. என் கை பிடிச்சு நடக்க என்ன மீட்டு கொண்டு வர, நான் டெய்லி பொலம்பறத கேட்க, நான் கோபத்துல கத்தும் போது தாங்கிக்க, தேவை இல்லாம அழும் பொழுது தோள் கொடுக்க எல்லாமுமா இருந்தார் என் கணவர் அருண். எல்லோருக்குமே வாழ்க்கையில ஒரு மீட்பர் தேவை படுவாங்க, நம்ம தர்மதுரை படத்துல விஜய் சேதுபதிக்கு வர்ற சுபா மாதிரி எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கும் போது நான் இருக்கேன்னு சொல்ல, அந்த மாதிரி எனக்கு அருண்.

யப்பா இவ்ளோ பிரச்சனையா அப்படின்னு யோசிச்சு குழம்பி போயி தனியா இருந்தேன்.  அப்போ குடும்பஸ்தன் படத்துல ஒரு சீன்ல கதாநாயகி உனக்கு எவ்ளோ கடன் இருக்குன்னு மணிகண்டன் கிட்ட கேட்பா... அவரும் அங்க இங்க அப்படி இப்படின்னு ஒவ்வொண்ணா சொல்லுவார், மொத்தமா மூணு லட்சம்! மொத்த கடனுக்கு நீ ஓடுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி யோசிச்சு பார்த்தேன். ஏனென்ன்ன பிரச்சனை இருக்கு. அதுல எந்த பிரச்சனை எல்லாம் நம்ம கண்ட்ரோல்ல இருக்கு. எதெல்லாம் தீர்க்க முடியும், எதெல்லாம் தீர்க்கவே முடியாது. எதப் பத்தி நாம யோசிக்கணும். எத பத்தி யோசிக்கவே வேண்டாம்னு லிஸ்ட் எடுத்தேன். கடன், EMI, வேலை எல்லாம் ஒரே பிரச்சனை. அதே மாதிரி குடும்பம் பிளவு விரிசல் இதெல்லாம் இப்போதைக்கு கொஞ்சம் ஒத்தி வைக்க வேண்டிய பிரச்சனை.

ஓங்கி பேசறத விட ஒதுங்கி போறது சில நேரம் சரியா இருக்கும்னு தோணிச்சு. சில சமயம் நம்மள சுத்தி இருக்குறவங்கள கேட்கும் போது தான் அவங்களோட பிரச்சினைகள் நம்ம பிரச்சனையோட பல மடங்கு பெருசா இருக்குங்குறத நம்மளால புரிஞ்சுக்க முடியும். ஒரு ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தையின் அம்மாவை சந்திக்கும் போது தான் இருபது வருஷம் அவங்க குழந்தைக்காக பட்ட பாட்ட புரிஞ்சுக்க முடிஞ்சுது, “பத்து நாள் ஹாஸ்பிட்டலில் இருந்ததுக்கு நீ பதட்டமானியே, என்னைப் பார்த்து கத்துக்கோ” ன்னு அவங்க சொன்ன மாதிரி பீல் பண்ணினேன்.

முயற்சிகளை கொஞ்சம் தீவிரம் ஆக்கின்னேன். இது தான் வேணும்னு நினைக்காம கிடைக்கிற வேலைய பண்ணினேன். கொஞ்சம் கொஞ்சமா பழசுலேர்ந்து விடுபட்டேன். ஸ்டேடஸ் வைக்கிறதோ, நமக்கு எப்ப நல்ல நேரம்னு ராசி பலன் பார்க்கிறதோ நமக்கு உதவி பண்ணாது. ஏன்னா கெட்ட நேரம் கூகிள் பிச்சைக்கும் வரும்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் வரும். கடிகாரம் காட்டுறது நேரம் மட்டும்  தான் அது நல்ல நேரமா கெட்ட நேரமான்னு நாம தான் முடிவு பண்ணனும், பல நேரம் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கிறது தான் சரியா இருக்குமே தவிர அடுத்தவன் என்ன பண்றான்னு யோசிச்சா நாம தேங்கி போயிடுவோம்னு முடிவு பண்ணினேன்.

இப்ப நினைக்கும் பொழுது எல்லாமே பழைய பிரச்சனையாவும் யோசிச்சு எழுதுற கன்டென்ட்டாவும் மாறிடுச்சு. ஆனா ஒண்ணு, நடந்த விஷயத்த மறந்துடலாம். ஆனால் அதுல நாம கத்துகிட்டத வாழ்க்கை முழுக்க மறக்கவே கூடாது. அது தானே நமக்கு, லைப் லெசன்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com