உலகைக் கலக்கும்
வெப் தொடர்கள்!

உலகைக் கலக்கும் வெப் தொடர்கள்!

எனக்கு எழுபத்தேழு வயசுதான். சுப்பராயனுக்கு அறுபத்தாறு வயசுதான். இருக்கட்டும். ஆனா யாரைப் பார்த்தா எழுவத்தேழுன்னு சொல்லுவா? என்னையா, அவனையா? பதினஞ்சு லக்ஷம் இருபது லக்ஷம்னு சொத்து சம்பாதிச்சா ஆயிடுமா? அடித் தென்னமட்டை மாதிரி பாளம் பாளமா இப்படி மார் கிடைக்குமா? கையிலேயும் ஆடுசதையிலையும் கண்டு கண்டா இப்படிக் கல்லுச் சதை கிடைச்சுடுமா? கலியாணம் பண்றானாம் கலியாணம்! உலகம் முழுக்கக் கூட்டியாச்சு! மோளம் கொட்டி, தாலிகட்டி கடைசிப் பொண்ணையும் ஜோடி சேத்து, கட்டுச் சாதம் கட்டி எல்லாரையும் வண்டி ஏத்திப்ட்டு, நீ, என்ன பண்ணப் போறே? கோதுமைக் கஞ்சியும் மாத்திரையும் சாப்பிட்டுண்டு: பொங்கப் பொங்க வெந்நீர் போட்டு உடம்பைத் துடச்சுக்கப் போறே! கையைக் காலை வீசி இப்படி, ஒரு நாளைக்கு வந்து காவேரியிலே ஒரு முழுக்குப்போட முடியுமான்னேன்..'

மேலே இருப்பது தி.ஜா. எழுதிய பாயாசம் சிறுகதையின் ஆரம்பத்தில் வரும் பகுதி. முன்பு சன் தொலைக்காட்சியில் பாலுமகேந்திராவின் கதை நேரம் நிகழ்ச்சியில் அவர் வாரம் தோறும் ஒரு சிறுகதையைக் காட்சிப் படுத்தினார். அதையொட்டி வேறு எந்தெந்த கதைகளை எல்லாம் காட்சிப்படுத்தலாம் என்று பட்டியலிட்டிருக்கிறோம். அதில் பாயாசம் பற்றிய பேச்சும் வந்தது. அப்போது இதை சரியாகக் காட்சிப்படுத்தமுடியுமா என்ற விவாதம் எங்களுக்குள் எழுந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக  மணிரத்னத்தின் நவரசா வெப் தொடரில்  இயக்குநர் வசந்த் சாய் அக்கதையைக் காட்சிப்படுத்தி இருந்தார்.

வித்தியாசமான சிறப்பிதழ்களை எப்போதும் வழங்க முயலும் அந்திமழை, எமது நவம்பர் 2014 இதழில் பத்திரிகை தொடர்கதைகள் பற்றி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இப்போது பிரபலமாகி வரும் வெப் சீரீஸ் எனப்படும் காட்சி வடிவங்களைப் பற்றி இந்த சிறப்புப்பக்கங்களில் தொகுத்து வழங்குகிறோம்.

(நவம்பர் 2014 இதழ் அந்திமழை இணையதளத்தில் கட்டணமின்றிவாசிக்கக் கிடைக்கிறது).

தமிழில் பிரபலமான வடிவங்களாக இருந்த வாரப்பத்திரிகை தொடர்கதைகள் டிவிக்கு இடம் பெயர்ந்தன. இன்னும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு மவுசு குறையவில்லை. ஆனால் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் வெப்சீரீஸ்கள் உச்சம் பெற்று பார்வையாளர்களின் நேரத்தைக் கவர்ந்துவருகின்றன.

1995 இல் வெளியான குளோபல் வில்லேஜ் இடியட்ஸ் என்ற தொடர்தான் முதல் வெப் சீரீஸ் என்று சொல்லப்படுகிறது. இன்று வெப்சீரீஸ்கள் கிட்டத்தட்ட சினிமாவுக்கு இணையான அந்தஸ்தைப் பெற்றுள்ளன. வருமானத்தையும் கொட்டுகின்றன. சினிமாவுக்கு வழங்குவதுபோல் இவற்றுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஸ்ட்ரிமிஸ் (Streamys),வெபிஸ்( Webbys)

போன்ற பல விருதுகள் இதற்கு வழங்கப்படுகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ், வான்கூவர் போன்ற இடங்களில் வெப்சீரீஸ் திருவிழாக்கள் நடக்கின்றன. எம்மி விருதுகள், கனடா ஸ்கிரீன் விருதுகள் போன்ற புகழ்பெற்ற விருதுகளில் வெப்சீரீஸ், டிஜிட்டல் படைப்புகள் ஆகியவற்றுக்காக தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழில் இணையக் காணொலித் தொடர்கள் இவற்றுடன் ஒப்பிடுகையில் சற்று பின் தங்கியே உள்ளன.

பிரபல ஓடிடி தளங்கள் யாவும் வெப்சீரிஸ்களுக்கு பெரிய முதலீட்டை அளித்து அவற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. இதில் கதை அல்லாத வித்தியாசமான படைப்புகளும் உள்ளன.சிறந்த மனிதர்களின் வரலாறு, முக்கிய வரலாற்று நிகழ்வுகள் ஆகியவையும் சுவாரசியமாக காட்சிப்படுத்தப்படுகின்றன. நெட்ப்ளிக்ஸில்  How to become a Mob boss என்ற ஒரு தொடர் உள்ளது. ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு தாதா எப்படி உருவாகிறான் என்பதை நிர்வாகவியல் கூறுகளுடன் எடுத்திருப்பது ஆச்சரியப்படுத்தும். இந்தியாவில்  ஹர்ஷத் மேத்தா, தெல்கி, வீரப்பன் போன்றோர் பற்றிய தொடர்களும் குறிப்பிடத் தகுந்தன.

ஆனாலும் உலக அளவில் ஒப்பிடுகையில் தமிழில் வெப்சீரீஸ்கள் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளன. தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் இடையிலான திரிசங்கு சொர்க்கத்தில் பல தொடர்கள் உள்ளன. திரைப்படமாக எடுக்க சற்றே நீளமாகக் கதை எழுதி அதில் ‘ தண்ணீர்' கலந்தால் வெப் சீரீஸுக்கான கதை வடிவம் உருவாகும் நிலை உள்ளது.

இந்நிலையில் அமேசானில் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை' சற்று ஆறுதல் அளித்தது. அது அமெரிக்காவில் நியூயார் டைம்ஸில் வெளியான மாடர்ன் லவ் ஆந்தாலஜியின் பாதிப்பில் எடுக் கப்பட்டது இது. இதில் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான கதையில் பாக்கியம் சங்கர் எழுதி ஷான் ரோல்டன் இசையமைத்த ‘ஜிங்கிருத தங்கா' பாடல் திரைப்பாடல்களைப் போல மிகவும் பிரபலமானது.

மிகவும் நிதானமாகப் போகும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்து அயர்ச்சி அடையும் நவீன தலைமுறைக்கு வெப்சீரீஸ் ஒரு ஆறுதல். ஆனால் விறுவிறுப்பான திரைப்படங்களைப் பார்க்கப் பிடிப்போருக்கு பல வெப்சீரீஸ் கொட்டாவி வரவைப்பதும் உண்மையே.  இவர்களின் வசதிக்காக பல எபிசோடு களாக விரியும் ஒரு வெப்சீரீஸின் கடைசி எபிசோடில், அனைத்தையும் எடிட் செய்து ஒரே எபிசோடாகத் தந்தால் நன்றாக இருக்கும். வருமானமும் உயரலாம். தமிழில் பரபரப்பாகப் பேசப்படும் வதந்தி வெப்சீரீஸைப் பார்த்தேன். எட்டு எபிசோடுகள்.  ஏழெட்டு மணி நேரம் செல்லும் தொடர். கதை முடிந்ததும் ஒன்பதாவது எபிசோ டாக இவற்றை தொகுத்து இரண்டு மணி நேர அளவில் வழங்கினால் என்னைப் போன்றவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும் எனத்தோன்றியது.

உலகெங்கும் வெளியாகும் கதைகள் சார்ந்த வெப் சீரீஸ்களைப் பற்றி இந்த சிறப்புப் பக்கங்களில் தொகுத்து எழுதி இருக்கிறோம். பலருக்கு இது புதிய கதவுகளைத் திறப்பதாக அமையலாம். தமிழில் இணையத் தொடர்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் வசந்த் சாய் போல் பல நல்ல தமிழ் இலக்கியப் படைப்புகளைக் காட்சிப்படுத்துங்கள். புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இலக்கியமே படிக்காதவர்களுக்கும் நல்ல இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்துவதாக அது அமையும்.

அந்திமழை இளங்கோவன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com