ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இன்று இல்லை எனலாம். ஏற்கனவே பட்டன் போன் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த பலருக்கு ஸ்மார்ட் போன் இன்னும் பிடிபடவில்லை. இவர்களைக் குறிவைத்து அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடுவது தான் சைபர் குற்றத்தில் முதலாவதாக சொல்லப்படுகிறது. இப்படி பலமோசடிகள் அதிகரித்துவிட்டன.
இன்று நீதிமன்றங்களிலேயே மின்னணுச் சான்றுகள் (எலக்ட்ரானிக் எவிடன்ஸ்) ஏற்றுக் கொள்ளலாம் என்று இந்திய சாட்சிகள் சட்டப்பிரிவு 65 பி வழி செய்து உள்ளது. அதாவது போட்டோ ஆதாரங்கள் வீடியோ ஆதாரங்கள் இவையெல்லாம் ஏற்கப்படும். ஆனால் செயற்கை நுண்ணறிவு இதற்கும் ஆப்பு வைக்க, இப்போது மின்னணு சான்றுகளின் உண்மை தன்மையையும் இன்று சாட்சியங்களுடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பொதுமக்கள் இருக்கிறார்கள். புகைப்படம் அல்லது வீடியோவோ எந்த மொபைலில் இருந்து எடுக்கப்பட்டது அல்லது எந்த வீடியோ கேமராவில் எடுக்கப்பட்டது அதன் மாடல் என்ன அதன் உரிமையாளர் யார் இப்படி எல்லாம் சான்றுகள் தரவேண்டிய ஒரு கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே சைபர் கிரைம்கள் என்னென்ன? அவைகள் எந்தெந்த தண்டனை சட்டப்பிரிவுக்குள் வருகின்றன? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
சைபர் கிரைம்கள் அனைத்துமே 2000 ஆவது ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் தான் வருகின்றன. இதன் 94 பிரிவுகளும் அவை 13 அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டு இரண்டு பிரிவுகள் ஆக்கப்பட்டு இருக்கிறது.
இதில் 2008 ஆம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு இச்சட்டத்தின் பிரிவு 66A இல் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்தப் பிரிவு, மின்னணு முறையில் (சமூக ஊடகங்கள் வாயிலாக) வெறுப்பைப் பரப்பும் அல்லது குறிவைத்து தாக்கும் செய்திகளைப் பகிர்வதற்கான தண்டனைகளை விவரித்தது. இருப்பினும், இந்தச் செய்திகளை வரையறுப்பதில் தெளிவின்மை பல தனிநபர்களுக்கு தேவையற்ற தண்டனைக்கு வழிவகுத்தது. இறுதியில் அந்தப் பிரிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
ஐடி சட்டம் 2000 இன் பிரிவு 43
கணினியில் வைரஸ் அல்லது பிற தீங்கிழைக்கும் மென்பொருளை அறிமுகப்படுத்துதல் , மேலும் கணினி வலையமைப்பு அல்லது தரவுத்தளத்திற்கு சேதம் விளைவித்தல், அங்கீகரிக்கப்பட்ட பயனர் கணினியை அணுகுவதைத் தடுத்தல், சட்டத்தின் விதிகளை மீறுவதில் மற்றவர்களுக்கு உதவுதல், ஒருவர் பயன்படுத்தாத சேவைகளுக்கு கட்டணம் வசூலித்தல், மதிப்பைக் குறைக்க அல்லது தீங்கு விளைவிக்க தகவலில் மாற்றம் அல்லது நீக்குதல், கணினி நிரலை வேலை செய்ய வைக்கும் குறியீட்டைத் (source code) திருடுதல் போன்றவை இதன் கீழ் வருகின்றன.
ஐடி சட்டத்தின் பிரிவு 66
ஒரு நபர் நேர்மையற்ற அல்லது மோசடி நோக்கத்துடன் மேலே சொல்லப்பட்டுள்ள பிரிவு 43 இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு செயலிலும் ஈடுபட்டால், அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சட்டப் பிரிவு 66 இன் படி, இந்த குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் அடங்கும்.
ஐடி சட்டத்தின் பிரிவு 66B
கணினிகள் அல்லது தகவல் தொடர்பு சாதனங்களை தவறான முறையில் பெற்றதற்கான தண்டனையை பிரிவு 66B கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பிரிவின்படி, திருடப்பட்ட கணினிகள் அல்லது தகவல் தொடர்பு சாதனங்களை தெரிந்தே பெறுபவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
ஐடி சட்டத்தின் பிரிவு 67A
பாலியல் ரீதியான வெளிப்படையான செயல்களைக் கொண்ட உள்ளடக்கத்தை மின்னணு வடிவத்தில் வெளியிடுவது, பகிர்வது ஆகியவற்றுக்கு இந்த பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது. முதல்முறை குற்றச்சாட்டில், அத்தகைய உள்ளடக்கத்தை வெளியிடும் நபர்கள் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையையும் ரூ. 10 லட்சம் வரை அபராதத்தையும் எதிர்கொள்ள நேரிடும். இரண்டாவது அல்லது அதற்குப் பிறகு தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
மேலும் சில சட்டப்பிரிவுகள்
பிரிவு 65 - கணினியில் சேமிக்கப்பட்ட ஆவணங்களை சேதப்படுத்துதல் - 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு 66- கணினிகள் அல்லது பிரிவு 43 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள எந்தவொரு செயலுடனும் தொடர்புடைய குற்றங்கள்: 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும்
பிரிவு 66C - அடையாள திருட்டு: 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும்
பிரிவு 66D- ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்: 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும்
பிரிவு 66E- தனியுரிமையை ஆக்கிரமித்தல்: 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும்
பிரிவு 66F - சைபர் பயங்கரவாதம் : ஆயுள் தண்டனை
பிரிவு 67 - மின்னணு வடிவத்தில் ஆபாசமான விஷயங்களை அனுப்புதல்: 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்.
இவை அல்லாமல் தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழங்கும் பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சம்ஹிதா எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் சில அம்சங்களும் சைபர் கிரிமினல்களின் மீது பாயக்கூடிய விதத்தில் உள்ளன.