
கோவையில் வடவள்ளி அருகே முல்லை நகரில் உள்ள தனது வீட்டில் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் வைத்திருக்கிறார் ஜி.ஆர்.பிரகாஷ். இவர் தனது வாசிப்பார்வத்தின் வழியே நூல்களை நேசிக்கத் தொடங்கி இந்தத் தனிநபர் நூலகத்தை அமைத்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து:
"நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பேப்பர் போடும் பையனாக வேலை செய்தேன். அப்போது தினமணியை முதலில் வாசிக்கத் தொடங்கினேன். அதில் உள்ள இலவச இணைப்புகள் என்று தொடங்கி இதழ்கள் மேல் ஆர்வம் வந்து எல்லா இதழ்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கல்கி, சாவி, பாலகுமாரன், சுஜாதா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என்று சகட்டுமேனிக்கு வாசிக்க ஆரம்பித்தேன். அந்த வயதில் பாலகுமாரன் என்னை மிகவும் கவர்ந்தார்.
பிறகு சென்னையிலிருந்த ஓய்வுபெற்ற கனரா வங்கி மேலாளர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மூலம் நாஞ்சில்நாடன், கண்மணி குணசேகரன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அறிமுகம் ஆயின.
நான் படிக்கும் புத்தகங்களில் புனைவுகள் பாதி, அபுனைவுகள் பாதி என்று இருக்கும். கதை இலக்கியங்களைப் போலவே நிறைய கட்டுரை நூல்களும் என்னிடம் உள்ளன. பல எழுத்தாளர்களின் முழுத் தொகுப்புகளும் என்னிடம் உள்ளன.
என் வீட்டுக்கு ஏராளமான எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆடிட்டர் கிருஷ்ணகுமார், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்தபோது உருவானதுதான் 'சிறுவாணி வாசகர் மையம்'. 2017 இல் உலக புத்தக தினத்தில் ஆரம்பிக்கப்பட்டது. காந்தியவாதி டி.டி. திருமலை அவர்களின் மகள் சுபாஷிணி தலைவர், நான் ஒருங்கிணைப்பாளர், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சொல்வனம் வ. னிவாசன், ‘ராக்' ஆர்.ரவீந்திரன் ஆகியோர் கௌரவ ஆலோசகர்கள் என்று நூல்களைத் தேர்வுசெய்து வெளியிடுகிறோம். ஆண்டு் சந்தா பெற்றுக் கொண்டு 'மாதம் ஒரு நூல்' பதிப்பித்து உறுப்பினர்களுக்கு வழங்குவது என்பது திட்டம். அப்படி 140 புத்தகங்களை இதுவரை வெளியிட்டு இருக்கிறோம். எங்களது 600+ உறுப்பினர்கள் இந்தியா முழுக்க உள்ளனர்.
உறுப்பினர்கள் 10 சதவீதம் பேர் பல்வேறு காரணங்களால் வெளியேறினாலும் புதிதாக வந்து சேர்ந்து ஊக்கப்படுத்துபவர்களால் எங்களது உறுப்பினர் எண்ணிக்கையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களது பணியில் எந்த வணிக நோக்கமும் இல்லை , தரமான நூல்களை வெளியிடுகிறோம் என்பதை அறிந்து தொடர்ந்து உறுப்பினர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள்.
மனம் கவர்ந்த எழுத்தாளராக இருந்த பாலகுமாரனின் 'கடலோரக் குருவிகள்' நாவலைப் பதிப்பிக்கத் தீர்மானித்தோம்.அவரது மனைவி சாந்தா பாலகுமாரன் நாங்கள் அளித்த குறைவான தொகையை ஏற்றுக் கொண்டு நூல் உரிமை வாங்கிக் கொடுத்தார். இது மறக்க முடியாத ஒன்றாகும்.
அசோகமித்திரன் அவரது வெளிவராத கட்டுரைகள் தொகுப்பைக் கொடுத்துப் ‘பூங்கொத்து' என்ற தலைப்பையும் கொடுத்து நூல் வெளியிடுவதற்கு அனுமதியும் கொடுத்தார். ஆனால் புத்தகம் வந்த போது அவர் காலமாகிவிட்டார்.
என்னிடம் 10 ஆயிரத்துக்கும் மேல் புத்தகங்கள் இருக்கும். நான் வாசித்து முடித்து விட்ட புத்தகங்களை ஒரு பெட்டியில் போட்டு வைத்து விடுவேன். பார்வை நூல்கள், முக்கியமான படைப்புகள் போன்றவை எப்போதும் நிலையாக நூலகத்தில் இருக்கும். அன்றாடம் வாசித்து முடிக்கப்படும் நூல்கள் வாசித்து முடித்ததும் பிறரிடம் கொடுக்கலாம் என்று தான் அந்தப்பெட்டியில் போட்டு வைப்பேன். அதை வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பது என் வழக்கம். அப்படி ஆண்டுக்குச் சில நூறு புத்தகங்களையாவது அன்பளிப்பாகக் கொடுத்து விடுவதுண்டு.
மறுபதிப்பு காணாத பல புத்தகங்களை நாங்கள் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் வெளியிட்டிருக்கிறோம். சிறுவாணி வாசகர் மையத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான என். வி. எஸ்.மணியன் தன்னிடமிருந்த வாசகர் வட்ட நூல்களை அன்பளிப்பாகத் தந்தார். சேக்கிழார் நிலையம் சிவசுப்ரமணியம்,சுஜாதா மாதவன்,வே.முத்துக்குமார் ஆகிய பலரும் ஆலோசனைகளும் உதவியும் செய்கிறார்கள். தமிழின் அனைத்து முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளும் என் நூலகத்தில் உள்ளன. என் வருமானத்தில் கணிசமாக நூல்கள் வாங்குவதை வீட்டில் யாரும் தடை சொல்வதில்லை. அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சி.
நாங்கள் முன்னர் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தபோது நூல்கள் வைக்க இடம் போதாமல் தனியாக வேறுஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே அறைகளில் நூல்களைச் சேமித்து வைத்திருந்தேன். இப்போது சொந்த வீடு வாங்கி விட்டோம். அங்கிருந்தபோது எந்த நூல்கள் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். புதிய இடத்தில் இன்னும் முறைப்படுத்தி அடுக்கி வைக்கவில்லை.
பாரதியின் படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசியவிருது பெற்ற ஓவியர் ஜீவா வரைந்த பாரதியின் படங்களை இதுவரை 30 ஆயிரம் பேருக்கு வழங்கி இருக்கிறோம்.
நான் கிடைக்கும் நேரத்தில் வாசித்துக் கொண்டே இருப்பேன். நண்பர்கள் இதுபற்றிக் கிண்டல் செய்வதும் உண்டு. தீவிர வாசகன் என்று சொல்லிக் கொள்ளவே நான் விரும்புகிறேன். நான் எதையும் எழுதவில்லை. ஆனால் வாசித்தவை பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் என்னிடம் உள்ளது. அப்படி நான் படித்தவை பற்றிய குறிப்புகளை 14 பெரிய டைரிகளில் எழுதி வைத்துள்ளேன்.
சிறுவாணி வாசகர் மையம் சார்பில் நாஞ்சில்நாடன் பெயரில் ஒரு விருது வழங்கி வருகிறோம். இது 50 ஆயிரம் பரிசுத் தொகை கொண்டது. கலை, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாக இயங்குபவர்களைத் தேர்வுசெய்து ஒன்பதாண்டுகளாக விருது வழங்கி வருகிறோம்,’’ என முடித்தார் பிரகாஷ்.