திருமணம் முடிந்து உறவினர்கள் புடைசூழ, என்னுடைய சீர்வரிசைச் சாமான்களுடன் டெல்லிக்குப் பயணம் செய்ததைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது யமுனை நதிதான் முதலில் நினைவில் எட்டிப்பார்த்தது.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கிருஷ்ணா, நர்மதா நதிகளைக் கடந்து டெல்லியை(அப்போது டெல்லி, இப்போது தில்லி) அடையும்போது,
“ யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே? ”
என்ற பாடல் நினைவுத் திரையில் மீண்டும் மீண்டும் நர்த்தனமாடியது. யமுனை என்றால் அப்போதெல்லாம் இந்தப் பாடல்தான் ஞாபகம் வரும். அப்புறம் தளபதி படம் வந்த பிறகு,
“ யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடுதான் பாட”
என்று அனைவரின் மனங்களும் அடுத்த பாடலை நோக்கித் தாவி விட்டது. இளையராஜாவின் இசை ரசிகர்களைக் கட்டிப்போட ஆரம்பித்தது.
இந்தியத் தலைநகரத்தில் வாழப் போகிறோம் என்பதை விட யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற நகரத்தில் வாழப் போகிறோம் என்கிற ஆனந்தம்தான் மனதில் அதிகமாக இருந்தது.
பின்னே என்ன? யமுனை எவ்வளவு உயர்வாகப் பேசப்படும் நதி! இந்து சமயத்தில் தெய்வமாகப் போற்றப்படும் நதி. ரிக் வேதத்தின் படி பாரதத்தின் ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றாயிற்றே! இமயமலையில் யமுனோத்ரியில் உற்பத்தியாகிற யமுனை, கங்கையின் இரண்டாவது பெரிய துணைநதி அல்லவா?
என் சிறுவயதில் பாட்டி, யமுனையைப் பற்றிக் கூறிய பல்வேறு தகவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. சூரியனின் மகள் யமுனை என்றும் மரணக் கடவுளான யமனின் சகோதரி என்றும் யமி, காளிந்தி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகிறாள் என்றும் பாட்டி கூறியிருந்தார்.
முதன்முதலில் யமுனையைப் பார்க்கப் போகிறோம் என்று மனதில் உற்சாகம் பொங்கியது. பாரதத்தின் தெற்குப் பகுதியில் இருக்கும் வைகை நதிக் கரையில் வளர்ந்து வடக்கே பாயும் வற்றாத ஜீவநதியான யமுனையின் கரையில் வாழப்போகிறோம் என்கிற உற்சாகத்துடன் சேர்ந்து யமுனை பற்றிய ஒருவிதமான பிரமிப்பு மனதில் உருவாகியிருந்தது.
ஒவ்வொரு முறையும் யமுனையைக் கடந்து வாகனத்தில் செல்லும்போது அதே பிரமிப்பு மனதில் கோலோச்சியது. ஒருநாள் நேரில் சென்று பார்த்தபோது அந்த பிரமிப்பு வடிந்துபோனது.
ஆமாம், நதி நீரின் நிறத்தையும், நீரில் கலந்திருந்த மாசையும் பார்த்து மனதில் இருந்த உற்சாகம் எல்லாம் காற்றிறங்கிய பலூனாக வடிந்து வருத்தமே மனதில் மிஞ்சி நின்றது. தில்லியின் வீட்டுக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் என்று மூன்று விதமான கழிவுகள் யமுனையில் கலந்து காளிந்தி என்கிற பெயருக்கு ஏற்றபடி நதிநீரைக் கறுப்பு நிறமாக்கியிருந்த நிலைமை மனதிற்கு மிகவும் வேதனையைத் தந்தது.
நானும், என் கணவரும் நதிக்கரையில் நின்றபடி நதிநீரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு சிறுவன் அங்கே வந்து யமுனையைப் பார்த்துக்கொண்டே நின்றான். வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
“ யாருப்பா நீ? தனியா எதுக்கு நிக்கறே? ” என்று ஹிந்தியில் விசாரித்தார் என் கணவர்.
“பப்பா, பப்பா” என்று ஆற்றைக் காட்டினான் அவன். அப்போது அங்கே ஒரு பெண் வந்தாள். புதியவர்களைக் கண்டதும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு முகத்தையும் மறைத்துக்கொண்டு பேசினாள்.
“இவனோட அப்பா தண்ணிக்குள்ள போனவரு திரும்பி வரலை. அவருக்காக இன்னமும் காத்துக்கிட்டிருக்கான்” என்றாள் அந்தப் பெண். குரலில் துயரம் நிறைந்திருந்தது.
“என்ன ஆச்சு அவருக்கு? தண்ணிக்குள்ள மீன் பிடிக்கப் போயிருந்தாரா?” தொடர்ந்து கேட்டேன் நான்.
“இந்தப் பக்கம் மீனெல்லாம் கிடையாது. செத்துப் போச்சு. மீன் பிடிக்கறதுக்குத் தள்ளிப் போகணும். தண்ணிக்குள்ள காசு அப்புறம் சாமி பொம்மை, அலங்காரப் பொருட்கள் எல்லாம் வீசியெறிவாங்க இல்லையா? அதைத் தேடித் தண்ணிக்குள்ள நீச்சலடிச்சுப் போயி ஏதாவது கொண்டு வருவார் என் கணவர். அப்படி எடுத்த பொருளை வித்துக் கெடைக்கற வருமானத்தில் செலவைச் சமாளிக்கறோம். அதோ அங்கே தெரியற குடிசைலதான் நாங்க இருக்கோம். போன மாசம் தண்ணிக்குள்ள குதிச்சவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. வரவே இல்லை. ஆனாலும், இவன் இன்னமும் அப்பா வந்துருவாருன்னு காத்துட்டு நிக்கறான்” என்று அவள் சொல்லி முடித்தபோது என் மனம் கனத்துப்போனது.
அந்தச் சிறுவனுக்காகக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தாள் அந்தப் பெண். வற்புறுத்திக் கொடுத்துவிட்டு நகர்ந்தபோது மனதில் ஆயிரம் எண்ணங்கள் உதயமாயின.
யமுனை என்கிற ஜீவநதியில் குளித்தால் மரணபயம் போய்விடும் என்று கூறுவார்கள். யமி என்ற பெயருடைய அந்தத் தாய், மனித உயிர்களைப் பறிக்கிற அளவு கருணை இல்லாதவளா என்று சிந்தித்துப் பார்த்தேன். ஆனால், அதற்குக் காரணம் நதியை மாசுபடுத்தும் மனிதர்களே என்று புரிந்தது.
நதியைப் பழிக்கக்கூடாது அல்லவா? தில்லியில் வாழும் எத்தனையோ மில்லியன் மக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்க்கும் தாயல்லவா அவள்? உலகின் ஒவ்வொரு நாகரிகமும் நதிக்கரையில் தானே உருவாகி வளர்ந்திருக்கிறது! நதியும், மனித வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருக்கும் போது, மனிதன் செய்யும் தவறுகளுக்காக நதியை எப்படிக் குற்றம் சாற்றமுடியும் என்று புரிந்து கொண்டேன்.
மதுரா, ஆக்ரா இரண்டு இடங்களையும் சென்று பார்வையிட்டபோதும் எனது எண்ணங்களில் யமுனையே அதிகம் ஆட்சி செய்தது. தாஜ்மஹாலைப் பார்த்து வியந்து நின்றபோது யமுனைக்கரையில் அமைந்திருப்பதால்தான் இதனுடைய அழகு இன்னமும் கூடியிருக்கிறதோ என்று வியந்தேன்.
அதேபோல மதுராவில் சிறைச்சாலையில் பிறந்த கண்ணனை இரவோடு இரவாகத் தலையில் சுமந்து கொண்டு வசுதேவர், யமுனையைக் கடந்து கோகுலம் செல்லும் காட்சி கற்பனையில் விரிந்தது. யமுனையின் அலைகள் உற்சாகத்துடன் குதித்துக் குதித்து எம்பி, கண்ணனின் திருவடிகளைத் தீண்டி மகிழ்ந்தனவாம்! அலைகளின் ஆர்ப்பாட்டத்திற்கு என்ன அழகான விளக்கம்!
யமுனையைச் சென்று பார்க்கும் போதெல்லாம் என் மனதில் பிரமிப்பு, ஆனந்தம், உற்சாகம், வருத்தம் என்ற உணர்ச்சிகள் மாறி மாறி எழுந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் துயரத்தைக் கூட்டும்படியாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
எட்டு வயது நிரம்பியிருந்த என் தலைமகனை விபத்தில் பறிகொடுத்துவிட்டு அந்தக் குழந்தையின் இறுதிச்சடங்குகளை யமுனை நதியில் நடத்தியபோது யமுனைத் தாயுடன் மனம்விட்டுப் பேசினேன்.
‘என் மடியில் தவழ்ந்த மகனை இன்று உன்னிடம் ஒப்படைக்கிறேன். தாயாக நின்று கருணையைப் பொழிந்து அவனை அரவணைத்து ஏற்றுக்கொள்ளம்மா. நானும் வந்து சேரும் நாள் வரையில் உன்னுடைய அன்பில் என் நினைவுகளை அவன் தொலைக்கட்டும் தாயே!’ என்று வேண்டியபடி பெரும்பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தேன்.
அதன்பிறகு என் வாழ்க்கையின் எத்தனை எத்தனையோ ஏற்றங்கள், வீழ்ச்சிகள், சாதனைகள், சோதனைகள், ஏமாற்றங்கள், மகிழ்ச்சி, துயரம் என்று அனைத்தையும் அனுபவித்தது அதே யமுனைக் கரையில் தான். நாட்கள் போகப் போக எனக்கு நெருங்கிய தோழியாக மாறியிருந்தாள் யமுனை.
வருடங்கள் ஓடின. இளமை விடைபெற்று முதுமை உடலை ஆக்கிரமித்தது. பிறந்த மண்ணிற்குத் திரும்பிப்போ என்று உள்மனது உத்தரவிட்டுக்கொண்டே இருந்தது. ஒருநாள் தில்லியில் இருந்து மூட்டை, முடிச்சுடன் கிளம்பியபோது இத்தனை வருடங்கள் வாழ்ந்த இடத்தை விட்டுப் பிரிகிறோமே என்று மனம் அலைபாய்ந்தபோது, யமுனையை விட்டுப் பிரிகிறோம் என்கிற கசப்பான உண்மை, உள்ளத்தைச் சுட்டது.
காளிந்தியின் கண்ணீர் என்கிற தலைப்பில் யமுனை நதியைப் பற்றி எழுதுவதற்காக நான் சேகரித்த தகவல்களின் உதவியால் நல்லதொரு கதை உருவாகிப் பரிசும் வென்றது. அந்த எழுத்துக்களின் நடுவில் உறைந்திருக்கும் நான், என்றுமே யமுனையுடன் இணைந்திருக்கப் போவதை உணர்ந்து சிலிர்த்து நின்றேன்.
வைகை நதிக் கரையில் மீண்டும் வந்து தஞ்சமடைந்தபோது மனதில் யமுனை பற்றிய நினைவுகள் அவ்வப்போது எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. வறண்டு போயிருந்த வைகை இப்போது உயிர்த்திருக்கிறது. மீண்டும் வைகையில் அதிகரித்து வரும் நீர்ப்பெருக்கைப் பார்த்து மனம் குதூகலித்து நிற்கிறது. கிடைத்ததில் நிறைவு பெற்று அமைதியுறும் மனித இயல்பு, எஞ்சிய வாழ்நாட்களை இனிமையாகக் கழிக்க உதவட்டும்!