யானைகளின் மோதலில் மிதிபடும் எறும்புகள்

யானைகளின் மோதலில் மிதிபடும் எறும்புகள்
Published on

தேர்தலுக்கான கூட்டணி என்பது ஒரு விநோத விலங்கு. யானையின் துதிக்கையும், சிங்கத்தின் பிடரியும், குதிரையின் வாலும் பசுமாட்டின் கால்களும் கொண்ட விலங்கு. சில நேரம் அதற்கு கவர்ச்சிகரமான மயிலின் தோகையும் உண்டு. உருவம் எதுவானாலும் அதன் ஆதார நோக்கம் ஒன்றுதான். அது பதவி.

பதவி என்றால் குறைந்த பட்சம் எம்.எல்.ஏ பதவி. ஆட்சியே கிடைத்தால். ஆகா! அது ஆனந்தம். முடிந்தால் கொண்டை. அவிழ்த்துவிட்டால் கூந்தல். ஆனால் ஒரு போதும் மொட்டையாகிவிடக் கூடாது. அதுதான் குறிக்கோள்.

அந்தப் பதவி இல்லாமல் போனால் சிறிய கட்சிகள் நசிந்துவிடும். பெரிய கட்சிகள் தம் கட்டித் தாக்குப் பிடிக்கும். அந்த ‘உயிர்த்திருத்தலு’க்காகத்தான் அதாவது ‘சர்வைவலுக்காக’த்தான் அரசியல் கட்சிகளுக்குப் பதவி வேண்டும்.

ஆனால் அரசியலில் கூட்டணி என்பது குற்றமல்ல. வங்கத்தைப் போலக் கூட்டணிகள் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு சித்தாந்தத்தின் கீழ் அமையுமானால் அது வலிமை கொண்டதாக இருக்கும். எமெர்ஜென்சிக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட 1977 மக்களவைத் தேர்தலின் போது வங்கத்தில் இடதுசாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னெடுப்பில் ஒன்று திரண்டு இடது முன்னணியை உருவாக்கினார்கள். அவர்களின் ஒரே நோக்கம் காங்கிரஸை வீழ்த்துவது. அதற்காக அவர்கள் வலதுசாரிகள் எனக் கருதப்பட்ட ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார்கள். ஆனால் அதை அவர்கள் கூட்டணி என்று அழைத்துக் கொள்ளவில்லை. அதற்கு அவர்கள் வைத்த பெயர் தொகுதி உடன்பாடு. அதாவது ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகளில் இடது முன்னணியினர் போட்டியிடமாட்டார்கள். மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் இடது முன்னணி 26 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.

ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த உடன்பாடு நீடிக்கவில்லை. இத்தனைக்கும் இடது முன்னணி ஜனதா கட்சிக்கு 52 சதவீத இடங்களை அளிக்கவும், அதன் தலைவர் பி.சி. சென் என்பவரை முதல்வர் வேட்பாளராக ஏற்கவும் முன் வந்தது. ஆனால் ஜனதா கட்சி 56% இடங்களைக் கேட்டது. உடன்பாடு முறிந்தது. ஆனால் 294 இடங்களில் 231 இடங்களில் அபார வெற்றி பெற்று இடது முன்னணி ஆட்சிக்கு வந்தது. (அப்போது அதன் பலம் என்னவென்று அதற்கே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் 52% இடங்களைக் கொடுக்க முன் வந்திருக்க மாட்டார்கள்). அதன் பின் வங்கத்தை தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆண்டது. அதற்கான பல காரணங்களில் ஒன்று சித்தாந்த அடிப்படையில் அமைந்த கூட்டணி என்பது.

கேரளத்தில்கூட கலங்கித்தான் தெளிந்தது. இந்தியாவிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு அமைந்தது கேரளத்தில்தான். 1957இல். அதுதான் கேரளம் தனி மாநிலமாக உருவான பின் நடந்த முதல் தேர்தல். ஆனால் அங்கு உறவுகள் இணைவதும் முறிவதுமாக இருந்தன. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட ஏ.கே. அந்தோணி ஒரு காலத்தில் இடது முன்னணியில் இணைந்திருந்தார் என்பது வியப்பளிக்கலாம். அங்கு 1980களில்தான் இடது முன்னணி சித்தாந்தக் கூட்டணியாக வலுப்பெற்றது.

தமிழகத்தின் வரலாறு வேறு. 1971 முதல் தமிழகத்தின் தேர்தல்கள் எல்லாம், சித்தாந்தத்தை அல்ல, தலைமையை முன்னிறுத்திய, தலைவர்களுக்கிடையேயான, போட்டியாக வடிவம் கொண்டுவிட்டன. முதன் முதலாகப் பெருமளவில் கூட்டணி என்று உருவான 1967இல் அப்படியிருக்கவில்லை. 67 தேர்தலில் தேசிய நோக்கு கொண்ட கம்யூனிஸ்ட்கள், சுதந்திரா கட்சி ஆகியவை திராவிடச் சித்தாந்தத்தை ஏற்றிருந்த திமுகவுடன் இணைந்து களம் கண்டன. வலதுசாரிக் கட்சியான சுதந்திரா கட்சியுடன் இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி, உழைப்பாளர் கட்சி ஆகியவை கூட்டணியில் அங்கம் வகித்தன. அவை எல்லாம் இணைந்த ஒரு புள்ளி: காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவது. அது சித்தாந்தக் கூட்டணி அல்ல.

அது தலைமையை முன்னிறுத்திய -அதாவது காமராஜ் Vs அண்ணா- என்ற தேர்தலும் அல்ல. ஏனெனில் திமுக கூட்டணிக்குத் தலைமையேற்று அதிக தொகுதிகளில் (168) போட்டியிட்ட திமுக அண்ணாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. அண்ணா அந்தத் தேர்தலில் சட்டமன்றத்திற்குப் போட்டியிடவில்லை. காமராஜ் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இந்தியா முழுமைக்கும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

1971 தேர்தல்தான் தலைவர்களுக்கு இடையேயான போட்டியாக வடிவம் கொண்டது. அது காமராஜர்- ராஜாஜி, Vs இந்திராகாந்தி-கருணாநிதி ஆகியோருக்கு எதிரானதாக மாறியது. அதன் பின் நடந்த தேர்தல்கள் எல்லாம், கருணாநிதி Vs எம்ஜிஆர், கருணாநிதி Vs ஜெயலலிதா ஜெயலலிதா Vs மோதி, ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி எனத் தலைவர்களுக்கு இடையேயான தேர்தல்களாகவே ஆயின. கருணாநிதியைத் தீய சக்தி என்று அறிவித்து எம்ஜிஆர் பரப்புரை செய்தார். ஜெயலலிதா மக்களவைத் தேர்தலில் லேடியா மோடியா என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார்.

தேர்தல்கள் தலைமைகளுக்கிடையேயான போட்டி என்பதை 1989 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன. அந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பிளவுபட்ட அதிமுக என நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. கருணாநிதி முதலிடம், ஜெயலலிதாவிற்கு இரண்டாம் இடம். மூப்பனார் மூன்றாம் இடமும் ஜானகி நான்காம் இடமும் பெற்றனர்.

தேர்தல்களைத் தலைவர்களுக்கிடையேயான போட்டியாக மாற்றியதில் கருணாநிதிக்குப் பெரும் பங்குண்டு. ஆனால் அந்த அணுகுமுறை அவருக்கு எதிரானதாகவும் அமைந்தது. எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை அவரால் ஆட்சிக்குத் திரும்ப முடியவில்லை.

தேர்தல்கள் தலைவர்களை மையம் கொண்டதாக (leader centric) ஆனதால் கட்சிக் கட்டமைப்பின் காரணமாகத் தமிழகத்தில் நிலைத்த ஒரு தலைவரை உருவாக்க முடியாது போன தேசியக் கட்சிகள் தேர்தல் களத்தில் வலுவிழந்தன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கட்சிகள், பாஜக ஆகியவை உதாரணங்கள். இதை விளங்கிக் கொண்ட புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிகள் தங்களின் முகமாக ஒரு தலைவரை முன்னிறுத்தின. விடுதலைச் சிறுத்தைகள் (தேர்தலுக்கு வந்த ஆண்டு 1999), தேமுதிக (2005), நாம்தமிழர் (2010), மக்கள் நீதி மய்யம் (2018) தமிழக வெற்றிக் கழகம் (2024) ஆகியவை சில உதாரணங்கள். ஏற்கனவே நன்கு அறியப்பட்ட தலைவர்களிடம் முரண்பட்டு வெளியேறி புதிய கட்சிகளைத் தொடங்கியவர்களும் கட்சியின் முகமாகத் தங்களை நிறுவிக் கொண்டனர். மதிமுக (1994), தமிழக வாழ்வுரிமைக் கட்சி (2012) ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

இந்தத் தலைவர்கள் மக்களின் நம்பிக்கையை இழக்கும் போது அவர்களின் கட்சிகள் தேர்தலில் வீழ்ச்சி அடைகின்றன. வைகோ, ராமதாஸ், விஜயகாந்த், கமல்ஹாசன், போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தச் சூழலில் தலைவர்கள் முதலில் அரசியல் அரங்கில் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள, பின் கட்சி காணாமல் போய்விடாமல் இருக்க, இரு பெரும் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி காண்கின்றன. அவை இருத்தல் நெருக்கடியில் இருப்பதால் கொள்கைகளைப் பற்றியோ தங்களின் ஆரம்ப லட்சியங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. மக்களின் மறதியை அவை நம்பியிருக்கின்றன. ஆட்சியில் இருக்கும் கழகங்கள் தவறிழைக்கும் போது, அறம் பிறழும் போது அவற்றைக் கண்டிக்க, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்த முனைவதில்லை. உதாரணமாக தலித் மக்கள் மீதான தாக்குதல் இப்போதைய திமுக ஆட்சியில் 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் தலித் சமூகத்தினரின் குரலாகத் தன்னைக் கருதிக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கவில்லை. ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் நெடிய சிறைவாசத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டபோது காங்கிரஸ் கையைப் பிசைந்து கொண்டு நின்றதைத் தவிர, அதனால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை. சாம்சங் உள்பட்ட நிறுவனங்களில் தொழிற்சங்கப் பிரசினைகள் ஏற்பட்ட போது கம்யூனிஸ்ட் கட்சியும் திகைத்து நின்றது. திமுகவிற்கு எதிரான முழக்கங்களோடு தொடங்கப்பட்ட மக்கள் நீதிமய்யமும், தேமுதிகவும் திமுக வழி ஒரு மாநிலங்களவை இடங்களைத் தங்கள் தலைவருக்காகவோ, குடும்பத்திற்காகவோ பெற்றுக் கொண்டு வாய் மூடி நிற்கின்றன. ஊழலை ஒழிப்போம் என முழங்குகிற பாஜக, அதிமுக அமைச்சர்கள் மீது கூறப்பட்ட ஊழல் புகார்கள் குறித்து மெளனம் சாதிக்கிறது. ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா என்பதை அது மறந்து விட்டது போல் நடிக்கிறது.

இதைத் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் பெரிய கட்சிகள் தாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு சிறிய கட்சிகள் தங்களோடு இணைந்து நிற்கும் என்ற எண்ணத்தில் அவற்றைத் தங்களின் சகாக்களைப் போல அல்லாமல், தங்களின் கீழ் உள்ள பணியாளர்களைப் போல (subordinate) நடத்துகிறது. சிறிய கட்சிகள் தங்கள் அடையாளங்களை இழந்து பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அவை வற்புறுத்துகின்றன. ஒரு இடத்திற்காக, ஒரே ஒரு இடத்திற்காக, மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சி நடையாய் நடந்தது. வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது.

“வலி இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே திருமாவளவன் கூட்டணியில் தொடர்கிறார். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இலக்கு என்கிறார். ஆனால் வட இந்தியாவில் உள்ள தலித் கட்சிகள் என்ற அடையாளம் கொண்ட கட்சிகள் பாஜகவை எதிர்ப்பதில்லை என்பதோடு அவை பாஜகவின் கூட்டணியிலும் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கின்றன. இந்தியக் குடியரசுக் கட்சி (அம்பேத்கர்)யின் தலைவரான ராம்தாஸ் அத்வாலே மத்திய அரசில் இணை அமைச்சராக இருக்கிறார். ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும் லோக் ஜனசக்தியின் தலைவருமான சிராக் பாஸ்வானும் மத்திய அரசில் இணையமைச்சராக இருக்கிறார்.

சரி பிஜேபியை வீழ்த்துவதுதான் அவரது நோக்கம் என்றால் விஜய் கட்சியுடன் கூட்டணி காண திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். விஜயும் தனது அரசியல் எதிரியாக பாஜகவை அறிவித்தவர்தானே? அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு அதிக இடங்கள் இடங்கள் கொடுக்கப்படாததால் கட்சியில் அதிகப் பேருக்கு சீட் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துவதில் என்ன பயன்?

குறைந்த இடங்கள், ‘பெரியண்ணன் மனப்பான்மை’ இவற்றிற்கும் அப்பால் சிறிய கட்சிகள் கூட்டணியில் கொடுத்ததை வாங்கிக் கொண்டு நீடிப்பதற்குக் காரணம் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுக்குக் கொடுக்கும் “கொடை”. கடந்த தேர்தலின் போது கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டிற்கும் மொத்தமாக 25 கோடி திமுகவால் நிதி அளிக்கப்பட்டது என்பது பதியப்பட்ட வரலாறு.

சிறிய கட்சிகளின் இது போன்ற செயல்கள் காரணமாக இந்தக் கட்சிகள் வழக்கமாக அவர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களிடையே நம்பிக்கையை இழந்து நிற்கின்றன. தொண்டர்களுக்கும் மனப் புழுக்கம் இருக்கும்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்களை உருவாக்க முடியாத சிறிய கட்சிகளுக்கு தலைவர்களை மையப்படுத்திய தேர்தல் வாழவும் முடியாத சாகவும் முடியாத ஒரு மரண அவஸ்தை. அதில் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் மாநிலங்களவைப் பதவியோ,வாரியத் தலைவர் பதவியோ, அல்லது வேறு எதையோ ஒன்றைப் பெற்றுக் கொண்டு விடுவார்கள். தொண்டர்கள் நிலைதான் பரிதாபத்திற்குரியது. என்றென்றும் ஏணிகளாக படகுகளாக இருக்கவே அவர்கள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com