என் சமையலறையில் : உஷா கிருஷ்

என் சமையலறையில் : உஷா கிருஷ்
Published on: 

புகைப்பட கலைஞர் உஷா கிருஷ், புகைப்பட கலை குறித்த வகுப்பை மும்பையில் எடுத்து வருபவர். நிறைய புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியிருப்பவர்.

70 வயதைக் கடந்தும் தொடர்ந்து புகைப்படத் துறையில் சுறுசுறுப்பாக இயங்கிவருபவர். சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் அவரது வீட்டில் சந்தித்தோம்.

“எங்க அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. அப்பா இராணுவத்துலயே இருந்ததால நிறைய வட மாநிலங்களுக்குப் போக வேண்டியிருந்தது. அதனால அப்ப எங்க அப்பாவுக்கு உதவியாளரா இருந்த கமலாபதிதான் என்னை வளர்த்தார்.  டெல்லியிலிருந்து கல்யாணமாகி சென்னைக்கு வந்தப்போ எனக்கு நாலைஞ்சு உணவு வகைகள்தான் செய்யத் தெரியும். ஆலு பரோட்டா, கடி (மோர்க்குழம்பு), சுரைக்காய் கூட்டு, தால், முள்ளங்கி பரோட்டா இப்படியான நாலு மட்டும்தான் தெரியும். நான் தமிழ்நாட்டுக்கு வந்த புதுசுல எல்லாரும் பெரிய கூட்டுக்குடும்பமா இருந்ததால நான் கடைக்குப் போக வேண்டிய அவசியம் வரலை. ரொம்ப நாட்கள் போன பிறகுதான் காய்கறிகள் வாங்கப் போனேன். அதுக்குள்ள எல்லா காய்கறி பேரையும் தமிழ்ல தெரிஞ்சுக்கிட்டேன். வந்த ரெண்டு வருஷத்துல தமிழ் பேசக் கத்துக்கிட்டேன்” என்பவர் வீட்டு பால்கனியில் முப்பது நாற்பது வருட மரங்களைத் தொட்டியில் வளர்த்துவருகிறார். 

“எனக்கு எண்ணெய் அதிகம் சேர்த்த உணவோ இனிப்புப்பலகாரங்களோ ரொம்ப பிடிக்காது. அதனால வெளில போகும்போது எண்ணெய் அதிகம் சேர்த்ததா அப்டினு கேட்டுப் பாத்துதான் சாப்பிடுவேன். இப்ப எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன். யாராவது வீட்டுக்கு வந்தா தால் செய்வேன். ஸ்பெஷல் அப்டினா தால் பரோட்டா செய்வேன். கடலைப்பருப்பு போட்டு ஸ்டஃப் பண்ணி பரோட்டா செய்வேன். இது உத்திரபிரதேச உணவு வகை. எண்ணெயில கடுகு, சீரகம் தாளிச்சு வேகவைச்ச பருப்பைக் கொட்டிக் கிளறணும். அல்வா மாதிரி வந்ததும் கொஞ்சமா எடுத்து சப்பாத்தி உருட்டும்போது நடுவுல கொஞ்சம் வைச்சு உருட்டி சப்பாத்தி மாதிரி சுட்டு எடுக்கணும். எண்ணெய் தடவி சுடலாம். ரொம்ப டேஸ்டா இருக்கும். புளி, பருப்பு, அரிசி கலந்து கிராம்பு, கொப்பரை எல்லாம் சேர்த்து பிசிபேளாபாத் செய்வேன். விசேஷ நாட்கள்ல அவியல் செய்வேன். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் அரைச்சு ஊத்தி அவியல் செய்றது எனக்கு பிடிக்கும்” என்பவருக்கு ஒரே மகள். பெங்களூரில் இருக்கிறார்.

“ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி உணவுகள் கிடைக்கும். அந்தந்த ஊர்ல கிடைக்குற உணவுகளைச் சாப்பிட்டுக்குவேன். சப்பாத்தி, தால் அல்லது சாதம் இப்டி எது கிடைக்குதோ அதை சாப்பிட்டுக்குவேன். ரெண்டு மாசம் மும்பைக்கு போனா அங்க தென்னிந்திய ஹோட்டல் பாத்து போய் சாப்பிடுவேன். ஆனா எனக்கு நூடுல்ஸ் பிடிக்கவே பிடிக்காது. ஆனா அது ட்ரக்கிங் போற இடத்துல இருக்குற கடைகள்ல கூட கிடைக்கும்.

நான் மைசூர் பாகு, பர்ஃபி, திரட்டிப்பால் இதெல்லாம் யாராவது வீட்டுக்கு வர்றாங்கன்னா அடிக்கடி பண்ணுவேன். நான் மைசூரு பாகு பண்ணினா எனக்கு ரெண்டுதான் மிஞ்சும். எல்லாரும் வாங்கிட்டு போய்டுவாங்க. அந்தளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். ஒரு கிலோ செஞ்சாகூட நிமிஷத்துல காலியாகிடும். வாயில போட்டதுமே கரைஞ்சிடுதுனு சொல்லுவாங்க தீபாவளிக்கு மூணு ஸ்வீட்டும் பண்ணிடுவேன்.

எங்க மாமியார்கிட்ட இருந்து இதையெல்லாம் கத்துக்கிட்டேன். இன்னைக்கு எல்லாரும் தீபாவளி பண்டிகைக்கே கடையிலதான் வாங்குறாங்க. ஆனா அந்த காலத்துல நாங்க வீட்டுலதான் செய்வோம். இன்னைக்கும் கூட நான் எப்போதாவது இனிப்பு சாப்பிடனும்னா வீட்டுல செஞ்சுதான் சாப்பிடுவேன்.

ஒரு அடுப்புல வெண்ணைய உருக்கி நெய்யாக்கி சூடா வைச்சிடுவேன். இன்னொரு அடுப்புல கடலைமாவு சர்க்கரையைப் போட்டுக் கிளறி கொஞ்சம் கொஞ்சமா நெய்யை ஊத்தி பதம் வந்ததும் இறக்கிடுவேன். மைசூர் பாகுல கொஞ்சம் கொஞ்சமாக நெய்ய ஊத்தி செய்றதுக்கு கிட்டத்தட்ட ஒருமணி நேரமாகிடும். அதனால யாரும் வீட்டுல இல்லாத நேரமா பாத்துதான் செய்வேன். போன் அடிச்சா கூட எடுக்க மாட்டேன். செய்யணும்னு தோணியதும் கதவைப் பூட்டிட்டு கிச்சன்ல போய் செஞ்சுடுவேன். இதை பெரும்பாலும் வீட்டுல செய்ய மாட்டாங்க. எனக்கு மைசூர்பாகு கடையில வாங்கி சாப்பிடவே பிடிக்காது. அதே மாதிரி தேங்காய் பர்பியும் ரொம்ப நல்லா செய்வேன். தேங்காய் முந்திரி பால் சேர்த்து சர்க்கரை பாகு சேர்த்து இறக்கிடுவேன்.

பண்டிகைக்கான பலகாரங்கள் எல்லாத்தையுமே வீட்டுலதான் செய்வேன். சீடை, விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, சுண்டல்னு எல்லாமே செஞ்சிடுவேன். வெல்ல சீடை, உப்பு சீடை செய்வேன். அரிசி மாவை வறுத்து, கொஞ்சம் உளுத்தம் மாவு சேர்த்து உப்பு, சீரகம், எள்ளு எல்லாம் போட்டு கலந்து வைச்சு ஒருமணி நேரம் கழிச்சு எண்ணெயில போட்டு எடுக்கவேண்டியதான். இதே இனிப்பு சீடைனா மாவோடு வெல்லப்பாகு கிளறி கொஞ்ச நேரம் கழிச்சு உருட்டி சுட வேண்டியதான். சீடை சொல்றப்போ ஈஸியா இருக்கு ஆனா எண்ணெயில போடும்போது வெடிக்குமோனு சில பேரு வீட்டுல செய்ய மாட்டாங்க. ஆனாலும் நாங்க வீட்டுலதான் செய்வோம். வெளியூருக்கு போகும்போது நிறைய பாத்திரங்கள் வாங்கிட்டு வர்றதுண்டு. எனக்கு மண்பாத்திரங்கள், செம்பு பாத்திரங்கள் இப்டி பாரம்பரிய விஷயங்கள் ரொம்ப பிடிக்கும். மண்பாத்திரத்துல உப்புமா செய்வேன். செம்பு பாத்திரத்துலதான் அந்தக் காலத்துல ரசம் வைச்சேன். அதுல செய்றது ரொம்ப நல்லதுனு  சொல்வாங்க.

என்னோட பேரன் அமெரிக்காவுல இருக்கான். அவன் சென்னை வரும்போது கேக்குறத சமைச்சுக் கொடுப்பேன். அவனுக்கு வெண்டைக்காய் கறின்னா ரொம்ப இஷ்டம். அதனால வெண்டைக்காயை வதக்கி தாளிச்சுக் கொட்டிடுவோம். கொத்தமல்லி மிளகாய் வத்தல் கடலைப்பருப்பு சேர்த்து அரைச்சு வைச்ச ஒரு பொடி வைச்சிருக்கோம். அதைத்தான் உருளைக்கிழங்கு பொரியல், கத்தரிக்காய் பொரியல் செய்யும்போதெல்லாம் போட்டு செய்வோம். நாங்க வெங்காயம், பூண்டு அதிகம் சமையல்ல பயன்படுத்த மாட்டோம். வெங்காயம் போடாம செய்யும்போது அதோட சுவையே வேற மாதிரி இருக்கும். இஞ்சி பூண்டு சேர்த்து செய்யும்போது அது காயோட ஒரிஜினல் சுவையை அமுக்கிடும்”என்று கூறும் உஷா கிருஷ் நல்ல புகைப்படக்கலைஞரும் கூட.

மைசூர் பாகு

தேவையான பொருட்கள்:

கடலை மாவு ஒரு கப், சர்க்கரை இரண்டு கப், உப்பில்லாத வெண்ணெய் சு கப் செய்முறை: சர்க்கரையை ஒரு கப் தண்ணீருடன் கலந்து பாகுபோல் செய்துகொள்ள வேண்டும். பாகுடன் கடலை மாவை சிறிது சிறிதாக கலந்து கிளறவும். கிளறும்போது உருக்கிய வெண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொள்ளவும். மிகக் குறைந்த தீயில் வைத்து அரைமணி நேரத்துக்கும் மேலாகக் கிளறியபின் ஒரு பாத்திரத்தில் நெய் தடவிக் கொட்டவும். ஆறிய பின்னர் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

ஏப்ரல், 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com