எந்தப் பிரச்னைன்னாலும் நீங்கதான் பார்த்துக்கணும்மா!

எந்தப் பிரச்னைன்னாலும் நீங்கதான் பார்த்துக்கணும்மா!
Published on

கல்வி அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. பல்வேறு வகைகளில் ஏற்றத்தாழ்வுகளைச் சிக்கெனப் பிடித்தலையும் சமூகத்தில் நம் முன்னேற்றத்திற்கென இருக்கும் ஒற்றை ஊன்றுகோல். அத்தகைய கல்வியை அளிக்கும் ஆசிரியர் பொறுப்பில் இருப்பதில் எனக்குப் பெருமை; இத்தனைக்கும் சிறுவயதில் பத்திரிகையாளராக வேண்டுமென்பதே என் விருப்பமாக இருந்தது. ஆசிரியராக ஆனது எதிர்பாராத ஒன்று. தொடக்கத்தில் அதுகுறித்த வருத்தமிருந்தபோதும், ஓர் ஆசிரியராக எப்போதும் குழந்தைகளுடன் இருக்கும் இந்தப் பொறுப்பே இன்றைய என் வாழ்வு; என் பெருமிதம்!

வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பல பள்ளிகளில் நான் பணியாற்றியிருக்கிறேன். எனவே, அதன் பண்பாடு, சமூகச்சிக்கல்களையும் ஓரளவு அறிவேன். குழந்தைகளுக்கு நல்லறிவையும் ஒழுக்கத்தையும் கற்பிப்பதுடன் அவர்களை முறையாக வழிநடத்துவதிலும் சமுதாயத்தில் பங்களிப்புச் செய்ய வைப்பதிலும் ஆசிரியருக்கு முக்கியமான பங்குண்டு என்பது என் எண்ணம்.

புதிதுபுதிதாகக் கதைகளும் கவிதைகளும் சொல்லி, அவர்களை நிறையப் பேச வைக்கிற ஆசிரியர் என்பதால் என்னிடத்தில் எப்போதும் ஒரு மாணவர் கூட்டமிருக்கும். மாணவர்களை மனம்விட்டுப் பேச வைக்க வேண்டுமென்பதே என் முதல் குறிக்கோள் என்பதால் அவர்களையே பாடம் நடத்தச் செய்வதும் இரு குழுக்களாகப் பிரித்து விவாத முறையில் நடத்துவதுமெனப் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்ப்பேன். அவர்கள் பாடத்தை விட்டு வெளியேறி, வேறு தலைப்புகளில் நுழையப் புகும்போது அவர்களை மீண்டும் தலைப்புக்குள் கொண்டு செலுத்துவதும் பேச வேண்டிய கருத்துகளை விடாது நினைவூட்டுவதுமே என் வேலை. எனவே, அந்தப் பாடங்களுக்குள்ளேயே அவ்வப்போதைய சமூகச் சிக்கல்களும் வந்து செல்லும்.

வீட்டுச் சிக்கல்களை என்னிடம் பகிர்வதோடு அவற்றைச் சரிசெய்வதற்கான வழிகளையுமெல்லாம் என்னிடம் அவர்கள் கலந்தாலோசிப்பார்கள். கிராமங்களிலேயே பணிபுரிந்திருக்கிறேன் என்பதாலும் அங்கேயே அவர்களுடனேயே வாழ்ந்திருக்கிறேன் என்பதாலும் பெற்றோரிடமும் எனக்குச் செல்வாக்கு உண்டு. மாலை நேரங்களில் மாணவர்களின் வீடுகளுக்குச் செல்வேன். பள்ளியில் மாணவர் சந்திக்கும் சிக்கல்களைப் பெற்றோரிடம் பேசி, அவற்றைச் சரிசெய்வதற்கும் முயல்வேன்.

பள்ளியில் எத்தனையோ வகையான சிக்கல்களைச் சந்தித்திருக்கிறேன். வேடிக்கையாகவும், துயரமாகவும் இருக்கும் அவை. ஒருமுறை, சுமாராகப் படிக்கக்கூடிய மாணவி ஒருத்தியைப் பற்றிய புகார் ஒன்று என்னிடம் வந்தது. அவர் யாரையோ காதலிப்பதாக, வகுப்பு மாணவர் ஒருவர் சொன்னார். எதுவும் சொல்லாமல் அதனைக் கேட்டுக்கொண்டதுடன் அப்படியே விட்டுவிட்டேன், அவரிடமும் அதனைக் கேட்கவில்லை. ஆனால், அவரைச் சற்றே கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதுடன், அவ்வப்போது அழைத்துப் பேசினேன். சற்றே இயல்பு குலைந்திருந்த அவரிடம் ஆசுவாசமாகப் பேசி, கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லி வந்தேன். அது, இருபாலர் பள்ளி. நான் வகுப்பெடுப்பது மேனிலை மாணவர்களுக்கு என்பதால் கல்வியின் தேவையையும் கல்லூரியில் அவர்கள் தேர்வு செய்ய வேண்டிய பாடங்கள் குறித்தும் அவ்வப்போது பேசுவேன்.

ஒருவசதிக்காக மாணவியின் பெயரை கண்மணியென்று வைத்துக் கொள்வோமே. எனக்குத் தெரியுமென்று கண்மணிக்குத் தெரியும், அவரும் எதுவும் பேசவில்லை, நானும் எதுவும் கேட்கவில்லை. மதிப்பெண் மட்டும் கூடுதலாக எடுப்பதற்கான தேவைகளை வகுப்பில் பேசி வந்ததால், அவருடைய கல்வியில் சற்றே முன்னேற்றம் கூடியது. இது எனக்கு உவப்பாக இருந்தது. அவருடைய கல்வியைத் தூண்டிவிடுவதே என் பணி. எனவே பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசுவேன். விடுப்பெடுக்காது வந்துகொண்டிருந்த கண்மணி, ஒரு வாரம் பள்ளிக்கு வரவில்லை. அவருடைய கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் கேட்டபோது தெரியாது என்றார்களே தவிர எதையும் சொல்லவில்லை. வருகைப்பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும் அவருடைய வீட்டு எண்ணை எடுத்து அழைத்தேன். அது, பிழையான எண். பத்து நாள்கள் கடந்தும் கண்மணியைக் காணாதும் என்ன செய்வதென்று தெரியாமலும் தவித்தபோதுதான் சத்துணவு ஆயா வந்து அவர் யாருடனோ சென்றுவிட்டார் என்றார்.

அப்போது, தலைமை ஆசிரியர் என்னை அழைத்தார்; அங்கே கண்மணியின் பெற்றோர் அமர்ந்திருந்தனர். அவர்கள் கண்மணியின் மாற்றுச் சான்றிதழைக் கேட்டுத் தகராறு செய்துகொண்டிருந்தனர். என்னைப் பார்த்தவுடன் அவருடைய அம்மா கண்ணீருடன் எழுந்துவந்து கண்மணியை வசைமாரி பொழிந்தார். அதிலிருந்து, சொந்தக்காரர் ஒருவருடனே அவர் உடன்போக்குச் சென்றிருப்பதை அறிந்தேன்.

பல்வேறு வேலைகளுடன் தடுமாறியபடியிருந்த தலைமை ஆசிரியர், அவர்களை என்னிடம் ஒப்படைத்தார். அவர்களிடம் பேசிப்பேசி விஷயங்களைத் தெரிந்துகொண்டபின், மாற்றுச் சான்றிதழில் மாணவர் கையொப்பமில்லாமல் தர முடியாது என்ற தகவலை அவர்களுக்கு உணர்த்தினேன். கண்மணி, பொதுத்தேர்வு எழுதாமல் ஆண்டின் பாதியில் இப்படிச் செய்துவிட்டாளே என்ற வருத்தத்தை அவரின் அம்மாவிடம் சொன்னேன். ‘அவ திரும்ப வந்து படிக்கப்போறேன்னு சொன்னாளாம் மிஸ். அவ படிக்கக்கூடாதுன்னுதான் நாங்க சான்றிதழ் கேட்கிறோம்’ என்றார் அவருடைய அம்மா. அவர்களுடைய எண்ணம் பெரும்வருத்தத்தைத் தந்தது. ‘அவ எப்படி பள்ளி வாசலை மிதிக்கிறான்னு பார்க்கிறேன். இந்த ஊர்ப்பக்கம் வந்துடுவாளா அவ?’ என்று சத்தமிட்டபடியே வெளியேறினார் அவருடைய அப்பா. தற்போது கண்மணி இருக்கும் ஊரைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர் சொல்லும் செய்தி இது. இருவரும் ஒரே சாதி, உறவினர் என்பதால் இங்கு பிரச்சனை ஏதும் அவர்கள் செய்யவில்லை. தங்கள் சொல் கேட்காமல் இப்படிச் செய்துவிட்டாளே என்னும் ஆத்திரம்தான் அவர்களின் பேச்சில் தெறித்தது.

கண்மணி இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டு அவரை எப்படியாவது, இந்த ஆண்டை முடிக்கச் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து, அதற்காக மாணவர்களிடம் எவருமறியாது பேசத் தொடங்கினேன். எவரும் பிடிகொடுக்கவேயில்லை. வருத்தத்துடன் வகுப்பறையிலிருந்தபோது வாசலில், மெல்லிய குரலில் மிஸ் என்று கண்மணியின் குரல் கேட்டது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றேன். அங்கே கண்மணியின் கணவரும் அமர்ந்திருந்தார். கூச்சத்துடன் சிரித்தபடியே, ‘அது படிக்கணுங்குதும்மா. அதுதான் இந்த வருஷத்த முடிச்சுடட்டும்னு பார்த்தேன்’ என்றார். இருவரையும் வெளியில் அமர வைத்துவிட்டு, தலைமை ஆசிரியரிடம் பேசினால், அவர் வேறொரு முடிவெடுத்திருந்தார். ‘திருமணமான பெண் மேடம், மற்ற பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இந்தப் பெண்ணும் ஒழுங்காக வருவாளா, படிப்பாளா, வீண்கதைகளை மாணவிகளிடம் பேசி அவர்களையும் கெடுப்பாளா என்று தெரியாது. மாணவர்கள் வேற இருக்காங்க. வீணான பிரச்சனை இதெல்லாம். டி.சி கொடுத்துடலாம்’ என்றார். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் ஒரே பாட்டாக இருந்தது அவர் பாட்டு. அவருடைய பிற்போக்குத்தனத்தைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் அது, ஒரு பெண்ணின் வாழ்வைக் குப்புறத் தள்ளுமென்றால் அதை அப்படியே விடமுடியாது என்று நானும் விடாமல் அவரிடம் பேசிக்கொண்டே இருந்தேன்.

நாங்கள் பேசுவதை வெளியிலிருந்து கேட்ட கண்மணி சட்டென்று உள்ளே வந்து, உடைந்து அழுதார்; என்னாலும் தாங்க முடியவில்லை. அவரை அப்படியே அணைத்தபடி, நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் சார். இன்னும் ஏழு மாதங்கள் தான் இருக்கு. முடித்து விட்டால் பள்ளி இறுதிச் சான்றிதழேனும் அவருக்குத் துணை புரியுமில்லையா என்று சொல்லவும் அவரால் மறுக்க முடியவில்லை. அரைமனத்துடன், எந்தப் பிரச்சனைன்னாலும் நீங்கதான் பார்த்துக்கணும்மா என்று சொல்லியபின் கண்மணியிடம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, இதில் ஒன்றை மீறினாலும் உடனே டிசி கொடுத்துடுவேன் என்று சொல்லி அனுப்பினார்.

அன்றிலிருந்து கண்மணி எனக்கு மேலும் நெருக்கமானதுடன் இன்னும் முயற்சி எடுத்துப் படித்தார். அவரிடம் நானும் சில குறிப்புகளைக் கொடுத்தேன். அவற்றைத் தவறாது பின்பற்றிப் படிக்கத் தொடங்கினார். சில வாரங்களுக்குள் அவருடைய பெற்றோர்க்கு விஷயம் தெரிந்து பள்ளிக்கு வந்து மிரட்டியபோது, கண்மணி படிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று பேசி அனுப்பிய அன்று, மீண்டும் அவர்களின் வீட்டுக்குச் சென்று பேசினேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள், உதவவும் இல்லை; உபத்திரவம் தரவுமில்லை. கண்மணி படித்து, பள்ளி இறுதித்தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்களைப் பெற்றபோது உண்மையில் அவருடைய பெற்றோரை விடவும் ஆனந்தப்பட்டதுடன் சிக்கலில்லாமல் விஷயம் முடிந்ததை நினைத்து நிம்மதிப் பெருமூச்செறிந்தேன். நம் சிந்தனை, எண்ணம் ஒருபுறம்; ஏதாவது ஏறுக்கு மாறாகியிருந்தால் பள்ளியில் எனக்குச் சிக்கலல்லவா! நல்லவேளை, கண்மணி தேர்வில் தேறி, கல்லூரிக்கும் சென்று நல்லதொரு முன்மாதிரி மாணவியானாள். அதில் என் சிறுபங்கு எப்போதும் என் பெருமிதம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com