அகில இந்திய குடும்பம்!

அகில இந்திய குடும்பம்!

எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் குடும்பம் காங்கிரஸின் சார்பில் இந்தியாவின் முதல் பிரதமர் ஆன நேரு விட்டுச் சென்றிருக்கும் குடும்பம். அவரது மகள் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி...ராஜிவ்காந்தி...

சோனியா காந்தி!  இப்போது இவர்களின் வாரிசு ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தன் வரலாறு காணாத சரிவைக் கண்டிருக்கும் நிலையில் அதன் தலைவராக இருக்கிறார். நேரு குடும்பத்தின் சஞ்சய் காந்தி கிளையில் அவரது மனைவி மேனகா காந்தி, மகன் வருண் காந்தி இருவருமே அரசியலில் அமைச்சர், எம்.பி பதவிகளை வகிக்கிறார்கள். தங்கள் தலைமைக்காக நேரு குடும்பத்தையே காங்கிரஸ் சார்ந்திருப்பதற்காக அக்கட்சியை வறுத்தெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பாஜக கடந்த 35 ஆண்டுகால வரலாற்றில் தன் தலைமைப்பதவியை இப்படி எந்த குடும்பத்துக்கும் அடகு வைத்துவிட வில்லை! ஆனால் அது ஏராளமான அரசியல் குடும்பங்களை கட்சியில் கொண்டிருக்கிறது. வாரிசுகளை வளர்த்துவிடத் தயங்கவும் இல்லை!

பாஜகவில் இருக்கும் பிரபலமான அரசியல் குடும்பம் என்று பார்த்தால் அது சிந்தியா குடும்பம். ராஜஸ்தான் முதல்வராக இருக்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா. அவரது மகன் துஷ்யந்த் சிங் இப்போது எம்.பி. வசுந்தராவின் சகோதரி யசோதரா ராஜே மத்தியப்பிரதேச மாநில அமைச்சர். இவர்களின் அம்மா மறைந்த விஜயராஜே சிந்தியா எம்பியாக இருந்தவர். பாஜக நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். வசுந்தராவின் சகோதரர் மாதவராவ் சிந்தியா. இவர் முக்கிய காங்கிரஸ்தலைவர். சாலை விபத்தில் இறந்துவிட்டதால் இவரது மகன் ஜோதிராதித்திய சிந்தியா அரசியலில் நுழைந்தார். மத்திய அமைச்சராக பதவி வகித்த இவர் இப்போது மக்களவை உறுப்பினர். மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் வென்றால் இவர் முதல்வர் ஆகக்கூடும்.

சத்திஸ்கரில் ஆளும் பாஜக முதல்வர் ராமன் சிங்கின் மகன் அபிஷேக் மக்களவை உறுப்பினர். ஹிமாசலபிரதேச முன்னாள் பாஜக முதல்வர் பிரேம்குமார் துமாலின் மகன் தான் அனுராக் தாக்கூர். இவர் மூன்றாவது முறை எம்பியாக இருக்கிறார். அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய புள்ளி.

இப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் பத்னாவிஸின் அப்பா அங்கே மேலவை உறுப்பினராக இருந்தவர். இவரது அத்தையும் அங்கே அமைச்சராக இருந்தவர். யஷ்வந்த் சின்ஹா வின் மகன் ஜெயந்த் சின்ஹா இன்று மத்திய அமைச்சர். மகாராஷ்ட்ராவில் மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் இருமகள்களும் அரசியலில் இருக்கிறார்கள். மூத்த மகள் பங்கஜா முண்டே மாநில அமைச்சர். இளையமகள் அப்பாவின் தொகுதியில் எம்.எல்.ஏ.  முண்டேவின் மைத்துனர்தான் மறைந்த பிரமோத் மஹாஜன். இவரது மகனை அரசியலில் நுழைக்க முயன்றனர். முடியவில்லை. மகள் அரசியலுக்கு வந்து எம்பியாக ஆகிவிட்டதுடன் அகில இந்திய அளவில் பாஜகவில் பொறுப்பு வகிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருக்கிறாரே.... அவரது மகன் பங்கஜ் சிங் உபியில் சட்டமன்ற உறுப்பினர்.

இவர்கள் ஒருபுறம் இருக்க, மாநிலக்கட்சிகளைப் பொறுத்தவரை எல்லா மாநிலங்களிலும் வாரிசுகள் ஆட்சிதான்.  ஹரியானாவில் இந்திய தேசிய லோக் தளத்தின் நிறுவனர் மறைந்த தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சௌதாலா, முதல்வராக இருந்தார்கள். அவரது மகன்கள் அஜய், அபய் இருவரும்  எம்.எல்.ஏக்களாக இருந்தனர். அஜயின் மகன் துஷ்யந்த் 26 வயதிலேயே எம்பி ஆனார். நான்கு தலைமுறைக் குடும்பம் இது!

உ.பி,யில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வர் ஆனார். மருமகள் டிம்பிள் யாதவ் எம்.பி ஆனார். அதுமட்டுமல்ல, முலாயமின் தம்பி உட்பட குடும்ப உறவுகள் சுமார் 24 பேர் முக்கிய அரசியல் பதவிகளை வகித்துள்ளனர். இப்போதிருக்கும் ஐந்து எம்பிகளில் நால்வர் குடும்ப உறவுகளே.

இவரது சம்பந்தி லாலுபிரசாத் குடும்ப அரசியலில் பிதாமகர். தீவன ஊழலில் பதவி விலகியபோது மனைவியை முதல்வர் ஆக்கி புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றவர். அவரது மகன்களில் ஒருவர் துணைமுதல்வராகவும் இன்னொருவர் அமைச்சராகவும் இருந்தனர். மகள் மிசாபாரதி மாநிலங்களவை உறுப்பினர். அதே மாநிலத்தில் இருக்கும் ராம்விலாஸ் பஸ்வான் பாஜக அமைச்சரவையில் இப்போது உறுப்பினர். அவரது மகன் சிராக் பஸ்வான், தம்பி ராமச்சந்திர பஸ்வான் இருவரும் லோக் ஜன்சக்தி கட்சி எம்.பிக்கள். இன்னொரு சகோதரர் பசுபதி பஸ்வான் இப்போதைய நிதிஷ்குமார் ஆட்சியில் அமைச்சர்.

உத்தரபிரதேசத்திலேயே இன்னொரு அரசியல் குடும்பமும் இருக்கிறது. அது முன்னாள் பிரதமர் சரண்சிங் குடும்பம். சரண்சிங்கின் மனைவியும் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவரது மகன் அஜித் சிங் ராஷ்டிரிய லோக் தளம் என்ற கட்சியை நடத்துகிறார். காங்கிரஸ், பாஜக ஆட்சிகளில் மத்திய அமைச்சராக இருந்தவர் இவர். ஜெயந்த்

சவுத்ரி இவரது மகன். இவரும் மதுராவில் எம்பியாக இருந்தவர். கடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நடிகை ஹேமமாலினியிடம் தோற்றார்.

தெலுங்கு தேசத்தைத் தொடங்கிய என்.டி.ராமராவ் ஆந்திர முதல்வர் ஆனார். பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சியைக் கைப்பற்றிக்கொண்டு முதல்வராக ஆனார். இப்போது ஆட்சியில் இருக்கும் சந்திரபாபு, தன் மகன் லோகேஷுக்கு அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். அங்கே காங்கிரசின் முதல்வர் ராஜசேகர ரெட்டி 2009 -ல் விபத்தில் இறக்க, அவரது மகன் ஜகன்மோகன் தனிக்கட்சி ஆரம்பித்து செல்வாக்காக உள்ளார்.

தெலுங்கானாவிலும் இதே கதை. சந்திரசேகர் ராவ் முதல்வர். அவரது மகள் கவிதா எம்.பி. மகன் கே.டி. ராமாராவ் கட்சியில் முக்கிய தலைவர். கர்நாடகாவில் தேவகவுடா குடும்ப ஆட்சியைப் பற்றி நாம் அறிவோம்.

இது ஒடிஷா நிலவரம். காங்கிரஸில் தொடங்கி ஜனதாக் கட்சிக்கு வந்தவர் ஒரிசாவின் முன்னாள் முதல்வர் பிஜுபட்நாயக். அவரது மகன் நவின் பட்நாயக் வெளிநாட்டில் படித்தவர். அப்பா இறந்த போது நவீன் அரசியலில் இல்லை. ஒரிய மொழி பேசவும் தெரியாது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக நவீன் பட்நாயக் ஒரிசாவின் அசைக்கமுடியாத முதல்வராக இருக்கிறார். பஞ்சாபில் சிரோண்மணி அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்தபோது மகன் சுக்விர்சிங் பாதலை துணை முதல்வராக வைத்திருந்தார். மருமகள் ஹர்சிம்ரத் கவுர் இப்போது மத்திய உணவுபதப்படுத்தல் துறை அமைச்சர். அங்கேயே காங்கிரஸ் முதல்வராக இருப்பவர் அமரிந்தர் சிங்.

பாட்டியாலா சமஸ்தான வாரிசு இவர். இவரது தந்தை அரசுப்பதவிகள் வகித்தவர். இவரது தாய்கூட ஒருமுறை எம்பியாக இருந்துள்ளார். அமரிந்தர்சிங்கின் மனைவி முன்னாள் மத்திய அமைச்சர். மகனும் அரசியலில் உள்ளார்.

மகாராஷ்டிராவுக்கு வந்தால் அங்கே தாக்கேரே குடும்பம் முக்கியமானது. பால்தாக்கரேவின் சிவசேனா அவரது மகன் உத்தவ் தாக்கரே வசம் உள்ளது. அவரது பேரன் ஆதித்யா அதன் இளைஞர் அணித் தலைவர். பால்தாக்கரேவின் மருமகன் பிரிந்துபோய் நவநிர்மான் சேனா வை நடத்துகிறார். அங்கே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார் தன் மகள் சுப்ரியா சுலேவை அரசியலுக்குக் கொண்டுவந்து எம்.பி ஆக்கி உள்ளார். அவரது மருமகன் அஜித் பவார் முன்னாள் துணை முதல்வர், இப்போது எம்.எல்.ஏ.

ஜம்மு காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா என்று மூன்று தலைமுறை அப்துல்லா குடும்ப அரசியல் உள்ளது. அதேபோல் மெக்பூபா முப்தி, முன்னாள் முதல்வர் முப்தி முகமதி சையதுவின் மகள்!

கடைசியாக ஒன்று: சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தியிடம் அவரது குடும்ப அரசியல் பற்றிக் கேட்கப்பட்டது. அவர், ‘எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டீர்கள். என் தந்தைக்குப் பின்னால் என் குடும்பம் இன்று வரை அரசு அதிகாரத்தில் இல்லையே‘ என்று போட்டார் ஒரே போடு! உண்மைதான். ஆனால் காங்கிரஸ் கட்சி யார் கையில் உள்ளதாம்?         

செப்டெம்பர், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com