அடப்பாவமே

அடப்பாவமே

இந்த ‘பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது' என்பதே அரத பழசான கான்சப்ட்.. அதுவும் இல்லாமல், அது ஏதோ புரிந்துகொள்வதற்கு கஷ்டமான சம்பவம் போலவும், அகழ்வாராய்ச்சித் துறையின் உதவி தேவைப்படுகிற காரியம் போலவும் ஆக்கிவைத்திருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை. ஆண்களின் மனதைப் போலவே ரொம்பவும் எளிமையானதுதான் பெண்களின் மனதும். இன்னும் சொல்லப்போனால் அதை விடவும் புரிந்துகொள்வதற்கு எளிமையானது என்பதுதான் என் அனுபவம். என்ன ஒன்று அப்படிப் புரிந்துகொள்கையில் பெண்களின் மீதான கிளுகிளுப்பு சற்றே குறைகிறது. அதற்குப் புரியாதது போல நடிப்பதே சுவாரஸ்யமாக இருக்கிறது என்று கருதும் ஆண்கள்தான் ‘‘இதாவது கொஞ்சம் மிச்சம் இருக்கட்டுமே'' என்று இப்படி ஒன்றை சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால், எங்களை ஏன் இப்படி வேற்றுகிரக வாசிகளைப் போல் நினைக்கிறீர்கள் என்று வெளியில் அலுத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் சில பெண்கள் இதை நம்பவும் செய்கிறார்கள். விளைவு, அவர்களது சிறுபிள்ளைத்தனமான சேட்டை, அதாவது அவர்களது மனதைப் புரிந்துகொள்வது சிரமமாம், அதனால்தான் அவர்களது மேன்மை புரிவதில்லையாம். அடப்பாவமே.

இனி கொஞ்ச காலத்துக்கு ‘‘ஆண்களின் மனதைப் புரிந்துகொள்வது கஷ்டம்'' என்பது போல எதையாவது கிளப்பிவிட்டால்தான் இதில் ஒரு சமநிலை வரும். பெண்கள் மனதுவைக்க வேண்டும்.

-கார்ல் மார்க்ஸ்

பெண்களை புரிந்து கொள்வது எப்படி?

ராஜ்சிவா

பெண்களைப் புரிந்து கொள்வது எப்படி? தாயைப் புரிந்துகொள்ளாத மகன் எங்கும் உண்டா? மகளைப் புரிந்துகொள்ள முடியாத அப்பாக்கள் எங்கேனும் உண்டா? சகோதரியைப் புரிந்துகொள்ள முடியாத சகோதரன் இருக்கிறானா? ஆங்காங்கே சில விதிவிலக்குகளை விலக்கி வைத்து விடலாம். உலகிலுள்ள அனைத்துப் பெண்களும், தாயாகவும், சகோதரியாகவும், மகளாகவும், எப்போதும் ஆண்களால் புரிந்துகொள்ளப் பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஒரு ஆணின் இணையாகவும், துணையாகவும், காதலியாகவும், மனைவியாகவும் ஆகும்போதுதான், பெண் புரிந்துகொள்ள முடியாதவள் ஆகிவிடுகிறாள். பல அதிகபட்ச எதிர்பார்ப்புகள், தனக்கே உடமையென்னும் நிலைப்பாடு (Possessiveness), தன்முனைப்பு (Ego) போன்றவையே பெண்களைப் புரிந்துகொள்ளத் தடுக்கும் தடைக் கற்கள். தன் சகோதரியைப் புரிந்துகொள்ளக் கூடிய ஆணுக்கு, இன்னொருவனின் சகோதரியான மனைவியைப் புரிந்துகொள்வதில் என்ன

பிரச்சனை இருக்க முடியும்? எந்தவொரு ஈகோவுமில்லாமல், தன் முழுமையான சுபாவத்தையும் சகோதரனுக்கு வெளிக்காட்டத் தெரிந்த பெண்ணுக்கு, கணவனிடம் அந்த வெளிப்படைத் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. தன்னுள் பாதியை ஒரு மர்ம தேசமாக ஒளித்து வைத்திருக்கவே அவள் விரும்புகிறாள் (நான் உடலைச் சொல்லவில்லை). ஒட்டுமொத்தமாக இந்தப் பிரச்சனையை நுணுக்கிப் பார்த்தால், இருவரின் ஈகோக்களும் பல்லைக் காட்டியபடி உள்ளேயிருந்து சிரிப்பது தெரியவரும். ஆனால் இதுவே, ஆணுக்கும், பெண்ணுக்குமான ஈர்ப்புவிசை. இந்த ஈர்ப்புவிசையின் அடிப்படையில்தான் ஆண் பெண் உறவு நிலையும் தக்க வைக்கப்படுகின்றது. பேரீர்ப்பின் வழியே அண்டம் இயங்குவதுபோல, பெண்ணீர்ப்பு வழியே ஆண் இயங்க வேண்டும். இயற்பியலின் விதிபோல, இயற்கையின் விதி அது. பெண் போடும் சிக்கல்களை அவிழ்த்து அவிழ்த்து நேராக்கும்போதுதான், தன்னை ஒரு சாதனையாளனாக ஆண் நினைத்துக் கொள்கிறான். பெண்ணோ சிக்கல்களின் குவியல்களாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். சிக்கல் அவிழ்க்கும் ஆணின் தவிப்பு அவள் ரசனைக்கானது. தாயை, மகளை, சகோதரியைப் புரிந்துகொள்ளும் பரந்த மனப்பான்மை மனைவியிடத்திலும் ஆண்களுக்கு வந்துவிட்டாலே போதும். எந்தப் பெண்ணையும் புரிந்துகொள்ள முடிந்துவிடும்.

உடைப்பது சுலபமல்ல

அதிஷா

சிறுவயது முதலே நம் மனதில் இச்சமூகம் பெண்கள் குறித்து கட்டமைத்த முன்தீர்மானங்கள்தான் பெரிய சிக்கல் என்று நினைக்கிறேன். ஆண் பெண் என்கிற பாலின அடையாளங்களுக்கு ஏற்ப நாம் சில கட்டுப்பாடுகளை விதிமுறைகளை முன் தீர்மானங்களை வைத்திருக்கிறோம். நம்முடைய அன்றாட சடங்குகளின் வழி வாழ்வியல்முறைகளின் வழி நம் ஆழ்மனங்களில் ஆழமாக பதியவைக்கவும் படுகிறது. அதை ஒட்டியே இரு பாலினத்தவரையும் நாம் புரிந்துகொள்ள விழைகிறோம். ஒரு பெண் எத்தகைய படிப்பு படித்திருந்தாலும் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவரைப் பற்றிய நம்முடைய முன்தீர்மானங்களின் அடிப்படையிலேயே நாம் அவரை புரிந்துகொள்ளவும் அவருடன் பழகவும் அவரை Judge பண்ணவும் விழைகிறோம். அன்பு காட்டுவதிலும் சரி அடக்குமுறையை அவிழ்த்துவிடுவதிலும் கூட இந்தமுன்தீர்மானங்கள்தான் நம் எல்லோருடைய செயல்களையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இவர் ஒரு பெண் இவர் பலவீனமானவர், இவர் தந்திரமானவர், இவர் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடியவர், இவர் அழுதே காரியம்

சாதித்துவிடுவார், சமையல் பற்றி இவருக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பது மாதிரி பிற்போக்குத்தனமான சிந்தனைகளை சமூகம் கட்டமைத்த தீர்மானமான முடிவுகளை கொண்டே பெண்களின் மனதை எப்போதும் நம் மனம் அர்த்தப்படுத்திக்கொள்ள நேருகிறது. அதை உடைப்பதும் அத்தனை சுலபமல்ல.

அதனாலேயே தனித்தனியாக உணரப்படவேண்டிய ஒவ்வொரு மனதையும் ஒரு கூட்டுமனதாக உணர முற்பட்டு தப்பும்தவறுமாகப் புரிந்துகொள்ளும்படி ஆகிவிடுகிறது. இங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனியாக ஒரு மனம் உண்டு. பெண்ணுக்கு மாத்திரமல்ல எல்லா பாலினத்தவருக்குமே தனித்தனி மனங்கள்தான். அது தன் அனுபவங்களின் வழி வாழ்வு தரும் கல்வியின் வழி கட்டமைக்கப்பட்டு அதன்வழி இயங்குகிறது என்பதை உணரத்தொடங்கும்போது ஓரளவு பெண்ணின் மனதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அது அத்தனை சுலபமல்ல.

மறுக்கும் உரிமை பெண்ணுக்கும் உள்ளது

திலகவதி

பெண், ஆணை மரியாதையாக நடத்துகிறாள். ஆண், தன்னுடைய சொத்து என அவள் கருதுவதில்லை. அடிமை என நினைப்பதில்லை. அதே போக்கைத் தான் ஆணிடமும் எதிர்பார்க்கிறாள்.  தன்னை போலவே அனைத்து உரிமைகளும் உணர்வுகளும் உள்ள சக மனிதியாக நடத்த வேண்டும். தன்னை மறுதலிக்கும், தான் சொல்வதற்கு ‘முடியாது‘ என்று மறுக்கும் உரிமை பெண்ணிற்கு உள்ளது என்பதை ஆண் உணர வேண்டும்.

பெண் ஒரு சம்பளம் இல்லாத பணியாள் எனவும், இறுதிவரை அனைவரையும் அன்பாகப் பார்த்துக்கொள்ளும் ஒரு ‘கேர் டேக்கர்‘ என்பதுமான மனப்பான்மையை ஆண்கள் கைவிட வேண்டும்.  தன்னையும் தன் குடும்பத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பிரதிநிதி அல்ல பெண். அவளுக்கும் விருப்பங்கள், தேர்வுகள் உள்ளது என புரிய வேண்டும்.  குறிப்பாக, ஒரு பெண்ணை அவளின் விருப்பம் இல்லாமல் உற்று நோக்குவது, வன்மமான முறையில் பார்ப்பது, அவளுக்கு அசௌகரியம் அளிக்கும் என்பதோடு, அது ஒரு பெண்ணின் மீதான வன்முறை என்பதை உணர வேண்டும்.

ஆணாதிக்க தொனியில் குரலை உயர்த்திப் பேசுவது, ஆண் என்கிற ஆதிக்கத்தில் ஒரு செயலைச் செய்வது, தான் ஆண் என்பதாலேயே அவருக்கு அதற்கான மரியாதை கொடுக்கவேண்டும் என நினைப்பது போன்ற முட்டாள்தனங்களைக் கைவிட வேண்டும். எவ்விதமான உறவிலும் பெண்ணின் சம்மதத்தைக் கேட்பதும் அதனை மதிப்பதும் வேண்டும்.

சமூக வலைதளங்களில் நட்பு பட்டியலில் இணைந்து விட்டார்கள் என்பதாலேயே அவரின் விருப்பத்திற்கு மாறாக தொடர்ச்சியாக மெஸேஜ்கள் அனுப்புவது, கால் செய்வது போன்ற அநாகரிகமான செயல்களைத் தவிர்ப்பது.  உடல் ரீதியான, வார்த்தை ரீதியாக, உளவியல் ரீதியாக வன்முறை செலுத்தாத நட்புணர்வுள்ள ஆண்களைத் தான் பெண்கள் விரும்புகிறார்கள். அடிப்படையான நாகரிகமான பண்புகளைத் தான் எதிர்பார்க்கிறார்கள்.

நவம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com