யூமா வாசுகி
யூமா வாசுகி

அண்ணாச்சியை நான் ஏமாற்றி விடவில்லை!

ரத்த உறவு

கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் 1990 இல் படிப்பு முடித்த பிறகு பிழைப்பு தேடி சென்னை பயணம். கல்லூரி நண்பன் அறிவுச்செல்வனின் தங்கை குடும்பம் பழவந்தாங்கலில் இருந்தது. அவர்கள் ஆதரவில்தான் சிறிதுகாலம் தங்கியிருந்தேன்.

முதலில் ‘கணையாழி'யில் வேலை. அப்போது  சி.அண்ணாமலை அங்கே பணிபுரிந்தார். பின்னர், ‘புதிய பார்வை'. சிறுகச் சிறுக ஏற்பட்ட சில அறிமுகங்களுக்குப் பிறகு இந்திரா பார்த்த சாரதியின் பரிந்துரைக் கடிதத்துடன் ‘தினமணி'க்குச் சென்று திருப்பூர் கிருஷ்ணனைப் பார்த்தேன். அவர், அருகிலிருந்த ஓவியர் தாமரையிடம், படம் வரைவதற்கு எனக்கு ஏதும் மேட்டர் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். தாமரை எனக்கு ஒரு கவிதை கொடுத்தார். அதுதான் தினமணி வெளியீடுகளில் நான் வரைவதற்குத் தொடக்கம்.

அப்போது அங்கே பணி செய்த பரீக்ஷா ஞாநி, ராஜமார்த்தாண்டன், சிவக்குமார், சுகதேவ், செல்லப்பா, பொன் தனசேகரன், மனோஜ் முதலியோரெல்லாம் ‘தினமணி கதிர்', ‘வணிகமணி', சிறப்பு மலர்கள் ஆகியவற்றில் அவசியம் என் சித்திரங்கள் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். அவற்றுக்கான பணம் எனக்கு வந்துவிட்டதா என்று குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணித்தார்கள். நான் சென்னையில் வசிப்பதற்கு தங்களால் இயன்றவகையில் இப்படி அவர்கள் உதவி செய்தார்கள். அந்த நாட்களெல்லாம் அளவற்ற அச்சமும் பதற்றமும் நிராதரவும் ததும்பி வழியும் நாட்கள்.

இந்தக் கட்டத்தில்தான் நண்பர் பாண்டியராஜன் மூலம் அண்ணாச்சி வசந்தகுமாரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவருடன் பழகத் தொடங்கிய கொஞ்சம் நாட்களுக்குள் எனக்கு பெருநகரம் குறித்த அச்சம் முற்றிலும் மறைந்துவிட்டது. சார்லி சாப்ளின் உலக உருண்டையை தூக்கிப் போட்டு விளையாடுவதுபோல (தி கிரேட் டிக்டேட்டர்), இந்தச் சென்னையை பூப்பந்தாடிவிடலாம் என்பதுபோன்ற நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு நாட்களும் பொழுதுகளும், மனதில் ரத்தப் பிறாண்டல்களைத் தோற்றுவிக்கும் கடும் உரசல் இல்லாமல் இலகுவாக நழுவிச் சென்றன. அண்ணாச்சியின் அண்மையும் பரிவும் கனிவும் என் வாழ்வுக்கு மசகிட்டன. அவருடனேயே இருந்தேன். எனக்கு ஏற்கெனவே இருந்த இலக்கிய ஆர்வம் அவரால் மிகு தூண்டலுற்றது.

நான் என் இளம்பிராய வாழ்விலிருந்து சில சம்பவங்களை சிறுகதைகளாக எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஏறத்தாழ பத்துக் கதைகளாவது எழுதிவிட உத்தேசம். சில சமயங்களில் அவரிடம் கதைகளின் சம்பவங்களை விவரித்துமிருக்கிறேன். அவருக்கு அவற்றில் ஓர் ஆர்வம் ஏற்பட்டது.

 ‘இவற்றை நீங்கள் கதைகளாக எழுதாதீர்கள். இதற்கு நாவல்தான் ஏற்ற வடிவம். நீங்கள் நாவல் எழுதுங்கள். சென்னையில் இருந்தால் பத்திரிகை அலுவலகங்களுக்கு அலைந்துகொண்டுதான் இருப்பீர்கள். ஊருக்கு, பட்டுக்கோட்டைக்குப் போங்கள். அங்கிருந்து எழுதுங்கள். நன்றாக வரும்,' என்றார்.

சிலமுறை சொல்லிப்பார்த்து அப்புறம் அன்றாடத்தில் மூழ்கி இதை மறந்துவிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. தினந்தோறும் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். வலியுறுத்தினார். முடிந்தவரையில் மிகத் தீவிரமாகக் கட்டாயப்படுத்தினார். நாவல் எழுதாமல் இருந்தால் அவரது நட்பை இழந்துவிடுவோமோ என்று எனக்கு பேரச்சம். ஒரு கட்டத்தில், நான் பழவந்தாங்கலில் வசித்திருந்த மாடி அறையை (கீழ்த் தளத்தில்தான் எழுத்தாளர் மா.அரங்கநாதன் குடும்பம் இருந்தது. அவர் மகன், இப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் மகாதேவன் மாடியில் ஓர் அலுவல் அறை வைத்திருந்தார். நான் அங்கே வசிக்கச் செல்லும்போது அவர்கள் பழவந்தாங்கல் ரயில்நிலையத்தை ஒட்டி உள்ள வீட்டுக்கு மாறிச் சென்றிருந்தனர்) பூட்டிவிட்டு ஊருக்குச் சென்றேன். பயணத்துக்கும் அங்கே என் செலவுகளுக்கும், போதுமானதுக்கும்மேலான தொகையைக் கொடுத்து அனுப்பினார்.

பட்டுக்கோட்டையில் என் அம்மாவிடம் தங்கியிருந்து எழுதத் தொடங்கினேன். நாளொன்றுக்கு சில பக்கங்கள்தான் எழுத முடிந்தது. மாலையில் பராக்குப் பார்க்க உலா. நண்பர்கள் சந்திப்பு. இரவில் தவறாமல் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். அம்மாவீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த அண்ணனின் லேண்ட்லைன் போனில் பேசுவார். ‘இன்றைக்கு எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கிறீர்கள், எப்படியெல்லாம் சம்பவங்கள் போகின்றன...' என்றெல்லாம் ஆர்வமும் பதற்றமுமாக விசாரிப்பார். என் மீது அவருக்கு மிகப் பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தது. நான் தாங்குவதற்கும் அதிகமான பாரம் கொண்டது இந்த நம்பிக்கை. இதனால் ஏற்பட்ட உள்நடுக்கத்துடன்தான் நான் திக்கித் திணறி ஒவ்வொரு பக்கத்தையும் எழுதிக் கடந்தேன். நான் ஊருக்கு வந்த அடுத்த வாரத்திலேயே ஒரு பெரிய புத்தகப் பார்சலை அனுப்பி வைத்திருந்தார். அவ்வப்போது நான் படிப்பதற்காக.

ஓரளவு நான் நாவலை எழுதியிருந்தபோது, ஒருநாள் இரவு பேசினார்: ‘தம்பி, நான் நாளைக்கு நான் உங்க ஊருக்கு வர்றேன். எழுதுன காகிதத்தையெல்லாம் தயாரா எடுத்து வைங்க!'

வந்தார், அண்ணாச்சி. படித்துப்பார்த்தார். நான் மிகவும் பொடி எழுத்துகளில் எழுதியிருந்தேன். மிகவும் நுணுக்கி எழுதப்பட்ட எழுத்துகள். அது என் இயல்பான எழுத்து வடிவம் அல்ல. என் அப்போதைய மனநெருக்கடிதான் அப்படி எழுத்து வருவதற்குக் காரணமாக இருந்திருக்கும். அதைப் படிப்பது பெருங்கஷ்டம். அவர் அதிசிரத்தையுடன், சிரமங்கொடுத்துப் படித்துப்பார்த்தார். பாதி அளவு எழுதப்பட்டிருந்த நாவல் அவருக்குப் பிடித்திருந்தது.

அடுத்தநாள், நாவல் நடக்கும் இடங்-களுக்-கெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்றார். பட்டுக் கோட்டையில் பல இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்றேன். ரசித்து  ரசித்துப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். ஒரு மரத்தின் அருகே நடந்து வந்துகொண்டிருக்கும்போது பட்டென்று அண்ணாந்து பார்த்து, மாலை வெயிலில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் இலைக்கொத்தைப் படம் எடுத்தார். ‘க.சீ. சிவக்குமாரின் மின்னொளிர் கானகம் புத்தகத்துக்கு அட்டைப் படமாகப் போடலாம்' என்றார். சமாதானமாக ஊர் திரும்பினார்.

அவர் சென்று ஏறத்தாழ ஒரு மாதத்துக்குப் பிறகு பிரதியை எடுத்துக்கொண்டு சென்னை சென்றேன். பழவந்தாங்கல் செல்லாமல், ராயப்பேட்டையில் ராஜமார்த்தாண்டன் தங்கியிருந்த நாகராஜ் மேன்ஷனுக்குச் சென்றேன். ஏனென்றால், அண்ணாச்சி வருவதற்கு அதுதான் வசதியாக இருக்கும். நான் வந்திருப்பதாக ராஜமார்த்தண்டன் தகவல் சொன்னதும் அரக்கப்பரக்க ஓடி வந்தார் அண்ணாச்சி. பட்டென்று கையெழுத்துப் பிரதியை எடுத்து விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினார். நீண்ட நேரத்துக்குப் பிறகு பெருத்த ஆசுவாசத்துடன் கீழே வைத்தார். பிறகு நாங்கள் மூவரும் தேநீர் அருந்த கீழே இறங்கிச் சென்றோம்.

அதன் பிறகு எடிட்டிங் வேலைகள் நடந்தன. நான் நாவலை இருபத்து மூன்று அத்தியாயங்களாகப் பிரித்திருந்தேன். ஏனென்றால், நான் பிறந்த தேதி அது. (இந்த இடத்தில் ஒரு ஸ்மைலி).

இப்போதுள்ள என் நினைவுப்படி, அவர் எதையும் நீக்கச் சொல்லவில்லை. சில இடங்களை விரித்து எழுதும்படி சொன்னார். நான் செய்தேன். நாவலை அவர் அறுபத்து ஆறு அத்தியாயங்களாகப் பிரித்தார். ரத்த உறவு என்று பெயர் சூட்டினார். ஐந்துமுறைக்கும் மேற்பட்டு பிழை திருத்தினார். கருப்பு ரெக்சின் அட்டை, அதில் ஸ்கிரீன் பிரிண்ட் தலைப்பு, திறந்ததும் அடர் பழுப்பு நிற ஹேண்ட்மேட் பேப்பர், பிறகு சூரிய காந்திப் பூச் செடியின் வண்ணப் படம், கடைசிப் பக்கம் முடிந்த பிறகு சூரிய காந்திப் பூவின் குளோஸப் வண்ணப்படம் என்றெல்லாம் அவரால் எவ்வளவு சிறப்பாக வெளிக்கொணர முடியுமோ அப்படிச் செய்தார். நாவலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர்தான், என் அக்காவுக்கு சமர்ப்பணமாக இருக்கட்டும் என்றார். பிறகு இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அவருக்கு சமர்ப்பித்திருந்தேன். இப்படித்தான் என் முதல் நாவல் வந்தது. ‘தம்பி,  நீங்க பாருங்க, இதுக்கு நிறைய வாசகர்கள் கிடைப்பாங்க!' என்று அப்போது அவர் சொன்னார். அதன்படியே நடந்தது. எனக்கு ஆகப் பெரிய நிம்மதி என்னவென்றால், அண்ணாச்சியை நான் ஏமாற்றிவிடவில்லை. அதுபோதும்.

ஜனவரி, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com