காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 1885
காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 1885

அந்தப் பதினேழு பேரின் ரகசிய சந்திப்பு!

அகில இந்திய காங்கிரஸ்

இங்கிலாந்திலிருந்து 20 வயதே நிரம்பிய இளைஞன் ஒருவன் தங்களால் ஆளப்படும் இந்தியாவில் பணிபுரிவதற்காக கப்பலில் வந்து இறங்குகிறான். அவனுக்கு அப்போதைய வடமேற்கு மாகாணத்தில் இருந்த எடாவா மாவட்டத்தில் பணி(இப்போது உ.பி.யில் உள்ளது) அளிக்கப்படுகிறது.

இங்கிருந்து அருகில் உள்ள மீரட்டில் 1857 சிப்பாய் கலகம் தொடங்குகிறது. தனது மாவட்டத்தில் இதை ஒடுக்கும் பணியில் அவன் ஈடுபட வேண்டியிருக்கிறது. நாடு முழுக்க புரட்சியாளர்கள் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது, அவன் இரக்கமான அணுகுமுறையைக் காட்டினான். அவனது நிர்வாகப் பகுதியில் ஏழு பேருக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நாடே கொந்தளிப்பாக இருந்த சமயத்தில் ஒரே ஆண்டில் எடாவா மாவட்டத்தில் அமைதி திரும்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த இளைஞர் பெயர் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் (ஏ.ஓ.ஹ்யூம்). இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை என்று பின்னாளில் அழைக்கப்படப்போகும் அவர் மெல்ல மெல்ல பதவிகளில் உயர்ந்து பிரிட்டிஷ் இந்திய அரசில் ஐசிஎஸ் அதிகாரியாக வருவாய்த் துறை செயலாளராகப் பணி புரிந்தார். ஹ்யூம் இந்தியா தொடர்பான பிரிட்டிஷ் அணுகுமுறையை விமர்சித்த காரணத்தால் 1879 இல் அப்பதவிலிருந்து நீக்கப்பட்டார். 1882 - இல் கல்கத்தா பல்கலைக் கழக மாணவர்களுக்கு இந்தியாவில் ஒரு அரசியல் இயக்கம் தொடங்குமாறு கடிதமும் எழுதி இருந்தார்.

பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற சிப்பாய் கலகம் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது ஒரு முக்கிய திருப்பமாகும். இதைத் தொடர்ந்து பரவிய ஆங்கிலக் கல்வி,மேலை நாட்டு சிந்தனைகள் நாட்டின்முக்கிய சிந்தனையாளர்களைப் பாதித்து, அவர்கள் சமூக அளவில் பல சீர்திருத்தங்களைச் செய்யவேண்டியதை உணர்ந்து அதற்காக உழைத்தனர். பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளின் பங்களிப்பு இங்கு முக்கியமானது. இந்த பின்னணியில் தேசிய நலனில் அக்கறையுடன் பேசுகிற பத்திரிகைகள் உதயமாகின. அவை இது தொடர்பான கருத்துகளைப் பரப்பின.

1875 - இல் பிரிட்டிஷ் இந்தியாவில் சுமார் 400க்கும்மேற்பட்ட செய்தித்தாள்கள் பிராந்தியமொழிகளில் செயல்பட்டுக்கொண்டிருந்தன. மேலை நாட்டுக் கல்வி பெற்ற மேல் தட்டு இந்தியர்கள் பலர் இதன் பின்னால் இருந்தனர். அச்சமயம் ஐசிஎஸ் பணியில் இருந்து சுரேந்திரநாத் பானர்ஜி பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். நாட்டில் பஞ்சமும் பட்டினியும் நிலவிய காலம். 1876 - இல் இந்தியாவுக்கு மகாராணியாக பிரிட்டன் அரசி விக்டோரியா முடிசூட்டிக்கொண்டார்.  இதை இந்திய மக்களுக்கு அறிவிக்க டெல்லியில் இதற்கு அடுத்த ஆண்டு மிகப்பெரிய தர்பார் நிகழ்ச்சிக்கு அப்போதைய வைஸ்ராய் லிட்டன் பிரபு ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்திய மகாராஜாக்கள், நவாப்புகள், பிரமுகர்கள் அழைக்கபட்டிருந்தனர். இதில் சுரேந்திரநாத் பானர்ஜியும் கலந்துகொண்டார். அகில இந்திய அளவிலான பிரமுகர்களை அங்கே அவர் சந்தித்தார். 

இதனால் தூண்டப்பட்ட அவர் அகில இந்திய அளவிலான ஓர் அரசியல்  மாநாட்டை நடத்த ஆசைகொண்டார். அவருக்கு மட்டுமல்ல, அதில் கலந்துகொண்ட பல பிரமுகர்களுக்கும் இந்த எண்ணத்தை அந்நிகழ்வு ஊன்றியது. ஏனெனில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்வுகள் அதற்கு முன் நடந்தது இல்லை. லிட்டன் பிரபு தன்னையறியாமல் செய்த ஒரேயொரு நன்மை என இதைக் கூறலாம்.

ஐசிஎஸ் பதவிக்கான தேர்வை இந்தியர்களாக இருந்தாலும் பிரிட்டனுக்குச் சென்று அவர்களுடன் போட்டியிட்டு எழுதவேண்டும் என்று இருந்தது. அப்படி சமமற்ற நிலை இருந்தாலும் பானர்ஜி போன்றவர்கள் எழுதித் தேறி இருந்தார்கள். இதை இன்னும் கடினமாக்க வேண்டும், இந்தியர்கள் யாரும் அதில் தேர்வாகி விடக்கூடாது என்பதற்காக வயது வரம்பை 19 ஆகக் குறைத்துவிட்டார்கள். இதை எதிர்த்து மக்களின் கருத்தைத் திரட்டுவதற்காக நாட்டின் மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு  அவர் பயணம் மேற்கொண்டார். இதன் காரணமாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்த கோரிக்கை அகில இந்தியாவின் கோரிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போதைய வைஸ்ராய் லிட்டன் பிரபுவின் ஆட்சியில் பல ஒடுக்குமுறை சட்டங்கள் கொண்டுவரப்பட்டதும் பொதுமக்கள், கல்விபெற்றவர்கள் மனதில் பெருமளவு எதிர்ப்புணர்வை ஏற்படுத்தி இருந்தன. இவருக்குப் பின்னால் வந்த ரிப்பன் பிரபு இந்திய மக்களின் ஆதரவை, தன் நல் அணுகுமுறையால் பெற்றார். இந்திய மாஜிஸ்ட்ரேட் அதிகாரிகள், ஆங்கிலேயர்களை விசாரிக்க அது வரை தடைஇருந்தது. இதை ரிப்பன் பிரபு நீக்கினார். அது அப்போதிருந்த ஆங்கிலேயர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே  இந்த சட்டத்தை அமல்படுத்தவே இயலவில்லை.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த இந்திய பிரமுகர்கள், இனவெறிதான் இதற்கெல்லாம் காரணம் என்பதை உணர்ந்தார்கள் எனச் சொல்ல வேண்டியது இல்லை. இதைத் தொடர்ந்து கல்கத்தாவில் ஓர் அரசியல் கூட்டம் நடந்தது. இதில் பானர்ஜி, நாட்டு நலன்களை முன்வைக்க ஓர் அரசியல் அமைப்பு வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். மூன்று நாள் நடந்த மாநாடு இது. இதைத் தொடர்ந்து மதறாஸ் மகாஜனசங்கம் சென்னையில்  மாநாடு நடத்தியது. நாட்டின் மேற்கே பாம்பே பிரெசிடென்சி சங்கம் உருவாக்கப்பட்டது. முன்னதாக கொல்கத்தாவில் ஒரு சர்வதேச கண்காட்சி நடைபெற்றிருந்தது. இதுவும் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.

ஆக, அகில இந்திய அளவிலான அரசியல் அமைப்பு தேவை என்று ஒரு பொதுவான கருத்து உருவாகத் தொடங்கி நிலை பெற்றது. ‘‘அனைத்து இந்திய காங்கிரஸ் என்ற யோசனையை யார் முன்வைத்தது என்பது தெளிவாகத் துலங்கவில்லை. 1877 - இல் நடந்த தர்பார், கல்கத்தாவில் நடந்த சர்வதேச கண்காட்சி ஆகியவை அகில இந்திய அளவிலான மாநாடுக்கான யோசனையை தந்திருக்கவேண்டும். 1884 இல் டிசம்பர் மாதம் மதறாசில் மறைஞான சபை மாநாடு நடைபெற்றது. அதையொட்டி 17 பேர் தனிப்பட்ட முறையில் கலந்து பேசியபோது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஐசிஎஸ் அதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஏ ஓ ஹியூம் என்ற அதிகாரி ஆரம்பித்த இந்திய யூனியன் அமைப்பும் இப்படியொரு நாடு தழுவிய அமைப்பு தேவை என்ற எண்ணம் பரவ  தூண்டுதலாக இருந்திருக்கலாம்,'' என்று இந்திய காங்கிரஸின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீதாரமையா தன் நூலில் குறிப்பிடுகிறார்.

ஏ ஓ ஹ்யூம்
ஏ ஓ ஹ்யூம்

மேடம் ப்ளாவ்ட்ஸ்கி தொடங்கிய மறைஞான சபை அடையாரில் 1884 - இல் நடத்திய மாநாட்டில் ஏ.ஓ. ஹ்யூம் கலந்துகொண்டார் என்பதை ஊகித்திருப்பீர்கள். இதில் கலந்துகொண்ட ஹ்யூமின் நண்பர்களில் சில முக்கியப் பெயர்கள்: சுரேந்திர நாத் பானர்ஜி, நரேந்திர நாத் சென், எஸ்.சுப்ரமணிய ஐயர், அனந்தாச்சார்லு, வி என் மந்தாலிக், கேடி தெலாங், சர்தார் தியால் சிங், லாலா ஸ்ரீராம். இவர்களைக் கொண்டு வரும் ஆண்டில் அகில இந்திய அளவில் ஓர் அமைப்பின் மாநாடு பூனாவில் கூட்டவேண்டும் என்றும் அதற்கான குழுவாக இவர்கள் செயல்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஆதாரமான ஆவணங்கள் இல்லை.

 ஹ்யூமின் ஆரம்பகட்ட கருத்து என்பது பிரிட்டிஷ் இந்தியாவின் நலன்களுக்கு இங்குள்ள அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணையும் ஓர் அமைப்பு தேவை என்றும் அவர்கள் அரசியல் பேசாமல் சமூகப் பிரச்னைகளை ஓரிடத்தில் கூடிப்பேசவேண்டும். அந்த கூட்டத்துக்கு அந்த மாநில ஆங்கில ஆளுநர் தலைமை தாங்கவேண்டும் என்பதாகவும் இருந்துள்ளது. இந்த விஷயத்தை அப்போது சிம்லாவில் தங்கி இருந்த அப்போதைய வைஸ்ராய் டபரின் பிரபுவிடம் கலந்து ஆலோசிக்கிறார். டபரின் மிகுந்த அனுபவம் வாய்ந்த பிரிட்டன் அதிகாரி. இங்கிலாந்த்தில் இருப்பதுபோல் எதிர்க்கட்சி அமைப்புகள் இங்கே இல்லை. எனவே சமூகப்பிரச்னை பேசுவதைக் காட்டிலும் அரசியல் நிர்வாகம் சார்ந்த பிரச்னைகளைப் பேசவேண்டும். ஆண்டுதோறும் கூட்டம் நடக்கவேண்டும். நிர்வாகப் பிரச்னைகள் என்னென்ன? குறைகள் என்னென்ன? எப்படியெல்லாம் தீர்க்கவேண்டும் என்பது பற்றி இவர்கள் ஆலோசனை சொல்லவேண்டும். அத்துடன் மாநில ஆளுநர் இந்த கூட்டத்துக்கு வந்தால் யரும் மனம் திறந்து பிரச்னைகளைப் பேசமாட்டார்கள் என்று ஆலோசனை தந்த டபரின், நான் பதவியை விட்டு விலகிச் செல்லும்வரை இது என்னுடைய யோசனை என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்கிறார். டபரின் சொன்ன இந்த யோசனையையே ஹ்யூமுடன் தொடர்பில் இருந்த இந்தியப் பிரமுகர்களுக்கு சரியானதாகப் படுகிறது.

1885 மார்ச் மாதத்தையொட்டி கூட்டத்தை இனி கூட்டிவிடவேண்டியதுதான் என முடிவெடுக்கப் படுகிறது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸையொட்டி கூட்டம் நடத்த ஏற்கெனவே பேசியபடி பூனாவை இதற்கான இடமாகத் தெரிவு செய்கிறார்கள். பாம்பே, கொல்கத்தா, மதறாஸ் போன்ற மாகாணங்களில் உள்ள அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகள் வருவது என முடிவாகிறது. நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த பிரதிநிதிகளாக அவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் பூனா வந்து இறங்கியதிலிருந்து அங்கே தங்கி கூட்டத்தில் கலந்துகொள்ளும் வரைக்குமான செலவுக்கு நிதி திரட்டப்பட்டு, கூட்ட ஏற்பாடுகள் ஜோராக நடைபெறுகின்றன. பூனாவில் உள்ள சர்வஜனிக் சபா என்ற அமைப்பு ஏற்பாடுகளைச் செய்ய முன்வருகிறது.

ஆனால் கூட்டம் அங்கே நடத்த முடியவில்லை. ஏனெனில் அங்கு காலரா நோய்த் தொற்று. இந்த அபாயத்தைக் கருதி இடம் பாம்பேவுக்கு மாற்றப்படுகிறது. இந்த மாநாடு அதே பொருள் தரும் காங்கிரஸ் என்ற பெயரில் அழைக்கப்பட ஆரம்பித்திருந்தார்கள். கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரி நிர்வாகத்தினர் காங்கிரஸ் கூடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். டிசம்பர் 27 அன்று நாடு முழுவதிருந்தும் நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் வந்தனர். அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரபலமான அப்போதைய செய்தித்தாள்களின் ஆசிரியர்கள், சங்கங்களின் தலைவர்கள், வழக்கறிஞர்கள் அடங்கிய  குழு. மொத்த எண்ணிக்கை 72 பேர்.

டிசம்பர் 28, 12 மணி அளவில் அந்த கல்லூரி விழா அரங்கில் முதல் காங்கிரஸ் கூடியது. இந்நிகழ்வில் இந்த அமைப்பின் தலைவராக டபிள்யூ சி பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார். ஏ ஓ ஹ்யூம், எஸ்.சுப்ரமணிய ஐயர்,  கே டி தெலாங் போன்றவர்களின் குரல் முதலில் ஒலித்தது.

அதுவரை இந்திய மண்ணின் நிர்வாகத்தில் இந்தியர்களின் குரலுக்கு எந்த மதிப்பும் ஆங்கில நிர்வாகத்தால் தரப்பட்டது இல்லை. இனி அப்படி இருக்கமுடியாது என்பதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க முதலடி இங்கு எடுத்து வைக்கப்பட்டது. நீண்ட நெடிய தியாகப்போருக்கான விதை ஊன்றப்பட்ட தருணம் அதுதான்.

இந்த முதல் நிகழ்வில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுருக்கமாக:

1) பிரிட்டிஷ் இந்தியாவின் நிர்வாகத்தை ஆராய ஆணையம் ஒன்று அமைக்கப்படவேண்டும்.

2) இந்திய விவகாரங்களைக் கவனிக்கும் பிரிட்டிஷ் அமைச்சருக்கு ஆலோசனை தரும் இந்தியா கவுன்சில் கலைக்கப்படவேண்டும்.

3) மாகாண சட்டமன்ற அவைகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வதை விடுத்து தேர்தல் மூலம் அவர்கள் தெரிவு செய்யப்படவேண்டும்.

4) ஐசிஎஸ் தேர்வுகள் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதுடன் அதற்கான வயது வரம்பு உயர்த்தப்படவேண்டும்.

5, 6) ராணுவ செலவுகள் தொடர்பான தீர்மானங்கள்.

7) பர்மாவின் மேல் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்படுவற்கு எதிர்ப்பு

8) நாட்டில் உள்ள அனைத்து அரசியல் அமைப்புகளுக்கும் இந்த தீர்மானங்கள் அனுப்பப்பட்டு அவை விவாதிக்கப்படவேண்டும்

9) காங்கிரஸின் அடுத்த மாநாடு கல்கத்தாவில் டிசம்பர் 28, 1886 - இல் நடத்தப்படும்.

அதிகாரத்தில் பங்கு இல்லையென்றால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என்பதை அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்திருந்தனர். அதை நோக்கியே அவர்களின் கோரிக்கைகள் அமைந்திருந்தன என்பதை உணரமுடிகிறது.

பம்பாய்க்கு அடுத்ததாக காங்கிரஸின் இரண்டாவது மாநாடு கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடந்தது. இதில் 406 பிரதிநிதிகள்  கலந்துகொண்டனர். மூன்றாவது மாநாடு சென்னையில் நடக்கிறது. பத்ருதின் தியாப்ஜி என்றை பம்பாய் வழக்கறிஞர் தலைமை.

அதிலிருந்து ஆண்டுதோறும் நடைபெற்ற மாநாடுகளில் மெல்ல வளர்ச்சியும் புரிதலும் ஏற்பட்டு 1906 - இல் இந்தியாவுக்கு சுயராஜ்யம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்தது. அதுவரை ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை மனுக்களை முன்வைத்த அமைப்பின் முகம் மாற்றமடைகிறது. வீரம் செறிந்த ஒரு விடுதலைப்போராட்டத்துக்கான வரலாறு தொடங்குகிறது.

காங்கிரஸ் என்றாலே பல கோஷ்டிகள் சண்டைகள் என்று ஆகிவிட்டதால், இக்கட்டுரையில் இதன் தொடக் கத்தைப் பற்றியும் சொல்லிவிடலாம். 1907 - இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸில் தீவிரப்போக்கு உள்ளவர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே மாநாட்டிலேயே மோதல் ஏற்பட்டது. சுரேந்திர நாத் பானர்ஜி, பெரோஷா மேத்தா ஆகிய இருவர் மீதும் செருப்புகள் வீசப்பட்டன.

கூடுதல் தகவல்: ஏ ஓ ஹ்யூம் இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை மட்டுமல்ல; இந்திய பறவையியலின் தந்தை எனவும் கருதப்படுகிறார். இந்திய துணைக்கண்ட பறவைகள் பற்றி விரிவான பதிவுகளை அவர் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com