அன்பு என்ற பெயரில் சுரண்டல்!

அன்பு என்ற பெயரில் சுரண்டல்!

ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் என்பார்கள். இயல்பிலேயே ஆண் பெண் என்பவர்கள் வேறுபட்டவர்கள் தான். இதையே இன்னும் கூர்மையாகப் பார்த்தால், ஒவ்வொரு தனிமனிதரும் தனித்துவம் மிக்கவர்கள் தான். மதிப்பீடுகள் மேன்மையாக இருந்த நூறுவருடங்களுக்கு முன்பாக கூட, ஆண் பெண் உறவில் சிக்கல் இருந்திருக்கிறது. ஆனாலும், ‘‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'' என்ற பிற்போக்குத்தனமான திருமண முறையிலிருந்து வெளிவர முடியாமல் நிறையப் பெண்கள் சிரமப்பட்டிருக்கின்றனர். பிரச்சனை பற்றி வெளியில் சொன்னால் கணவருக்கு இழுக்கு என்று நினைத்து, மனதுக்குள்ளேயே போட்டுப் புழுங்கிக்கொண்டு வாழ்க்கையை வாழ முடியாமல் போன பெண்கள் நிறைய உண்டு. அதேமாதிரி தான் ஆண்களும். உறவில் நிறைய கஷ்டங்கள் இருந்தாலும் அதை வெளியே சொல்லிக் கூட அவர்களால் அழ முடியாது. எல்லா காலகட்டத்திலும் ஆண் பெண் உறவு என்பது சிக்கலாகத்தான் இருந்திருக்கிறது. இன்றைய நவீனத் தொழில்நுட்ப காலத்தில், அது மேலும் அதிகரித்திருக்கிறது என்றே சொல்ல முடியும். தொலை தொடர்புகள் அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் மனிதர்களுக்கிடையிலான பரஸ்பர பேச்சுவார்த்தை என்பது குறைந்திருப்பதாக நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த ஓர் இளம் தம்பதியினர் ஒருவருக்கொருவர் ஒழுங்காகப் பேசிக்கொள்ளாததால் திருமணம் நடந்த ஆறுமாதத்திற்குள்ளாகவே பிரிந்துவிட்டனர். உறவில் பரஸ்பர பேச்சுவார்த்தை என்பது முக்கியம். இன்றைய உறவில் இது மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கின்றது. அதேபோல், இந்த தலைமுறையிடம் வேலைப்பங்கீட்டில் பிரச்சனை அதிகரித்திருக்கிறது. மேலும், குழந்தை, பொருளாதாரம், நம்பிக்கையின்மை போன்றவற்றாலும் உறவுச்சிக்கல் என்பது அதிகரித்திருக்கிறது.

கணவன் - மனைவி உறவில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதேயில்லை. அன்பு என்பது எடுத்துக் கொள்வது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது கொடுப்பது என்று யாரும் நினைப்பதில்லை. அன்பு என்ற பெயரில் இங்கு சுரண்டல் தான் இருக்கின்றது. உடைமையாகிக் கொள்வதை அன்பு என்று சொல்கின்றனர். வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே, ஆண் பெண்ணை வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு வழிசெய்யாது. பரஸ்பரமும் புரிந்து கொள்வதும் உறவில் மிகவும் தேவை.

பழைய கதைகளை என்றோ ஒருநாள் சொல்லியிருப்போம், அந்தக் கதைகளைத் திரும்பத் திரும்ப கிளறி சொல்லிக்காட்டக் கூடாது. எதாவது பிரச்சனை வந்து, அதைப் பேசித்தீர்க்கலாம் என்று முடிவெடுத்தால், முதலில் காதுகொடுத்துக் கேட்பவராக இருக்க வேண்டும். அதன் பிறகு தான் உங்கள் தரப்பு நியாயத்தையோ, தவறையோ சொல்ல வேண்டும். இப்படியான அணுகுமுறையைக் கையாண்டால், எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அது அப்படியே ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்த உத்தியை சில முறை நானே கையாண்டு வெற்றியும் அடைந்திருக்கிறேன். இதைப் பின்பற்றுவது கஷ்டம் தான், பின்பற்றினால் நிச்சயம் கைகொடுக்கும் என்றே நினைக்கிறேன்.

- காயத்ரி

ஆண்கள் இன்னும் பழசாகவே இருக்கிறார்கள்!

மனுஷ்ய புத்திரன்

பெண்களைப் புரிந்துகொள்வது என தனியாக ஒன்று உள்ளதா? பொதுவாக மனிதர்களைப் புரிந்துகொள்வதே எனக்கு மிகப்பெரிய

சிக்கலாக மாறி இருப்பதாக நினைக்கிறேன். அதில் எதிர்பாலினமாக இருப்பதால் புரிந்துகொள்வது மேலும் சிக்கலாக இருப்பதாக வேண்டுமானால் நாம்

சொல்லலாம். பொதுவாக ஆண்கள் பெண்களை விட பழசாக இருப்பதாகத் தோன்றுகிறது. இதிலிருந்துதான் சிக்கல் தோன்றுகிறது. பெண்கள் காலங்காலமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்ததில் இருந்து வேறொரு இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். இதுவரை பெண் சார்ந்து நாம் உருவாக்கி இருந்த அத்தனை விழுமியங்களும் மாற ஆரம்பிக்கின்றன. எதெல்லாம் சமூக ஒழுங்கின் பேரில் அவர்களுக்கு மறுக்கப்பட்டதோ அவற்றை அவர்கள் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். இது ஓர் ஆணை எப்போதும் ஒருவித பதற்றத்துக்குள்ளாக்குகிறது. இதனால் ஆண் தன்னை ஒரு புனிதக் காதலனாகவும் பெண் எளிதில் நிராகரிப்புகளை செய்யக்கூடியவளாகவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறான். ஆனால் ஆண் இன்னும் பழைய காலத்தின் எச்சமாக நீடிக்க விரும்புகிறான். பெண்கள் நகர்ந்து வந்துவிட்டார்கள் என்பதுதான் நிஜம். ஆண் பழைய கட்டமைப்பில் இருந்தால்தான் அவனுக்கு சௌகரியம். ஆனால் பெண்ணுக்கு அதில் கிடைப்பது ஒன்றுமில்லை என்பதால் அவள் முன்நகர்கிறாள். இங்குதான் முரண்பாடு ஏற்பாடுகிறது.

இந்த கேள்வியை மனித உறவுகளுக்குள் பொதுவாக

நீட்டித்துப்பார்க்கையில் மனிதர்களுக்கு இடையிலான ஏமாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆண் &பெண் இடையில் மட்டுமல்லாமல் ஆண்& ஆண், பெண்& பெண் இடையிலும் ஏமாற்றங்கள் அதிகரிக்கின்றன. உறவுகள் முறிந்துவிடுகின்றன. பொதுவாகவே உறவுகள் மீது பொறுப்புணர்வு இல்லை. இன்றைய காலத்தில் வாழ்வது, நேற்று, நாளை பற்றி கவலை கொள்வது இல்லை என்று நினைக்கிறார்கள். மனதளவில் யாரும் யாரையும் உரிமைகொண்டாடுவதில்லை. இது இந்த காலகட்டத்தின் மனநிலை என நினைக்கிறேன். ஏன் ஆண் பெண் உறவில் இது அதிகமாகத் தெரிகிறது என்றால் இதில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு அதிகம். பொறுப்புணர்வு இல்லாத உறவுகள், விலகல்கள் காயத்தை அதிகப்படுத்துகின்றன. Possessiveness என்பது ஒருவரை வெறுமனே ஒரு பொருளாக உடைமைகொள்வது. ஆனால் Commitment என்பது அதைத்தாண்டிய விஷயம். உரிமைகொள்வது மட்டுமல்ல பொறுப்பேற்றுக்-கொள்வதும்தான் இது. இப்போது யாருக்கும் யார்மேலும் எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லை. ஆனால் Possessiveness உள்ளது.

நுகர்வுக் கலாசாரம் தலைவிரித்து ஆடும் ஒரு சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய முன்னேற்றமே கண்ணுக்கு முன்னால் நிற்பதால் இன்னொருவர் நலன் என்பது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதுதான் உறவுகளில் ஏமாற்றங்களை தருகிறது. ஆணுக்கு இருக்கும் பல தேர்வுகள் பெண்ணுக்கு இருப்பதில்லை. எனவே பெண் கறாரான முடிவுகளை எடுக்கிறாள். அதனால் ஆண்கள் காயப்படுகிறார்கள்.

நவம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com