அன்று இட்லி 6 பைசா!

அன்று இட்லி 6 பைசா!

அங்கேயெல்லாம் சம்பளம் கட்டை-யாச்சே?...' தினப்பத்திரிகையி-லிருந்து வார இதழில் பணிபுரியத் தாவிய-போது கவலை-யோடு கேட்டவர் குடும்ப நண்பராக இருந்த தி.ஜானகிராமன்.

கட்டையோ குட்டையோ அதையெல்லாம் சட்டை செய்யாத பேரவாவின் காரணமாக இந்த துறைக்கு வந்தாயிற்று! உண்மையில் ஊதியம் அப்போதெல்லாம்

சொல்லிக்கொள்ளும்மாதிரி இல்லைதான். அப்போதெல்லாம் சிறுகதைகளில், ‘அவருக்கு கைநிறைய சம்பளம். மாதம் 250 ரூபாய்!' என்று வரும். மாதம் 250 ரூபாய் என்பது எட்டாக்கனி அன்று!

பத்திரிகைத் துறைக்கு வந்தபோது (வயதைக் கண்டுபிடிக்கவும்!) தங்கம் சவரன் 60 ரூபாய்தான்! தங்கம் சவரன் 100 ரூபாயை எட்டியபோது தினத்தந்தியில் எட்டுக்காலம் முதல் பக்க தலைப்பு! அதிர்ச்சி தரும் செய்தி அது!

அன்று இட்லி ஒன்று 6 பைசா! ‘இது என்ன? அன்று ஒரு தம்பிடிக்கு 4 வடை'என்பார்கள் என்னுடன் பணிபுரிந்த மூத்தவர்கள். தம்பிடி- சல்லிக்காசு என்று அழைத்தார்கள். மாட்டுக்கொம்பில் சல்லிக்காசுகளை மூட்டையாகக் கட்டி நடத்தியதே சல்லிக்கட்டு! அதுதான் ஜல்லிக்கட்டு ஆயிற்றாம்!

இப்படி எல்லாமே மலிவாக காட்சியளித்த காலத்திலேயே பாரதியும் புதுமைப்பித்தனும் வறுமையில் வாடியது என் வயிற்றைப் பிசைந்தது உண்டு! நாளிதழ்களில் ஸ்கேல் வைத்து அளந்து பார்த்துப்பார்த்து நீளத்துக்கு ஏற்றமாதிரி சன்மானம் தரப்பட்ட காலம் உண்டு.

எஸ்.எஸ்.வாசன், ஆனந்தவிகடனை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் கா.நா.சுப்ரமணியம் அவரை அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். வாசன் வசூல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

‘வந்த தொகையில் 60 சதவீதம் சன்மானத்துக்கும் 30 சதவீதம் நிர்வாகத்துக்கும் வாசன் ஒதுக்குவதைப் பார்த்தேன். எழுத்துக்கு அவர் பெரும் மரியாதை தந்தார்,' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மைதான். ஆனந்தவிகடன் எழுத்தாளர்களுக்கு நல்ல அன்பளிப்பு கொடுத்து வந்திருப்பதாகவே நினைக்கிறேன். அதுவும் உரியநேரத்தில் ரூபாய் சேரவேண்டும் என்பது

சட்டமாகவே இருந்தது.

1960களிலேயே சிறுகதைக்கு 75 ரூபாய் என்று கொடுத்தார்கள்! முத்திரைக் கதைக்கு 200 ரூபாய்! தொடர்கதைகள், குறுநாவல்களுக்கு 2000, 10,000 தரப்பட்டது உண்டு. கட்டுரைகளுக்கும் நல்ல தொகை!

போகப்போக இந்த அன்பளிப்புகள் அதிகரிக்கப்பட்டன. முத்திரைக் கதைக்கு 501 ரூபாய். சிறுகதைகளுக்கு 150 ரூபாய்.. ஜோக்குக்கு 25 ரூபாய்! அட்டைப்பட ஜோக்குக்கு 100 ரூபாய்.

ஜெயகாந்தன் அவர்களுக்கு ரீடெய்னர் தொகை மாதம் 500 ரூ உண்டு! அவரது கதைகளுக்கு முத்திரைக் கதையாக தனி அன்பளிப்பு அளிக்கப்பட்டது!

அப்போதெல்லாம் வியாழன் அன்று விகடன் வரும். புதன் கிழமை அன்றே சன்மானத் தொகைகள் செக்- மணி ஆர்டர் மூலம் விகடன் இதழுடன் போய்ச்

சேர்ந்துவிடவேண்டும்! வாசன் உத்தரவு! அதற்காக மின்னல்வேகமாக செயல்படும் ஆசிரியர் பிரிவு நிர்வாகம்! விகடன் இலக்கியப் போட்டிகள் நடத்தி 1957லேயே நாவல்களுக்கும் சிறுகதைகளுக்கும் அள்ளிக் கொடுத்தது!

பொன்விழாவில் லட்சரூபாய் பரிசு நாவல்களுக்கு தரப்பட்டது! அதனால்தான் பொன்விழா இலக்கிய பரிசளிப்புக் கூட்டத்தில் பேசிய கலைஞர் ,கொடைவள்ளல்கள் பற்றியே பேசினார். விகடன் வழிகாட்டலை மற்ற இதழ்களும் பின்பற்றத்தவறவில்லை!

ஒருமுறை கா.நா.சு அவர்கள் விகடன் அலுவலகம் வந்தபோது, மதனை சந்தித்தார். உடன் இருந்தேன். விகடனில் தொடர்ந்து கட்டுரைகள் எழுத விரும்பினார். அவருடன் நீண்டநேரம் உரையாடியது அறிவுக்கு விருந்து!

வட இந்திய இதழ்களில் கட்டுரைகள் எழுதுவார் கா.நா.சு. அவருக்கு நமது சன்மானம் எப்படி இருக்குமோ? அவரிடமே கேட்டோம்: வாரம் 2500 ரூபாய் என உறுதியாகக் கூறினார். மதன் தயக்கம் இன்றி உடனே ஏற்றார். அந்த மாபெரும் எழுத்துமேதைக்கு அதுதானே மரியாதையாக இருக்கும். ஆசிரியர் பாலனும் ஏற்றார்!

விகடன் வாசகர்களின் துரதிருஷ்டம்! ஒரு கட்டுரைதான் அவர் டெல்லியிலிருந்து அனுப்பி வெளியாயிற்று! அடுத்த கட்டுரை எழுத அவர் இல்லை! நாங்கள் வருந்தினோம்!

வாரப்பத்திரிகைகள் 25 பைசா, 30 பைசா 5 ரூபாய்.. என விலைஉயர்ந்து இப்போது எங்கோ... முன்பு விலையேற்றும்போது வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்பது வழக்கம். இன்று வாசகர்களுக்கு

சொல்லாமலே புரிகிறது! வரப்பு உயர

நீர் உயரும்.. என்பதுபோல் இதழ் விலை உயர எழுத்துக்கு தரப்படும் மதிப்பும் உயர்ந்திருக்கும் என நம்புகிறேன்...

பிப்ரவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com