அம்பானி: பிரிவோம், வளர்வோமா? 

அம்பானி: பிரிவோம், வளர்வோமா? 

இந்திய தொழில்துறையில்  முன்னணியில் கொடிகட்டிப் பறந்த ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி 2002 இல்  மறைந்தபோது ஏற்பட்ட அண்ணன் - தம்பி பிரிவும் மோதலும் வெகுகாலத்துக்கு யாராலும் மறக்கமுடியாத ஒன்றாகும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தை யார் ஆட்சி செய்வது என்பதில் அண்ணன் முகேஷ் அம்பானிக்கும் தம்பி அனில் அம்பானிக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக அந்த  குழுமத்தின் சொத்துக்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.

அவர்களது தாயார் தலையிட்டு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  முகேஷ் அம்பானிக்கு எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ், எண்னெய் சுத்திரிகரிப்பு, தயாரிப்புத் துறை நிறுவனங்கள் அளிக்கப்பட்டன.

 தம்பியான அனில் அம்பானி, மின்சாரம், டெலிகாம், நிதித்துறை நிறுவனங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்த மோதல் நெடுநாட்களுக்கு நீடித்திருந்தது. திருபாய் அம்பானி உயிருடன் இருக்கும்போதே அண்ணன் தம்பி உரசலை சரி செய்திருந்தால் பிரச்னை இருந்திருக்காது. அவர் தன் சொத்துக்களுக்கு உயில் எழுதாமலேயே இறந்துபோனார். அவர் இறந்தபின்னர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் அனில் அம்பானி துணைத் தலைவராகவும் பதவி ஏற்றனர். இதற்குப் பிறகே இவர்களின் மோதல் பொதுவெளியில் தெரியவந்தது.

இந்த மோதலில் அவர்களின் தாய் தலையிட்டு  சொத்துக்களை பிரித்துக் கொடுத்தார் எனப் பார்த்தோம். ஆனால் அனில் அம்பானிக்கு அதில் முழு சம்மதம் இல்லை போலிருக்கிறது. 2006 இல் அண்ணன் நிறுவனம், தன்னுடன் செய்துகொண்டிருந்த எரிவாயு தொடர்பான ஓர் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து வழக்கு தொடுத்தார்.

அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அதன் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளிதியோரா, முகேஷ் அம்பானிக்கு சாதகமாக செயல்படுவதாக அனில் குற்றம் சாட்டினார். அதுமட்டும் அல்ல, நியூயார்க் டைம்ஸுக்கு பேட்டி கொடுத்ததற்காக அண்ணன் மீது சுமார் பல்லாயிரம்கோடி மதிப்பிலான மான்நஷ்ட வழக்கும் போட்டார்.  அனில் வைத்திருந்த டெலிகாம் நிறுவனத்துக்கு தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஏற்படாமல் போனதற்கு முகேஷ் அம்பானிதான் காரணம் என்று கிசுகிசுக்கப் பட்டது. முகேஷின் நிறுவனத்தின் பேராசைதான் வட இந்தியாவில்பெரும் அளவுக்கு மின்சார வெட்டுகள் ஏற்படுவதற்குக் காரணம் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனில் அம்பானி கடிதம் எழுதினார். பிரதமர், ரிலையன்ஸ் நிறுவனப் பிரச்னையில் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதும் அதற்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்ததும் நடந்தது.

திருபாய் அம்பானி கட்டிய சீ விண்ட் என்ற இல்லத்தில் இரு சகோதரர்களும் அந்த காலகட்டத்தில் தங்கி இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட இல்லை என சொல்லப்பட்டது. இருவரும் இத்தனைக்கும் மிகமிக நெருக்கமாக ஒருகாலத்தில் இருந்தவர்கள்.

அச்சமயம் அனில் அம்பானியின் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்படுத்தப்பட்டு,அவர் உயிருக்கே ஆபத்து என புகார் அளிக்கப்பட்டது. அந்த ஹெலிகாப்டரின் எரிபொருள் தொட்டியில் கூழாங்கற்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தவர் மறுநாளே மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

இந்திய பெட்ரோலிய அமைச்சகத்தையும் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தையும் கடுமையாக  விமர்சித்து நாளிதழ்களில் அனில் அம்பானியின் நிறுவனம் எரிவாயு ஒப்பந்தம் தொடர்பாக விளம்பரங்களை அளித்ததும் நடந்தது. நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, இந்த சகோதரர்களின் மோதல் தேசிய நலனைப் பாதிக்கும் பிரச்னையாக மாறிவிட்டது, எனவே மோதலைத் தவிர்க்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். இது பங்குச் சந்தையைப் பாதிக்கும் என அஞ்சப்பட்டது.

இந்த எரிவாயு பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றது. 2010-இல் தீர்ப்பு முகேஷ் அம்பானிக்கு சார்பாக வந்தது. மீண்டும் இவர்களின் தாயார் கோகிலா பென் தலையிட்டு,மோதலைத் தவிர்க்க இன்னொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார். அண்ணன் மீது, தான் போட்டிருந்த மான நஷ்ட வழக்கை அனில் வாபஸ் பெற்றார்.

அதே ஆண்டு முகேஷ், தான் வசிப்பதற்காக 27 மாடிகள் கொண்ட அண்டில்லா என்ற குடியிருப்பை உருவாக்கினார்.  இதன் பிறகு ஒரு கட்டத்தில் அனில், தங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்னை தீர்ந்துவிட்டதாகவும் இனி அவரவர் வழியைப் பார்த்துச் செல்லப்போவதாகவும் கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 ஒரு கட்டத்தில் அனில் அம்பானிதான் முகேஷை விட அதிகம் பணக்காரராக இருந்தார். பின்னர் மெல்ல அவரது சொத்துமதிப்பு கரைய ஆரம்பித்து, இப்போது எந்தவிதத்திலும் சொல்லிக்கொள்ள இயலாத அளவுக்கு கரைந்து காணாமல் போயிருப்பது இன்னொரு கதை. சோகக்கதை.  அதே சமயம் அண்ணனின் கிராப் மலையளவுக்கு வளர்ந்து நிற்கிறது. இப்போதைக்கு உலகப் பணக்காரர்களில் டாப் பத்துபேரில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்தியர் முகேஷ் தான்!

கடைசிச் செய்தி: சில ஆண்டுகளுக்கு முன்னால் அனில் அம்பானியின் நிறுவனம்,  இன்னொரு நிறுவனத்துக்கு தரவேண்டிய தொகையான 453 கோடிகளைக் கொடுக்கமுடியாமல்  போனது. இதைத் தொடர்ந்து அனில் மூன்று மாதங்கள்  சிறைக்குச் செல்ல நேரிடும் நிலை. இந்நிலையில் பணத்தைக் கட்டி அவரை சிறைக்குச் செல்லாமல் காத்தவர் முகேஷ் அம்பானிதான்! நீர் அடித்து நீர் விலகுமா?

ஏப்ரல், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com