அரசியல் கட்சிகளின் மரணம்

அரசியல் கட்சிகளின் மரணம்

எனக்கு எந்த அரசியல் கடப்பாடுகளும் இல்லை. இத்தாலியில் எந்த தனிப்பட்ட அரசியல் கட்சியுடனும் அடையாளப்படுத்தப்பட விரும்பாத  சில எழுத்தாளர்களில் நானும் ஒருவன் - இடாலோ கால்வினோ (இத்தாலிய எழுத்தாளர்)

அரசியலைக் கூர்மையாக கவனிக்கிறேன். எல்லா அரசியல் பிரிவுகளிலும் உள்ள கூருணர்வு கொண்டவர்களை நான் விரும்புகிறேன். என்னுடைய சிறந்த அரசியல்கட்சி எல்லாவற்றின் கலவையாக இருக்கும் - அலெக்ஸாண்டர் ஆர்ம்ஸ்ட்ராங் (ஆங்கில நடிகர்) இந்நாட்டில் ஒரே ஒரு அரசியல் கட்சிதான் உள்ளது. அது கார்ப்பரேட் கட்சி - ஜான் ஹால் (அமெரிக்க அரசியல்வாதி) மேல் குறிப்பிட்ட மூன்று மேற்கோள்களுக்கும் இந்தக் கட்டுரைக்கும் தொடர்பிருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால், அவை சொல்லும் உண்மை மக்கள் நலன் சார்ந்தது.

ஒரு கட்சியின் தலைவர் முதல்வராகிறார். அவரைப் புகழ்ந்து விதவிதமான சுவரொட்டிகள். அதில் பல, அவர் தொடர்ந்து ஆட்சி புரிவார் என்பதை தினுசு தினுசாகக் கூறின. இதைக் கண்டு எரிச்சலுற்ற பத்திரிகையாளர் ஒருவர், இதை நக்கலடிக்கும் விதமாக அவர் அடுத்த 150 வருடத்திற்கு முதல்வராக இருப்பார் என்ற ரீதியில் கார்ட்டூன் வெளியிடுகிறார். அதற்குப்பின் வந்த முதல்வரின் பிறந்த நாளையொட்டி கட்சியினர் “மாநிலத்தின் நிரந்தர முதல்வர்' என்று சுவரொட்டி ஒட்ட, பத்திரிகையாளர் இவர்களைத் திருத்த முடியாது என்று நொந்து கொண்டாராம்.

அரசியல் தலைவர்களும், கட்சிகளும் நிரந்தரமானதல்ல. அரசியல் தலைவர்களின் மரணங்களை விரிவாகவும், அதனால் ஏற்படும் அதிர்வுகளை ஆழமாகவும் இந்திய ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. ஆனால் அரசியல் கட்சியின் மரணங்கள் அலசப்படவில்லை. போதுமான அளவில் பதிவு செய்யப்படவில்லை.

அரசியல் கட்சிகளின் மரணங்களைப் பற்றி பேசும் முதன் முயற்சி இது. ஆங்கிலத்தில் காலாவதியான கட்சிகளை ‘Defunct Parties' என்கிறார்கள்.

மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியல் கட்சிகள் உருவாகின்றனவா?

அரசியல் கட்சி யாருக்கானது?

குழுவாக சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஓர் அமைப்பு தான் அரசியல் கட்சியா? இப்படியான கேள்விகள் பலரிடம்.

கட்சிகளின் ஆரம்ப சுவடுகளை பிளேட்டோ எழுதிய குடியரசிலும் அரிஸ்டாட்டில் எழுதிய அரசியலிலும் காணலாம். ஆனால் நவீன அரசியல் கட்சிகளின் வரலாறு 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாவில் உதயமாகிறது.

ஜனநாயகக் கட்சி (1828) அமெரிக்காவிலும் கன்சர் வேட்டிவ் கட்சி பிரிட்டனிலும் தொடங்கப்படுகின்றன. இவை உலகின் உயிரோடுள்ள பழைய கட்சிகளாக குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவின் வயதான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் 28 டிசம்பர் 1885இல் ஆரம்பிக்கப்பட்டது.

கட்சிகளின் இருப்பு நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. ஒரு நாடு ஒரு கட்சி என்கிற நிலை சில நாடுகளில் உள்ளது. பல நாடுகளில் இரு கட்சிகள் மாறி மாறி அதிகாரத்திற்கு வரும் சூழல். இந்தியா, பிரேசில், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற அனேக நாடுகளில் கூட்டணி அமைத்தோ தனியாகவோ அதிகாரத்தைக் கட்சிகள் கைப்பற்றமுடியும்.

பல கட்சிகள் உள்ள சூழலில் கட்சியின் ஆயுளை தீர்மானிக்கும் காரணிகள் பல.  மிகவும் வலுவாக சாகாவரம் பெற்றது போல் தோன்றும் கட்சிகள் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு மரணமடைவது கண்கூடு.

ஒரு தனி நபர் மரணமடையும் போது அவரின் சொத்துகள் பலருக்கு பிரித்தளிக்கப்படுவது போல், ஒரு கட்சி மரணமடையும் போது அதன் வாக்குகளை (சொத்து) கவர்வதற்கு பல கட்சிகள் முயற்சி செய்கின்றன. இதை விளக்கும் சரியானதொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

பம்பாய் மாகாணத்தில் இருந்து குஜராத்தை தனியாக பிரிக்க வேண்டுமென்று 1956இல் மகா குஜராத் அந்தலோன் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. தொடர் போராட்டத்தின் பலனாக 1960 மே 1,  குஜராத் தனி மாநிலமாகிறது.

முதல் தேர்தல் 1962இல் நடந்தது. காங்கிரஸ் 50.84 சதவீத வாக்குகளுடன் 113 தொகுதிகளை வென்றது. அத்தேர்தலில் சுதந்திரா கட்சி 26 தொகுதிகளையும் ப்ரஜா சோஷலிஸ்ட் கட்சி 7 தொகுதிகளையும் வென்றது. 2 ,3 - 4வது இடங்களில் வந்த கட்சிகள் சேர்ந்து பெற்ற வாக்குகள் 34.69 சதவீதம்.

1967 தேர்தலில் காங்கிரஸ் (45.95%) 93 தொகுதிகளிலும் சுதந்திரா (38.19%) 66 தொகுதிகளிலும் ப்ரஜா

சோஷலிஸ்ட் கட்சி (3.33%) 3 தொகுதிகளிலும் பாரதிய ஜன சங்கம் (1.88%) 1 தொகுதியிலும் வென்றன.

1971இல் காங்கிரஸ் (50.93%) 140 தொகுதிகளிலும், காங்கிரஸ் (ஓ) (23.49%) 16 தொகுதிகளிலும், பாரதிய ஜனசங்கம் (9.29%) 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்திரா காந்தி அலை வீசிய இந்த தேர்தலில் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்ட சுதந்திரா கட்சி 1.78 சதவீத வாக்குகள் பெற்றது. எந்த தொகுதியிலும் ஜெயிக்கவில்லை.

1975 தேர்தலில் காங்கிரஸ் (40.7%) 75 தொகுகள், காங்கிரஸ் (ஒ) (23.6%) 56 தொகுதிகளிலும், கிசான் மஸ்தூர் லோக் பக்‌ஷா கட்சி (11.53%) 12 தொகுதியிலும் பாரதிய ஜன சங் (8.82%) 18 தொகுதிகளிலும் வென்றன. இந்திரா எதிர்ப்பு வலுப்பெறத் தொடங்கிய காலகட்டம்.  இதையடுத்து 1980 தேர்தலில் காங்கிரஸ் (51.04%) 141 தொகுதிகளிலும் ஜனதா (22.77%) 21 தொகுதிகளிலும் பாரதிய ஜன சங் (14.02%) 9 தொகுதிகளிலும் ஜெயித்தன.

1985 தேர்தலில் காங்கிரஸ் (55.55%) 149 தொகுதிகளிலும் ஜனதா (19.25%) 14 தொகுதிகளிலும், பி.ஜே.பி (14.90%) 11 தொகுதிகளிலும் வென்றது. 1985இல் காங்கிரஸ் அதிகபட்ச ஓட்டுக்களைப் பெற்றது. அணைவதற்கு முந்தைய பிரகாசம்.

1990இல் குஜராத்தில் நடந்த தேர்தலின் முடிவு வித்தியாசமானது காங்கிரஸ் (30.74%) 33 இடங்களில் வென்றது. ஜனதா தளம் (29.36%) 70 தொகுதிகளிலும், பா.ஜ.க (26.69%) 67 இடங்களிலும் வென்றார்கள். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போக ஜனதாதளமும் பாஜகவும் கூட்டணியாக ஆட்சி அமைத்தார்கள். ஜனதா தளத்தின் சிமன்பாய் படேல் முதல்வர், பாஜகவின்   கேஷுபாய் படேல் துணை முதல்வர்.

1995இல் களநிலவரம் மாறிப்போனது. பாஜக (42.51%) 121 தொகுதிகளில் வெல்ல காங்கிரஸ் (31.86%) 45 இடங்களில் ஜெயித்தது. 1950இல் அதிக இடங்களில் வென்ற ஜனதா தளம் (2.82%) எந்த இடத்திலும் ஜெயிக்கவில்லை.

தொடர்ந்து, பாஜக 1998இல் (44.81%) 117 தொகுதிகளிலும், 2002இல் (49.85%) 127 இடங்கள், 2007இல் (49.12%) 117 வெற்றிகள், 2012இல் (47.85%) 119 தொகுதிகள், 2017இல் (49.1%) 99 தொகுதிகளிலும் வென்று ஆறு முறை ஆட்சியை தக்கவைத்துள்ளது. 1962 முதல் 1990 வரையிலான தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிர் வாக்குகள் சுதந்திரா, ப்ரஜா சோஷலிஸ்ட், ஜனதா, பாரதிய ஜன சங்கம், காங்கிரஸ் (ஓ), ஜனதா தளம், பா.ஜ.க என்று பல்வேறு கட்சிகளிடம் பிரிந்து போய் சேர்ந்தது. காங்கிரஸை எதிர்த்த கட்சிகள் காலாவதியாக அந்த வாக்கு வங்கி பாஜகவின் வாக்கு வங்கியாக உள்ளது.

குஜராத்தின் கடந்த ஆறு தேர்தல்களிலும் காங்கிரஸ் 1995 (32.86%) 45 இடங்கள், 1998 (34.85%) 53 இடங்கள், 2002 (39.28%) 51 தொகுதிகள், 2007 (38%) 59 சட்டமன்ற உறுப்பினர்கள், 2012 (38.93%) 61 இடங்கள், 2017 (41.4%) 77 தொகுதிகள் என்றிருக்கும் நிலையில் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இல்லை. இந்த சூழலை பயன்படுத்தி இரண்டு (அ) மூன்றாவது இடத்தை குறிவைக்கிறது ஆம் ஆத்மி.

இருப்பைக் காட்டிக் கொள்ள அதிகமாக சத்தமெழுப்பும் தமிழக காங்கிரஸை விட குஜராத் காங்கிரஸ் பலமாக இருக்கிறது. கடந்த 62 ஆண்டுகளின் குஜராத் தேர்தல் அரசியல்,  வலுவான கட்சிகள் எப்படி காற்றில் கரைந்து போகும் என்பதை உணர்த்தும். சுதந்திரா கட்சி வலுவாக இருந்த இடங்களில் தற்போது பாஜக வலுவாக இருக்கிறது என்று  டாக்டர் எச்.வி.ஹண்டே  இதே இதழில்  எழுதி இருப்பதை வாசியுங்கள்.

கட்சிகளின் மரணம் எப்போது, எப்படி நிகழ்கிறது?

1. கட்சியின் தலைவர், தனக்குப் பின் வழி நடத்த சரியான தலைவரை வளர்த்தெடுக்காத போது.

2. மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போகும்போது.

3. முன்வைத்த  லட்சியங்களை, கனவுத் திட்டங்களை நிறைவேற்றாமல் சாக்கு போக்கு சொல்லி சமாளிக்கும் போது.

4. கட்சியின் முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் இந்த கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று முடிவு செய்யும்போது.

5. தொடர் தோல்விகளின் போது தலைமை, “நாளை நமதே' என்று கட்சியின் விசுவாசிகளுக்கும்  வாக்களிப்பவர்களுக்கும் நம்பிக்கை அளிக்காத போது

6. கால மாற்றத்திற்கேற்ப கட்சியின் செயல்களையும் திட்டங்களையும் புதுப்பிக்காத போதும்.

7. பழைய வெற்றிகளில் இருந்து விடுபடாமல், மாறாமல் ‘கெத்து' காட்டும் தலைமையாலும்.

பெரும்பாலான கட்சிகள் காலாவதியாகிப் போனது இந்த ஏழு காரணங்களில் ஒன்றாலோ (அ) ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களாலோ தான்.

எல்லா கட்சிகளின் மரணமும் மக்களின் வெற்றியாக, முடிந்து விடுவதில்லை. தோற்கக் கூடாத கட்சிகளின் தோல்விகள் மக்களுக்கான இழப்புதான்.

இந்தியாவின் முக்கியமான ஐந்து கட்சிகள் ஐசியுவில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கட்சிகளைக் காப்பாற்றப்போகும் மருத்துவர் யார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

‘எதிர்காலத் தலைமுறைகளுக்கான வாய்ப்புகளை நம் தேசம் உருவாக்கவேண்டுமானால், நமது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அவர்களின் பொறுப்புணர்ச்சி, அவர்கள் சார்ந்த கட்சியைச்  சார்ந்தது அல்ல. ஆனால் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் அமெரிக்க மக்களைச் சார்ந்தது என்பதை உணரவேண்டும்,' இது அமெரிக்க அரசியல்வாதி அமி பெராவின் கூற்று.

அமி பேராவின் வார்த்தைகளைப் பின்பற்றும் அரசியல் தலைவரும் அரசியல் கட்சியும் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

செப்டம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com