மருத்துவர் அன்புமணி
மருத்துவர் அன்புமணி

அரசியல் தலைவர் என்னும் பிராண்ட்

பாமகவில் இருந்து ஆரம்பிக்கலாமா? ஆம், இன்று நாம் பேசுகிற பெருநிறுவன இயங்குமுறைக்கு சின்னக் கட்சியாக இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் என அவர்களையே சொல்லவேண்டும். கட்சியின் ஊடகத் தொடர்புகளைக் கையாள

கட்சிக்கு வெளியே இருந்து ஆளை நியமித்துப் பார்க்கும் உத்தியை தமிழ்நாட்டில் அவர்களே 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி ஆழம் பார்த்தவர்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாமகவுக்கு என்று ஊடகங்களில் இருந்த கசப்பான தோற்றத்தை மாற்றி அமைத்ததும் ஓர் ஊடகக்காரரின் நிறுவனம்தான். பத்திரிகை முதலாளிகளை நேருக்கு நேராக அன்புமணியிடம் அமர வைத்து உரையாடல், அதுவரை பாமக செய்திகளையே போடாமல் இருந்து வந்த ஒரு செய்தித்தாளை இந்த நேர்ப்பேச்சின் மூலம் சரிக்கட்டியது உள்பட்ட பல பிம்ப உருவாக்க நிகழ்வுகள் செய்யப்பட்டன. மக்களிடம் வாக்கு வாங்குவதைவிட அன்புமணி திறமையானவர் என்ற பிம்பத்தைக் கட்டமைப்போம் என்று தொடங்கப்பட்டது அந்நடவடிக்கைகள். 2014 இல் அன்புமணி எம்பி ஆகவும் ஆனார். அதன் பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற கோஷத்துடன் காதில் வயர்லெஸ் மைக்குடன் மேடையில் தனி ஒருவனாகத்தோன்றி ‘நம்ம சின்ன அய்யா' பொளந்து கட்டினார். இதற்கெல்லாம் முறையான ரிகர்சல்கள் அவர்களின் குடும்ப நிகழ்வுகளில் பார்க்கப்பட்டு பின்னர் அவர் மேடை ஏறினார்.

இதே காலத்தில்தான் முக ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பயணத்தையும் ஊர் ஊராக நடத்தி மக்களைச் சந்தித்தார். இதுவும் ஒரு குழுவினரால் திட்டமிடப்பட்டதே.

அப்போது கலைஞர் அவதானிப்புத் திறனோடு இருந்த காலம். அப்போது நடந்த நிகழ்வு ஒன்றை நண்பர் ஒருவர் நினைவுகூர்ந்தார். இந்த பயணத்துக்காக ஒரு மாதிரி நிகழ்ச்சியை ஓரிடத்தில் திட்டமிட்டனர். ஒத்திகை என வைத்துக்கொள்ளலாம். மாணவர்களுடன் முக ஸ்டாலின் சந்திப்பு. காமிராக்கள் சகிதம் எல்லோரும் கிளம்பிப்போய்விட்டனர். கலைஞரிடம் இருந்து இதன் தொழில்நுட்பப்பணியில் இருந்தவருக்கு தொலைபேசி அழைப்பு. ‘என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?'

‘அய்யா... மாணவர்களுடன் தளபதி சந்திப்பு நிகழ்ச்சி..'

‘அங்கே மாணவரணி இருக்காங்களா?'

‘இல்லீங்க..'

‘உடனே எல்லோரும் திரும்பி வந்திடுங்க' என்று அவர் உத்தரவு போட்டிருக்கிறார். இது அந்தக் காலம் என அவர் பெருமூச்சு விட்டார்.

2021 தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமியை விவசாயி என்றும் வலிமையான தலைவர் என்றும் முன்வைத்து காணொலிகள் உருவாக்கப்பட்டது நினைவுஇருக்கலாம்.

இன்று பப்ளிக் ரிலேஷன்ஸ் என்று சொல்லப்படக்கூடிய மக்கள் தொடர்பு, அரசியலுக்கு அரசியல்வாதிகளுக்கு பல்வேறு காரணங்களால் தவிர்க்க இயலாததாக ஆகிவிட்டது.

மக்கள் தொடர்பு என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்த நேர்மறையான எண்ணத்தை வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள் போன்றோர் மத்தியில் ஏற்படுத்துவது.

இதை அப்படியே அரசியலுக்குப் பொருத்திப் பாருங்கள். அரசியல் ஒரு சேவை என்கிற ஆதிகாலத்து கருத்துகளை மறந்துவிட்டு, அதையும் ஒரு தொழிலாகப் பார்த்தால் அப்படியே பொருந்தும் அல்லவா?

இப்படி வைத்துக் கொள்ளலாம். அரசியல் என்பது ஒரு மகத்தான தொழில். அந்தத் தொழிலை திறம்பட செய்ய பொலிடிகல் பி.ஆர். என்கிற உபதொழிலும் அவசியம்.

ஊதிப்பெருக்கப்படும் பிம்பம்

வேறு எவரையும் விட அரசியல்வாதிகளுக்கு தங்கள் பிம்பம் மிகவும் அவசியம். மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றிய எம்மாதிரியான தோற்றம் உருவாகியிருக்கிறது என்பதைப் பொறுத்தே அவர்களது அரசியல் எதிர்காலம் அமையும். அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் தேர்தல் வெற்றி, தோல்விகளையும் அவை தீர்மானிக்கும்.

பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் கட்டுரைகள் விவாதங்கள் மற்றும் இவை சார்ந்த மற்ற நிகழ்வுகள் அத்தனையையுமே தன்னை வாடகைக்கு எடுத்திருக்கும் தலைவருக்கோ, கட்சிக்கோ சார்பான வகையில் நிகழ்வதைப் போன்ற ஏற்பாடுகளை ஒரு பிஆர் ஏஜென்சி முன்னெடுக்கும். ஒரு தலைவரை லைம்லைட்டில் வைத்துக் கொண்டே இருப்பதற்கான வாய்ப்புகளை கண்கொத்திப் பாம்பாக இவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஒரு தலைவர் என்ன பேச வேண்டும், யாரை நோக்கிப் பேச வேண்டும், எந்தெந்த பிரச்னைகளைச் சுட்ட வேண்டும் என்பதையெல்லாம் கூட தீர்மானிக்கக்கூடிய இடத்துக்கு இப்போது இவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் கட்சியின் செயற்குழு போன்ற அமைப்புகள் தீர்மானிக்கக்கூடிய விஷயங்கள், இன்று இந்த ஏஜென்சிகளின் கைக்கு போய்விட்டது.

‘நமக்கு நாமே' என்று தமிழ்நாடு முழுக்க மு.க.ஸ்டாலின் பயணித்தாரே, இப்போது ‘என் மண், என் மக்கள்' என்று பாஜகவின் அண்ணாமலை தமிழ்நாட்டு ஊர்களில் வலம் வந்துக் கொண்டிருக்கிறாரே.. இதெல்லாம் அந்தந்த கட்சிகள் எடுத்த முடிவில்லை. அவர்கள் நியமித்திருக்கும் ஏஜென்சிகள் சில சர்வேக்களின் அடிப்படையில் எடுத்த முடிவு. இதுபோன்ற நிகழ்ச்சிகள், சம்மந்தப்பட்ட தலைவர்கள் குறித்த நேர்மறையான பிம்பத்தை மக்களிடம் கொண்டுச் செல்வதற்கான விளம்பர உத்திகள்.

இடர்களை எதிர்கொள்ளுதல்

விளம்பர மொழியில் நெருக்கடி மேலாண்மை( Crisis Management) என்பார்கள். ஒரு நிறுவனம் குறித்தோ, பொருள் குறித்தோ மக்கள் மத்தியில் எதிர்மறையான தகவல்கள் போட்டி நிறுவனங்களால் உருவாக்கப்படும். இதுபோன்ற எதிர்மறை செய்திகளை எதிர்கொண்டு, சேதாரத்தைக் குறைத்துக் கொள்வதே நெருக்கடி மேலாண்மை.

மோடி குறித்தோ, ஜெகன்மோகன் ரெட்டி குறித்தோ எதிர்மறையான செய்திகள் ஏதேனும் வெளியானால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அச்செய்திகளை மறக்கடிக்கக் கூடிய வேறு சில செய்திகள் மேலெழுந்து வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இல்லையேல், இனிமேல் கவனியுங்கள். ஊடகங்களோடு நல்ல தொடர்பு இல்லாவிட்டால் எந்தவொரு பி.ஆர். மேனேஜராலும் செய்ய முடியாது. மக்கள் தொடர்பில் மிகவும் சிக்கலான வேலை இது. எந்நேரம் வேண்டுமானாலும், என்ன மாதிரியான சம்பவங்களும் நிகழலாம் என்பதால் எப்போதும் இவர்கள் விழிப்பாகவே இருந்தாக வேண்டும். இன்றைய சமூகவலைத்தள யுகத்தில் ஒரு செய்தி அல்லது தகவல் -  உண்மையானதோ, தவறானதோ - பரவிவிட்டால், அதை எதிர்கொண்டு வெல்வது என்பது மலையை கயிறு கட்டி இழுப்பதற்கு ஒப்பான வேலை.

தமிழ்நாட்டில் ஸ்டாலின், எடப்பாடி இருவருமே திறமையான பி.ஆர்.நிறுவனங்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இவர்களைக் குறித்து எதிர்மறைச் செய்திகளுக்கு ஆயுள் மிகவும் குறைவு. கட்சிரீதியான ஐடி விங்குகளும் இவர்களுக்காக கடுமையாக உழைக்கிறார்கள்.

ஊடகங்களில் எந்தெந்த செய்திகள் வரவேண்டும், எவை குறித்தெல்லாம் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை இந்நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. எனவே, ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு வலை வீசுகின்றன. ஒரு தரப்புக்கு ஊடக முதலாளிகளும், பணியாளர்களும் ஏதேதோ காரணத்தால் வளைந்துக் கொடுப்பதின் மூலம் ஒரு கட்டத்தில் மக்களிடையே நம்பகத்தன்மையை இழக்கிறார்கள். அதனால் என்ன? அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட அரசியல் கட்சிகள், அதற்குள்ளாக ஓரிரு தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பார்களே? / ஊடகங்களில் எந்தெந்த செய்திகள் வரவேண்டும், கட்சித் தலைவர் தொடர்பான செய்திக்கு எந்தளவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைக் கையாள்வதற்கு பி.ஆர் நிறுவனங்களின் தனிக் குழு ஒன்றை வைத்துள்ளனர். கட்சி சார்பாக வரக்கூடிய எதிர்மறை செய்திகள், ஊடக விவாதங்களில் கட்சித் தலைமைக்கு எதிராக பேசக் கூடிய நடுநிலையாளர்கள், கட்சிக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய நடுநிலை பத்திரிகையாளர்கள் என இவர்களைப் பற்றி தினசரி அறிக்கை தயாரிக்கப்படும்.

கட்சிக்கு எதிராக பேசக் கூடிய பத்திரிகையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவர்களை வளைப்பது இந்தக் குழுவின் பணி. தினசரி ஊடக விவாதங்களை கவனித்து அதில் தங்கள் கட்சிக்கு எந்தளவுக்கு பாதிப்பு என்பதை மதிப்பெண் அடிப்படையில் தீர்மானிக்கின்றனர். இதில், செய்தித் தொடர்பாளரின் அணுகுமுறை, விவாதத்தை எதிர்கொண்ட முறை, கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பு, எந்த இடத்தில் செய்தித் தொடர்பாளர் கோட்டை விட்டார், தம் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட குறிப்புகளை பயன்படுத்திக் கொண்டாரா என்ற கேள்விகள் அதில் இடம்பெற்றிருக்கும்.

 இந்த மதிப்பெண்ணை ஒவ்வொரு வாரமும் ரிவ்யூ மீட்டிங் வைத்து இதனை விவாதிக்கின்றனர். இதில், எங்கே சரிசெய்யப்பட வேண்டும்? யாரை தொடர்ந்து அனுப்பலாம்? யார் தேவையில்லை என்பதை விவாதிக்கின்றனர். தொலைக்காட்சியின் நெறியாளர் ஒருபக்க அரசியல் சார்பு உடையவராக இருந்து, அவரால் தங்கள் கட்சிக்கு பாதிப்பு வருகிறது என்றால், அந்த நெறியாளரின் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என செய்தித் தொடர்பாளர்களுக்கு நேரடியாக உத்தரவிடுகின்றனர். தொலைக்காட்சி நெறியாளர் குறித்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமைக்கு புகாரை அனுப்பும் சம்பவங்களும் நடந்துள்ளன.

கரங்களை வலுப்படுத்துதல்

உலகில் எவராலும் மறக்க முடியாத ஒரு மந்திரவார்த்தை உண்டு.

Yes, we can.

2008ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவுக்காக செய்யப்பட்ட மக்கள் தொடர்பு விளம்பரப் பணிகளின் ஸ்லோகன் இது. மாற்றத்துக் கான ஒரு நம்பிக்கையை இந்த ஒரு வாக்கியமே கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வழங்கியது.

மக்களின் காவலன் என்று பொருள்படக்கூடிய ‘சவுக்கிதார்' கோஷத்தை கடந்த 2019 தேர்தலில் உருவாக்கி வென்றார் பிரதமர் மோடி.

‘ஸ்டாலின்தான் வர்றாரு' என்கிற பாடல் உருவாக்கிய தாக்கம், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் வெல்லப் போகிறது என்கிற எண்ணத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கி, வாக்குகளைக் குவித்தது.

ஒரு தலைவரின் கரங்களை வலுப்படுத்துவதற்கான எந்தவொரு வாய்ப்பையுமே பிஆர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இழக்க மாட்டார்கள். கட்சியின் கொள்கைகளை, முன்னெடுப்புகள், கட்சியின் மதிப்பீடு போன்றவற்றை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் விளம்பரப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

எந்தெந்தப் பகுதிகளில் கட்சி பலமாக இருக்கிறது, எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறது என்பதை கணக்கெடுப்புகள் மூலமாக அறிந்து தேவையானவற்றை செய்வார்கள்.

தேர்தல் வியூக நிபுணர்களின் ஆலோசனைகளை பரிசீலிப்பவர்கள் ஜெயிக்கிறார்கள். நானே தலைவர், எனக்குத் தெரியாததா அவங்களுக்குத் தெரிஞ்சிடப் போவுது என்று உதாசீனப்படுத்துபவர்கள் தோற்கிறார்கள்.

சமூகவலைத்தளங்களின் காலம் அரசியல் மக்கள் தொடர்பு வேலையில் சமீபமாக ஆதிக்கம் செலுத்தி வருவது சமூகவலைத்தளங்கள். முறையான தொழில்நிறுவனங்கள் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருப்பவர்களும்கூட ‘புரோக்கர்களாக' தேர்தல் சமயங்களில் கணிசமாக பணம் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, சமூகவலைத்தளங்களின் பண்பு என்பது குறிப்பிட்ட ஒரு சட்டகத்தில் வரையறை செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. நேரடியாகவே மக்களை எதிர்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும், கட்சிக்குமான வாய்ப்பை இவை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன.

கொஞ்சம் பிசகினால் மீம் போட்டு கேவலப்படுத்தி விடுவார்கள். சாதாரண சில செயல்களை போட்டோ கார்டு மூலமாக கொஞ்சம் ஹைப் ஏற்றிவிட்டால் உலக சாதனை போல கொண்டாடுவார்கள்.

இருமுனை கத்தியான சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்துவதுதான் இன்று அரசியல் கட்சிகள் எதிர்கொண்டிருக்கும் சவால். தேர்தல் சமயங்களில் மட்டுமின்றி எல்லா நேரமும் சமூகவலைத்தளங்களில் தங்களது இருப்பு இருப்பதை தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

நேரடியாகவே சமூகவலைத்தளங்களில் ஒரு கட்சியோ, தலைவரோ மக்களுடன் இருக்க முடியுமென்றாலும், இந்த நவீன ஊடகத்தின் தன்மை புரியாமல் மாட்டிக் கொள்ள முடியாது என்பதால் இதையும் பிஆர் வேலை பார்ப்பவர்களிடமே விட்டு விடுகிறார்கள். தங்களது சமூகவலைத்தள அக்கவுண்ட்டுகளைக் கவனிக்க சமூக ஊடக நிர்வாகிகளை பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.

அரசியலில் வெல்வதற்கு தொழில் ரீதியாக  திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் நிறுவனங்கள் மேற்சொன்ன பணிகள் அனைத்தையும் சேர்த்து வழிகாட்டுவதுடன் தலைவர்களின் பிரச்சாரங்களையும் வடிவமைத்துத் தருகின்றன. இதில் மோடிக்கு பல தேர்தல்களில் வெற்றிகரமாகச் செயல்பட்ட பிரசாத் கிஷோரின் ஐபேக், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வேலை பார்த்தது.

அதற்கு முன் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கான தேர்தல்வேலைகளை முன்னின்று செய்தது ஐபேக்கில் பணியாற்றி அதிலிருந்து பிரிந்து வந்த சுனில் கனுகோலு என்பவர். அவருக்கும் திமுகவுக்கும் இடைவெளி ஏற்பட, அதன் பின்னர் ஐபேக் உள்ளே வந்தது. சுனில் பின்னர் 2021 - இல் அதிமுக அணியில் வேலைகள் செய்து கொடுத்தார்.

இதற்கிடையில் கர்நாடகா, தெலுங்கானா தேர்தல்களில் காங்கிரஸின் வெற்றிக்கு சுனிலின் உதவி கணிசமாக இருந்ததால் மீண்டும் திமுக தரப்பில் அவரை அணுகி இருப்பதாகவும் சில திட்டங்களை அவர் மேற்கொள்வதாகவும் தகவல்கள் சொல்கின்றன. சுனில் கனுகோலுவை மீண்டும் தி.மு.க.வுக்குள் கொண்டு வந்ததில் உதயநிதியின் பங்கு அதிகம் என்கிறார்கள். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை சுனிலின் INC Mind என்ற நிறுவனம்தான் செய்து வந்தது. அமைச்சராக உதயநிதி பதவியேற்ற பிறகு தனக்கான பிராண்ட் புரமோஷன் வேலைகளை சுனில்தான் கவனிக்க வேண்டும் எனக் கூறிவிட்டதால், கிரீன்வேஸ் சாலையில் உள்ள உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் இதற்கான பணிகளை சுனில் கனுகோலு டீம் கவனித்து வருகிறது.

சுனிலுக்கு முன்பே தி.மு.க.வின் ஐ.டி விங் பணிகளை கவனித்து வந்த ‘குடும்ப' நிறுவனம் ஒன்று, இப்போதும் தனியாக இயங்கி வருகிறது. தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாடுகள், அமைச்சர்கள் எப்போது செய்தியாளர்களை சந்திக்க வேண்டும், தொலைக்காட்சிகளின் செயல்பாடுகள், அவற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஊடகங்களில் தங்களுக்கான நபர்களை தேர்வு செய்து அவர்கள் மூலமாக சிலவற்றைச் செயல்படுத்துவது என முழுக் கட்டுப்பாட்டையும் தங்களின் கைகளுக்குள் வைத்துக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது. தொடக்கத்தில் ஸ்டாலினை மட்டுமே முன்னிலைப்படுத்தி வந்த இந்த நிறுவனம், உதயநிதி அமைச்சரான பிறகே அவர் பக்கம் பார்வையைத் திருப்பியது. தற்போது தனக்கான பணிகளை சுனில் கனுகோலு கவனிக்கட்டும் எனக் கூறிவிட்டதால், கட்சி தொடர்பான இதர பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகிறது, குடும்ப நிறுவனம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. இன்னும் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் அலுவலகம் ஒன்றை அமைத்து அரசியல் நிலவரத்தை அந்நிறுவனத்தினர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com