அரசுப் பள்ளிகளில் படித்து சிகரம் தொடலாம்!

அரசுப் பள்ளிகளில் படித்து சிகரம் தொடலாம்!

தமிழகம் பெரிதாக கொண்டாடாத தமிழர் சி.கே.பிரகலாத். கொண்டாடியிருக்க வேண்டும். "Creative Capitalism idea for spreading the benefits of capitalism to the billions who have been left out" என்ற தலைப்பில் உலக பிரசித்தி பெற்ற ‘டைம் பத்திரிகை‘ நியூயார்க் நகரத்தில் ஒரு விவாத மேடை நடத்தியது. அதற்கான பேனலில் பில்கேட்ஸ் முக்கியமான நபராக கலந்துகொண்டார். அவரிடம் உடன் விவாதிக்க யார் வேண்டுமென்று கேட்ட போது பில்கேட்ஸ் விரும்பிய பெயர் சி.கே.பிரகலாத்.

பத்மபூஷன் விருதில் தொடங்கி எண்ணற்ற விருதுகளை பெற்ற சி.கே.பிரகலாத் உலகின் தலைசிறந்த நிர்வாகவியல் சிந்தனையாளர்கள் (Management Thinkers) பட்டியலில் முதல் பத்து இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட வருடங்கள் இடம் பிடித்தவர்.

மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் எண்ணற்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்ட சி.கே.பிரகலாத் சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி படித்ததை, அகமதாபாத் ஐ.ஐ.எம்-இல் பி.ஜி.டி.பி.எ படித்ததை, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முனைவர் பட்டம் படித்ததை பல இடங்களில் குறிப்பிடுவார்கள்.

எல்லோரும் குறிப்பிடத்தவறும் ஒரு செய்தி சி.கே.பிரகலாத் நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் தமிழ் வழி கல்வி கற்றவர் என்பது. என்னிடம் இதை பகிர்ந்து கொண்டவர் சி.கே. பிரகலாத்துடன் படித்த பத்திரிகையாசிரியர் ராவ்.

அரசுப் பள்ளியிலிருந்து வந்து சிகரம் தொட்டவர்களில் முக்கியமானவர் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இந்த தகவல்கள் பொது வெளியில் கூறும் போது பலர் குதர்க்கமாக அந்த காலத்தில் அரசுப் பள்ளிகள் நன்றாக இருந்தன, இப்போது மாறிவிட்டன என்று குறைகளை அடுக்க ஆரம்பிப்பார்கள்.

அரசுப் பள்ளிக் கூடங்களில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. இந்தாண்டு இவர்களுக்கான தரவரிசையில் முதல் மதிப்பெண் எடுத்த தேவதர்ஷினியின் தாயார் அங்கன்வாடி பணியாளர். இரண்டாவது மதிப்பெண் பெற்ற சுந்தர்ராஜன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் எந்த பயிற்சி வகுப்பிலும் சேரவில்லை. தானாகவே படித்து நீட் தேர்வில் இந்த இடத்தைப் பெற்றுள்ளார் (தகவல் 21.10.2022 தினத்தந்தி)

இந்தியாவில் கல்வி புகட்டுவதில் முக்கியத்துவம் வகிப்பது அரசுப் பள்ளிகள் தான். சுமார் பதினைந்து லட்சம் அரசு பள்ளிகள் இந்தியாவில் உள்ளன. மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 68.5 சதவீதம் அரசு பள்ளிகள் (2019-20 கணக்கின் படி).

தமிழகத்தில் 38209 அரசு பள்ளிகளும், 8402 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 10796 தனியார் பள்ளிகளும் உள்ளன என்கிறது ஒரு புள்ளிவிவரம். 2019-20இல் தமிழக அரசு 22 அரசு ஆரம்ப பள்ளிகளை மாணவர்கள் இல்லை என்ற காரணத்தால் அவற்றை நூலகமாக மாற்றியது. தற்போது 669 அரசு ஆரம்ப பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கிறார்கள்.

இதற்கு அரசுப் பள்ளிகளின் தரம் பற்றிய தவறான சிந்தனை பரவல் ஒரு முக்கியமான காரணம்.

தனியார் பள்ளிகள் பல வகைப்படும். சாதாரண தனியார் பள்ளியில் கீழ் வகுப்புகளுக்கு வருடத்திற்கு ரூ 30000லிருந்து ரூ 50000 வரையும் ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் ரூ 45000லிருந்து 60000 வரையும் செலவாகிறது. நோட்டு புத்தகங்கள், போக்குவரத்திற்கு தனி. உயர்ரக தனியார் பள்ளியில் இதிலிருந்து இரண்டு மூன்று மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

நான் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் படிக்க அரசு கல்லூரிக்கு செலுத்திய மொத்தக் கட்டணம் பத்தாயிரம் ரூபாய்க்குள்தான் (காலம் 1988-1993).

அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி தான் தரமானது என்பது சரியான சிந்தனையா என்பதை பெற்றோர் சிந்திக்க வேண்டும்.

கல்வியால் சமுதாயம் உயர முடியுமென்பதற்கு தென்னிந்தியா ஓர் எடுத்துக் காட்டு. சென்னை மாகாணத்தில் கல்வி பற்றி அப்போதைய ஆளுநரான சர் தாமஸ் மன்ரோவின் 1822 ஆம் ஆண்டு அறிக்கையின்படி  மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 161667. இதில் 157644 பேர் ஆண்கள். 4023 பேர் பெண்கள்.

இது இந்தியாவிலுள்ள மற்ற மாகாணங்களை விட அதிகம் அந்தக் காலத்தில்.

இந்த சிறப்பு இன்று வரை தொடர்கிறது.  இளைஞர்களுக்கு கல்வி அளிப்பதே ஒவ்வொரு நாட்டுக்கும் அடித்தளமாகும் என்பது டயோஜெனிசின் வார்த்தைகள்.  எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டுமென்றால் அரசுப் பள்ளிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதோடு அதன் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளில் பின்லாந்துக்கு முதலிடம். 1968இல் பின்லாந்தில் கல்வித்துறையில் மாற்றம், சட்டம் மூலம் கொண்டு வரப்பட்டது. அதன் படி 7 முதல் 16 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டாய சமச்சீர் கல்வி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த ஒன்பது ஆண்டு கல்வி அரசுப் பள்ளிகள் மட்டுமல்ல தனியார் பள்ளிகளிலும் இலவசம். இந்த மாற்றம் பின்லாந்து தேசத்தில் ஏற்ற தாழ்வுகளைப் பெருமளவில் குறைத்துள்ளது.

பின்லாந்தின் சூழல் தமிழகத்தில் வரவேண்டுமானால் அரசுப் பள்ளிகள் இன்னும் சிறப்பாக இயங்க வேண்டும். பெற்றோர் அதிகமான பணமிருந்தால் தனியார் பள்ளியில் படிக்க வைக்கலாம். ஊர் பெருமைக்காக வாயைக் கட்டி வயிற்றை கட்டி தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதை தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டு மீதமாகும் பணத்தில் அவர்களுக்கு பாடம் தவிர்த்த நல்ல புத்தகங்கள் வாங்கி கொடுங்கள். அவர்களுக்கு சிறகுகள் முளைக்கும், சிகரத்தைத் தொடுவார்கள். அப்துல் கலாம் போல்.

இந்த இதழில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சில ஆசிரியர்கள், இங்கு படித்து முன்னேறிய சில மனிதர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளோம். இது சின்ன அளவிலான முயற்சிதான். இது பெரிய அளவில் செய்யப்பட்டு அரசுப்பள்ளிகள் மீது சமூகத்தின் நம்பிக்கை வளர்த்தெடுக்கப்படவேண்டும்.

அந்திமழை இளங்கோவன்.

நவம்பர், 2022 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com