அறுபது வயசு ஆகலையே எப்படி எழுதினீங்க?

அறுபது வயசு ஆகலையே எப்படி எழுதினீங்க?

மெட்டி ஒலி தொடர் என்பது  முதலில் சரோ என்ற பெயரில் சின்ன திரைக்-கதையாகத்தான் இருந்தது.  மிகவும் எளிமையான கதை. இவ்வளவு பெரிதாக வளர்ச்சி அடையும் என்று எங்களுக்கே தெரிந்திருக்கவில்லை.

இயக்குநர் திருமுருகன் முதலில் என்னுடைய கதை ஒன்றை இயக்கி இருந்தார். அப்போது பழக்கம். என்னுடைய எழுத்தும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பின்னர் காவேரி என்று ஒரு சீரியல் செய்திருந்தோம். ஐம்பது, அறுபது எபிசோட் வர்றமாதிரியான சீரியல் அது. அப்பவே மெட்டிஒலி கதை விவாதத்தில் இருந்தது.

காவேரி தொடர் முடிந்ததும் சித்திக் அவர்களுக்கு சன் தொலைக்காட்சியில் ஒரு ஸ்லாட் இருந்தது. அதற்கு ஒரு சீரியல் பண்ணச் சொன்னார்கள். இந்த சரோ கதையைப் பண்ணிடலாம் என்று கதையை திருமுருகன் வளர்த்தெடுத்தார். சரோ& மாணிக்கம் ஆகியவைதான் முக்கிய பாத்திரங்கள். கூடுதலாக ஐந்து சகோதரிகள் என வளர்ந்தது. அந்த கதை மற்ற சீரியல்கள் போல் அல்ல. நாவல் எழுதுவது போல அந்த சீரியல் எழுதிய அனுபவமிருந்தது.  முடிவு என்னன்னு தெரியாது. ஒவ்வொரு பாத்திரமா வளர்ந்துகொண்டே செல்லும். அப்பெல்லாம் சீரியல்களுக்கு ஒரு ட்ரெண்ட் இருந்தது. பேசும் விதம், நடிகர்கள் எல்லாம் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பார்கள். திருமுருகன் இயக்குநர் மகேந்திரனின் ரசிகர். எனவே எல்லாவற்றையும் இயற்கையாக அமைக்க விரும்பினார். வீடு, ஆடைகள், பேச்சு எல்லா-வற்றையும் யதார்த்தத்துக்கு நெருக்கமாக உருவாக்கினார்.

எழுத எழுத  எனக்குள் மாறுதல் உருவாகி, நானும் அந்தக்  குடும்பத்துக்குள் ஓர் ஆளாக உணர ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட நமது வாழ்க்கையும் அதுபோன்ற ஒன்றுதானே. நடுத்தர வர்க்கம், கிராமப்புறம் சார்ந்த ஊர் சார்ந்த கதை. அதை எழுதும்போது ஒன்றை மனதில் நிறுத்தினேன். செயற்கையாக எதையும் எழுதக்கூடாது. நாம் இயல்பாக நம் வீடுகளில் பார்ப்பது பேசுவது போன்றவை எல்லாம் இதில் வரணும் என கருதினேன்.

அதில் எல்லோருமே நன்றாகப் பணிபுரிந்தோம். எங்கள் குழுவில் எல்லோருக்குமே அதுதான் முதல் பெரிய ப்ராஜக்ட் மாதிரி இருந்தது. ஒருங்கிணைந்த உழைப்பை அதில் செலுத்தினோம். இதெல்லாம் அதுவாக அமைந்தது. அதன் பிறகு எங்கள் குழுவிலேயே அப்படி அமையவில்லை.

ஒரு கட்டத்தில்திருமுருகன், இது  முழுக்க உங்கள் படைப்பு என்று சொல்ல ஆரம்பித்து சுதந்தரம் அளித்தார். நான் என்ன எழுதிக்கொடுக்கிறேனோ அது அப்படியே வர ஆரம்பித்துவிட்டது.

கிளைமாக்ஸில் சிதம்பரம் என்ற பாத்திரம் இறந்துவிடுவார். அதுவரைக்கும் சரோ என்ற பெண் பாத்திரம் சீரியலில் அளவாகப் பேசும். அமைதியான பெண்ணாக வரும். முதல் முறையாக அந்த பெண் வெடிச்சுப் பேசணும் என்று இயக்குநர் சீன் சொன்னார். அதற்கு முன்பாக ஐநூறு அறுநூறு எபிசோடில் பேசாத ஒரு பெண் பேசவேண்டும். அவள் பேசுகிறாள் என்கிறபோது ரொம்ப உணர்ச்சிவயப்பட்டு இருக்கவேண்டும் நாளைக்கு அது ஒரு சீன் தான். வேறு இல்லை என்று முதல் நாளே சொல்லிவிட்டார் திருமுருகன்.

நான் முன்பு வந்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட எபிசோடுகளையும் ஞாபகப்படுத்தி எழுதுகிறேன். இரவு முழுவதும் அமர்ந்து எழுதியாயிற்று.

இருபது நிமிடங்கள் வரும் வசனம் அது. என்னையும் படப்பிடிப்புக்கு வரச்சொல்லி விட்டார் இயக்குநர். காலையில் எல்லோரும் அங்கே இருந்தோம்.

மார்ச்சுவரியில் அப்பா இறந்துவிட்டார். அங்கே வைத்து சரோ தன் மாமியாரிடம் பேசும் காட்சி அது. சரோ பாத்திரம் நடிப்பவர், கன்னடமொழிப் பின்னணி கொண்டவர். தமிழ் அவங்களுக்கு அவ்வளவாக வராது. டப்பிங் குரல்தான். அவங்க 25 பக்கம் நீண்ட அந்த வசனத்தைப் படிச்சாங்க. அவங்க மட்டுமே பேசணும். பெரிய சீன். காலையில் இருந்து மதியம் வரைக்கும் அவங்களுக்கு சொல்லிக் கொடுத்துகிட்டே இருக்காங்க. மதியத்துக்குப் பிறகு அந்த சீன் எடுத்தாங்க. ரெண்டாவது டேக்கில் அது சரியாக வந்துவிட்டது.

இந்த காட்சி ஒளிபரப்பான பின் மறுநாளே தினமணியில் இந்த காட்சிபற்றி முழுப்பக்க கட்டுரை போட்டாங்க. அதற்காக திருமுருகனின் பேட்டி எடுத்தார்கள். அவர் அதில் இந்த சீனில் ஹீரோ வசனகர்த்தா; ஹீரோயின் சரோ என்று கூறியிருந்தார். எனக்குத் தெரிந்து சீரியலில் வந்த ஒரு சீனைப்பற்றி ஒரு பத்திரிகையில் முழுப்பக்கக் கட்டுரை வருவது அதுவும் தினசரித் தாளில் வருவது அதுதான் முதல்முறை.

மெட்டி ஒலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்போதே கல்கி பத்திரிகையில் என்னை அதை தொடராக எழுதச் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியம். ‘இல்லை.. இது ஒரு கிளாசிக். இதை நாவலாக நீங்கள் எழுதுங்க' என்று கல்கி ஆசிரியர் சீதாரவி வலியுறுத்தினார். நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் ஏனோ அது நடக்கவில்லை. ஆனால் இன்று நினைத்துப் பார்த்தால் மெட்டி ஒலி ஒரு கிளாசிக் தான். ஐந்து தடவை வரை அந்த சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டிருப்பதே அதற்கு சான்று. சன் டிவியில் மூன்றுமுறை, ராஜ் டிவி, மூன் டிவி என ஒளிபரப்பாகி இருக்கிறது.

அது அப்படியே இருக்கட்டும். அதை எந்த வடிவிலும் எழுதி வீணடித்துவிடவேண்டாம் என இப்போது தோன்றுகிறது. அந்த சீரியலை சரியான சமயத்தில் முடித்ததுதான் அது நன்றாக அமைவதற்குக் காரணம். பல நல்ல சீரியல்கள் சரியான சமயங்களில் முடிக்காவிட்டால், இழுத்து இழுத்து மோசமான படைப்புகளாக மாறிவிடும். மெட்டிஒலியில் அந்த தவறை திருமுருகன் செய்ய வில்லை. சானலிலும் சரி; தயாரிப்பாளரும் சரி; இதை இன்னும் மூன்று ஆண்டுகள் இழுக்கலாம் என்றார்கள். ஆனால் திருமுருகன் மறுத்துவிட்டார்.

அதை கன்னடத்திலும் மலையாளத்திலும் இழுஇழு என இழுத்து நான்கைந்து ஆண்டுகள் ஓட்டினார்கள்.

பாத்திர உருவாக்கம் மிகச்சிறப்பாக அமைந்தது மெட்டி ஒலியில்தான். ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். தனித்துவமாக இருக்கும். சந்தோஷ் என்ற பாத்திரம் முழுக்க முழுக்க தன் கிண்டலான வசனங்களால் கவனிக்கப்பட்டதாக மாறியது. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.

ஒருமுறை வந்தவாசியில் புத்தக விமர்சனக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். அப்போது மெட்டிஒலி முடிகிற காலகட்டம். மெட்டிஒலி வசனகர்த்தா வந்துள்ளார் என்றதும் ஒரு பெரியவர் என்னைப் பார்க்க வந்தார். யாரு எனத் தேடியவர் என்னைப் பார்த்ததும் நம்பவே இல்லை. எனக்கு இப்ப இருப்பதை விட 20 வயது அப்போது குறைவு. ‘தம்பி எனக்கு இப்போது 65 வயது ஆகிறது. மூன்று மகள் உண்டு. நான் என்னவெல்லாம் நினைப்பேனோ அதை எப்படி நீங்கள் எழுத முடிந்தது?' என்றார்.

‘எனக்கு வயசு ஆகவில்லைதான். ஆனால் அறுபது வயது ஆட்கள் பேசுவதை நான் கவனிச்சிருக்கன்ல' என்று பதில் சொன்னேன். மிகவும் மகிழ்ந்த அவர் தன் மகள்களை புகுந்த வீட்டுக்கு அனுப்புவது, மருமகன்கள் கொடுக்கும் குடைச்சல் எல்லாவற்றையும் வெகுநேரம் என்னிடம் பகிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். இப்படி ஒவ்வொருவரும் தங்களை அதில் உள்ள பாத்திரங்களுடன்  அடையாளம் கண்டுகொண்டதால் தான் அது வெற்றிபெற்றது.

அதில் வரும் போஸ் பாத்திரம் ரொம்ப நல்லவன். ஆனால் பொருளாதார ரீதியாக தொடர்ந்து தோற்றுக்-கொண்டே வருவான். எந்த தொழில் செய்தாலும் தோல்விதான். நிறைய ஆண்கள் பேசும்போதும் எனக்கும் இப்படித்தான் ஆகிறது என்பார்கள். பெண்களும் எங்க வீட்டிலும் ஒருத்தர் இப்படி இருக்காரு. ரொம்ப நல்லவர். ஆனா சம்பாதிக்கவே தெரியலை என்பார்கள்.

மெட்டிஒலிக்குப் பின்னர் கோலங்கள், லட்சுமி, நாதஸ்வரம் உள்ளிட்ட பல சீரியல்களுக்கு எழுதி இருக்கிறேன். இருப்பினும் ‘அந்த பத்து நாட்கள்' என்ற சீரியலுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியது மறக்க முடியாத அனுபவம்.

இது எப்படி நடந்தது என்றால் ஒருமுறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் முடிவதற்கும் இன்னொரு சீரியல் ஆரம்பிப்பதற்கும் இடையே பத்து நாள் இடைவெளி இருந்தது. இந்த பத்து நாளைக்கு எதாவது பண்ணனும் என்று சானலில் கேட்டார்கள். திங்கள் கிழமை ஒளிபரப்பு ஆகவேண்டும். அதற்கு முந்தைய புதன்கிழமை என்னிடம் திருமுருகன்  சொன்னார். அவர்தான் அந்த சானலில் வரும் அடுத்த சீரியல் செய்யப்போகிறார் என்பதால் நீங்களே எதாவது செய்யுங்கள் என்றார். நண்பர் அருள் ராய் அதை இயக்கட்டும் என்றார்.

பத்து நாள் என்றால் எதாவது குடும்ப திரில்லர் செய்வோம் எனக் கருதி ஒன்றை உருவாக்கினேன்.  சந்தேகப்படும் கணவன், அப்பாவி மனைவி, அவளது காதலன் என்று போகும் கதை. ஆனால் அதை வழக்கமான சீரியல்கள் போல் இல்லாமல் விறுவிறுப்பாக செய்தோம்.  இந்த சீரியல் இன்று வரை ஒரு பெஞ்ச்மார்க்காக சாதனை செய்துள்ளது. இந்த சீரியல் ஆரம்பிக்கும்போது அதன் ரேட்டிங் மிகக் குறைவாக இருந்தது. அது  ஒவ்வொரு நாளும் அதை மக்கள் பார்க்க ஆரம்பித்து, அதன் டிஆர்பி முடியும் தருவாயில் மிகப்பெரிய எண்ணைத் தொட்டது. பத்துநாளில் இப்படி நடப்பதெல்லாம் மிக அபூர்வம். வெகுநாட்கள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இப்படி மிக அபூர்வமாக சவால்கள் இருக்கும். அதைவிட்டால் சீரியல்களுக்கு எழுதுவது சற்று அசுவாரசியமாகத்தான் இருக்கும். அலுவலகம் போவதுபோல் அதுவும் ஒரு வேலைதான்!

சின்ன வயதில் இருந்தே நிறைய படிக்கும் பழக்கம் இருந்தது. இலக்கியத்துடனான பரிச்சயம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. ஆனால் இலக்கியம் என்பது தனிப் பாதையாக இருந்ததால் அதற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில் வாழ்க்கை என்னை பத்திரிகைக்குக் கொண்டுவந்தது. பிறகு ஒரு கட்டத்தில் சீரியல்தான் எனக்கு சாப்பாடு போட்டது! கதை எழுதியோ இலக்கியம் படைத்தோ சாப்பிட முடியாதே.

ஆனால் இலக்கியமென்பது எனக்கு நல்ல பின்புலமாக இருந்தது. எது எப்படி என்பது பற்றிய தெளிவை அளித்தது. இதுதான் என் வெற்றிக்குக் காரணம் என நினைக்கிறேன். சினிமாவில் கூட என்னுடைய எல்லைகள் என்ன என்பது எனக்குத் தெரியும். எல்லா வித கதைகளுக்கும் எழுத முடியும். ஆனால் என்னுடைய விருப்பம் தேர்வு சார்ந்து நான் இயங்குகிறேன். எல்லாவிதமான தரமற்ற படைப்புகளுக்குப் பணிபுரியாமல் ஓரளவுக்கு தேர்வு செய்து இயங்குவதை என் வாசிப்புதான் எனக்குக் கற்றுத்தந்தது.

(நம் செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

ஆகஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com