அவ்வ்வ்வ்வ்வளவும் கதைகள்!

அவ்வ்வ்வ்வ்வளவும் கதைகள்!

A short story is a love affair, a novel is a marriage இவை மார்ஸ் லொரேனாமூர் (Marce Lerena Moore) என்ற அமெரிக்க எழுத்தாளரின் வார்த்தைகள். இந்த விளக்கம் மிகச்சரியானது.

ஏர்னெஸ்ட் ஹெமிங்வேக்கும் அவரது எழுத்தாள நண்பர்களுக்கும் இடையே ஒரு பாரில் வைத்து பந்தயம். யார் சிறந்த குட்டியூண்டு கதையை சொல்வது என்று.

ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் குட்டிக் கதை வென்றது. ஹெமிங்வேயின் கதை வெறும் ஆறு வார்த்தைகளில் எழுதப்பட்டது: “For Sale: Baby Shoes, Never worn "

என் கல்லூரிக் காலத்தில் இயக்குநர் பாலுமகேந்திராவுடன் தொடர்ந்து சந்தித்து உரையாடும் வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலான உரையாடல்கள் இலக்கியம். குறிப்பாக சிறுகதைகள் பற்றியதாக இருக்கும். அவரது வார்த்தைகள் என் மனதை செழுமைப்படுத்தின. காட்சி ரீதியாக கதை சொல்வதில் உள்ள விஷயங்களை அவர் பேசுவார்.  காட்சிப் படுத்தும் சாத்தியக்கூறு உள்ள

சிறுகதைகளை பட்டியலிடுவார். அவற்றை மீண்டும் ஒரு முறை படித்த போது அவர் சொன்ன விஷயங்கள் கொஞ்சம் புரிந்தது; மிச்சம் அதில் சில கதைகளை அவர் ‘கதை நேரமாக' இயக்கியபோது புரிந்தது.

தமிழில் வெளியாகும் நல்ல சிறுகதைகளை அடையாளம் காட்டும் பெரும் பொறுப்பை இலக்கிய சிந்தனை அமைப்பு சுமார் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்தது. ‘சிறுகதை இலக்கியம் அழிந்தால் மொழி அழிந்துவிடும். மொழியின் ஆணிவேர் சிறுகதை தான்' என்று இலக்கிய சிந்தனை அமைப்பின் நிறுவனரான ப.லட்சுமணன் அந்திமழைக்கு அளித்த பேட்டியில் (சனவரி 2020) குறிப்பிட்டிருந்தார். இந்த செயல்பாட்டின் தொடர்ச்சியாகச் செயல்பட அந்திமழை  தீர்மானித்துள்ளது.

இந்த சிறுகதைப் போட்டிக்கு கிடைத்த வரவேற்பு ஆச்சரியப்படவைக்கிறது.

வரும் பக்கங்களில் இடம்பெறும் பரிசு பெற்ற கதைகளைப் படிப்பதற்கு முன் சில Short Short Stories (குட்டியூண்டு சிறுகதைகள்) மற்றும் சிறுகதையாகும் தகுதியுள்ள முகநூல் பதிவுகள் சிலவற்றையும் கீழே வாசியுங்கள்.

பிரபல டைரக்டர் கிதார் சர்மாவிடம் தன் மகன் ராஜ் கபூரை வேலைக்கு அனுப்பினார் பிருத்விராஜ் கபூர். கிளாப்  அடிக்கிற வேலை தரப்பட்டது. வேலையை செய்வதோடு அடிக்கடி கண்ணாடி பார்த்து கொண்டு தலை சீவிக் கொண்டு இருப்பார் ராஜ்கபூர். ஒரு முறை சரியாகக் க்ளாப் அடிக்காததால் நடிகரின் ஒட்டுத் தாடி மீது பட்டு அது கழன்று விழுந்துவிட்டது. சரி பண்ணி திரும்ப ஸீனை எடுக்க போதுமான நேரம் இல்லை. கோபத்தில் அவரை ஓங்கி அறைந்து விட்டார் டைரக்டர். ராஜ் அப்படியே நின்றிருந்தார்.

டைரக்டர் ராத்திரி பூராவும் வருந்தினார். மறுநாள் எப்பவும் போல செட்டுக்கு வந்த ராஜ் கபூர் அவரிடம் மறுபடியும்  ஸாரி கேட்டார். அவரோ 5000 ரூபாய் காண்ட்ராக்டை  நீட்டினார். தன் அடுத்த படத்தில் (Neel Kamal) அவரை ஹீரோவாக போட்டிருப்பதாக சொன்னார். இப்போது ராஜ் கண்ணில் கண்ணீர். ஏனென்றவரிடம் ‘நீங்க கோபப்பட்டப்ப கண்ணீர் வரலை. ஆனா உங்க அன்பு அதை வரவழைச்சிட்டது,‘ என்றார் ராஜ்கபூர்.

-ஜனார்த்தனன் கேபி முகநூல் பதிவு

----------

We Kissed. She melted. Mop please

- James Patrick Kelly

Corps parts missing. Doctor buys yacht.

- Margaret Atwood

----------

"im sorry, its a girl" said the doctor to the father.

"no, im sorry, youre a sexist" said the girl child to the world.

Adhiraj Singh ("Twitterature,")

----------

டிராபிக் சிக்னலில் ஒரே கூட்டம்.ஒரு டொயொட்டோ க்வாலிஸ் வண்டி -கேரளா ரிஜிஸ்ட்ரேஷன் -ரோட்டின் நடுவில் வினோத கோணத்தில் நின்றிருந்தது.

டிராபிக் போலீஸ் எனக்குத் தெரிந்தவர்தான்‘ரேஷ் டிரைவிங்.மார்த்தாண்டத்திலிருந்து சிக்னல் சிக்னலா நியூஸ் கொடுத்து இங்கே மடக்கிப் பிடிச்சிருக்கோம்'என்றார்.

டிரைவர், பீமன் ரகு போல் இருந்தார்.வண்டியை விட்டு இறங்க மறுத்தார்.

காரின் பின்பகுதியில் Baby inside  என்று ஸ்டிக்கர் வேறு ஒட்டியிருந்தது.

நான் ‘ஏங்க உள்ளே பேபியை வச்சிக்கிட்டா இவ்வளவு ரேஷா ஓட்டறீங்க?‘ என்றேன்.

அவர் ‘பேபி நான்தான். பேபிஜான்' என்றார்.

- முகநூலில் போகன் சங்கர்

‘சினிமாவுக்கு தகுதியே இல்லாதவர்' என்று சொல்லி, என்னை ஒரு சில படங்களில் இருந்து நீக்கிவிட்டார்கள். அப்போதுதான் பாலு மகேந்திரா அவர்களை சந்தித்தேன். அவரை யார் சந்தித்தாலும் புகைப்படம் எடுப்பார், என்னையும் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்கள் கழித்து ‘எனது படத்தில் நீ நடிக்கிற' என்றார். நான் நடிக்கலாமா என்று வெறுத்து போய் இருந்தேன்.

‘அன்பு, பாசம், காதல், உண்மை, உணர்வுகள்,

சினிமா இவை எல்லாமே எளிமையானது. எனது எளிமையான சினிமாவுக்கு உன்னை மாதிரி ஓர் எளிமையான பெண் இருந்தால் போதும்' என்று

சொன்னார். அதற்குப் பிறகு என்னை அவரது படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

மூன்றாம் நாள் படப்பிடிப்பில் ஒரு பெரிய பத்திரிகையாளர் வந்து பாலு மகேந்திரா அவர்களை தனியாக அழைத்து சென்று ‘இவரை வேண்டாம் என மூன்று படத்தில் நீக்கி இருக்கிறார்கள். இவரை நீங்கள் நாயகியாக போட்டு படம் எடுக்கிறீர்களே. ஒரு நாளைக்கு ஒரு படத்தில் இருக்காங்க அவங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க' என்று கேட்டார்.

அவர் எப்போதுமே பதிலை கைப்பட எழுதித்தான் கொடுப்பார். ஒரு பேப்பர் வாங்கி தன் பதிலை எழுதிக் கொடுத்தார்.

பாலு மகேந்திரா அவர்களிடம் ‘நீங்க என்ன எழுதிக் கொடுத்தீங்க' என்று கேட்டேன்.

‘THIS ARTIST WILL BECOME AN IMPORTANT ACTOR IN INDIAN CINEMA. SHE WILL GET A NATIONAL AWARD' என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். அவர் எழுதிக் கொடுத்த சில வருடங்களிலேயே ஒரு தடவை அல்ல இரண்டு தடவை தேசிய விருது வாங்கினேன்

-அர்ச்சனா (மயில்வண்ணன் பெரியசாமி முகநூல் பதிவு)

----------

எது நல்ல சிறுகதை என்ற விவாதம் வரும் போதெல்லாம் ‘சிறுகதைக்கு ஒற்றை உணர்வுநிலை இருக்கவேண்டும். ஒவ்வொரு சொற்றொடரும் அதை நோக்கிக் கொண்டு செல்லவேண்டும்' என்கிற எட்கார் ஆலன்போவின் வாசகமும் ‘சிறுகதைகளில் நிறைய சொல்வதை விட சொல்லாமல் விடுவதே நல்லது. ஏனெனில் ஏனெனில் எனக்கு ஏனென்று தெரியாது' என்கிற ஆண்டன்

செகாவின் வாசகமும் நினைவிற்கு வரும்.

தனது கலைப்பயணத்தில் நடுவிலிருந்த போது

சத்யஜித்ரே,‘இப்போது பதினாறு பதினேழு படங்கள் பண்ணி இருக்கிறேன். அதில் இரண்டு மட்டும்

ஒரிஜினல் திரைக்கதை. மீதியெல்லாம் சிறுகதைகள் அல்லது நாவல்களைத் தழுவியவை. எனக்கு

நீளமான கதைகளைத் தழுவி இயக்குவது சரியாகத் தோன்றுகிறது' என்றார்.

இந்த அந்திமழையில்  தரமான திரைப்படமாக மாறக்கூடிய கதை குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கிறது என்றே சொல்வேன்.

அந்திமழை இளங்கோவன்

ஜனவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com