ஆணியே பிடுங்க வேண்டாம்

ஆணியே பிடுங்க வேண்டாம்

சம்பவம் ஒன்று

சென்னையில் இருக்கும் நண்பர் பாஸ்கர்ராவ் தனது தந்தை இயற்கை எய்தி விட்டதாகவும் இறுதி நிகழ்வுகள் ஊரில் நாளை காலையே நடைபெறும் என்றும் போனில் தகவல் தெரிவித்தபோது இரவாகி விட்டிருந்தது. அவரது தந்தை பேராசிரியர் பாண்டியன் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் அனைவருமே எங்களுக்கு மிக நெருங்கிய நண்பர்கள்.

இனி என்ன புறப்பட்டாலும் நாம் போவதற்குள் எல்லாம் முடிந்துவிடும் என்கிற யோசனையின் ஊடே 'சரி பாஸ்'. அண்ணன் ஆனந்த் எப்ப பஞ்சாப் கிளம்புவார்..?' என்றேன்.

அவரது அண்ணன் ஆனந்த் பஞ்சாப் மாநில வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். எங்கள் நண்பர்கள் அனைவருக்குமே மிக நெருக்கமான நண்பர். அவர் மீண்டும் கிளம்புவதற்குள் அவரையும் பார்த்து ஆறுதல் சொல்லி விடலாம் என்கிற யோசனையில்தான் அப்படிக் கேட்டேன்.

'அநேகமா சனிக்கிழமை விமானம்ன்னு நெனைக்கிறேன்... தோழர்' என்றார் பாஸ்கர்ராவ். ஓகே பாஸ் நாங்க வந்துட்டு கூப்பிடுறோம்... என்றபடி போனை வைத்தேன்.

மறுநாள் நண்பர்களை அழைத்து தகவல் சொன்னதில் மயில்வண்ணன் மட்டும் 'ஆமா தல... நாம போயே ஆகணும். நான் சனிக்கிழமை லீவைப் போட்டர்றேன். நீங்க டிக்கெட்டைப் போட்டுருங்க' என்றான்.

எப்படியோ அடித்துப் பிடித்து தட்கலில் டிக்கெட் போட்டு சென்னைக்கு ரயில் ஏறும்முன் ஒரு யோசனை... 'நாம கௌம்பறோம்கிற மேட்டரை பாஸ்கர்ராவுக்கு

சொல்லீரலாமா...?' என்று.

ச்சே அவரே துக்க வீட்டில் இருக்கார் அவரப் போயி தொந்தரவு பண்ணக்கூடாது என்கிற எண்ணம் தோன்ற அதைக் கைவிட்டேன்.

மறுநாள் விழிக்கும்போது சென்னை வாடா வெண்ணை என்றழைத்துக் கொண்டிருந்த்து. எழும்பூர் சென்று வழக்கம்போல தங்கும் ஆஸ்தான லாட்ஜான வி.எஸ்.ல் ரூம் போட்டுவிட்டு தயாராகத் தொடங்கினேன். அப்பாவியான ஒரு நண்பரும் வந்து சேர்ந்தார்.

‘ஏன் குருநாதா... நாம் கால்டேக்ஸில போயிரலாமா..? என்றார் நண்பர். அழைத்த ஐந்து நிமிடத்தில் வந்து நின்ற டேக்சியில் ஏறி ஒய்யாரமாக அமர்ந்தபடி ‘புரசைவாக்கம்' என்றேன்.

வாகனம் கொஞ்ச தூரம் செல்லச் செல்ல எனக்குள் சிறு குழப்பம். புரசைவாக்கத்தின் அந்த நான்கு மூலைகளைத் தாண்டி ஒரு சர்ச் வருமே... அதற்கு வலப்புறமா... இல்லை இடப்புறமா வீடு...? என்று.

எதற்கும் நம்ம பாஸ்கர்ராவையே கேட்டு விடலாம் என்று போனைப் போட...

'வந்துட்டீங்களா தோழர்...' என்றார் .

வந்துட்டோம் பாஸ்கர்... கரெக்ட்டா நம்ம வீடு எந்த இடத்துல என்றேன்.

ஆமா... நீங்க எங்க இருக்கீங்க புது பஸ் ஸ்டாண்டா...? இல்ல பழைய பஸ் ஸ்டாண்டா...? என்றது மறுமுனை.

இதென்னடாது... சென்னைல ஏது புது பஸ் ஸ்டாண்டு... பழைய பஸ் ஸ்டேண்டு...? கோயம்பேடு பஸ் ஸ்டேண்டு வேணும்ன்னா இருக்குது... புதுசா குழப்புறாரே நம்மாளு... என்று எண்ணியவாறே...

தல... நாங்க புரசைவாக்கம் பக்கத்துல வந்துட்டோம். சரியா அட்ரஸ் சொல்லுங்க... அந்த சர்ச்சுக்கு ரைட்டா இல்ல லெப்ட்டா என்றேன் பரபரப்புடன்.

'பாஸ்... அங்கெதுக்குப் போனீங்க...? நாங்கதான் எல்லோரும் இங்க இருக்கோமே... நான் தான்

சொன்னேனே சொந்த ஊர் ராஜபாளையத்திலதான இறுதி நிகழ்வு...ன்னு...' என்கிற அசரீரி கேட்டது மறுபக்கம்.

பேசுவதில் பாதியைக் காதில் வாங்கி மீதியைக் காற்றில் பறக்க விட்ட என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினால்தான் என்ன என்கிற எண்ணம் தோன்றிய அதே வேளையில்...

‘துர்நாதா...!' என்றபடி மயக்கமானார்  முதல் முதலாக நம்முடன் வண்டியில் ஏறிய நண்பர்.

ஹலோ... இதுக்கே இப்படின்னா எப்படி...?

சம்பவம் இரண்டு

நண்பன் சரவணகுமாரின் நூல் வெளியீட்டு விழா. நான் அவசியம் கலந்து கொண்டாக வேண்டும் என்பது ஒட்டுமொத்த நண்பர்களது ஆசை. இதற்கென நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே

சென்னை வந்து நண்பர்களோடு கும்மியடிக்க வேண்டும் என்பதற்காக ரயிலில் முன்பதிவு செய்து அனுப்புகிறார்கள். ரயில் ஏறுவதற்கு முந்தைய நாள் இரவு வழக்கம்போல் உறங்கச் செல்கிறேன். ஒரு திரைப்பட ஒளிப்பதிவில் மும்முரமாக இருந்த தோழன் விஜய் சக்ரவர்த்தி எனக்கு முன்பதிவு செய்த டிக்கெட்டின் ஸ்டேட்டசைப் பார்க்க அது இன்னும் Confirm  ஆகவில்லை எனக் காட்டுகிறது.

அடுத்து என்ன செய்வது என்று எழுந்த பதட்டத்தில் மற்ற ரயில்களின் இருக்கை வசதிகளைப் பார்க்க அதுவும் பல்லிளித்திருக்கிறது. சரி இந்தாளை விமானத்திலாவது கடத்திக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று தீர்மானித்து காலை 9 மணி விமானத்தில் எனக்கான டிக்கெட்டையும் புக் பண்ணிவிட்டு போனைப் போட... எனது மொபைல் வழக்கம்போல் Switch off.

அந்த அர்த்த ராத்திரியில் அடித்துப் பிடித்து பெங்களூரில் இருந்த எங்கள் தவப்புதல்வனை எழுப்பி தகவலைச் சொல்ல... புதல்வன் அவனை ஈன்ற தாய்க்கு போனைப் போட்டு ‘அந்தாளை எழுப்பும்மா' எனக் கனிவுடன் கோரிக்கை விடுக்க... நட்ட நடு இரவில் தகவல் தெரிகிறது எனக்கு காலையில் விமானத்தில் டிக்கெட் போடப்பட்டிருக்கும் சமாச்சாரம்.

ஃபிளைட்டில் போற புருசனுக்கு வாயிக்கு வக்கனையா காரச் சட்னியோடு இட்லியும் சுட்டுத்தர... சாப்பிட்டு முடித்த வாயோடு கால் டேக்ஸிக்கு போனைப் போடுகிறேன். 7 மணிக்கே வந்து நிற்கிறது டாக்ஸி. சரி போகும் வழியில் தம் அடித்துக் கொள்ளலாம் என்கிற நினைப்பில் வண்டி ஏறுகிறேன்.

'சார்... டொமெஸ்டிக்கில் ஒரு மணி நேரம் முன்னாடி போனாப் போதும் சார். நானெல்லாம் 65 தடவை ஃபிளைட் ஏறி இறங்கீருக்கேன்... நான் சார்ஜாவுல இருந்தப்ப...' என்று வழி முழுக்க ஓட்டுநர் உள்நாட்டு விமானங்களில் ஏறுவதற்கும் வெளிநாட்டு விமானங்களில் ஏறுவதற்குமான வித்தியாசங்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார்.

எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. என்ன இது... இந்த மனுசன் நம்முளுக்கு மேல இருப்பாப்படி போலிருக்கு என்கிற கடுப்பில் நான் பத்தாண்டுகள் முன்பே லண்டன் போன பெருமையை அவிழ்த்து விடுகிறேன்.

மணியைப் பார்த்தால் 7.30.

தலைவரே...! அப்படியே வண்டிய ஓரமா நிறுத்துங்க. ஒரு தம் போட்டுட்டுப் போலாம் என்க வண்டியை ஓரங்கட்டுகிறார் ஓட்டுநர். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ரெண்டு பக்கமும் யாருமில்லை என்று தெளிவான பிறகு உற்சாகமாக 'உச்சா' போய் விட்டு ஒரு தம்மை எடுத்துப் பற்ற வைக்--கிறேன்.

ஓட்டுநர் தான் விட்ட கதையை மும்பை விமான நிலையத்தில் இருந்து தொடருகிறார். எல்லா கதைகளையும் கேட்டு முடித்து காருக்கு நானூறு ரூபாயும் கொடுத்த கையோடு துப்பாக்கி வெச்ச அந்த இந்திக்காரன்களிடம் போய் நிற்கும்போது மணி சரியாக எட்டு.

அட நம்ம வாழ்க்கைலயே இவ்வளவு சீக்கிரம் எங்கேயும் வந்ததில்லையே என்று என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டு பெட்டிகளை சோதனை செய்யும் இடத்திற்குள் நுழையும் போது ஒரு குரல்...

‘ஹலோ பாமரன்... எப்படி இருக்கீங்க....?'ன்னு.

அட நம்முளுக்-கெல்லாம் ஆட்டோ ஸ்டேண்டு... பஸ் ஸ்டேண்டு மாதிரி இடங்கள்லதான நண்பர்கள் உண்டு. இந்த ஏர்போர்ட்லயும் நம்மளத் தெரிஞ்சு பேசறதுக்கு ஆளுக இருக்காங்கன்னா அப்ப நம்ம ஸ்டேட்டஸ் உயர்ந்துடுச்சு போலயே... என்கிற இறுமாப்போடு திரும்பிப் பார்த்தால் டாக்டர் ருக்மாங்கதன் நின்று கொண்டிருந்தார். என் ஞானத்தந்தை

செந்தமிழ்ச்செல்வனின் பள்ளித் தோழர் அவர்.

நீங்க டாக்டர்...?

'நான் சென்னை.'

அட நானும் சென்னைதான்.

'என்ன விஷயமா...?'

நண்பனோட புத்தக வெளியீடு டாக்டர். நீங்க...?

‘எனக்கொரு டாக்டர்ஸ் கான்ஃபிரன்ஸ் அதான்...'

போதாக்குறைக்கு...

இவுருதான் ரைட்டர் பாமரன்... ஆல் இன் ஆல் அழகுராஜா... சைக்கிள் வீலுக்கு பெண்டெடுக்கறதுல இவுரு நல்லவரு... வல்லவரு...ன்னு அவரோடு வந்திருந்த நண்பருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைக்க... எனக்குப் பெருமையோ பெருமை.

தாளாத சந்தோசத்தில் இன்னொரு தம் அடித்தால் என்ன என்று தோன்றியது.

டாக்டர் நீங்க போயிகிட்டே இருங்க.. நான் அப்படியே ஸ்மோக்கிங் கேபினெட் போயிட்டு வந்தர்றேன் என்றபடி புகை பிடிக்கும் அறையை நோக்கி நகர்ந்தேன்.

நிதானமாக புகைபிடித்து முடித்து பையை மாட்டிக் கொண்டு மற்றொரு சோதனை செய்யுமிடத்தில் போய் நிற்க... அவர்களோ கையில் வைத்திருந்த மெட்டல் டிடெக்டரால் என்னுடைய கை... கால்... 'குடும்பச் சொத்தை'யெல்லாம் தட்டிப் பார்த்துவிட்டு என்னை மறுபக்கம் அனுப்பினார்கள்.

டாக்டர் எதிர்ப்புறம் நண்பரோடு மும்முரமாகக் கதைத்துக் கொண்டிருந்தார். நான் இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று அவரிடம் சைகை காட்டிவிட்டு அமர்ந்தேன்.

எதிரே கண்ணாடிக் கதவுக்கு வெளியே நான் செல்ல வேண்டிய விமானம் நின்று கொண்டிருந்தது.

சரி கொஞ்சநேரம் மொபைலையாவது நோண்டுவோம் என அதனைக் கையிலெடுத்தேன். யாரோ யாரையோ கூப்பிட்டபடி அலைந்து கொண்டிருக்க நானோ...  ஜெயமோகனின் கூட்டு முயற்சியில் தமிழில் வெளிவந்த 'சிந்து சமவெளி' காப்பியத்தை யூ டியூப்பில் பருகிக் கொண்டிருந்தேன்... நேரம் போனதே தெரியவில்லை.

டாக்டர் வழக்கம்போல் தன் நண்பரோடு கதைத்தபடி என்னைப் பார்த்து புன்னகைத்தார். ஃப்ளைட்டில் குளிரும் என்பதால் மறுபடியும் ஒருமுறை உச்சா போய்விட்டு வந்து அமர்ந்து நேரத்தைப் பார்த்தால் மணி 8.55.

மனசுக்குள் ஏதோ பொறி தட்ட எனது டிக்கெட்டை எடுத்துக் கொண்டு கண்ணாடிக் கதவருகே நெருங்கவும் அது மூடவும் கனகச்சிதமாக இருந்தது. பக்கத்தில் நின்றிருந்த ஊழியரிடம் டிக்கெட்டைக் காட்டி விசாரிக்க அவரோ கண்ணாடிக் கதவுக்கு வெளியே கையைக் காண்பிக்கிறார். அது மெதுவாக ரன்வேயில் நகரத் துவங்கியிருந்தது.

எத்தன தடவ உங்க பேரைச் சொல்லி கத்தினோம்... காதிலயே விழலயா...? என காறித் துப்பாத குறையாகக் கேட்டார்கள்.

ஒன்னுமே பண்ண முடியாதா என்றேன்.

'ஒன்னு பண்ணலாம்... உங்கள வெளிய கொண்டுபோய் விட்டுட்டு வரலாம் அவ்வளவுதான்...' என்றார்கள்.

திரும்பிப் பார்த்தேன் டாக்டர் வழக்கம்போல் தன் நண்பரோடு கதைத்தபடி என்னைப் பார்த்து புன்னகைத்தார். விசாரித்தால் அவருக்கு ஃபிளைட் பத்து மணிக்காம்.

டொமெஸ்டிக் ஃப்ளைட்டுக்கும் இண்டர்நேஷ்னல் விதிகளைப் பின்பற்றும் டாக்டரைப் பார்த்தால் எனக்குப் பெருமையாக இருந்தது.

அப்புறம் என்ன....  உள்ளே வருவதற்கு என்னென்ன-வெல்லாம் சடங்கு பண்ணி அனுப்பினார்களோ அதைவிட டபுள் மடங்கு சோதித்து வெளியே கொண்டு வந்து தள்ளினார்கள்.

மகனுக்குப் போனைப் போட்டேன்.

‘சூப்பர்யா... அவனவன் பஸ்ச உட்டுப் பாத்திருக்கேன்... டிரெயின உட்டுப் பாத்திருக்கேன்.... ஏன் நேரத்துக்குப் போகாம ஃபிளைட்ட உட்டுக்கூட பாத்திருக்கேன். ஆனா நீ கேட்டத் தாண்டி உள்ள போயி... இடஞுஞிடு டிணம் முடிஞ்சப்பறமும் ஃப்ளைட்ட உட்ட பாத்தியா... அங்கதான்யா நீ நிக்கறே. உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குய்யா...' என்றது என் வாரிசு.

போகாத விமானத்துக்கு மறுபடியும் கால் டேக்ஸிக்கு செலவு செய்வானேன் என்கிற சிக்கனபுத்தி என்னுள் தலைதூக்க... ஏர்போர்ட்டில் இருந்து சிட்றா பேருந்து நிறுத்தம் வரை மெது நடையாகவே நடந்து வந்து பஸ் ஏறி... ‘உப்பிலிபாளையத்துக்கு ஒரு டிக்கெட்' என்றேன் நடத்துநரிடம்.

'ச்சே... நீ எவ்வளவு பெரிய சிந்தனையாளன்டா... ஆனா... உன்னை இந்த சமூகம்தான் சரியா புரிஞ்சுக்க மாட்டேங்குது' என்கிற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால்....

அது: பின் தொடரும் நிழலின் குரல்.

டிசம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com