ஆண் பெண் உறவில் ஆரோக்கியம்! 

ஆண் பெண் உறவில் ஆரோக்கியம்! 

வீட்டுல ஒரே பிரச்னை. எதுக்குடா கல்யாணம் பண்ணிணோம்னு' இருக்கு என்று ஆணும், ‘என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கறான், தினந்தினம் சண்டைதான். என்ன செய்யறதுன்னு தெரியலை' என்று பெண்ணும் தினந்தோறும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

‘கவலைப்படாதே, குழந்தை பிறந்தா சரியாப் போயிடும்' என்று இளம்ஜோடிகளுக்கு கவுன்சிலிங் தருவோர் ஒருபுறம். அதை அசால்ட்டாக புறந்தள்ளி ‘கல்யாணமாகி பத்துவருசமாச்சு. இரண்டு குழந்தைங்க இருக்கு. எங்களுக்குள்ள ஒத்துவரலை, விவாகரத்து வேணும்' என்று கோர்ட் படியேறும் ஜோடிகள் மறுபுறம். ‘ஏற்பாட்டுத் திருமணம்தான் பிரச்னையே, இதுக்கெல்லாம் தீர்வு காதல் திருமணம்தான்' என்று நம்பிக்கையுடன் பேசிய நண்பர் வீட்டிலும் போனவாரம் ஒரு பஞ்சாயத்து. எங்க போனாலும் முட்டிக்கொள்கிறதே. குடும்பத்தில் பெண், ஆண் உறவில் என்னதான் பிரச்சனை?

கல்யாணம் என்பது இணையராக பெண்ணும் ஆணும் பயணிப்பதற்கான ஓர் ஏற்பாடு. இணைந்து வாழ்வதற்கான ஒப்பந்தம். ஆனால், இந்த அடிப்படை நோக்கத்தை புரிந்து கொண்டுதான் இருபாலரும் கல்யாணம் செய்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.

தூரத்து உறவுக்காரப் பெண் வனிதாவை எனக்குப் பிடிக்கும். துடிப்பானவள். அறிவியல் ஆர்வமும், சமூக அறிவும் நிரம்பியவள். ‘மாலிகுலர் பயாலஜி படித்து சயிண்டிஸ்ட்டாகி, இந்தத் துறையில் ரிசர்ச் பண்ணனும் அக்கா' என்று பார்க்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாள். அறிவியல் வளர்ச்சிகளை கதைபோல அவள் விவரிப்பதைக் கேட்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கும். எம்.எஸ்.ஸி முடித்துவிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று வனிதா சொன்னபோது அவள் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம், அவர் கண்ணை மூடுவதற்குள் பேத்தியின் கல்யாணத்தைப் பார்க்க வேண்டுமாம். மாப்பிள்ளை கிடைக்கும் வரையாவது, அதே ஊரிலிருக்கும் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்டில் வேலை செய்கிறேன் என்ற வனிதாவின் கெஞ்சலுக்கும், கண்ணீருக்கும் எந்தப் பலனுமில்லை. பெரிய நிறுவனத்தில் எஞ்சினியர், கை நிறைய சம்பளம், சொந்த வீடு, கார் என்று சுரேஷுக்கு, பெண் கேட்டு வந்தபோது வனிதாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்கள். ‘எல்லா வசதியும் இருக்கு. பையனுக்கு வெளியூர்ல வேலை. சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறான். ஒரு கல்யாணத்தை பண்ணிவச்சுட்டா அவ அவனைப் பாத்துக்குவா. நாங்க நிம்மதியா இருப்போம்‘ என்று சுரேஷின் அம்மா சொன்னபோது மொத்த உறவுக்கூட்டமும் தலையாட்டி ஆமோதித்தது.

இதில் தன் வாழ்க்கை லட்சியம் பற்றி வனிதாவோ, தனது துணை எப்படி இருக்க வேண்டும் என்ற தன் ஆசை பற்றி சுரேஷோ பேசுவதற்கு இடமே இருக்கவில்லை. ‘நம்ம ஜாதியில இவ்வளவு படிச்சு, கை நிறைய சம்பாதிக்கிற மாப்பிள்ளை கிடைக்கணுமே' என்று வனிதாவின் பெற்றோரும், ‘கண்ணுக்கு லட்சணமா ஒரே பொண்ணு. நல்லா படிச்சிருக்கா. சொத்து இருக்கு. டீசண்ட்டான ஃபேமிலி' என்று சுரேஷின் பெற்றோரும் சிலாகிக்க பெரிய மண்டபத்தில் ஆடம்பரமாக கல்யாணம் நடந்தேறியது.

சுரேஷ் வேலை செய்யும் ஊரில் இருவரும் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர். ஆறு மாதத்திலேயே இருவருக்கும் முட்டிக் கொண்டது. ‘பொண்ணுன்னா காலையில சீக்கிரமா எந்திரிக்க வேண்டாமா? நாந்தான் எந்திரிச்சு டீ போட்டுட்டு இவளையும் எழுப்ப வேண்டியிருக்கு. ஏனோதானோன்னு சமைக்கறா. அம்மா மாதிரி விதவிதமா சமைக்கலைன்னாலும், கொஞ்சம் ருசியாவாச்சும் செய்யலாம்ல. வாயில வைக்க முடியலை. சொன்னா சண்டைக்கு வர்றா. எப்பப் பார்த்தாலும் சயின்ஸ் ஜர்னல்ஸை வச்சுட்டு உட்கார்ந்திருக்கா. இல்லன்னா நெட்ல என்னத்தையோ படிச்சிட்டு இருக்கா. சொன்னாலும் கேக்க மாட்டேங்கறா, இவ செட்டாக மாட்டா' என்று சுரேஷ் புலம்பினான். ‘நீங்க சொன்னதால கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நேரா நேரத்து சமைச்சுப் போடறேன். எப்பப்பாரு குறை சொல்லிக்கிட்டே இருக்கான். எங்க அம்மா செய்யுற மாதிரி இல்லன்னு திட்றான். எனக்குத் தெரிஞ்சதுதானே நான் செய்ய முடியும். ரிசர்ச் பண்ணனும்னு எனக்கு ஆசை, அப்ளை பண்ணட்டான்னு கேட்டா, இப்ப வேணாம். பேரப்புள்ளயைப் பார்க்கணும்னு எங்க அப்பா ஆசைப்படுறாரு. மொதல்ல குழந்தை, அப்புறம்தான் மத்ததெல்லாங்கறான். தொலையட்டும்னு, ஃப்ரீயா இருக்கற நேரத்துல சயின்ஸ் மேகசீன்ஸ், நெட்ல ஆர்டிக்கிள்ஸ்னு படிச்சுட்டு இருந்தா இவனுக்கு என்ன பிரச்னை ? எப்பப் பார்த்தாலும் இவன் ஸ்போர்ட்ஸ் சானல் பார்த்துக் கிட்டு இருக்கறதை நான் குறை சொன்னேனா? நான் படிச்சா உனக்கென்னடான்னு கேட்டா, அந்த நேரத்துல யூடியூப் பார்த்து சமையலாச்சும் ஒழுங்கா கத்துக்கோன்னு அட்வைஸ் பண்றான். மூணுவேளையும் வடிச்சுக்கொட்டவும், பாத்திரம் தேய்க்கறதுக்குமா நா எம்.எஸ்.ஸி படிச்சேன். இவன் எனக்கு ஒத்து வரமாட்டான்' என்று வனிதா பெற்றோரிடம் கறாராக சொல்லிவிட்டாள். இரண்டு வீட்டுப் பெரியவர்கள் பஞ்சாயத்து செய்தும் பலிக்கவில்லை. அதற்குப் பிறகு ஒருவருடத்தில் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இங்கே என்ன பிரச்னை? தனக்கு ஏற்ற துணை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கேற்றவாறு தேர்ந்தெடுக்க இருபாலருக்கும் உரிமை இருக்கிறதா? இல்லை. ஆணின் விரும்பத்திற்காவது செவி சாய்ப்பார்கள். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு அறவே இல்லை. சொந்த ஜாதிக்கும், சொத்துக்கும்தான் முன்னுரிமை. கூடுதலாக மாப்பிள்ளையின் வேலை, குடும்ப அந்தஸ்து, வீடு, கார் இத்யாதி இத்யாதிக்கெல்லாம். இதையெல்லாம்தான் குடும்பங்கள் பரிசீலிக்கும். சம்பந்தப்பட்ட இருவருக்கும் இதில் விரும்பம் இருக்கிறதா, ஒத்துப்போகுமா இதையெல்லாம் ஏற்பாட்டுத் திருமணத்தில் பொருட்படுத்தக்கூட மாட்டார்கள். தற்செயலாக இருவருக்கும் பொருந்திப் போனாலோ, இல்லை ஒருவர் விட்டுக் கொடுத்துவிட்டு அடிமையாக இருந்தாலோதான் அந்த உறவு நிலைக்கும். முடியாவிட்டால், அன்றாட சண்டை சச்சரவிலும், பிரிவிலும் போய் முடியும்.

நாங்கள் நண்பர்களாகச் சேர்ந்து நடத்திவைத்த மீரா, திலீப்பின் காதல் கல்யாணம் இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது. இரண்டு குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பை மீறி, இருவரும் உறுதியாக நின்று வாழ்வில் இணைந்தனர். இருவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலை. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள், சமாதானமாகி வந்த இருவரின் குடும்பத்தினர், லோனில் சொந்த ஃப்ளாட் என்று சந்தோசமாக சென்றது பத்து வருட வாழ்க்கை. அதற்குப் பிறகு சின்னச் சின்னதாகப் பிரச்னைகள்.

‘குழந்தைகளைப் பாத்துக்கிறதுக்காக வேலையை விட்டேன். இப்ப வளர்ந்துட்டாங்க. திரும்ப வேலைக்குப் போறேன்னா இவன் சப்போர்ட் பண்ண மாட்டேங்கறான். எனக்குன்னு ஒரு ஸ்பேஸே இல்ல. எப்பப் பார்த்தாலும் வீட்டு வேலை, சமையல்ன்னு அலுப்பா இருக்கு. இவன் சனி ஞாயிறு கூட வீட்டுல இருக்கறதில்ல. ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டின்னு கிளம்பிடறான்' என்று மீரா புலம்ப, ‘நான் மட்டும் சும்மாவா இருக்கேன். கொரோனாவுக்கு அப்புறம் இந்த வேலையைத் தக்க வச்சுக்க நான் படுறபாடு எனக்குத்தான் தெரியும். வீட்டு லோன் வேற கழுத்தை நெறிக்குது. சனி, ஞாயிறுதான் எனக்கான ஒரே ரிலாக்ஸேசன். இதுல இவ வேற ‘வீட்டுவேலைல ஹெல்ப் பண்ணு, எனக்கு திரும்ப வேலைக்குப் போகணும்'னு நச்சு பண்ணிட்டே இருக்கா' என்று திலீப் கத்தினான். இருவருமே குடும்பத்திற்காக சரிசமமாக உழைக்கிறார்கள், அதில் சந்தேகமே இல்லை. ஆனால், இணைக்கான விருப்பங்களை அங்கீகரித்து, அவர்களுக்கு உதவ முன்வருகிறார்களா என்பதுதான் கேள்விக்குறி.

இதிலும் ஆண், மனைவிக்கு ஆட்சேபணை இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், தனக்கான ஸ்பேஸான நண்பர்களையும், பார்ட்டியையும் தேடிப்போக முடிகிறது. ஆனால், பெண்ணுக்கோ, வீட்டுவேலை, சமையல், குழந்தைகள் என்ற பொறுப்புகள் வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் இறுக்கிப் பிடிக்கின்றன. தாற்காலிகமாக சில மணி நேரமாவது இதிலிருந்து விடுபட்டு, தன்விருப்பப்படி வெளியே ஷாப்பிங்கிற்கோ, நூலகத்திற்கோ போகவேண்டுமென்றாலோ, தனது தோழியை சந்திக்கச் செல்ல வேண்டுமென்றாலோ - ஆணைப் போல - வீட்டையும், குழந்தைகளையும் அப்படியே விட்டுவிட்டு கிளம்பமுடியாது. ‘நான் இல்லாதபோது இதெல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளேன்' என்று கணவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, அவன் சம்மதித்தால் மாத்திரமே செல்ல முடியும். கணவன் ஒப்புக்கொள்ளாவிட்டால் வெளியே போகவியலாது. அப்படிப் போனால் ‘பொறுப்பற்றவள்' என்றும் ‘நீயெல்லாம் ஒரு தாயா?' என்றும், கணவனும், குடும்பத்தினரும் கரித்துக் கொட்டுவார்கள். ஏனென்றால், வேலைக்குப் போனாலும், போகாவிட்டாலும் சமையல், வீட்டுவேலை, குழந்தைவளர்ப்பு இதெல்லாம் பெண்ணின் பொறுப்பாக அவள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதில் உதவுவதும், உதவாததும் ஆணின் விருப்பம். காதல் மணத்திலும் நிலவும் இந்த சமத்துவமின்மை பெண்ணை சோர்வடையச் செய்கிறது. இருவர் உறவிலும் விரிசலை ஏற்படுத்துகிறது. இதற்கான தீர்வு, குடும்பத்தை ஜனநாயகப்படுத்துவதும், வீட்டுப்பொறுப்புகளை மனைவியும், கணவனும் சமமாக பகிர்ந்து கொள்வதும்தான்.

மற்றொரு விசயம், கணவன், மனைவிக்கு இடையே பிரச்னைகள் முற்றினால் பிரிவதற்கான சுதந்திரம் இருக்கிறதா ? இந்த சுதந்திரம் ஏற்பாட்டுத் திருமணத்தில் குறைவாகவும், காதல் திருமணத்தில் அதிகமாகவும் இருப்பதைக் காண முடிகிறது. ஆண்-பெண்ணைப் பொருத்தவரை, பிரிவினால் எதிர்கொள்ளும்  சவால்கள் பெண்ணுக்கு அதிகமாகவும், ஆணுக்கு குறைவாகவும் இருக்கிறது. விவாகரத்தான பெண்ணை இந்த சமுதாயம் மதிப்புக்குறைவாக நடத்துவதும், ‘அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்திருக்கலாம்' என்ற பெற்றோரின் ஆதங்கமும், ‘ஏம்மா அப்பாவைவிட்டு பிரிஞ்சே' என்று வளர்ந்தபின் பிள்ளைகள் கேட்கும் புரிதலற்ற கேள்விகளும் பெண்ணுக்கு காலத்திற்கும் மனவுளைச்சலை ஏற்படுத்துகின்றன. இது போன்ற விளைவுகளுக்கு அஞ்சியே பல பெண்கள் எத்தகைய துன்பம் இருந்தாலும், கணவனைவிட்டுப் பிரிய பயப்படுகின்றனர். குழந்தைகள் இருக்கும் வேலைக்குச் செல்லாத பெண்களுக்கு பொருளாதார  தற்சார்பு இல்லாததால் பிரிவதை நினைத்துப் பார்க்கக் கூட முடிவதில்லை.

துணிவுடன் பிரிந்து வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் அடுத்த சவால், புதிதாக இன்னொரு உறவைத் தேர்ந்தெடுப்பதும், அந்தத் துணையுடன் வாழ்க்கையில் இணைவதும்தான். தனக்குள் இருக்கும் மனத்தடை, குடும்பத்தார், சுற்றத்தாரின் எதிர்ப்பு, குழந்தைகளின் இணக்கமின்மை போன்ற பல பிரச்னைகளை சமாளித்துத்தான் பெண்கள் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பெண்ணும், ஆணும் மனமொத்து வாழ்விணையராக இணைவதும், ஒத்துவராத போது பிரிவதும், வேறொரு இணையுடன் வாழ்வைத் தொடர்வதும் வளர்ந்த நாடுகளில் இயல்பான ஒன்று. ஆனால், இந்த நாட்டில் கொடுமையான ஜாதிய அமைப்பும், ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் இதற்குத் தடையாக நிற்கின்றன. இதிலிருந்து விடுபடுவதற்கான உரையாடல்களை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருப்பதுதான், ஆரோக்கியமான பெண்-ஆண் உறவுக்கான அடித்தளமிடும்.

ஏப்ரல், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com