ஆண் மனதை ஜனநாயகப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு லேசான காரியமல்ல!

ஆண் மனதை ஜனநாயகப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு லேசான காரியமல்ல!

கடந்த ஜுன் 11 அன்று எங்கள் 41-ஆவது திருமணநாளை வெற்றிகரமாகக் கடந்தோம். ஐரோப்பிய சமூகங்களில் வேண்டுமானால் இது ஆச்சரியமான ஒரு செய்தியாக இருக்கலாம்.

ஆனால் இந்திய சமூகத்தில் இது இயல்பானதுதான் முற்றிலும் ஆணாதிக்க சமூகமாகவே கட்டமைக்கப்பட்டுள்ள இங்கு பெண்கள் குடும்ப வன்முறைகளை இயல்பானதுதானே என ஏற்றுக்கொள்ள நீண்டகாலமாக பழக்கப்பட்டிருப்பதால் மணமுறிவு என்கிற சிந்தனையே நம் பெண்களுக்கு வருவதில்லை. 90களுக்குப் பிறகுதான் பிரிந்து செல்லும் உரிமை பற்றிய நடைமுறைக்கு நம் பெண்கள் வரத்துவங்கியுள்ளார்கள். ஆகவே எங்கள் 41 ஆண்டுகள் ‘சமூகத்தின் உதவியோடு' ஓடிவிட்டது என்பேன்.

ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லிக்கொண்டு பிரிவதைவிட,நாம் வாழும் மண வாழ்க்கை என்னும் கட்டமைப்பில் உள்ள கோளாறுகளைச் சரி செய்தாலே இன்றைவிட ஆரோக்கியமான குடும்ப வாழ்வை நாம் வாழ்ந்துவிட முடியும்.

இந்தியக் குடும்ப வாழ்வின் முதல் பிரச்னை, அங்கே ஆண்-பெண் சமத்துவமும் குடும்ப ஜனநாயகமும் இல்லாததுதான். எங்கள் இல்லற வாழ்வின் துவக்கத்திலிருந்தே ‘நம் அளவில்' இதில் மாற்றத்தைக்கொண்டுவர இருவருமே முயன்றோம். சமையல்,சட்டி பானை கழுவுதல்,குழந்தை வளர்ப்பு ஆகியவற்றில் கறாரான வேலைப்பிரிவினையை எங்களுக்குள் செய்துகொண்டோம். ஆணாகிய நான் தான் அதிகம் என்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு கட்டத்திற்குப்பிறகு சமைப்பது ‘என்னுடைய வேலை‘ என்கிற தன்னுணர்வுடன் இணையரை அடுப்படிக்குள் வர அனுமதிக்காமல் நானே முழுக்கச் செய்ய ஆரம்பித்தேன். அதை மனப்பூர்வமாக இன்றுவரை நான் கடைப்பிடிக்கிறேன். இளம் தம்பதிகளுக்கு முதல் டிப்ஸ் ஆக இதையே நான் கூறுவேன்.

இரண்டாவது ஜனநாயகம். இருவரும் கலந்து பேசி எந்த முடிவையும் எடுப்பது. இதில் நான் இந்திய ஆணுக்கே உரிய ‘திமிரு'டன் பல முடிவுகளை அவர் மீது திணித்த தருணங்கள் உண்டு. பின்னர் அதற்காக குற்ற உணர்வு கொண்டு வருந்துவேன். ஆண் மனதை ஜனநாயகப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு லேசான காரியமல்ல. ஆண்கள் தங்கள் பரந்த வாசிப்பின் மூலமாகவும் ஆழ்ந்த சுயபரிசீலனை மற்றும் சுய விமர்சனத்தின் மூலமாகவும் தமக்குள் உறையும் ‘ஆண்மை' என்கிற கேட்டைக் கடந்து வர முயல வேண்டும். பெண்ணடிமை தீர வேண்டுமானால் ‘ஆண்மை' அழிய வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதை இங்கே நாம் இணைத்துப்பார்க்கலாம். புற்றிலுரையும் பாம்புகளாக நம் ஆண் மனதுக்குள்ளிருந்து ஆணாதிக்கத்தின் கூறுகள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கி வந்துகொண்டே இருக்கும். ‘பாம்பையும் ஆணாதிக்கத்தையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு ஆணாதிக்கத்தை அடி' என்கிற புது மொழியை நடைமுறைப்படுத்தி ஆண்களாகிய நாம் நம்மைச் சரிசெய்துகொண்டால் குடும்ப வாழ்வு செழிக்கும்.

மூன்றாவது,பன்னாட்டுக் கம்பெனிகள் விரிக்கும் வலையில் வீழ்ந்து விடாமல்,குடும்பங்களை நுகர்வோர் மையங்களாக மாற்றும் அவர்களின் சதிக்குள்

சிக்காமல் இருவரும் இணைந்து போராட வேண்டும். தவணையில்தானே வாங்கப்போகிறோம் என்று கடன் வலையில் சிக்கி அதன்காரணமாக எழும் பொருளாதார நெருக்கடியால் இருவருக்கிடையில் மனச்சிக்கல் எழ வாய்ப்புண்டு. இந்த விஷயத்தில் நாங்கள் போராடி வென்றோம் என்று சொல்ல முடியாது. இரண்டு பேரும் சம்பாதித்ததால் சமாளித்தோம் எனலாம். ஏற்கனவே பொதுவாழ்வுக்கென குடும்பப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியை நாங்கள் செலவளித்துக்கொண்டிருந்தாலும் 2002 இல் என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமாக இயக்கப்பணிகளில் ஈடுபட நான் விரும்பியபோது, குடும்பப்பெரியவர்களின் ஆட்சேபணையையும் மீறி, என் இணையர் ஒப்புதல் அளித்தார். அன்றாட உரையாடல்களும் அரசியல் குறித்துக் குடும்பத்திற்குள் பேசுவதும் தொடர்ந்தால்தான் இதுபோன்ற அதிரடி முடிவுகள் சாத்தியமானது.

நான்காவது, பிரச்னைகள் முற்றும் நிலைக்குப் போக விடாமல் யார் முதலில் விட்டுக்கொடுப்பது என்பதில் சற்றும் கௌரவம் பார்க்காமல் முந்திக்கொண்டு சரண்டர் ஆகிவிடுவது முக்கியம். (புருசன் பெண்டாட்டிக்குள்ளே எதுக்கய்யா பிரஸ்டீஜ்?)

ஐந்தாவதாக, மனத்தாங்கல்கள் வரும் சமயங்களில் இருவரும் மற்றவரின் எதிர்மறையான குணாம்சங்களை மனதுக்குள் பட்டியல் போட்டுத் தொகுக்கக் கூடாது. அந்த நேரத்தில்தான் இருவருமே நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த ‘நிதானம்‘ (Balancing)பிடிபட்டுவிட்டால் அப்புறம் வாழ்க்கையில் எல்லாமே வசப்பட்டு விடும்.

உணர்ச்சி இழைகளால் கட்டமைக்கப்-பட்டிருக்கும் நம் குடும்பங்களுக்குள் அறிவின் ஒளிக்கற்றைகளைப் பாய்ச்ச வேண்டும். புத்தக வாசிப்பில் குடும்பமே ஈடுபட வேண்டும். வாசிப்பு நமக்கு ‘மற்றமை'களைப் புரிந்துகொள்ளப் பயிற்றுவிக்கும். முழு மன ஈடுபாட்டுடன் வாசிக்க வேண்டும். அதில் இலக்கிய வாசிப்பு முக்கியப் பகுதியாக மாற வேண்டும். இலக்கியம், கலைகளைப்போல மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் சக்தி வேறெதற்கும் இல்லை. தொலைக்காட்சித் தொடர்களில் விழுந்து கிடக்காமல் இசை கேட்பதும்,வாசிப்பதும் நம் குடும்ப வாழ்வின் அங்கமாக மாற வேண்டும். மோசமான பண்பாட்டுச் சூழலுக்குள் வாழும் நாம் ‘நம்மை'க் காப்பாற்றிக்கொள்ள இதுபோலப் பல உபாயங்களைக் கையாண்டு குடும்ப வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

ஆகஸ்ட், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com