ஆய்வாளர்களின் அனுபவம்!

ஆய்வாளர்களின் அனுபவம்!
Published on: 

இ ந்தியா 1952 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான 67 ஆண்டு காலத்தில், 392 தேர்தல்களை (மாநிலங்களுக்கு நடந்த தேர்தல்கள் 376, மக்களவைக்கு நடந்த தேர்தல்கள் 16) சந்தித்திருக்கிறது. இந்த 392 தேர்தல்கள் சம்பந்தப்பட தரவுகள் மற்றும் இதுவரை நடத்தப்பட்ட 833 கருத்துக்கணிப்புகளின் தரவுகளையும் திறம்பட அலசி ஆராய்ந்து புத்தக வடிவில் (The Verdict – Decoding India's Elections) கொடுத்திருக்கிறார்கள் இந்திய கருத்துக்கணிப்புகளின் முன்னோடிகளும் அதில் நாற்பதாண்டு கால அனுபவமும் கொண்ட பிரணாய் ராயும், தொராப் சொபாரிவாலாவும்.

கடந்த 67 ஆண்டு தேர்தல் காலத்தை இவர்கள் மூன்று காலகட்டங்களாகப் பிரித்து ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். அவை 1952 முதல் 1977 வரையிலான முதல் இருபத்தைந்து வருடகாலம், அடுத்து 1977 முதல் 2002 வரையிலான இருபத்தைந்து வருடங்கள், இறுதியாக 2002 முதல் 2019 வரையிலான பதினேழு வருடகாலம்.

இனி அவர்கள் ஆய்வு, களப்பணி, அனுபவத்திலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

தேர்தல் முடிவுகள் ஒளிப்பரப்பாகும்போது அந்நிகழ்ச்சியை வழங்குபவர்கள் அல்லது கருத்துக் கணிப்பாளர்களால் அடிக்கடி உச்சரிக்கப்படும்
சொற்கள் ஸ்விங் ஃபேக்டர் (Swing Factor), ஐஓயூ (IOU – Index of Opposition Unity - எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறியீடு). நூலாசிரியர்களின் அனுபவப்படி, மக்களவைத் தேர்தலின் போது நடத்தப்படுகிற கருத்துக்கணிப்பில் தெரிய வந்ததை விட கட்சிக்கு ஒரு சதவிகிதம் வாக்குகள் அதிகமாக கிடைக்கும்பட்சத்தில் அக்கட்சிக்கு கிட்டத்தட்ட 15 இடங்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்புண்டு. 1952 - 77 காலகட்டத்தில் இது 12 இடங்களாக இருந்தது.

அது போல 'எதிர்கட்சிகளின் கூட்டணி' வலுவாக இருந்தால் 'கூட்டணி குறியீடு' அதிகமாக இருக்கும். அந்த சூழ்நிலையில் வெற்றிக்கும் தோல்விக்குமான வாக்குவித்தியாசம் குறைவாக இருக்கும். கூட்டணி குறியீடு குறைவாக இருந்தால் வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கும். எதிர்கட்சிகளின் கூட்டணி என்பது அரசியல்கட்சிகள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும். இந்தக் குறியீட்டில் ஒரு சதவிகிதம் மாற்றம் ஏற்பட்டால் அதனால் ஐந்து இடங்கள் வரை பாதிக்கப்படும். 

'ஸ்விங்' என்பது கடைசி நேரத்தில் வாக்காளர்கள் எடுக்கும் முடிவால் ஏற்படக்கூடியதாகும்.. வாக்காளர்களின் முடிவை திசை திருப்புவதென்பது அரசியல் கட்சிகளுக்கு சற்று கடினமான விஷயம். ஆனால், கூட்டணி அமைப்பதை அரசியல் கட்சிகள் கூடிக் கலந்து ஒரு முடிவுக்கு வருவதன் மூலம் IOU வை அவர்கள் அதிகரித்துக் கொள்ள முடியும்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுவாக இல்லையென்றால் மிகப் பெரிய கட்சியானது மிகவும் குறைவான வாக்கு சதவிகிதத்தில் பலத்த வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது.

அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி: தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி என்ன? எதிர்க்கட்சிகளைப் பிரிப்பதா அல்லது அதிக வாக்குகளைப் பெறுவதா?

2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி 38 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தாலும் அவை வெற்றி பெற்ற இடங்கள் சுமார் 62
சதவிகிதமாகும். ஆக, தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) வெற்றிக்கு
 சாதகமாக அமைந்தது அவர்களது 'வாக்கு வங்கி'யை விட 'வலுவற்ற கூட்டணி'தான். இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியும் இதனால் பயனடைந்தது.

2014 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் போட்டியாக இருந்தது பாரதிய ஜனதா கட்சியாகும். ஆனால் இரு எதிர்க்கட்சிகளும் ஒன்று
சேராமல் தனித்தனியே போட்டியிட்டனர். இதனால் பாஜக&வுக்கு எதிரான வாக்குகள் சிதறியது. மொத்தம் எண்பது இடங்களில் அக்கட்சி எளிதாக எழுபத்தி மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. நூலாசிரியர்கள் தொகுதி வாரியாக பகுப்பாய்வு செய்து பார்த்த போது, இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டிருந்தால் சமாஜ்வாதி
கட்சிக்குக் கிடைத்த ஐந்து இடங்களுக்குப் பதிலாக கூட்டணிக்கு நாற்பத்தியோரு இடங்கள் கிடைத்திருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். அதே சமயம் எட்டு சதவிகித வாக்குகள் பெற்ற காங்கிரஸும் சேர்ந்திருந்தால் மூன்று கட்சிகளின் கூட்டணிக்கு ஐம்பத்தேழு இடங்கள் கிடைத்திருக்கக்கூடும். அதாவது எட்டு சதவிகித வாக்குகளினால் பதினான்கு இடங்கள் அதிகம் கிடைத்திருக்கும்.

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் குறைந்தபட்சம் ஐம்பது கருத்துக் கணிப்பு முடிவுகளாவது வெளிவருவது வழக்கம். இவை பற்றிய சில
சுவாரசியமான தகவல்களும் இந்நூலில் உண்டு.

The Verdict
The Verdict
  • எங்களது அனுபவத்தின்படி, இந்தியா முழுவதும் நடத்தப்படுகிற கருத்துக் கணிப்பெனில் சுமார் 35,000 முதல் 40,000 நபர்களிடம் நடத்தப்பட வேண்டும். இதற்கு குறைவான எண்ணிக்கையெனில் 'எச்சரிக்கை தேவை'.

  • சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 1952-77 காலப்பகுதியில் 13 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு அது 4 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

  • இதுவரை 386 கருத்துக் கணிப்புகளும் (opinion poll) 447 எக்ஸிட் வாக்கெடுப்பும் (Exit Poll & வாக்களித்து விட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் எனக் கேட்டு அவர்களது வாக்கை வாக்குப்பெட்டியில் போடச் செய்வது) நடத்தப்பட்டிருக்கின்றன.

  • மக்களவை மற்றும் மாநில தேர்தல்களின் போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் 75 சதவிகித கணிப்புகளில் வெற்றி பெறுபவர் யார் என சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தல்களை மட்டும் எடுத்துக் கொண்டால் இது 97 சதவிகிதமாகும்.

  • கருத்துக் கணிப்பு முடிவுகளைக் காட்டிலும் எக்ஸிட் வாக்கெடுப்பு முடிவு சரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

  • இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் மிகவும் தோல்வியில் முடிந்த கணிப்பு 2004 தேர்தலின் போது நடத்தப்பட்டதாகும். அந்த தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் வாஜ்பாய்தான் மீண்டும் பதவிக்கு வருவார் என்றன. ஆனால் அவையனைத்தும் தவறாகிப் போனது. 

கருத்துக் கணிப்பு என்பது அறிவியலுடன் கூடிய ஒரு கலையாகும். கட்சி சார்பின்றி நடுநிலைமையுடன் எளிமையாகவும், விரிவாகவும் போதிய ஆதாரங்களுடனும் இந்நூலை எழுதியிருக்கும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

மே, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com