இரண்டு பிரதமர்களைக் காப்பாற்றிய தருணம்!
ஜீவா

இரண்டு பிரதமர்களைக் காப்பாற்றிய தருணம்!

தமிழக காவல்துறையில் நீண்ட காலம் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிந்தவன் நான். அதில் பல்வேறு அனுபவங்கள் உண்டு.

1979 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து அடுத்த எட்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து முதன்முறையாக வெடிகுண்டு கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பயிற்சிக்கு தமிழக காவல்துறையிலிருந்து நான்கு பேரை அரியானா மாநிலத்தில் மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு அனுப்பினார்கள். அந்த நால்வரில் நானும் ஒருவன். இரண்டு மாதங்கள் பயிற்சி. வெடிகுண்டு இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? அதை செயல் இழக்க செய்வது எப்படி? என்ற கடுமையான பயிற்சி எங்களுக்கு தினமும் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த பின்னர் பாதுகாப்பு பிரிவில் தொடர்ந்து பணியாற்றினேன்.

தமிழ்நாட்டுக்கு வரும் முக்கிய நபர்கள் (விஐபி) கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் சிறப்பாகப் பாதுகாப்புப் பணியாற்ற முடிந்தது. சுமார் 27 ஆண்டுகள் பாதுகாப்புப் பிரிவில் நல்ல முறையில் பணியாற்றினேன். 2016 ஆம் ஆண்டு டிஎஸ்பியாக பணி ஓய்வு பெற்றேன்.

எனது பணியின் போது 1990 ஆம் ஆண்டில் ஓர் அதிர்ச்சியூட்டும் நிகழ்வை எதிர்கொள்ள நேர்ந்தது.

அந்த காலகட்டத்தில் மத்தியில்  வி.பி. சிங் பிரதமராக இருந்தார். தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். இலங்கைப் பிரச்னையால் தமிழகத்தில் சற்று பாதிப்பு அச்சமயம் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டம் முதன் முறையாக சென்னையில் நடத்தப்பட்டது. நாட்டின் பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்கள்,  எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற அனைத்திந்திய மாநாடு. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள பத்து மாடி கட்டடத்தில் நடந்தது அம்மாளிகை புதிப்பிக்கப்பட்டு தயாராக இருந்தது. முதலமைச்சர் மட்டுமல்ல; எதிர்க்கட்சித் தலைவரான செல்வி ஜெயலலிதா மேடம் கூட அதில் கலந்துகொண்டார். மத்திய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜிவ்காந்தியும் கலந்துகொள்ள வந்திருந்தார்.

தமிழக காவல்துறையே ஒட்டுமொத்த அலெர்ட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தது.

நிகழ்ச்சி நடக்கும் அன்று (22-09-1990) காலை சுமார் ஆறு மணிக்கு முன்பாகவே நாங்கள் பாதுகாப்பு சோதனைகளுக்காக நாச வேலைக்கு எதிரான சோதனை செய்வதற்கு தயாராக குழுமி இருந்தோம். வேகமாக விடிந்து கொண்டிருந்தது. பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த நாங்கள் யார் எந்த பகுதிக்குச் செல்லவேண்டும் என பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது ஒரு பெரியவர் அருகே வந்தார்.

‘அய்யா.. இங்கே ஏதோ ஒரு பொருள் இருக்குது.. சந்தேகமா இருக்குது‘ என்றார்.

உடனே என்னைப் போய் பார்க்கச் சொன்னார்கள். உடனே அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். அது அருகில் இருந்த கட்டடத்தின் காம்பவுண்ட் சுவர் கதவுக்குப் பக்கத்தில் இருந்தது. அருகில் சென்று பார்த்த உடனே தெரிந்துவிட்டது அது வெடிகுண்டு தான் என்று. பிளாஸ்டிக் மண்ணெணெய் கேன், அதன் உள்ளே உயர் அழுத்த வெடி மருந்து உள்ளே டெட்டனேட்டர் அருகே பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்விட்ச்சுடன் இணைப்பு... அது ஒரு டைமர்! குறித்த நேரத்தில் வெடிக்குமாறு தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்! பிரதமர் உள்ளிட்ட விஐபிகள் வரப்போகிற இடத்தில் அவர்கள் வருவதற்கு சற்று முன்பாக இவ்வளவு பெரிய அளவிலான வெடிபொருள் என்றால் எவ்வளவு பெரிய நிகழ்ச்சி.. வெடித்திருந்தால் உலகையே உலுக்கக்கூடிய செய்தி ஆகி இருந்திருக்கும்!

சுற்றிலும் பார்த்தேன். சுமார் ஐம்பது அறுபது காவலர்கள் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து பணிக்குச் செல்ல தயாராக இருந்தார்கள். நாங்கள் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்ததும் சுற்றிலும் இருந்த நபர்கள் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப் படுத்தப்பட்டார்கள். இதை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உயிரிழப்பு பலமாக இருக்கும் என்பதால் அவர்கள் விலகிச் சென்றபிறகே செயலிழக்கச் செய்யும் வேலையைத் தொடங்கினோம். என்னுடன் உதவிக்கு இரண்டுபேரை வைத்துக்கொண்டேன்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதெல்லாம் பாம் ஸ்குவாட் என்று ஒன்றே கிடையாது. இந்நிகழ்வுக்கு அடுத்த ஆண்டுதான் வெடிகுண்டு கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. நானும் இந்த பிரிவில் நீண்ட காலம் பணியாற்றினேன் என்பது கூடுதல் செய்தி.

இப்போது சினிமாவில் பார்க்கிற மாதிரி கவச உடைகள் அப்போது கிடையாது. ஒரு மெடல் டிடக்டரும் நாங்களே சில பாதுகாப்பு உபகரணங்களை செய்து வைத்து இருந்தோம் அவ்வளவுதான்.

உடனே அங்கிருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தாகவேண்டும். கொஞ்சம் தவறினாலும் நாங்கள் சிதறிப்போய் விடும் ஆபத்து உண்டு.

கோட்டையின் பின் பக்கமாக வருவதற்கு ஒரு வழி உண்டு. அதுவழியாக அந்த குற்றவாளி வந்து வெடிகுண்டை வைத்திருக்கலாம்.

சற்று நேரம் கூர்ந்து கவனித்தேன். நிறைய வயர்கள் இருந்தன. வெடிகுண்டை செயலிழக்க வைக்க முதலில் டெட்டனேட்டருடன் இணைக்கப்பட்ட வயரைக் கண்டுபிடித்து அதை துண்டிக்க வேண்டும். வயர் எதையும் மாற்றி வெட்டிவிட்டால் வெடிகுண்டு வெடித்துவிடும் அபாயம் உண்டு. தூரத்தில் இருந்து அந்த ஒயரை அறுப்பதற்கு ஹுக் லைன் செட் என்று ஒரு கருவி எங்களிடம் இருந்தது. தூரத்திலிருந்து அந்த குறிப்பிட்ட வயரை கொக்கி போட்டு இழுத்து வெட்டவேண்டும். வயரை இழுத்தால் இந்த முழு வெடிகுண்டு கேனும்சேர்ந்து நகர்ந்தது. டேப் போட்டு டெட்டனேட்டர் ஒயரை ஒட்டி இருக்கிறார்கள். எனவே அந்த கேன் நகராமல் தடுப்புகள் வைத்து தடுத்து ஒயரை இழுத்தோம். அந்த ஒயர் ஒன்று மட்டும் அறுந்து விட்டது. உடனே அருகில் போய், பார்த்து மற்றொரு ஒயரையும் ஒயர் கட்டர் மூலம் கட் செய்தேன். உள்ளே இருந்த டெட்டனேட்டரை பாதுகாப்பாக எடுத்துவிட்டேன். இதை எடுத்த பின் தான் நிம்மதி. ஒரு வழியாக குண்டு செயலிழக்க செய்யப் பட்டது அந்த பதினைந்து இருபது நிமிடங்கள் மிகப்பெரிய டென்ஷன்.

பின்னர் அந்த டைமரை சோதனை செய்து பார்த்ததில் அதை வெடிகுண்டு வைத்த சுமார் ஆறுமணி நேரத்துக்குப் பின்னால் வெடிக்குமாறு அமைத்துள்ளார்கள். ஆனால் எப்போது வைத்தார்கள் என்று கண்டுபிடிக்கமுடியாது. ஆறு மணிக்கு வைத்தால் 12 மணிக்கு வெடிக்கும்; நாலு மணிக்கு வைத்திருந்தால் 10 மணிக்கு வெடிக்கும். அந்த வெடிமருந்தை எடைபோட்டுப் பார்த்தோம். எட்டு கிலோவிற்கு மேல் இருந்தது.

உடனடியாக எல்லா அதிகாரிகளும் வந்து எங்கள் பணியை பாராட்டினார்கள். உள்துறைச் செயலர், டிஜிபி எல்லோரும் பாராட்டுக் கடிதம் வழங்கினார்கள். முதலமைச்சர் பதக்கம், ஜனாதிபதி பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. அன்று ஐநூறு ரூபாய் ரிவார்டு வழங்கப்பட்டது. எனக்குத் தொகையை விட அதிகாரிகள் அளித்த பாராட்டே பெரிய பரிசாக அமைந்தது. பல உயிர்களையும் முக்கிய நபர்களையும் விலைமதிப்பற்ற உடைமைகளையும் காப்பாற்றிய பெருமை எங்களுக்கு கிடைத்தது அப்போதெல்லாம் தொலைபேசி வசதி, மீடியா போன்ற சாதனங்கள் இல்லாததால் எங்களது உயரிய செயல் வெளி உலகத்திற்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10 மாடி கட்டடத்திற்கு மிக அருகில் சக்தி வாய்ந்த வெடிகுண்டினை கண்டுபிடித்து செயலிழக்க செய்தது குறித்து வெடிகுண்டு நிபுணர் வி.கண்ணன், காவல்துறை டிஎஸ்பி(ஓய்வு) சொன்ன தகவல்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com