இலக்கிய உலகில் ததும்பும் கிசுகிசுக்கள்!

இலக்கிய உலகில் ததும்பும் கிசுகிசுக்கள்!

உலகம் கதைகளால் ஆனது என்ற வரையறையைப் போலவே தீவிரமான சிறுபத்திரிகை  உலகமும் கதைகளாலும் கிசுகிசுக்களாலும் புறணிகளாலும் நிரம்பியதுதான்.

கிசுகிசுக்கள், இலக்கிய உலகில் எப்போதும் காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன, அறுபதுகளில் கிராமத்துச் சத்திரம், சாவடி, திண்ணைகளில் கூடியிருந்த பெரிசுகள் பேசிய பேச்சுகள் ஒருவகையில் கிசுகிசுக்கள்தான். வீட்டு வேலை, வயல் வேலை என மூழ்கியிருந்த கிராமத்துப் பெண்களின் பொழுதுபோக்கு, பேச்சுகள்தான் என்ற நிலையில், இன்னொருவரைப் பற்றிக் கதைப்பது தவிர்க்க இயலாதது. சரி, போகட்டும். ஒருவகையில் மனித மரபணுவில் பிறரைப் பற்றிப் புறணி பேசுவது பொதிந்துள்ளதா? யோசிக்க வேண்டியுள்ளது.

கிசுகிசு என்ற சொல்லைக் கேட்டவுடன்  எல்லோருக்கும் ஆர்வம் ஏற்படுவது இயல்பானது. இந்நிலைக்கு இலக்கியவாதிகளும் விதிவிலக்கு அல்ல.  சக படைப்பாளரின்  அந்தரங்க வாழ்க்கை அல்லது படைப்புகள் குறித்துப் பேசுவதில் அப்படி என்ன மகிழ்ச்சி இருக்கிறது?  சிலர் எப்பொழுதும் யாரோவொரு இலக்கிய ஆளுமை குறித்துக் கிசுகிசுத்துக்கொண்டு இருக்கின்றனர். கிசுகிசுவில் நம்பகத்தன்மை குறைவு என்றாலும் இன்னொரு இலக்கியவாதி பற்றிய பேச்சில் படைப்பாளர்/ வாசகர்களுக்கு ஈடுபாடு இருக்கிறது. படைப்பாளர்/ படைப்பு  குறித்து மோசமாகவோ எதிர்மறையாகவோ சித்திரித்திட சிலர் கிசுகிசுவைப் பயன்படுத்துகின்றனர். ஒருவரின் படைப்பை மட்டம்தட்டிக் கேவலப்படுத்திட விரும்புகிற சிலருக்கு, கிசுகிசு உதவுகிறது. கிசுகிசு வேகமாகப் பரவிடும் அளவிற்கு அசலான கருத்துப் பரவாது.

சுவராசியமான பேச்சு மூலம் நண்பர்களைச் சம்பாதிக்க சில படைப்பாளர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம்தான், கிசுகிசு. பொதுவாகக் கிசுகிசு எந்நேரமும் பேசப்படுவது இல்லை. என்றாலும் குறிப்பிட்ட சில படைப்பாளர்கள்  எப்பொழுதும் கிசுகிசுப்பதை எனது அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். இதில் ஒரு விஷயம் முக்கியமானது. கிசுகிசு வேறு, அவதூறு வேறு என்ற புரிதல் வேண்டும். தனிப்பட்ட ஒரு படைப்பாளர் மீதான வெறுப்பினால் கிசுகிசு பரப்பப்படுவது இல்லை. ஒருவகையான சுவராசியத்தின் அடிப்படையில்தான் பெரும்பாலான கிசுகிசுக்கள் புனையப்படுகின்றன. குறிப்பிட்ட படைப்பாளர் மீதான பொறாமை, சாதியம் காரணமாக, அவதூறு உருவாக்கப்படுகிறது. அதேவேளையில், அந்த எழுத்தாளன் ஒன்றும் பெரிய பிடுங்கி இல்லை, அவனுடைய எழுத்துகள் சாதாரணமானவை என்று பிறருக்குத் தவறுதலாக அறிமுகப்படுத்திடவும் கிசுகிசுக்கள் உதவுகின்றன. என்னுடைய நாற்பது ஆண்டு காலச் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய அனுபவத்தில் எதிர்கொண்ட கிசுகிசுக்கள் அளவற்றவை. அவை, ஒருவகையில் முடிவற்ற போதைக்குள் இழுத்துச் செல்லும் இயல்புடையன.

எழுபதுகளின் நடுவில் சிறுபத்திரிகைகள் வாசிக்கத் தொடங்கிய எனது மனநிலை, நாளடைவில் எழுத் தாளர்களைப் பற்றி அறிந்திடவும் சந்தித்துப் பேசிடவும் விழைந்தது. 1978 ஆம் ஆண்டு கோவில்பட்டி நகருக்குப் போனேன். அங்கு தேவதச்சன், ஜோதி விநாயகம், கௌரி சங்கர், அப்பாஸ் போன்ற எழுத்தாளர்களுடன் இலக்கிய உரையாடல் நிகழ்த்திட மனதில் பெரும் ஆவல். சிறுபத்திரிகைகளைத் தொடர்ந்து வாசித்ததனால், ஒருவிதப் பித்து மனநிலை எனக்குள் உருவாகியிருந்தது. ஏற்கெனவே அறிமுகமானவர்கள் போல இலக்கியவாதிகளுடான  அன்றையப் பேச்சு விரிந்தது. மாலைவேளையில் சற்று மேடான இடத்துக்கு அழைத்துப் போய் கல்கண்டு பால் வாங்கிக் கொடுத்த அப்பாஸ், ‘‘இதுதான் தக்காண பீடபூமியின் எல்லை'' என்று சொன்னார். இதுவரை பாடப் புத்தகத்தில் வாசித்த பீடபூமி என்ற சொல்லை, நேரில் பார்த்தது விநோதமாக இருந்தது. கௌரிசங்கர் கேட்டார், ‘‘உங்களுக்கு யாருடைய கவிதைகள் பிடிக்கும்'' என்று. நான் ஒரு ஐந்தெழுத்து கவிஞரின் பெயரைச் சொன்னேன். சங்கர், ‘‘ பாரதி கவிதை வாசிச் சிருக்கீங்களா? பாரதி ரௌத்திரம் பழகு என்கிறார். இவருடைய கவிதையில் எங்காவது கோபம் இருக்கா? பின்னே எப்படி அது நல்ல கவிதை ஆகும்? இவர் நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட பிள்ளைமார் வீட்டுச் சமர்த்துப் பையன். திருநெல்வேலி, தாமிரபரணி, இட்டிலி- சாம்பார், சார்வாள், பிள்ளைமார் வீட்டு வளவு, மதினிகள்... இதைத்தாண்டி கவிதையில என்ன இருக்கு?'' என்றார், என்னால் எதுவும் பேச முடியவில்லை. அப்புறம் தேவதச்சன், ‘‘ஒவ்வொரு படைப்பாளியும் எழுதுகிற எழுத்து ஒருவகையில் கண்டுபிடிப்புதான். எதுவும் கண்டுபிடிக் காமல் வெறுமனே விவரணை மட்டும் எப்படி கவிதையாகும்?'' என்றார். அப்புறம் அவர்கள் எழுத்தை முன்வைத்து எழுத்தாளர்கள் பற்றிப் பேசிய பேச்சுகள் எல்லாம், விமர்சனம் என்ற லேபிளில் கிசுகிசுக்கள்தான்.

கி.ராஜநாராயணனை நைனா என்று சொன்னது எனக்குப் பிடித்தமாக இருந்தது. அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த  ஏழெட்டு மணி நேரமும்  இலக்கியப் பித்துப் பிடித்துக் கிளம்பி வந்த எனக்கு, வேப்பந்தழை அடித்து மந்திரிக்காததுதான் பாக்கி. அங்கிருந்து கிளம்பிப் பேருந்தில் பயணிக்கையில் இலக்கியத்தை முன்வைத்துப் பேசிய பேச்சுகள் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தன. அன்றைக்குத் தொடங்கிய இலக்கியத்தை முன்வைத்த சொல்லாடல்கள், இன்றைக்கும் தொடர்கின்றன. அவை, ஒருநிலையில் கிசுகிசுக்கள் என்றாலும் எனக்குப் பிடித்தமானவைதான்.

அவையில் இல்லாத படைப்பாளரின் சொந்த வாழ்க்கை,  இலக்கியப் படைப்புகள் குறித்துப் பேசுகிறவரின் மதிப்பீடுகளில் சுய விருப்பு வெறுப்பும் கலந்து இருக்கும். இரு இலக்கியவாதிகள் சந்தித்துப் பேசத் தொடங்கும்போது இயல்பாகத் தொடங்கிடும் பேச்சுகளில், இலக்கியக் கிசுகிசுக்கள் இடம் பெறுதல் தவிர்க்கவியலாதது. எவ்வளவு நேரம்தான் இலக்கியம் மட்டும் பேச முடியும்? யோசிக்கும் வேளையில்  கிசுகிசுக்களைக் கேட்பதும் பேசுவதும் பெரும்பாலான படைப்பாளர்களின் குருதியில் ஊறியுள்ளதை அறிய முடியும். ‘உவப்பத்தலை கூடி உள்ளப் பிரிதல்' என்று வள்ளுவர் சொன்னதும் ‘இலக்கிய சல்லாபம்' என்று உ.வே. சாமிநாத ஐயர் ‘என் சரித்திரம்' நூலில் எழுதியிருப்பதும் கிசுகிசுக் களையும் சேர்த்துத்தான்.

கிசுகிசுக்களைத் திட்டமிட்டு உருவாக்கிப் பரப்புதல் சிலருக்குப் பொழுதுபோக்கு. என்றாலும் சுவராசியம் கருதிப் படைப்பாளர்கள் கிசுகிசுக்களை ரசிக்கின்றனர். என்  இலக்கிய வாழ்க்கையில் படைப்பாளர்களுடன் ஏற்பட்டுள்ள நட்பு வேறு; கிசுகிசுக்கள் வேறு என்ற புரிதல் எனக்கு உண்டு. சில நேரங்களில் என்னைப் பற்றிய கிசுகிசுக்களைக் கேட்டுச் சிரித்துக் கொள்வேன். என்னுடைய நண்பர்களில் பிரபஞ்சன், ரவி சுப்பிரமணியன், பவா செல்லத்துரை, மாலதி மைத்ரி, பிரேம் ரமேஷ், யவனிகா ஸ்ரீராம் போன்றவர்கள் சொல்கிற  தகவல்கள் முக்கியமானவை. அதேவேளையில் அதில் பொதிந்திருக்கிற ஆர்வமூட்டுகிற கிசுகிசுக்களும் கவனத்திற்குரியன.  சுந்தர ராமசாமி, எதிரில் இருக்கிறவர் நண்பர்தான், நிச்சயம் அவரால் பிரச்னை இல்லை என்று நம்பிவிட்டால், உற்சாகத்துடன் கிசுகிசுப்பார். அவர் எதிர்கொண்ட அனுபவங்களின் விவரிப்புகூட கிசுகிசு பாணியில் இருக்கும். பொன்னீலன் சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது அவருக்கு நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நடைபெற்ற சம்பவங்களைச் சு.ரா. விவரித்த சொற்களைக் கேட்டபோது வாய்விட்டுச் சிரித்தேன். அவை, தகவல்கள் என்பதற்கு அப்பால் ஒருவகையில் கிசுகிசுக்கள்தான்.

எழுபதுகளின் இறுதியில் நண்பர் சமயவேல், எங்கள் ஊரான சமயநல்லூருக்கு வந்தார். அவர் அப்போது பாளையங்கோட்டை நகரத்துக் கல்லூரி மாணவர். நிறைய விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென அவர், ‘‘எல்லாம் உறுதியாயிடுச்சு. தோழர்கள் கன்பஃர்ம் பண்ணிட்டாங்க. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. தமிழிலக்கிய உலகில் புகுந்து விட்டது. சி.ஐ.ஏ.வின் ஏஜெண்ட் வெங்கட் சாமிநாதன்'' என்றார். ஒருகணம் திகைத்துப் போனேன். தமிழ்ப் பாலை, தமிழ் மரமண்டைகள் என நெற்றியடியாக விமர்சித்துக்கொண்டிருந்த வெங்கட்  சாமிநாதனை அமெரிக்காவின் உளவாளி என்ற கிசுகிசு காரணமாக எனக்குள் பதற்றம் ஏற்பட்டது.   ஹாலிவுட்  திரைப்படத்தில் 007 சி.ஐ.ஏ. உளவாளியாக நடித்த சீன்கானரியுடன்  முரட்டுக் கதர் ஜிப்பா அணிந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒப்பிட முடியவில்லை.  உலகமெங்கும் கம்யூனிஸ்டுகளை ஒழித்திட முயலும் சி.ஐ.ஏ.யின் வேலைத்திட்டத்தில் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலும் இருக்கிறது என்று கிசுகிசுவைக் கிளப்பிய வறட்டு மார்க்சிஸ்ட் யார்? என்பது இப்பவும்  புலப்படவில்லை.   அப்புறம் வெங்கட் சாமிநாதனை  நேரில் பார்த்தபோது சி.ஐ.ஏ. உளவாளி பிம்பம் நினைவுக்கு வந்தது.  வெங்கட் சாமிநாதன் அந்த அவதூறு அல்லது கிசுகிசுவை எப்படி எதிர்கொண்டிருப்பார்?

இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்கிற படைப்பாளர்கள், வாசகர்கள் மூலமாகத்தான் பொதுவாகக்  கிசுகிசுக்கள் பரவுகின்றன. அவற்றைப் பெருந்தொற்றுப் போலக் கருத வேண்டியது இல்லை. எல்லாம் சும்மா. மொத்தம் நாலடி உயரமுள்ள குட்டையான நாவலாசிரியர் 2,500 பக்கங்களில் நாவல் எழுதுகிறார் என்ற தகவல் பரவியவுடன் பலருக்கும் ஆச்சரியம். யார் அந்த நாவலாசிரியர் என்ற தேடல் புலனாய்வுக்கு வழி வகுத்தது. உலகக் கவிதை பேசுகிற ஆண் கவிஞர் ஒருவர், பெண்ணின் பெயரில் கவிதை வெளியானால் போதும்,உடன் எப்படியாவது அந்தப் பெண் கவிஞருடன் தொடர்புகொண்டு, அவருடைய கவிதைகளைச் சிலாகிப்பதுடன் கவிதைத் தொகுதி கொண்டு வரலாம் என்கிறார் என்ற கிசுகிசுவைக் கேள்விப்பட்டவுடன்  ஆச்சரியமாக இருந்தது. அப்புறம் திடீரென ஒரு தகவல் பரவும். அந்தக் கவிஞர் ஒரே நாளில் ஐந்து கவிதை தொகுதிகளை வெளியிட இருக்கிறார் என்று. எல்லாம் தமாஷ் அல்லது கணக்கு வழக்கு என்று கருதியவர்களுக்குப் பிரச்னை இல்லை. மற்றபடி இந்த மாதிரி கிசுகிசுக்களை உருவாக்குகிறவர்களுக்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்று தோன்றுகிறது.

கவிஞர் கலாப்ரியா குற்றாலத்தில் திவான் பங்களாவில் நடத்திய ‘பதிவுகள்' கூட்டம் முடிவற்ற பேச்சுகளில் மிதந்தது. அரங்கிற்கு வெளியில் கும்பல் கும்பலாகக் கூடி நின்று கதைத்த இலக்கிய ஆர்வலர்கள் இரவு பகலாகப் பேசிய வம்புகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் கணக்கேது? சீசன் இல்லாத குற்றாலத்தில் அருவிக் கரை, மதுபானக் கூடம், ஆளரவமற்ற இருண்ட தெருக்கள் என எங்கு நோக்கினாலும் சிறுபத்திரிகைகாரர்கள் பேசிய பேச்சுகளின் பின்புலத்தில் கிசுகிசுக்கள் இல்லை எனச் சொல்ல முடியுமா? எல்லாப் புகழும் கலாப்ரியாவுக்குத்தான்.

எழுபதுகள் தொடங்கி தமிழ் இனி 2000 வரை நடைபெற்ற பிரமாண்டமான கருத்தரங்குகளின் பின்னர் இரவுவேளையில் நண்பர்கள் பேசிய கிசுகிசுக்கள் சுவராசியமானவை. நண்பர் சி. மோகன் எந்தவொரு விஷயத்தையும் சுவராசியமான மொழியில் விவரிப்பார்.  அவரைச் சுற்றி அய்யனார், ராஜகோபால், நான் உள்ளிட்ட  பெருங் கும்பல் இருக்கும்.  எது நிஜம் எது புனைவு என்ற வரையறை  இல்லாமல் சி.மோகன் விவரிக்கிற  தகவல்கள் உற்சாகமானவை.  இலக்கிய ஆளுமைகள் சொல்கிற தகவல்களில் கிசுகிசுக்கள் இல்லாவிடில் இரவில் வழிந்தோடுகிற மது வெள்ளத்திற்கு ஏது அர்த்தம்?

கவிஞர் விக்ரமாதித்யனின் இரவுப் பேச்சில் கிசுகிசுக்கள் மிதக்கும். ஏதோ ஓர் ஊரில் ஓர் அராத்து அரைப் போதையில் சொன்ன தகவலை உண்மை என்று நம்புகிற இயல்பு விக்கிக்கு இருந்தது. அவர் சொல்கிற கிசுகிசுக்கள் நிஜமானவை என்று நானும்  எண்பதுகளில் நம்பினேன். அது ஒரு காலம்.

1985 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தாமசம் அல்லது வாசம் சிறுகதைப் படைப்பாளர்  ஆ.மாதவனைப் போய்ப் பார்த்தேன். ரொம்ப கௌரவமான தோற்றம். சாலைத் தெருக்கடைகள் தந்த மதிப்பீட்டுக்கு மாற்றாக அசலான தி.மு.க.காரராகப் பேசினார். குமரி அல்லது கேரளத்து எழுத்தாளர்களான சுந்தர ராமசாமியின் ஜெ.ஜெ.  சில குறிப்புகள், நீல. பத்மநாபனின் தேரோடும் வீதி, ஆ.மாதவனின் தூவானம், நகுலனின் நினைவுப் பாதை போன்ற நாவல்கள், எழுத்தாளர்களை முன்வைத்துக் கிசுகிசு பாணியில் எழுதப்பட்டுள்ளன. நாவலில் குறிப்பிடப்படும் எழுத்தாளர்  யார் என்று கண்டறிந்திடும் சுவராசியம் வாசிப்பில் தோன்றும். நகுலனுடனும் சு.ரா.வுடனும் நெருக்கமாகவும் ஆ. மாதவனிடம் ப்ரியத்துடனும் நீல. பத்மநாபனுடன் விலகியும் பழகியுள்ளேன். நீல. பத்மநாபன் தன்னுடைய எழுத்துகள் பற்றி மட்டும் சினிக்குப் போலப் பேசுவார். தேரோடும் வீதி, நாவல் சக எழுத்தாளர்கள் பற்றிய பிராதுகள் நிரம்பியது. ஏனைய மூவருக்கும்  அடுத்தவர்  மீது விமர்சனம் இருந்தது. சக எழுத்தாளர்கள் பற்றிக் கிசுகிசுத்தது ஏன் என்று அந்த வயதில் எனக்குப் புரியவில்லை. குறிப்பாக சு.ரா. தன்னைக் கேவலப்படுத்தியது குறித்து ஆதங்கத்துடன் நகுலனுக்குத் தீராத வெறுப்பு இருந்தது.  ‘‘நகுலன் பித்துக்குளி மாதிரி இருப்பார், அவருடைய எழுத்தும் அப்படித்தான் இருக்கும். அவரைப் போய்ப் பார்க்கப் போறீங்களா'' என்று என்னிடம் சொன்ன ஆ.மாதவனுக்கு உள் நோக்கம் எதுவுமில்லை. அன்றைய காலகட்டத்தில் நகுலனின் எழுத்துகளை வாசித்துவிட்டுப் பலரும் ஒதுங்கியிருந்து, அவர் ஒரு மாதிரி என விலகியபோது அவர் எனக்கு நெருக்கமான நண்பரானார். நகுலனைப் பற்றிக் கிசுகிசு  பாணியில் அவதூறைப் பரப்பியவர்,  இன்னொரு சீனியர் எழுத்தாளர்தான். அவருடைய பெயர் எனக்குத் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன் என்று  நான் சொல்கிறபோது இன்னொரு கிசுகிசு உருவாகிறது.

எண்பதுகளில் கி.ராஜநாராயணன் அவர்களை முன்வைத்துக் கரிசல் என்ற இலக்கிய வகைமை தோன்றியவுடன் சில உன்னத பிராண்டு இலக்கியவாதிகளுக்குக் கடும் எரிச்சல். ஏற்கெனவே கொங்கு வட்டாரம், தஞ்சை வட்டாரம் என இனவரைவியல்  நோக்கில் நாவல்கள் வெளியாகிருப்பதை அறியாமல் வண்ணநிலவன், அது என்ன காலிஸ்தான் மாதிரி கரிசல் இலக்கியம் என எண்பதுகளில் கிசுகிசுத்தார். அது, இன்று கி.ரா. மறைவினுக்குப் பின்னர் சர்ச்சைக்குரியதாகி விட்டது.

தலித்திய பிரச்னைகளை முன்வைத்துத் தலித்துகளால்தான் எழுதிட முடியும் என்ற பேச்சு எண்பதுகளில் உருவானபோது, அது எப்படி இலக்கியத்தைத் தலித் என்று பிரிப்பது என்று எரிச்சலிடன் கிசுகிசுத்த சீனியர் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும்.

காலச்சுவடு பத்திரிகை  1998 முதல் நடத்திய பெரும்பாலான இலக்கியக் கூட்டங்கள்/ கருத் தரங்குகளில் பங்கேற்றுப் பேசியிருக்கிறேன். நண்பர் கண்ணனின் வற்புறுத்தல் காரணமாகப் புத்தக  மதிப்புரை, கட்டுரை எழுதத் தொடங்கியது தனிக்கதை. சு.ரா. பாம்பன் விளையில் நடத்திய சந்திப்பு கூட்டங்களின்போது யுவன் சந்திரசேகர், பெ.அய்யனார், கண்ணன் போன்றோருடன் விடியவிடிய நடந்த பேச்சுகளில்  கிசுகிசுக்கள் ததும் பின.  காலச்சுவடு கும்பெனி ஆட்கள், காலச்சுவடு கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்று நாஞ்சில்நாடன், பாவண்ணன் உள்ளிட்ட பலருக்கும் முத்திரை குத்தினோம். 2004 இல் மதுரையில் கடவு அமைப்புடன் சேர்ந்து காலச்சுவடு நடத்திய இரு நாட்கள் கருத்தரங்கில் பங்கேற்ற எழுத்தாளர்/ வாசகர் எல்லோரும்  காலச்சுவடு கும்பெனியார் என ரமேஷ் பிரேதன் அறிவித்தவுடன் நண்பர்களுக்கு ஒரே குஷி. அன்றிரவுப் பேச்சில் அ. மார்க்ஸிடமிருந்து  பொ.வேல்சாமியைப் பெருமாள் முருகன் வென்றெடுத்துக் காலச்சுவடு  கும்பெனியில் சேர்த்து விட்டதாக நான் சொன்னவுடன் எல்லோருக்கும் உற்சாகம் பீறிட்டது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கிசுகிசுத்த பேச்சுகள் ஒருவகையில் சுவராசியமானவை.

பொதுவாக  எழுத்தாளர்கள் மது வெள்ளத்தில் மிதப்பது குறித்து யாரும் கிசுகிசுப்பது இல்லை.  சில  மூத்த எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகிடும் சில இளம் பெண் படைப்பாளர்களை முன்வைத்துப் புனையப்படும் கதைகள்கூட ஒருவகையில் கிசுகிசுக்கள்தான். உலகின் உன்னத இலக்கியம் பற்றிக் கதைக்கிற இலக்கியவாதிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாலியல்ரீதியான உறவுதான் சாத்தியம் என்று நினைப்பது அபத்த மானது. இருவருக்கு இடையில் உருவான உறவு, தனிப்பட்டது என்ற புரிதல்கூட இல்லாமல் கிசுகிசுப்பவர்கள் பாலியல் வறட்சிக்குள்ளானவர்கள்.

சமகாலப் பெண் கவிஞர்களின் கவிதைகள் என்ற கட்டுரையைக் கடந்த பத்தாண்டுகளில் கவிதை எழுதிய 17 பெண் கவிஞர்களை முன்வைத்து எழுதினேன்.  உயிர்மை பத்திரிகையில் பிரசுரமான அந்தக் கட்டுரையை வாசித்த சில ஆண் கவிஞர்கள் என்னிடம் ‘‘அண்ணாச்சி...ம்ம்'' என்று புன்னகையுடன் சொன்னார்கள். எல்லாம் ஏதோவொரு கணக்கு வழக்கு என்று போடுகிற ஆண் கவிஞர்களின் மனதில் பொதிந்திருப்பது பெண் கவிஞர்கள் மீதான அவதூறுதான்.

குமுதம் பத்திரிகையில் பணியாற்றியபோது, ஒரு செய்தியாளர் இலக்கியவாதிகள் பற்றிய கிசுகிசுக்களை வெளியிட்டார். அந்தக் கிசுகிசுக்கள் வாசிப்பில் அருவெறுப்பைத் தந்தன. வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியவாதிகள் பற்றிய கிசுகிசுக்களைத் தந்த செயல்,  எரிச்சலை அளித்தது. அதுவொரு வேண்டாத வேலை.

அண்மைக் காலமாக சாகித்ய அகாதெமி விருது பெறுவதற்காக எழுத்தாளர்கள் படுகிற பாடுகள் கிசுகிசுக்களாக இலக்கிய உலகில் நிலவுகின்றன. மூத்த கவிஞர் ஒருவர் சாகித்ய அகாதெமி விருது வாங்குவதற்காகச் செய்திட்ட லாபிகள் பற்றிய கிசுகிசுக்கள் முக்கியமானவை. ஆடிட்டர் ஒருவர் மூலம் சாகித்ய அகாதெமி விருது பெற்றிட முடியுமா என்பது  தெரியவில்லை. ஆனால் விருதாளர் ஒருவர்  இவர் மூலம் முயன்று வெற்றியடைந்துள் ளார் என்ற கிசுகிசு எங்கும் பரவியுள்ளது. சாகித்ய அகாதெமி விருது வாங்குவதற்காக ஓர் எழுத்தாளர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் களத்தில் இறங்கிக் கைப்பற்றியது பற்றிய கிசுகிசுக்கள் பரவி இருக்கின்றன.

பிரபலங்கள் அல்லது அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கவிதைகள் எழுதி, இலக்கிய உலகில் அறிமுகமானவுடன் உருவாகிற கிசுகிசுக்கள் முக்கியமானவை.  அதிகாரி, ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டவுடன், அவரைத் தேடிப்போய்ப் பார்த்து, கவிதை பற்றிப் பிரமிப்பாகப் பேசி, அடுத்த தொகுப்பைச் செம்மையாக்கித் தருகிறேன்  என்று சொல்கிற சீனியர் கவிஞருக்குக் காத்திரமான அரசியல் இருக்கிறது. அப்புறம் அடுத்த கவிதைத் தொகுப்புப் பிரசுரமானவுடன், பெரும்பாலான கவிதைகளை எழுதியது நான்தான் என்ற சீனியர் கவிஞரின்  கிசுகிசு எங்கும் பரவும். அந்த வரிசையில் கோஸ்ட் ரைட்டர்ஸ்  எண்ணிக்கை காலப்போக்கில் பெருகுவதாக கிசுகிசுக்கள் மூலம் அறிய முடியும்.

வசதியான பெண் கவிஞரின் ஒவ்வொரு கவிதைத் தொகுப்பும் ஒரு மாதிரி இருக்கிறதே எப்படி? என்று கேட்டபோது, ஒவ்வொரு தொகுப்புக்கும் ஆள் மாறுதில்லே என்று சி.மோகன் சொன்னதைக் கேட்டவுடன் எல்லோரும் சிரித்தோம்.  பெண் கவிஞர்களை நேரில் கண்டவுடன் உருகி வழிகிற சீரியஸ் கவிஞர் ஒருவர், இரவு உரையாடலில் ‘‘இந்தப் பொம்பளைக எழுதுறதெல்லாம் கவிதையா?'' என்று கேவலமாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பொதுவாகப் பெண் கவிஞர்களுக்குக் கிடைக்கிற புகழ் காரணமாக வெறுப்படைகிற சில ஆண் கவிஞர்கள் சொல்வதெல்லாம் அவதூறுகள்தான்.

கிசுகிசு என்றவுடன் ஏதோ கெட்ட பேச்சு என்ற புரிதலுக்கு அப்பால், இலக்கியப் படைப்புகள், படைப்பாளர்கள் குறித்த இன்னொரு பார்வைக் கோணம் என்று கருதிட வாய்ப்பு இருக்கிறது. இலக்கியப் பயிர் செழித்திட கிசுகிசுக்கள் நீருற்றுகின்றன என்று சொல்வதுகூட ஒருவகையில் கிசுகிசுதான்.  வேறு என்ன?

ஜூன், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com