தமிழ்நாட்டு மின்சாரத் துறையைப் பொறுத்தவரை, ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் இருக்கிறது. இதை எப்படி சரிசெய்வது, என்பதே புதிய அரசாங்கத்தின் முன்னால் இருக்கும் முதன்மையான பணி.
இழப்பில் இப்போதைக்கு தவிர்க்கமுடியாதபடி இருக்கும் முக்கியமான ஒன்று, மின்சாரத்தை எடுத்துச் செல்லும்போது உண்டாகும் இழப்பு. இதில், தேசிய சராசரி 22.08 சதவீதம் என்றால், தமிழகத்தில் 15.8
சதவீதமே. மின்கட்டண வசூலைப் பொறுத்தவரை தேசிய சராசரி 87 சதவீதம்தான்; தமிழ்நாட்டிலோ இது 98.8 சதவீதம். அதாவது தமிழ்நாடு மின்வாரியத்தின் திறன் அதிகமாகவே இருக்கிறது.
மக்கள் செலுத்தும் சராசரி மின் கட்டணம் 2000ஆவது ஆண்டில் யூனிட்டுக்கு 2.18 ரூபாய். அதுவே 2018இல் 5.5 ரூபாயாக அதிகரித்தது. வாரியத்துக்கு கட்டணம் மூலமான வருவாய் 250 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆக, நுகர்வோரின் தரப்பிலும் இந்த நட்டத்துக்குக் காரணமாக இல்லை.
இழப்புக் குறைப்பில், கூடுதல் செலவைக் குறைக்கவும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் முன்னுரிமை தரவேண்டும்.
தமிழக மின்வாரியத்தில் பேங்கிங் எனப்படும் ஒரு முறை உண்டு. காற்று மின்னாலைகள் தென்மேற்குப் பருவக் காற்று காலத்தில் தயாரிக்கும் மின்சா ரத்தை, பயன்படுத்தியதுபோக, மின்வாரியத்தில் சேமித்துவைப்பதாகக் கணக்கிடப்படுகிறது. அதை கோடைக்காலத்தில் அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதை சேகரிப்பது என்கிறார்கள்; உண்மையில் மின்சாரத்தை சேமித்துவைக்க முடியாது. ஆனால், பேங்கிங் என சொல்லிக்கொண்டு, காற்றாலைகளிடமிருந்து மின்வாரியம் பெற்றுக்கொண்டதாகக் கணக்குகாட்டப்பட்டு, ஆண்டுக்கு 1450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையிட்டும் இதைத் தடுக்கமுடியவில்லை. மத்திய மின்சட்டத்தின் 108/ 1 விதிப்படி, மாநில அரசு இதில் தலையிட்டு, அரசா ணை ஒன்றைப் பிறப்பித்தாலே போதும்; இந்த இழப்பைத் தவிர்க்கலாம்.
அடுத்த முக்கிய பிரச்னை, சுய மின்னுற்பத்தியாளர் தொடர்பான பெருந்தவறு. சுய மின்னுற்பத்தியாளராக இருப்பவர்கள், அவர்கள் உற்பத்திசெய்யும்
மின்சாரத்துக்கு ஏழைகளுக்கான இடைமானியத்தைச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அந்தப் போர்வையில் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் கணக்கில், இதுவரை 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் துல்லியமான இழப்பை அறிந்து சமன்படுத்த வேண்டுமானால், தனியாக தணிக்கை ஒன்றை மேற்கொள்ளவேண்டும். அதில் வாரியத்துக்கு உண்டாக்கப்பட்ட இழப்பை முழுவதுமாக மீட்கமுடியும். மேற்கொண்டு இந்தவகை இழப்பு வராமலும் தடுக்க முடியும்.
அடுத்த பெரிய இழப்பு, நீண்டகால மின்சாரக் கொள்முதல் என்கிற முறையால் உண்டானது. 2013இல் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, சந்தையில் யூனிட் மின்சாரம் 3 ரூபாயாக இருந்தபோது, யூனிட் 4.91 ரூபாய் விலைக்கு மின்சாரம் கொள்முதல்செய்ய 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தார்கள். 2028ஆம் ஆண்டுவரை இது நடைமுறையில் இருக்கும். இதில் புதிய அரசாங்கம் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அதை ரத்துசெய்வதை யோசித்தே பார்க்க முடியாது. சர்வதேச நடைமுறை இதுதான். இதில் ஒரே வாய்ப்பு, அந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்தில் கொள்முதல் செலவைக் குறைக்கலாம். அதற்கான சாத்தியம் உண்டு.
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் திருமக்கோட்டை, குத்தாலம், வழுதூர் ஆகிய இடங்களில் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டுவருகிறது. தனியார் எரிவாயு மின்நிலையங்களும் இருக்கின்றன. இந்த மின்சாரத்தை மத்திய பொதுத்துறை நிறுவனமான கெயில் எடுத்து, விநியோகம் செய்துவருகிறது. தனியாரும் அதை வாங்கிக்கொள்கிறார்கள். அதற்கான ஒப்பந்தங்கள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன. 400 மெகாவாட் அளவுக்கு கிடைக்கும் எரிவாயு மின்சாரத்தின் விலை, யூனிட்டுக்கு 3 ரூபாயும் அதற்கும் குறைவுதான். அது கிடைக்காமல் வெளியில் மின்சாரம் வாங்கும்போது, யூனிட்டுக்கு 7 ரூபாய்வரை தரவேண்டி இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் எரிவாயுவை தமிழக மக்களுக்குப் பயன்படுத்தவேண்டும் எனும் உரிமையை நிலைநாட்டும்வகையில் செயல்பட்டால், ஆண்டுக்கு 4,500 கோடி ரூபாய்வரை மிச்சப்படுத்தலாம்.
இத்துடன் இணைந்த இன்னுமொரு உரிமையை நாம் பொதுவாக கண்டுகொள்வதே இல்லை. தமிழ்நாட்டின் இயற்கைவளமான காற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் காற்று மின்சாரத்துக்கு, நாம் ராயல்டி - உரிமைத்தொகையைக் கோரமுடியும். ஏனென்றால் நாட்டிலேயே மொத்தம் ஏழு மாநிலங்களில்தான் காற்றுமின்னாலைகள் இயங்குகின்றன. நிலம் என்பது மாநில அரசின் உரிமைப் பட்டியலில் இருக்கிறது. இதற்கான அனைத்து சட்ட உரிமை வாய்ப்புகளும் நமக்கு இருக்கின்றன. ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கிறது என்றால் அதில் யூனிட்டுக்கு 25 பைசா என வைத்தால்கூட, எவ்வளவு கிடைக்கும்; அது நம் இயற்கை வளம் அல்லவா?
செலவைப் பொறுத்தவரை, பம்ப்செட்டுகளுக்கு இலவசம் அல்லது மானிய மின்சாரம் தரப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப் படுகிறது. ஆண்டுக்கு 13 ஆயிரம் மில்லியன்= 1,300 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யவேண்டியுள்ளது. இந்த மின் இணைப்புகள் முழுவதையும் சூரிய மின்சாரத்துக்கு மாற்றிவிடலாம்.
மத்திய அரசாங்கத்தில் இதற்கென குசெம் (ஓக்குஉM) என்கிற தனி திட்டமே இருக்கிறது. இதற்கான நிலமும் குறைவு; மைய அரசின் மானியமும் கிடைக்கிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தை விவசாயம் தவிர்த்து, பிற விவசாயம் சார்ந்த வேலைகளுக்கோ வேறு பயன்பாடுகளுக்கோ நாம் முறைப்படியே பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டு. இப்படிச் செய்வதன் மூலம் இன்னொரு பெரும் பயன், கிட்டத்தட்ட 20 லட்சம் பம்செட்டுகளுக்காக, 1300 கோடி யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்யவேண்டியதில்லை. அதற்கான செலவும் இல்லாமல் போகும்.
இப்போதைய கட்டண முறையில், மாதம் 100 யூனிட்வரை பயன்படுத்துவோர் 72 லட்சம் பேர்; அதற்கு மேல் 200 யூனிட்வரை பயன்படுத்துவோர் 35 லட்சம் பேர்; அதற்கும் மேல் 500 யூனிட்வரை பயன்படுத்துவோர் 55 லட்சம் பேர். 7.4 லட்சம் பேர் 500 யூனிட்டுக்கும் மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனைவருக்குமே இப்போது நூறு யூனிட்வரை மின்சாரத்துக்கு மானியம் அளிக்கப்படுகிறது.
இதில் மூன்றாம் வகையினருக்கு முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கு ஓரளவு, அவர்களின் நிலைக்கு ஏற்ப சிறிதளவு கட்டணம் விதிக்கலாம். நான்காம் வகையினருக்கு மானியத்தை அறவே நீக்கிவிடலாம். அந்தத் தொகையை அவர்களால் செலுத்தக்கூடியதாகவே இருக்கும் என்பதை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். இதைச் செய்தால், ஆண்டுக்கு 1,600 கோடி ரூபாய் வருமானம் கூடும்.
இவை சில முன்வைப்புகளே. இன்னும் விரிவாக ஆராய்ந்து, ஆலோசனைகளைத் தெரிவிப்பதற்காக, ஒரு வல்லுநர் குழுவை அமைக்கவேண்டும். மக்கள் சார்ந்தவர்கள், மின்வாரியம் சார்ந்தவர்கள், நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் என உரிய தரப்பினர் அனைவரையும் கொண்டதாக அது இருக்கவேண்டும். அது மட்டுமின்றி, காலக்கெடு விதித்து அந்த ஆலோசனைகளைச் செயல்படுத்தவும் வேண்டும்.
ஏப்ரல், 2021