
உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களேயன்றி, உங்களிடமிருந்து அல்ல. உங்கள் குழந்தைகள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.” - கலீல் கிப்ரான்
குழந்தைகள் இரண்டும் பிறந்தபிறகு தான், எப்பேர்ப்பட்ட பொறுப்பை எவ்வளவு பொறுப்பே இல்லாமல் இந்தச் சமூகம் கையாள்கிறது என்பது எனக்குப் புரிந்தது. குறிப்பாக, பெண்களை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையை இரு மகள்களின் தாயாகக் கண்டபோது தான் பேரச்சம் உண்டானது. பெண்கள் மீதும் பெண் குழந்தைகள் மீதும் வன்முறைகள் நிகழ்த்தப்படும் போதெல்லாம் இப்படியான உலகத்திலா இரு பெண் குழந்தைகளைக் கொண்டுவந்திருக்கிறோம் என்று மருகி மன உளைச்சல் ஏற்படும். அவர்களிடமே எல்லா விஷயங்களையும் பேசி உரையாடும் காலம் வரும் வரை சுமந்த வலிகள் தனிரகம் தான்.
ஆகவே பட்டியலிட்டுக் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அல்ல, காலங்காலமாய் நிலவி வரும் விதிகளிலும் பழக்கங்களிலும் உடைத்து நொறுக்கத் தான் ஏராளம் உண்டு என்பது புரிந்தது.
அதில் முதன்மையானதும் முக்கியமானதுமாய் நான் உணர்ந்தது, என் இரு மகள்களுக்குத் தாய் எனும் பாத்திரம் எவ்வளவு தான் நேரத்தையும் உழைப்பையும் கோரியபோதும் அதில் மட்டுமே தன்னிறைவும் திருப்தியும் கண்டு விடக்கூடாது என்பது. குழந்தைகளுடனே 24 மணி நேரம் செலவிட்டு அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவிதையாய்ப் பதிந்த பலரைப் பார்த்து நாம் செய்வது தவறோ எனும் சுய ஐயம் தோன்றும் தான். ஒரே நொடி, என் மகள் என்னைப் பார்த்துத் தானே வளர்வாள்? அவளுக்கு என்ன மாதிரியான இலக்கணமாக இருக்கப் போகிறேன் என்று சிந்திக்கும் பொதே அதீத தாய்மையுணர்வின் கற்பிதம் நெஞ்சைச் சுடும்.
பெரும் சாதனைகள் செய்துதான் ஆக வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஆனால் குறைந்தபட்சம் பொருளாதாரச் சுதந்திரம் இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தைத் தாண்டி எனக்கென்று தனியான அடையாளங்களும் விருப்பங்களும், கேளிக்கைகளும் நண்பர்களும் இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனை எக்காரணம் கொண்டும் விட்டு விடக் கூடாது எனும் வைராக்கியத்தை என் மகள்களுக்காக வேண்டி எனக்குள் விதைத்துக் கொண்டதை அடிக்கோடிட்டுக் குறிப்பிட விரும்புகிறேன்.
அடுத்ததாக, பாலினம் சார்ந்த பணிகள் என்று எதுவும் கிடையாது என்று புரிய வைப்பது. இது எதார்த்தத்தில் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. சமைப்பது இயல்பாகவே என் பணியாகவும், வாகனம் ஓட்டுவது அவர் பணியாகவும் இருந்தது உட்பட பாலினரீதியான வேறுபாடுகள் நிலவினாலும், அது தான் விதி என்றோ, அப்படி இருப்பதை விதந்தோதியோ மகள்களிடம் பேசியதில்லை.
அடுத்ததாக, பாலினம் சார்ந்த அதீத தன்னுணர்வைத் தவிர்ப்பது. அதாவது குழந்தைகள் யாருக்கும் தான் ஆண் என்றோ பெண் என்றோ எப்போதும் நினைவிருக்காது. அவர்கள் குழந்தைகள் என்பதால் தான் எந்த விகல்பமும் இன்றி ஒன்றாக விளையாடுவார்கள், சண்டையிடுவார்கள். அந்த ஆரோக்கியமான உணர்வை இயன்றவரையில் கெடுத்து விடாமல் இருப்பது நம் பொறுப்பு. ஆம்பளப் பிள்ள கிட்ட ஏன் வம்புக்குப் போற, என்றோ பொட்டப் பிள்ளைகளோட என்ன சொப்பு வெச்சு விளையாட்டு என்றோ இன்னும் நச்சுப் பேச்சுகள் பேசுபவர்களைக் குழந்தைகள் முன்பாகவே கடிந்து கொள்ளத் தவற வேண்டாம்.
என் இரு மகள்களுக்கும் இரண்டு வயது முதல் ஆண் குழந்தைகளுக்கான பிரிவில் தான் துணிமணிகள் எடுப்பது வழக்கமாக வைத்திருந்தேன். காரணம்? உடலுக்கு எந்த வகையிலும் உறுத்தாமல், இலகுவாக அணியும் படியும் ஓடியாடி விளையாட ஏதுவாகவும் அங்கே தான் டி.ஷர்ட்டுகளும் காற்சட்டைகளும் கிடைத்தன. உறவினர் வீட்டுத் திருமணங்கள், விசேஷ நிகழ்ச்சிகளுக்குக்கூடப் பட்டுப் பாவாடை நகைகளை விட, வண்ண மயமான மேற்கத்திய உடைகளை அணிவித்து அழைத்துச் செல்லும் போது புருவங்கள் உயர்ந்தாலும் குழந்தைகள் தனித்துத் தெரிந்தார்கள்.
உறவினரின் மகள் ஒருவரின் புது நன்மை விழாவுக்குச் சென்றிருந்தோம். நிகழ்வு முடியும் வரை நீளமான கவுன், பிறகு கசகச வென்ற ஓர் அனார்கலி என்று அணிந்திருந்த அந்தச் சிறுமி மதியத்துக்கு மேல் அவற்றைக் கழற்றி எறிந்து விட்டுத் தான் வழக்கமாய் வீட்டில் அணியும் பைஜாமா சட்டையை அணிந்து வெளியே வந்த போது, "ஹப்பாடா. அந்தப் பொம்பள வேசத்தைக் கலைச்சப்புறம் தான் நிம்மதியா இருக்கு என்று விளையாட ஓடி விட்டாள்" குழந்தை இயல்பாகச் சொல்லிச் சென்ற அந்த வார்த்தைகளில் நாம் ஆழ்ந்து சிந்திக்க நிறைய இருக்கிறது.
நகைகள். எந்தத் தங்க நகையையும் என் குழந்தைகள் இதுவரை அணிந்ததில்லை. பதினான்கு வயதாகும் இளைய மகள் இப்போது வரை காது குத்திக் கொள்ளவில்லை. இப்படி தோற்றத்தில் "பெண்" என்பதால் தோற்றம் குறித்து வெகுவாக அலட்டிக் கொள்ளாமல் அலட்சியத்துடன் இருப்பதும், அழகு குறித்த அழகு குறித்த மதிப்பீடுகளும் இல்லாமல் வளர்வது ஆரோக்கியமானது என்று நம்புகிறேன். ஆண் குழந்தைகள் அப்படித் தானே இருக்கிறார்கள்?
பக்தி, சாமி சடங்கு பூஜைகள் எனும் திணிப்பை எல்லாம் பெண் குழந்தைகள் மீது அணியாய் ஏற்றுவதன் விளைவை அவர்கள் காலம் பூராவும் இறக்கி வைக்க முடியாத சுமைகளாகச் சுமப்பதைப் பார்க்கலாம். எந்தப் பண்டிகை வந்தாலும், எவ்வளவு சிரமமாக இருந்தாலும் அதன் சடங்குகளையும் வேலைப்பளுவையும் விட்டொழிக்க முடியாமல் பெண்கள் அவதிப்படுகிறார்கள். ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்டால், "என்ன செய்வது, செய்து பழகி விட்டதே. செய்யாமல் இருந்தால் என்னவோ போல் இருக்கிறது." என்பதே பதிலாக இருக்கும். எந்தப் பண்டிகையையும் எப்படிக் கொண்டாடலாம் என்று தேர்வு செய்யும் உரிமையைக் குழந்தைகளிடம் விட்டு விடலாம்.
பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த குழந்தைகளுக்கும் பெரிய சவாலாகவும் எதிரியாகவும் இருப்பது நுகர்வுக் கலாசாரம். அதனின்று அவர்களைப் பாதுகாப்பது மாபெரும் சவாலாகவே பெற்றோர் முன் நிற்கிறது. விளம்பரங்களில் பார்க்கும் பொருள்கள் மீது ஆசைப்படுவதோடு, தேவையற்ற அதீத அழகுணர்ச்சி, ஒப்பனை போன்றவற்றில் பெண் குழந்தைகள் நேரத்தையும் கவனத்தையும் செலவிடுவது ஆரோக்கியம் அல்ல.
பெண் என்பதாலேயே ஆணுக்கு இல்லாத எந்தக் கட்டுப்பாடுகளும் உனக்குக் கிடையாது; அதே போல பெண் என்பதால் எந்தப் போலிச் சலுகைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்லி வளர்ப்பது அவர்களின் சுதந்திர உணர்வை மட்டுமல்ல சுயமரியாதையையும் வளர்த்தெடுக்கும்.