சுப்ரபாரதிமணியன்
சுப்ரபாரதிமணியன்

உறுத்திய கேள்விகள்

சாயத்திரை

எட்டு ஆண்டுகள் ஹைதராபாத்தில் தொலைத்-தொடர்பு பணி சார்ந்து இருந்துவிட்டு என்  சொந்த ஊரான திருப்பூருக்குத் திரும்பிய-போது எங்கள் ஊரின் முகம் மாறியிருப்பது தெரிந்தது. பெரிய கிராமமாக இருந்த திருப்பூர் தொண்ணூறுகளிலேயே இருபது ஆயிரம் கோடி அந்நியச் செலாவணியை பின்னலாடைத் துறை மூலம் பெறும் நகரமாக மாறி இருந்தது.

என்னுடன் படித்த பலர் ‘ டாப் டென் எக்ஸ்போர்ட்டர்'களாக மாறியிருந்தார்கள். வீட்டில் நீச்சல் குளங்களும் பலவகை கார்களுமாக தங்கள் வாழ்க்கை இருப்பதாக பத்திரிகை நேர்காணல்களில் சொல்லிக்கொண்டார்கள். மாட்டு வண்டிக்காரர்கள் கூட மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்று பெருமிதத்துடன் மற்றவர்கள் சொல்லிக்கொண்டார்கள், உள்நாட்டு பனியன் உற்பத்தியில் தேர்ந்திருந்த திருப்பூர் வெளிநாட்டு அந்நிய செலவாணிக்காகக் கொடுத்த விலை என்னவென்று யோசித்த போது இரண்டு விஷயங்கள் என்னை பாதித்தன. ஒன்று ஜீவ நதியாக இருந்த நொய்யல் சாயக்கழிவுகளும் வீட்டுக் கழிவுகளும் ஓடக்கூடிய ‘மறைந்துபோன நதி' யாகி விட்டிருந்தது. திருப்பூரில் மத்திய தர வர்க்கத்து குடும்பங்களும் மேல்தட்டினர் தவிர மற்றக் குடும்பங்களின் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகி தங்கள் பால்யத்தை மறந்து சம்பாதிப்பவர்களாக மாறியிருந்தார்கள். இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அப்போது அரை லட்சத்தை தாண்டிவிட்டது இந்த இரண்டு விஷயங்களையும் மையமாகக் கொண்டு நாவல் எழுத நினைத்தேன்.

 என்னை பாதித்த திருப்பூர் தொழில் சார்ந்த சுற்றுச்சூழல் பிரச்னையை மையம் இழப்பு, சிதறியவை என உள்ளூர் கதாபாத்திரங்களுடன் வடிவமைத்தேன். பின்நவீனத்துவத்தின் கூறுகளை அந்த நாவல் உள்ளடக்கியிருந்தது. அந்த ஆண்டின்  சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்ற போது அது பலரின் கேள்விகளை உள்ளடக்கியது. இருபதாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை கொடுக்கக்கூடிய ஒரு நகரத்தில் வளர்ச்சி என்பது முக்கியமா அல்லது சுற்றுச்சூழல் காப்பு முன்னுரிமையா என்பது பற்றிய விவாதங்கள் கிளம்பின. உள்ளூர் தொழில் வளம் முக்கியம். தொழிலாளர் நலன் முக்கியம் என்பதை மனதில் கொண்டு பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

பின்னால் அந்த நாவல் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் வந்தபோது இந்த சர்ச்சை இன்னும் வலுப்பட்டது. அந்த நாவல் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நாவல் எழுப்பியதற்கான பதில்கள் பூரணமாகக் கிடைக்கவில்லை. பெரும் வர்த்தகர்களும், கார்ப்பரேட்களும் தண்ணீரை, சாயக் கழிவுகளை நொய்யலில் சேர்க்காமல் தவிர்க்கும் இன்றைய சூழலில் சிறு வியாபாரிகளும் பணத்தாசை பிடித்தவர்களும் சுத்திகரிப்பு நிலையம் என்பதற்கான அக்கறை கொள்ளாமல் இன்னும் பழைய நிலையிலேயே தங்கள் பின்னலாடை உற்பத்தியைத் தொடர்கிறார்கள்.

Editorial

இன்றைக்கு கொரானா, ஒமைக்ரான் நோய்க்கிருமிகளின் சூழலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் சுகாதாரக் கேடும் நமக்கு பூமியை சுற்றுச்சூழல் சீர்கேட்டிலிருந்துக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை எல்லோர் மத்தியிலும் கொண்டுவந்திருக்கிறது. இந்த முன்னெடுப்புகளுக்கு  சாயத்திரை போன்ற நாவல் முயற்சிகள் அடிப்படையாக அமைந்திருந்தன. அந்தப் பணியில் தொடர்ந்து நான் மூன்று நாவல்களும் பத்துக்கு மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகளும் சாயத்திரை நாவலுக்குப் பிறகு வெளிக்கொணர்ந்துள்ளேன். இது நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் போராளி வங்காரி மத்தாய்  சொல்வதைப் போல சிறு தேன்சிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தன் சிறிய அலகால் தண்ணீரைச் சுமந்து வந்து முயல்வது போன்ற முயற்சிதான்.

ஜனவரி - 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com