எங்கள் வாழ்க்கை ஒருமனதான சுயமரியாதை வாழ்க்கையாகவே உள்ளது! - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

எங்கள் வாழ்க்கை ஒருமனதான சுயமரியாதை வாழ்க்கையாகவே உள்ளது! - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

எனக்கும் மோகனா அவர்களுக்கும் இணையேற்பு விழா 7.12.1958 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் நடந்தது.  தந்தை பெரியார் அவர்களது தலைமையில், அவர்களால் நடத்தி வைக்கப்பட்ட திருமண நிகழ்வு அது.

எங்கள் திருமணம் காதல் திருமணம் அல்ல. மாறாக, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். ஆனால், ஜாதி மறுப்புத் திருமணம், தாலி, சடங்கு ஏதும் இல்லாமல், நல்ல நாள் - நல்ல முகூர்த்தம் பாராது, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் வெறும் மாலை மாற்றி, மோதிரம் மாற்றிக் கொள்ளல் மட்டுமே நிகழ்ந்த மணவிழா!

1934இல் அதே திருச்சியில் தந்தை பெரியார் தலைமையில் திருவண்ணாமலை ஆடையூரைச் சேர்ந்த இளம் விதவையான ரெங்கம்மாளுக்கும், கோட்டையூர் அழ.சிதம்பரம் அவர்களுக்கும் மறுமணமாக நடந்த திருமணத்தில் பிறந்த மூத்த மகள் மோகனா - எனது வாழ்விணையர்.

‘சுயமரியாதைத் திருமண முறை செல்லாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு (1953), எனது மாமனார் மாமியார் திருமணம் தொடர்பான வழக்கிலேயே ஆகும்!

எனது மாமனார் நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார் ‘ஜாதி.' - எனது மாமியார் ரெட்டியார் ‘ஜாதி'யைச் சேர்ந்தவர்.

இப்படி ஜாதி மறுப்பு, விதவை மறுமணத் திருமணமாகத் தந்தை பெரியாரே ஏற்பாடு செய்த திருமணம். - அவர்களும் கொள்கை ஈடுபாடு உடையவர்கள். அவர்களுடைய மகளுக்கு, மணமகன் பார்க்கும் பொறுப்பை தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் ஏற்றனர். என்னை அய்யா முடிவு செய்து எனது ஒப்புதலைப் பெற்று நடத்தி வைத்தார்.

புத்தாடைகள்கூட எடுக்காமல் மணமக்களாகிய நாங்கள் அன்றும் அணிந்திருந்தது வழக்கமான சலவை உடைகள்தான். இணையேற்பு விழா, வைதிகர்கள் கூறும் ‘கொழுத்த இராகு காலத்தில்' ஞாயிற்றுக்கிழமையில். (மற்றவர்கள் நம்பிக்கைப்படிதான் இதைக் கூறுகிறேன்.)

இப்போது 64 ஆண்டுகள் ஆகும் நிலையில், எங்கள் வாழ்வில் எந்தக் குறையும் இல்லாத சுயமரியாதை வாழ்வான சுகவாழ்வினை வாழ்ந்து வருகிறோம். (போதிய அளவில் பிள்ளைகளும் உள்ளனர்!)

எனது ஆரம்பகாலத் தயக்கம் ஒன்று - எங்கள் குடும்பத்தைவிட வசதி படைத்த மணமகள் - என் கொள்கைக்கு எப்படி ஒத்துழைப்புத் தருவாரோ என்பது.

ஆனால், இன்றுவரை அவர் என்னைவிட எனது கொள்கை லட்சியத்தில் தீவிரம்; பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாம் எங்கள் சுயமரியாதைக் கொள்கை வழியே! அதற்கெல்லாம் எங்களிடையேயான புரிதலே காரணம்.

துவக்கத்தில் சிற்சில பிரச்சினைகள் இணையருக்குள் ஏற்படலாம். அதனை அண்ணா சொன்னதுபோல், ‘விட்டுக்கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகின்றவர் விட்டுக் கொடுப்பதில்லை' என்பதுபோல், உணர்ந்து வாழ்க்கை நடத்தி வருவதால் சுமுக நட்புறவு சிறப்பானதாக அமைவது உறுதி. (அமையும்).

பல நேரங்களில் எங்கள் இல்லத்தில் தந்தை பெரியார் தங்குவார். திருமண நிகழ்வுகளில் தந்தை பெரியார் ஆற்றிய பேச்சு - எழுத்துகளைத் தொகுத்து எங்கள் திருமணத்தின்போது ‘வாழ்க்கைத் துணை நலம்' என்னும் நூலாக வழங்கினோம். அய்யாவின் வாழ்த்தை எழுதி வாங்கினோம்.

அய்யா பெரியார் கைப்பட எழுதிய மூன்று முத்தான அறிவுரைகள் இதோ:

‘ஆசைப்படுகிறேன்!'

(வீரமணி - மோகனா வாழ்க்கை ஒப்பந்தத்தின்போது தந்தை பெரியார் வழங்கிய வாழ்த்து)

அன்புள்ள வாழ்க்கைத் துணைவர்கள் ஆன அறிஞர்கள் மோகனா - வீரமணி இருவர்களுக்கும் என் அறிவுரையும் அன்பளிப்புமாக இப்புத்தகம் வழங்கப்படுகிறது.

துணைவர்களே,

உங்கள் இருவர்களது வாழ்க்கையானது

முதலாவதாக -

ஒருவருக்கொருவர் உள்ளம் கவர்ந்து ஒன்றிய நண்பர்கள் வாழ்வாகவும்,

இரண்டாவதாக -

ஒருவருக்கொருவர் மானம் பாராது முந்தும் பணிவிடையாளர்களது வாழ்வாகவும்

மூன்றாவதாக -

‘கருத்து வேறுபாடு' என்று ஒன்று இருப்பதாகவே அறியாத வாழ்வாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

(கையொப்பம்) ஈ.வெ.ராமசாமி

இதனை நாங்கள் பெரிதும் பின்பற்றி வாழ்கிறோம். நூற்றுக்கு நூறு என்று சொல்ல முடியாவிட்டாலும்கூட! (உண்மையை மறைக்காமல் சொல்கிறேன்) எங்கள் வாழ்க்கை ஒருமனதான சுயமரியாதை வாழ்க்கையாகவே உள்ளது!

சமத்துவத் தராசு இருந்தால் - சாயாமல் பார்த்துக் கொண்டால் - வாழ்க்கையில் கொள்ளை இன்பம் குலவுவது உறுதி!

குனிய வேண்டிய இடத்தில் குனிந்து நிமிர்தல் - அதற்கொரு எளிய வழி என்பதை  64 ஆண்டுகள் மணவாழ்வு எங்களுக்கு அனுபவப் பாடமாகப் போதிக்கின்றது!

இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம்!

ஆகஸ்ட், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com