எனக்குப் பிடித்த இரட்டை இயக்குநர்கள்

எனக்குப் பிடித்த இரட்டை இயக்குநர்கள்

இரட்டையர்கள் சிறப்பிதழ்

தேவராஜ்- மோகன் இயக்கத்தில் வந்த பொண்ணுக்குத் தங்க மனசு படம்தான் நான் கதாநாயகனாக நடித்த முதல்படம்.

அதற்கு முன்னால் நான் 40 படங்களில் நடித்திருந்தேன் என்றாலும் நாயகன் என்ற முழுமையான அந்தஸ்து இப்படத்தில்தான் கிடைத்தது. இந்தப் ந்படம் அருண்பிரசாத் மூவீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இயக்குநர் கே.மாதவனிடம் உதவியாளர்களாக தேவராஜும் மோகனும் பணிபுரிந்தனர். அதில் நண்பர்களாகினர். அவர்களுக்கு படம் எடுக்கும் வாய்ப்பைத் தரவேண்டும் என்பதற்காக மாதவன் உருவாக்கித் தந்த வாய்ப்புதான் இது.

நானும் ஜெயசித்ராவும் இப்படத்தில் நடித்தோம். விஜயகுமார் இன்னொரு ஹீரோவாக அறிமுகமானார். படம் எட்டு வாரங்கள் ஓடி பெரும் வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு அவர்களின் இயக்கத்தில் 13 படங்கள் கதாநாயகனாக நடித்துவிட்டேன். (அப்ப எல்லாம் படத்தின் பட்ஜெட் ஆறு லட்சம், எட்டு லட்சம் இருக்கும். சூர்யா நடித்த சிங்கம் 45 கோடி ரூபாய் என்றார்கள். நான் நடித்த 192 படங்களுக்குமே மொத்த பட்ஜெட் அதுதான்).

அதுக்கு அப்புறம் இவங்க இயக்கத்தில் கண்மணி ராஜா(1974) படம் பண்ணேன். லட்சுமி நாயகி. ஒரு இளைஞனுக்கு அம்மா வேணுமா மனைவி வேணுமாங்கறதுதான் கதை. ‘மகன் நல்லா இருக்கணும்னு அவன் வயித்தையே பார்த்துக்கொண்டிருப்பவள் அம்மா’ ன்னு ஒரு வசனம் வரும். ‘அவன் என்னிக்கும் சிரஞ்சீவியா இருக்கணும்னு சொல்லி தாலியையே பார்த்துக்கொண்டிருப்பவள் மனைவி’ன்னு பதில் வசனம் வெச்சிருப்பாங்க. அப்பவே கடற்கரையில் இரவு எபெக்ட்ல ப்ளாக் அண்ட் ஒயிட் பாட்டெல்லாம் கவித்துவமாக எடுத்திருப்பாங்க. எம்.எஸ்.வி. இசையில் ‘ஓடம் கடலோடும்.. அது சொல்லும் பொருள் என்ன?’ என்கிற அழகான பாட்டு. அடுத்து நான் நடிச்சது ‘உறவு சொல்ல ஒருவன்’. அது ஒருதலைக் காதல் கதை. பஞ்சு அருணாசலம் எழுதின கதை. பத்மப்ரியா, சுஜாதா முத்துராமன் நடிச்ச படம்.

இது முடிஞ்ச உடனே அன்னக்கிளி படம். இதுதான் இளையராஜா இசையமைத்த முதல்படம் என்று எல்லோருக்கும் தெரியும். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படம் சரித்திரம் படைத்த படம் என்று எல்லோரும் சொல்வார்கள். கிராமிய பாத்திரங்களை அந்த அழுக்கோடு அதே தன்மையுடன் வண்ணத்தில் எடுக்கப்பட்ட படம் அது. ஆனால் முழுக்க முழுக்க நகர வாசனையே இல்லாமல் ஆர்க் விளக்குகள் இல்லாமல், காமிராவைத் தூக்கிக்கொண்டுபோய் ஒரு காட்டுக்குள் வெச்சு எடுத்த முதல் படம் அன்னக்கிளி. இதுதான் அவுட்டோர் படப்பிடிப்புக்கு செல்ல பாரதிராஜாவுக்கு தன்னம்பிக்கை கொடுத்த படம். தயாரிப்பாளர்களுக்கும் இப்படிச் செய்யலாம் என்று நம்பிக்கை கொடுத்தபடம்.

இயக்குநர்கள் தேவராஜ் மோகன் வேறு; நடிகனான நான் வேறு என்றெல்லாம் அப்போது பிரித்துப் பார்ப்பதில்லை. ஒரே குடும்பமாகத்தான் செயல்பட்டோம். அன்னம் என்கிற  கிராமத்துப் பெண்ணும் ஒரு வாத்தியாருக்குமான ஒரு உணர்வுபூர்வமான காதல் பற்றிய கதை செல்வராஜ்கிட்ட இருக்கு. அதைப் பண்ணுவோம்னு சொன்னாங்க. இந்த படத்தில் வாத்தியாரு வேற ஊருக்குப் போகும்போது அன்னம் காசு கொடுத்திருப்பா. அந்த காசை கிளைமாக்சுக்கு முன்னாடி வட்டியோட திருப்பிக்கொடுப்பாரு வாத்தியாரு. என்கிட்ட வாங்கின  எல்லாத்தையும் நீ திருப்பிக்கொடுத்திருவியா.. அடப்போய்யா பைத்தியக்கார மனுசான்னு அவ சொல்லுவா.. அப்பதான் அவ மனசு புரியும். பட்டப் பகலில் அவங்க கட்டிப்புடிச்சிக்குவாங்க. அப்ப அவங்க உணர்ச்சியை ஒரு வயலில் தண்ணீர் நிரம்பி கரையை உடைத்துப் பாயும் காட்சியைக் காட்டியிருப்பாங்க. கரை உடையும்போது இவங்க உணர்ச்சிப் பிழம்பா கட்டிப்பிடிக்கிற காட்சி வரும். தண்ணி ஓடும்போது அந்த பொண்ணு விலகிடுவா.

இந்த படத்துக்கு மலையடிவாரத்துக்கு அடியிலே வரும் ஒரு கிராமத்தைத் தேடி அலைஞ்சோம். பல இடங்களுக்கு நானும் அவங்களும் போயி தேடி கண்டுபிடிச்ச இடம்தான் தெங்குமரஹாடா. பவானி அணையில் இருந்து 21 கிமீ காட்டுவழியில் ஜீப்ல செல்லக்கூடிய இடம். அதுக்கு ஒரே ஒரு பஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு தடவைதான்  போகும். அங்கே இருந்த ஊர்மக்கள் எங்களுக்கு தங்கறதுக்காக அவங்க தங்கக்கூடிய வீடுகளை காலிபண்ணிக் கொடுத்தாங்க. எங்களுக்காக டாய்லட் கட்டிக்கொடுத்தாங்க. காமிரா பண்ணது பி.என். சுந்தரம்கிட்ட உதவியாளராக இருந்த சோமன். ப்ரேம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். அந்த படம் பட்டிதொட்டியெல்லாம் மிக அருமையா சில்வர் ஜூபிளி கண்டு ஓடியது. எப்படி ஓடியது என்று ஒரு உதாரணம் சொல்கிறேன். திருப்பூர்ல ரயில்வே ட்ராக்குக்கு இந்தப்புறம் ஒரு தியேட்டர்ல 98 நாள் ஓடியது. அதை எடுத்து அந்தப் பக்கம் இருந்த தியேட்டர்ல போட்டாங்க. அங்கே 120 நாள் ஓடியது.

 அந்த படத்தில் ‘சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை’ன்னு ஒரு பாட்டு. அது இடைவேளைக்குப் பின்னால் வரும். ‘இப்பதான் இடைவேளை முடிஞ்சு உள்ளே வந்தோம். உடனே ஒரு பாட்டான்னு’ படம் வெளியான இரண்டு மூணு நாளில் சொன்னாங்க. உடனே அந்தப் பாட்டைத் தூக்கியாச்சு. படம் ஓடி கொஞ்சநாள் கழித்து அந்தப் பாட்டு ரேடியோவில் ரொம்ப பாப்புலர் ஆயிடுச்சு. அந்த பாட்டு எங்கேன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் அந்தப் பாட்டை திரும்ப சேர்த்தாங்க. படத்தில் இருந்து வெட்டப்பட்ட ஒரு பாட்டை ஐம்பத்தி ஆறு நாள் கழித்து மீண்டும் சேர்த்த வரலாறு அன்னக்கிளிக்குத்தான் உண்டு.

படம் ரிலீசான முதல்நாள் ராஜகுமாரி தியேட்டர் வாசலில் தேவராஜ் போய் நின்னார். அவரு ஒல்லியா தொப்பிப் போட்டுகிட்டு பாவமா இருப்பார். மூணு நாள் கழிஞ்சதும் நீங்க யார் சார்னு கேட்டாங்க. நாந்தான் இயக்குநர்ன்னு சொன்ன உடனே ஒரு சேர் போட்டு உக்கார வெச்சாங்க. படம் ஓடிய 120 நாளும் தினமும் அங்கே போய்விடுவார்!

தேவராஜ் மோகன் படங்களில் சிட்டுக்குருவி படம் முக்கியமானது. தலைக்காடு என்கிற இடத்தில் எடுத்தபடம். ஒரு கொலையைப் பண்ணிவிட்டு கெட்டவனான கதாநாயகன் யாருக்கும் தெரியாத தன் சொந்த ஊரில் போயி செட்டில் ஆகி, அங்கே பெரும் உதவிகள் செய்து நல்லவன் ஆகிவிடுகிறான். நானும் சுமித்ராவும் நடித்தது. கம்ப்யூட்டர்னு இன்னிக்கு எல்லாம் சொல்றோமே. அந்த வார்த்தை தமிழ் சினிமாவில் அன்னிக்குத்தான் அறிமுகம் ஆனது. நாயகனும் நாயகியும் ஒரு அணைக்கட்டுக்கிட்ட போட்டோ எடுத்திருப்பாங்க. அந்த படம் ஒரு லாக்கெட்டுக்குள்ள சின்னதா இருக்கும். அது போலீஸ் கையில் கிடைக்கும். அந்த படத்தை கம்ப்யூட்டர்ல பெரிசாக்கிப் பார்த்தா அதுல  கோட்டையாறு ஆயக்கட்ன்னு எழுதியிருக்கிறது தெரியும். நேரா போலீஸ் இங்கே வந்து அவனைக் கைது செய்து அழைச்சுப் போகணும்பாங்க. ஊர் மக்கள் விட மாட்டாங்க. அந்தப் பொண்ணு  அந்த கொலையைச் செய்யலேன்னு சொல்லுய்யான்னு அழுவா. அவன் நாந்தான் செஞ்சேம்பான்.. கேட்டவுடனே அவ உசிர  விட்டுடுவா. உடனே , ‘சிட்டு, உன்னால நான் மனுசனானேன். என்னாலே நீ தெய்வமாயிட்டேன்’னு அவன் சொல்லுவான். அத்தோட படத்தை முடிச்சுடுவாங்க. அதில்தான் அடடட மாமரக்கிளியே.., என் கண்மணி உன் காதலி, உன்னை நம்பி நெத்தியிலே பொட்டுவெச்சேன் மத்தியிலே- உள்ளிட்ட மிக அருமையான பாடல்கள் வந்தன. பஸ்ஸுக்குள்ளயே டபிள்ரோல் வந்து பாடறமாதிரி ‘என் கண்மணி உன் காதலி’ பாட்டு எடுத்தாங்க.. அதெல்லாம் புரட்சியா அப்ப பேசப்பட்டது. தலைக்காட்டுல சர்க்யூட் ஹவுஸ்ல எஞ்சினியர் தங்கற எட்டடிக்கு எட்டடி ரூமை எனக்குக் கொடுத்திருந்தாங்க. காலையில கொஞ்சம் சுடுதண்ணி கொடுப்பான். குளிச்சிட்டு மேக் அப் போட்டு ரெடியாகணும். எஞ்சினியர்  காலைல வர்றதுக்குள்ள என் பேக் ரெடியா இருக்கும். எடுத்து வெளியே வாட்ச்மேன் வெச்சிடுவான். ஷூட்டிங் போயிடுவோம். இப்படியே 15 நாள் இருந்தோம்.

இந்த அனுபவங்களின் பின்னால் ஏற்பட்ட உச்சம்தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. என்னோட 100-வது படம். தேவராஜ் மோகன் பண்ணாங்க. அவங்க எப்படி ஷாட் வெப்பாங்க, எப்படி சீன் சொல்வாங்கன்னு எனக்கு நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது. அவுட்டோர் போனோம்னா இரவுல உட்காந்து தேவராஜ் ஷாட் சொல்வாரு. நான் எழுதுவேன். மோகன் அந்த சீனுக்கு தேவையான விஷயங்களை எல்லாம் கவனிச்சு பட்டியல் போட்டு ஏற்பாடு பண்ணுவார். ஒரு டீமா வேலை செய்வோம். டீம்னு சொல்லக்கூடாது. ஒரு குடும்பம்.

முதலில் வண்டிச் சக்கரம்தான் 100வது படமா பண்றதா இருந்தோம். அதுக்காக லொகேஷன் பாக்க மைசூர் போனோம். தென்னிந்தியாவிலேயே நீளமான காய்கறிமார்க்கெட் அங்கதான் இருந்தது. அங்க போனப்போ ஒரு படம் ஓடிகிட்டு இருந்தது. பெயர்‘பரசங்கத கெண்டே திம்மா’. அதைப்போய் தேவராஜ், மற்றும் என்னோட நெருங்கிய நண்பர் அமுதவன் உள்ளிட்ட நண்பர்கள் பாத்தாங்க. லோகேஷ் நடிச்ச கன்னடப்படம். அப்படியே தமிழ்நாட்டுக்கு ஏத்தமாதிரி மாத்திட்டா தேவராஜ் மோகனுக்காகவே செய்யப்பட்ட கதை  மாதிரி இருந்தது. அதனால் வண்டிச்சக்கரம் அப்பறம் பண்ணுவோம்னு தள்ளிவெச்சிட்டு கோவை வட்டார வழக்குகளுடன் திரைக்கதை எழுத வெச்சோம். விஜய் கிருஷ்ணராஜ் எழுதினார்.

அந்தப்படம் மிகச்சிறந்த தமிழ்த்திரைப்படமாக அமைந்தது. நாகரீக வளர்ச்சி கிராமத்துக்குள் நுழைவதையும் அதனால் அம்மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை அவர்கள் வாழ்க்கையில் உருவாகும் விளைவுகளை மிகவும் நுட்பமாக 

சித்தரித்த படம். அதில் ஒரு காட்சியில் தீபாவுக்கு அவங்க அப்பா ஃபோனோகிராப் பெட்டி வாங்கிக்கொடுத்து வீட்டில் பாட்டுக்கேட்கச் சொல்லுவார். அப்போது சென்னை போரூர் சந்திப்பில் நாலே நாலு கடைதான் இருக்கும். அதில் ஒரு கடையில் அந்த ஃபோனோகிராப்பை வாங்கியது நினைவிருக்கிறது.

தேவராஜ் நல்ல க்ரியேட்டிவ் மூளை உடையவர். நன்கு சிந்தித்து காட்சிகளை உருவாக்குவார். மோகன் நாடகத்துறையில் இருந்து வந்தவர். அவர் காட்சியை எடுப்பதற்கான பொருட்களில் கவனம் செலுத்துவார். நான் நடித்த 13 படங்கள் தவிர மேலும் நான்கு படங்கள் பண்ணியிருக்கிறார்கள். அதன்பின் வேறு காரணங்களால் அவர்கள் பிரிய நேரிட்டது.

சிட்டுக்குருவி படப்பிடிப்பின்போது தேவராஜ் மகள் திருமணம் வரதட்சணைக் காரணங்களால் நின்றுவிட்டது. பின்னர் 20 ஆண்டுகள் கழித்து அவரது இன்னொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தோம். அப்போது மூத்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த அதே பழைய மாப்பிள்ளைக்கு குழந்தை பாக்கியமில்லை. அவரே மனந்திருந்தி அப்பெண்ணுக்கு வாழ்க்கை தர விரும்பியபோது அதையும் நடத்தி வைத்தோம். அப்படியெல்லாம் எங்கள் நட்பு நீடித்தது.

தமிழ்சினிமாவில் எழுபது- எண்பதுகளில் மிக அருமையான கதையம்சம் கொண்ட படங்களின் மூலம் திரைமொழிக்கு அவங்க செய்த பங்களிப்பு மிகவும் சிறப்பானது.

கிருஷ்ணன் -பஞ்சு

ஒரு 19 வயசுப்பையன் 14 நாட்களாக படப்பிடிப்புக்கு வந்து காத்திருக்கிறான். அவனுக்கு உரிய சீன் வரவில்லை. 14வது நாள் அழைப்பு. போலீஸ் வேடத்துக்கு ஒரு பையனைக் கேட்டோமே வந்திருக்கானா என்றார்கள்.  அவன் ஓடிப்போய் நின்றான். ‘எங்கப்பா சைக்கிள்? போலீஸ் வேடத்துக்கு சைக்கிள் வேணுமே’ என்று கேட்கப்பட்டது. அவன் அம்மா இவனிடம் சைக்கிள் மட்டும் ஓட்டக் கத்துக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கியிருக்கிறார். ‘சைக்கிள் இல்லையா? அப்பன்னா We will take the scene some other day’ என்று இயக்குநர் சொல்றாரு. பதறிப்போன பையன் ஓடிப்போய் பக்கத்து பெட்டிக்கடையில் நின்ற சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தான்.  சைக்கிளில் ஏத்திவிட்டு பையனை தள்ளி விட்டாங்க. அவன் ஓட்டிட்டுப் போய் அந்தப்பக்கம் விழுந்தான். டேக் டூ என்று சத்தம். அடுத்த டேக் எடுக்கும்போது.. திருடன் திருடன் என்று சத்தம் போட்டுக்கொண்டு ஒருத்தன் ஓடிவந்தான். டைரக்டர் சொன்னார்: Tell him that his cycle is acting!இரண்டாவது டேக் ஓகே ஆனதும் சைக்கிளை உரிமையாளர் கிட்ட கொடுத்துட்டு 14 நாட்களாகக் காத்திருக்கும் விவரத்தை சொல்லி மன்னிப்பு கேட்டுகிட்டான். அந்த சைக்கிள் பிஎஸ் ஏ சைக்கிள்! இன்னிக்கு ஆடி கார் மாதிரி அது! அவ்வளவு மதிப்பு!  அந்தப் படம் சதி லீலாவதி! இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கன். ஆண்டு 1936. போலீசா நடித்த பையன் யாருன்னு சொல்லணுமா? எம்.ஜி.ஆர்!  அந்த சைக்கிளுக்கு சொந்தக்காரர் பெயர் கிருஷ்ணன்! பின்னாளில் கிருஷ்ணன் - பஞ்சு  என அறியப்பட்ட இரட்டை இயக்குநர்களில் ஒருவர்.

நாற்பதுகளில் இருந்து எண்பதுகள் வரைக்குமான காலகட்டத்தில் மாறும் ரசனைக்கு ஏற்ப கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தொடர்ந்து திரைப்படம் இயக்கியவர்கள் கிருஷ்ணன்- பஞ்சு. கடைசிவரை இணைபிரியாது இயங்கிய இயக்குநர்களும் இவர்கள்தான். இதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு புதிய படம் வெளியாகும்போதும் முதல்நாள் ஆறுமணி ஷோவுக்கு டிக்கெட் வாங்கி உட்கார்ந்திருப்பார்கள். என்ன மாறுதல் நடக்கிறது என்று அறிந்துகொள்வார்கள்.

கிருஷ்ணன் ஆந்திராவில் புத்தூர் அருகே கார்வெட்டி நகரைச் சேர்ந்தவர். இவரது ஒரு சகோதரியை இயக்குநர் பீம்சிங் திருமணம் செய்தார். இன்னொரு சகோதரியை இயக்குநர் பஞ்சு என்கிற பஞ்சாபகேசன் திருமணம் செய்திருக்கிறார்.

கோவையில் பக்ஷிராஜா ஸ்டூடியோவில் (கந்தன் ஸ்டூடியோ) லேப் பொறுப்பாளராக இருந்தார் கிருஷ்ணன். கும்பகோணம் அருகே பிறந்தவரான பஞ்சாபகேசன், ராஜா சாண்டோ, எல்லிஸ் ஆர் டங்கன் ஆகியோரிடம் எடிட்டிங் உதவியாளராகப் பணியாற்றினார். இவர்கள் இருவரும் ராஜா சாண்டோவின் ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன் என்ற படத்தில் பணியாற்றியபோது நண்பர்கள் ஆனார்கள். 1944-ல் வெளியான பூம்பாவை இவர்களது முதல்படம். பியூ சின்னப்பா- பானுமதி (அறிமுகம்) நடித்த ரத்னகுமார் படம் இவர்கள் இயக்கியதுதான்.

அறிஞர் அண்ணா எழுதிய நல்லதம்பி, கலைஞர் கருணாநிதி இயக்கத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி ஆகியபடங்களும் இவர்கள் இயக்கம்தான். அந்தப் படத்தின் புகழ்பெற்ற நீதிமன்ற வசனத்தை நான்குமுறை அழகுபடுத்திக் கொடுத்தார் கலைஞர். எப்படி தமிழ் சினிமாவில் வசனத்துக்குப் புகழ்பெற்ற பராசக்தியை இவர்கள் இயக்கினார்களோ அதே போல வசனத்துக்காகப் புகழ்பெற்ற ரத்தக்கண்ணீரும் இவர்கள் படம்தான். சுமார் 50 படங்கள் வரை இயக்கி இருக்கிறார்கள்.

அவர்கள் இயக்கிய படத்தில் அன்னை படம் முக்கியமானது. இன்றுவரை வளர்ப்புத்தாய் மகன் பாசத்தைக் காட்டக்கூடிய ஒரு படம் இதற்கு நிகராக வரவில்லை. குழந்தை இல்லாத பானுமதி, தங்கையின் குழந்தையை தத்து எடுத்து, படம் முடிகையில் அந்த பையன் நீ என் அம்மா இல்லை என்று சொல்ல உணர்ச்சிப் பிரவாகமெடுக்கும் படம் அது.

இன்னொரு படம் தெய்வப்பிறவி. கட்டட மேஸ்திரியாக இருக்கும் சிவாஜி கணேசன் தன் தர்மபத்தினி பத்மினியை சந்தேகப்படுகிறார். எங்க அக்காவை எப்படி சந்தேகப்படலாம் என்று மைத்துனர் எஸ்.எஸ்.ஆர். சட்டையப்பிடித்து சிவாஜியைக் கேட்கிறார். அறைந்தும் விடுகிறார்.

பக்கத்திலிருக்கும் பத்மினி, நீ எப்படி என் கணவனைக் கேட்கலாம் என்று குடையால் அடி அடியென்று அடித்து எஸ்எஸ்ஆரை துவைத்துவிடுவார். ஒரே ஷாட்டில் எடுத்த காட்சி. மூன்று நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார். அந்த காட்சி இன்றைக்கு வரலாறு.

சிவாஜி, சௌகார் ஜானகி, அவர்களுடன் நான் நடித்த உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது நாளன்னிக்கு இறுதிக்காட்சி என்றார்கள். எனக்கு கணகணவென்று இருந்தது. சௌகார் ஜானகி வந்து தொட்டுப் பார்த்துவிட்டு என்ன காய்ச்சலா என்றார். ஆமாம். இறுதிக்காட்சியில் பிரம்பால் சிவாஜியிடம் அடிவாங்க வேண்டுமாம் என்றேன்.

“ஏம்பா நாளன்னிக்குத்தானே அந்த சீன்? இப்பவே ஏன் ஜுரம்?”

“நான் உள்ளே போய்ப்பார்த்தேன். வரிசையாக பிரம்புகளை மாட்டியிருந்தார்கள். ஏன்யா இத்தனை பிரம்பு என்றேன். ஒரு பிரம்பு முறிந்துவிட்டால் இன்னொன்று வேண்டும். அந்நேரத்துக்குக் கடைக்குப் போகமுடியாதே என்றார்கள். எனக்கு பயத்தில் காய்ச்சல் வந்துவிட்டது. சிவாஜியும் டேய் கவுண்டரே.. நான் நடிப்பேனோ இல்லையோ.. அடி மட்டும் பிச்சி எடுத்துடுவேன் என்று சொல்லிவிட்டார்” என்றேன்.

அதுபோலவே அந்த காட்சியும் நெருப்பு பறப்பதாக அமைந்துவிட்டது. சிவாஜி விளாசிவிட்டார்.

சௌகார் ஜானகி சிவாஜியை சட்டையைப் பிடித்து இழுத்துச்செல்வார். அப்போதும் விடாமல் அவர் அடிப்பார். (சூரியா கூட படத்த டிவியில் பாத்துட்டு மிரண்டுபோய் கேட்டான்: என்னப்பா இந்த அடி அடிச்சிருக்காங்கன்னு..)  அந்த காட்சியில் அவர் விட்ட உதையில் துள்ளி ஒரு சோபாவில் விழுந்ததில் என் தோள்மூட்டு இறங்கிவிட்டது. ராம் தியேட்டர் அருகே உள்ள 24 மணி நேர மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளித்தார்கள்.

அந்த படத்தின் அடுத்த காட்சியில் ஒரு பேக்டரி எரியும். அதன் மேல் ஆகாயத்தில் என் அம்மா முகம் தெரியும்.’அம்மா நான் தப்பு பண்ணலம்மா’ என்று அழுதுகிட்டே நெருப்பில் நான் படியேறி நுழைஞ்சுடுவேன். ஐந்து நாட்கள் எடுத்த காட்சி அது.  பேக்டரி எரியும்போது 20 அடிக்கு எட்டவே அனல் அடிக்குது. கிட்டவே போகமுடியல. புரட்யூசரும் காமிராமேனும் ரொம்ப சூடா இருக்குதுங்கிறாங்க. கிட்ட போடாங்கறாரு இயக்குநர் பஞ்சு.  தண்ணிய மேல ஊத்திகிட்டு போயிட்டேன். உள்ளே போயி படியில ஏறணும். படியில ஒவ்வொரு கிரில்லுக்கும் பஞ்சை சுத்தி தீ வெச்சிட்டாங்க. ரெண்டு பக்கமும் எரியுது. படியே தெரியல.. போடாங்கறாரு இயக்குநரு. ஏறிட்டேன். உள்ளே போனா ஆக்சிஜன் இல்லாமல் மயங்கி விழுந்துட்டேன். பஞ்சு சார் ஓடிவந்து பையன் விழுந்துட்டாண்டான்னு தூக்கிவந்தார். (சும்மா இல்லை... இப்படியெல்லாம் ரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து நடிச்சிருக்கமாக்கும்! ஆனா படம் வெளிவந்தபிறகு தியேட்டருக்கு போனா உண்மையான நெருப்பு இல்ல. ஜிகினா பேப்பரை வெச்சு ஃபேன் காத்தில் ஆடவிட்டுருக்காங்க  என்று ஒருத்தன் பாத்துட்டு சொல்ல எனக்கு அழுகையே வந்துட்டுது)

எந்த படைப்பாளிக்கும் தான் வாழ்ந்தது போதும் என்று நினைப்பு வருவதில்லை. 1984-ல் பஞ்சு சார் சிஐடி நகரில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஏற்கனவே ஒல்லியான நபர். ரெண்டு கன்னக்குழிகளும் மேலும் குழியாகி உட்பக்கம் தோல்ஒட்டியிருக்கிறது. எலும்பை தோல் மூடியிருக்கிறது. மூச்சுவிட பெரும் சிரமப்படுகிறார். நான்  மருத்துவரைப் பார்த்துக் கேட்டேன். அதிகப்படியான புகைப்பழக்கத்தால்  நுரையீரல் பாதிக்கப்பட்டுவிட்டது. இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். இப்பவே இறந்துவிட்டால் அவர் லக்கி. நாளை என்றால் அதுவரை சிரமப்படுவார் என்றார். என்னப் பார்த்ததும் பஞ்சு சார் சொல்றாரு: என்ன இப்படி ஆயிடுச்சேன்னு பாக்கறியா.. நீங்கள்லாம்  கைவிட்டுட்டீங்க... இப்ப டைரக்ட் பண்ண சான்ஸ் கொடு. உடனே எழுந்துவர்றேன்’ என்றார். படைப்பாளிக்கு உயிர் போகும் வரை கலைத்தாகம் போகாது.

கிருஷ்ணன் சாரும் ஒல்லியாகத்தான் இருப்பார்.

செட்டுக்குள் வந்து பேசாமல் உட்காந்துக்குவார். ஒரு வார்த்தை பேசமாட்டார். கோபாலபுரத்தில் வீடு. ஏவிஎம் ஸ்டூயோவில் ஷூட்டிங் என்றால் வீட்டில் இருந்து நடந்தேதான் போவார். உடம்பில் தசையே இருக்காது. 90 வயதுவரை வாழ்ந்தார்.

எனக்கு அவர் சொன்ன முக்கியமான விஷயம்: ஒரு ரூபாய் சம்பாதித்தவுடன் 35 பைசா உன் பணம் இல்லை என்று தனியாகப் பிரிச்சு சேமித்துவிடு. அதுதான் இன்கம்டாக்ஸ் என்றார். இன்னொரு விஷயம்: நடிக்கும்போது அந்த பாத்திரமாக உன்னை நினைத்துக் கொள். நான்தான் அது என்று உருவேற்றிக்கொள் என்பார்.

பஞ்சு சார் பயங்கர முன்கோபி. கடுமையாகத் திட்டுவார். பராசக்தியில் சிவாஜியையே திட்டியவர். அவர் ஓரமாகப் போய் அழும்போது அவரைத் தேற்றியவர் மேக்கப்மேன் முத்தப்பா. ஐஎன்ஏவில் இருந்தவர் அவர். ‘ஏம்பா இவங்க பியூ சின்னப்பா, பானுமதியையே இயக்கியவர்கள். அவர்கள் திட்டத் திட்ட திண்டுக்கல். வைய வைய வைரக்கல்’ என்று தேற்றுவாராம். இது 1952-ல். 1964-ல் சர்வர் சுந்தரம் வந்தபோது நாகேஷுக்கும் இதே கதைதான். அவர் திட்டுவாங்கி வருத்தப்படும்போது இதே முத்தப்பாதான் சிவாஜியை உதாரணம் சொல்லித் தேற்றினார். மூன்றாவது ஆள் நான். உயர்ந்த மனிதன் படப்பிடிப்பில் என் நடனத்தைப் பார்த்து திட்டினார். அப்போதும் சிவாஜி நாகேஷையே திட்டியவர் அவர் என்று தேற்றியவர் அதே மேக் அப் மேன் முத்தப்பா தான்! திட்டினாலும் ஆழ் மனதில் ஒரு பேரப்பிள்ளை போல என் மேல் பாசம் வைத்திருந்தார். அவர்கள் படத்தில் நான் நடித்த கடைசிப்படம் இதயவீணை.

என் புகைப்படத்தைப் பார்த்து தேர்வு செய்து நடிகனாக முதன் முதலில் அங்கீகரித்தவர்கள் கிருஷ்ணன் பஞ்சுதான். சித்ரா பௌர்ணமி படத்தின் பெயர். படம் வெளிவரவில்லை.

(எழுத்துவடிவம்: அசோக்)

ஏப்ரல், 2015.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com