எனது பலம் அவங்கதான்

எனது பலம் அவங்கதான்

உலகத் தமிழர்களால் அறியப்பட்டவர் சாலமன் பாப்பையா. இன்றைய மதுரையின் அடையாளங்களில் ஒன்று பாப்பையா.“அந்திமழை மனைவியர் சிறப்பு இதழுக்காக வந்திருக்கிறோம். உங்க மனைவி குறித்துச் சொல்லுங்களேன்” என்றதுமே “எனக்கு எலலாமே அவங்கதான்யா..” என்று நெகிழ்வுடன் ஆரம்பித்தார்.

“எம்.ஏ. முடிச்சிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் டியூட்டராக மூன்று ஆண்டுகள் இருந்தேன். அதுக்குப் பிறகு புதிய ஆளை நியமிச்சிடுவாங்க. ஆக, வேலை நிரந்திரமில்லாத நிலைமை. என் வீட்டின் பொருளாதார நிலையும் சரியில்ல. அப்போ எங்க ஐயாவுக்கும் வேலை கிடையாது. ஏழாயிரம் ரூபாய் வரை கடன் இருந்தது. அந்த நிலையில் எனக்கு பொண்ணு பார்த்தாங்க. அப்போ எனக்கு சம்பளம் 140 ரூபாய்.. வேலையும் நிரந்தரம் இல்லை. இந்த நிலையில எதுக்கு எனக்குக் கல்யாணம்னு  ஐயாகிட்ட கேட்டேன். ‘உனக்கு  பெண் பார்த்துட்டேன். பேசாம கல்யாணம் கட்டிக்க.. வாழ்க்கை நல்லா இருக்கும்’ ன்னு சத்தம் போட்டாரு.

ஒரு நாள் பொண்ணு வீட்டுக்காரங்க என்னைப் பார்க்க வந்தாங்க.. அந்த சமயத்துல வெளியே போயிட்டேன். வேற எங்க.. பஸ் ஸ்டாண்டிலதான். ஐயா என்னைத்தேடி வந்து, ‘என்னையும் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தலாம்னு நினைச்சியா’ என சத்தம் போட்டாரு. அவரோட கிளம்பினேன்.

என்னைப் பார்க்க வந்த பொண்ணு வீட்டுக்காரங்கள்ட்ட, ‘இவன் திறமைசாலி. பெரிய ஆளா வருவான்..’னு ஐயா பெருமையா சொன்னார். பெண்ணின் அண்ணன் ஜப்பானில் இருந்து வந்திருந்தார். 

பொண்ணு வீட்டுக்காரங்க முப்பது பவுன் நகையும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் தருவதாகப் பேசியிருப்பது பிறகுதான் எனக்கு தெரிஞ்சது. ‘இப்படி வாங்க நினைக்கிறதே தப்பு..’னு அவர் கிட்ட சத்தம் போட்டேன். அதுக்கு அவர், ‘அவங்க பிரியமா சொல் றாங்க..’ன்னு மழுப்பலா சொன்னார். அப்புறம் என்ன.. 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி கல்யாணம் நடந்தது. என் மனைவி பெயர் ஜெயாபாய்.

கல்யாணத்துக்குப் பிறகு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எங்களை அழைக்க மாமனார் வீட்டில இருந்து வந்திருந்தாங்க. ‘புது டிரஸ் நாங்க எடுத்துத் தரட்டுமா? இல்லை பணம் தந்திடறோம்’னு மாமனார் கேட்டார். என் மனைவி,  ‘ பணம் கொடுங்கப்பா. நாங்களே எடுத்துக்கிடறோம்..’னு சொல்லிட்டாங்க.

அப்போ தனிக்குடித்தனமெல்லாம் கிடையாது. நாங்க, ஐயா, என் அண்ணன் அவரது குடும்பம் என கூட்டுக் குடும்பம்.. எல்லோருக்கும் புதுத் துணியெடுக்க பொருளாதார வசதியில்லை. ஒரு நாள் என் வீட்டம்மா எங்கிட்ட வந்து புதுத்துணி எடுக்கலாம்ன்னு சொன்னாங்க. நானும் சரின்னேன். அதுக்கு அவங்க, ‘ ஐயாவுக்கும் உங்க அண்ணன் பிள்ளைகளுக்கும் புதுத்துணி எடுப்போம். நாம புதுத்துணி கட்டல்லேன்னாலும் பரவாயில்லீங்க. அவங்க புதுசு கட்டி நாம பார்க்கிறதுல தாங்க மகிழ்ச்சி’னு சொன்னாங்க. கல்யாணமாகி நாலஞ்சு மாசத்தில ஒரு பொண்ணு இப்படி சொல்லுமா? நான் நெகிழ்ந்து போயிட்டேன். ஐயாவுக்கும் குழந்தைகளுக்கும் துணியெடுத்தோம். அவங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.

கிறிஸ்துமஸூக்காக மாமனார் வீட்டிற்குப் போனோம். கிறிஸ்துமஸ் அன்றைக்கு எல்லோரும் புதிய துணி கட்டியிருக்க, எங்களையும் ‘புதிய துணி கட்டுங்க’னு சொன்னாங்க. உடனே சமாளிச்சு, ‘பண்டிகைக்கு புதுசு கட்டற வழக்கமெல்லாம் எங்கிட்ட இல்லீங்க..’னு சொன்னேன். உடனே என் மாமனார் புது வேட்டி ஒன்றை கொடுத்தாரு. அதைக் கட்டிக்கிட்டேன்.

என் வீட்டம்மா பழைய சேலை கட்டறதை பார்த்த அவங்க அம்மா, ‘என்னம்மா நீ புதுசு கட்டல்லே..’னு கேட்டதும், அவங்க, ‘நானும் அவரும் அடுத்த மாதம் பெங்களூரு போறோம். அங்க வாங்கிக்கிடலாம்’னு சாதுர்யமா சொன்னாங்க.. எனக்கு கண் நிறைஞ்சிடுச்சுங்க. வாழ வந்த வீட்டின் வறுமையைத் தெரிஞ்சு அதற்கு ஏற்றவாறு தன்னை ஆளாக்கிக்-கிட்டாங்களே..’னு பெருமையா இருந்துச்சு. உண்மையில எனக்கு அவங்க கிடைச்சது பெரிய வரம்..

கல்யாணமாகி ஒரு வருசத்தில  குழந்தை உண்டானுச்சு. அவங்க சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் கொண்டு போய் விட்டேன்.. ஒரு கட்டத்தில அருப்புக்கோட்டை மருத்துவமனை சரியில்லைன்னு மதுரை மிஷன் மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்தோம். தவிர கையில காசு இல்லை. ஐயாகிட்டயும் பணம் இல்லை..

மருத்துவமனையில இருந்து கவலையோடு கிளம்பினப்ப, ‘வாங்க...’ என என்னைக் கூப்பிட்டாங்க.. ‘ஆஸ்பத்திரியில சேர்த்துட்டீங்களே. பணத்துக்கு என்னச் செய்யப் போறீங்க..?’னு கேட்டபோது பதில் சொல்லமுடியல்ல. அவங்க சிரிச்சுக்கிட்டே, ‘கவலைப்படாதீங்க. எங்கிட்ட கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த ‘சிறுவாட்டு’ பணம், அலமாரியில மூணாவது தட்டுல பச்சை சேலை மடிப்புக்குள்ள பணம் இருக்கு. யாரிட்டேயும் இதைச் சொல்லவேண்டாம்..’னு சொன்னாங்க. வீட்டுக்கு வந்தப்ப பணம் இருந்துச்சு. நம்ம நிலைமை அறிந்து கொள்ளும் மனைவி கிடைச்சிருக்காங்கனு பெரிய பலம் கிடைச்சது.

நான் சம்பளம் வாங்கினதும் அப்படியே சம்பளக் கவரை அவங்ககிட்ட கொடுத்திடுவேன். செலவுக்கு வேணுமின்னா அவங்ககிட்ட கேட்டு வாங்கிக்கிடுவேன்.  அப்பல்லாம் எப்போதாவது கூட்டத்துக்குப் பேச ஐந்து ரூபாய் கொடுப்பாங்க. பஸ் கட்டணம், சாப்பாடு போக மீதி ஒன்றரை ரூபாய் இருக்கும். அதை அவங்ககிட்ட கொடுத்துருவேன். ‘வேண்டாங்க. நிறைய மேடைக்குப் போறீங்க. அதுக்கு படிக்கணும். புத்தகமெல்லாம் தேவைப்படும். மீதப் பணத்தில புத்தகம் வாங்கிக்கிடுங்க..’னு சொல்லுவாங்க. இன்றைக்கு வீட்டில நிறைய புத்தகம் இருக்குதுன்னா அதுக்கு காரணம் அவங்க தான்.

கூட்டங்களெல்லாம் இரவில்தான் நடக்கும் என்பதால் பல இரவுகள் வெளியிலேயே இருக்கவேண்டிய நிலை. அப்போதெல்லாம் குழந்தைகளைப் பார்த்துட்டு, வீட்டு தேவைகளையும் நிறைவேற்றிட்டு என் நிலையையும் அறிஞ்சுட்டு செயல்பட்டவங்க. அந்த புண்ணியவதியால் தான் இன்றைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கேன்.

முதல்தடவையாக எனக்கு அமெரிக்கா போற வாய்ப்பு கிடைத்தப்ப, கட்டாயம் நீயும் வந்தே ஆகணும்னு சொல்லிட்டேன். வந்தாங்க. ஜப்பானில் உள்ள அவங்க அண்ணன் வீட்டுக்கும் போனோம். அதுக்குப் பிறகு உலகநாடுகளெல்லாம் சுற்றிட்டு இருக்கேன். கூப்பிடுவேன். ‘நான் வரல்லீங்க.. உலக நாடுகளைப் பார்க்கிறதுல என்னங்க இருக்கு. குழந்தைகள், பேரன் பேத்தின்னு என் உலகம் இங்கேயல்லவா இருக்கு’னு மறுத்துட்டாங்க.

தொலைக்காட்சியில் நான் நடுவராக இருந்து நடத்துற பட்டிமன்றத்தை கவனமாகப் பார்ப்பாங்க. நல்லா இருந்தால் பாராட்டுவாங்க. இல்லைன்னா ‘இன்னைக்கு அவ்வளவு நல்லா இல்லையே..’னு சொல்லுவாங்க. அவங்க அற்புதமான விமர்சகர்.

சினிமாவில நடிக்க கூப்பிட்டபோதும் அவங்கிட்ட கேட்டேன். ‘சரி நடிங்க..’னு சிரிச்சுகிட்டே சொன்னாங்க. ஒரு சினிமாவில் நான் பேசிய வசனம் குறித்து விமர்சனம் வந்திடுச்சு. சிலர் கடிதமும் எழுதியிருந்தாங்க. அதை படித்த அவங்க ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. ‘நமக்கு இப்ப என்னங்க குறை. சினிமாவே வேண்டாங்க..’னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு ஐம்பது சினிமாக்களுக்கு வாய்ப்பு வந்தது. வேண்டாம்னுட்டேன்.

திருமணம் ஆன நாளிலிருந்து என் ஆடைகளை அவங்கதான் தேர்ந்தெடுக்காங்க. முன்பெல்லாம் விரால் மீன் குழம்பு, உளுந்தவடை போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவேன்.. மெனக்கட்டு செய்வாங்க.

எங்க குடும்ப வீட்டிலதான் அண்ணன் குடும்பமும் ஐயாவும் இருந்தாங்க. நான் தனியாக குடும்பத்தோடு இருந்தேன். ஒரு நாள் என் வீட்டம்மா எங்கிட்ட, ‘நமக்கு வீடு இருக்கு. ஓரளவு வசதியிருக்கு. உங்க அண்ணன் குடும்பத்துக்கு போதிய வசதியில்லை.. அவருக்கு நம்ம குடும்ப வீட்டை கொடுத்திடலாமே’னு சொன்னாங்க. நான் அதற்கு ஏதாவது மறுப்பு

சொல்லிடுவே னோன்னு நினைச்சு ‘உங்க அண்ணன்தான் உங்களை படிக்க வச்சவரு. மறந்திடாதீங்க..’னு அவங்க பக்க நியாயத்தை வலுப்படுத்தினாங்க. யாருங்க இப்படி சொல்வாங்க..? எங்க ஐயா இருக்கும்போதே அவரைக் கூட்டிட்டுப் போய் பத்திரம் பதிவு செய்து அண்ணனிடம் கொடுத்தேன். அவரே இதை எதிர்பார்க்கல்ல. ‘நீயும் குடும்பமும் நல்லா இருப்பீங்கடா..’னு மனசு நிறைய வாழ்த்தினார்.

சுருக்கமா சொன்னால், நான் மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடிச்சிருக்கேன்னா அதற்குக்காரணம் அவங்கதான். அவங்க இல்லாம நான் இல்லை..”

சொல்லி முடிக்கும்போது கலகலப் பேச்சின் ஆளுமையான பாப்பையாவின் கண்களில் வெந்நீர்! 

அக்டோபர், 2014.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com