என் கனவுப்பாதையில் துணை நின்றவர்கள்

என் கனவுப்பாதையில் துணை நின்றவர்கள்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழிலக்கிய வகுப்புகளில் படித்த போது இறக்கைகள் முளைத்து பறக்கத் தொடங்கிய வசந்தகாலப் பொழுது அது. கவிதைகளும், பேச்சுகளும் என்று தேடித் தேடி மேடைகள்தோறும் பேசி மகிழ்ந்து, எழுதிப் பார்த்து, எழுதிய கவிதைகளை வாசித்தும் புகழ் பெற புதிய வெளிச்சம், புதிய சிறகு என்று ஒரு இனம் புரியாத ஒன்று ஏற்படத் தொடங்கிய காலகட்டத்தில் திராவிட இயக்கக் கோட்டையாக விளங்கிய பச்சையப்பன் கல்லூரியில் முதல்முறையாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டார்.

நீண்ட பரபரப்பும், எதிர்பார்ப்பும், பதட்டமும், மகிழ்ச்சியும் என்று மாறி மாறிய தட்பவெப்பநிலையில் அன்றைய பொழுது சூட்டோடும், சுவையோடும் கலந்திருந்தது. அனலை வீசிச் சென்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வருகை, அவர்களின் மீதான பற்றை இன்னும் என் உள்ளத்திலே உறுதிப்படுத்தத் தொடங்கியது. பின்னாளில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, ‘வடக்கை வெல்லும் தெற்கு' என்கிற கவிதை நூலாக புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை நான் எழுதி ‘உட்லண்ட்ஸ் ஹோட்டலில்' கவிஞர் இளந்தேவன், நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர், அன்றைய அமைச்சர்கள் கண்ணப்பன், மதுசூதனன், சைதை துரைசாமி போன்ற பலர் கலந்து கொண்ட ஒரு மாபெரும் விழாவில், அரசியலுக்கான விதையும், வித்தும் விழுந்தது. அதற்கு உரமிட்டவர், அதற்கு அரணாக நின்றவர், என்னை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டவர் முத்தமிழ் வித்தகர் டாக்டர் கா.காளிமுத்து அவர்கள். அவர்தான் என் அரசியல் குருநாதர். அம்மாவிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியதும், அம்மாவிடம் மாநில இலக்கிய அணி பொறுப்புகளை வாங்கிக் கொடுத்ததும், எல்லா மேடைகளிலும் தனக்கு முன்பாகப் பேச வைத்ததும் என்று வாஞ்சையுள்ள அண்ணனாக இந்தத் தம்பிக்குப் பேருதவி செய்ததை காலமெல்லாம் நன்றி உணர்வோடு என் வாழ்க்கைப் பாதை முழுவதும் நினைத்துப் பார்க்கையில் என் கண்களில் ஒரு போதும் ஈரம் கசியாமல் இருந்ததில்லை.

டாக்டர் நாவலர் அவர்கள் எவரையுமே பரிந்துரைத்ததில்லை. அம்மாவிடத்திலே என்னைப் பரிந்துரைத்தார். புரட்சி உலகில் எழுச்சி மாநாடு மலர்க்குழுவின் உறுப்பினராக வாய்ப்புகளைப் பெற்றுத் தந்து இலக்கியத்திலும், எழுத்துக்களிலும் பயணம் செய்வதற்கு பேருதவியாக இருந்து உற்சா கப்படுத்தினார். முனைவர் பட்டம் பெற்றிருந்த நான், டாக்டர் கா.காளிமுத்து அவர்களிடம், தமிழ் வளர்ச்சித்துறையில் பணிவாய்ப்புகளை உருவாக்கித் தந்தால், நாளடைவில் இயக்குநராகவும், இந்திய ஆட்சிப் பணியாளர் வாய்ப்பைப் பெறுவதற்கும் காரணமாக அமைந்து, அரசின் உயர்ந்த அலுவலராக அடையும் இலக்கை பெறுவேன், அதற்கான வாசலைத் திறக்க முடியுமா என்று கேட்ட போது பேச்சும், எழுத்தும் உங்கள் வீச்சாக இருக்கிற போது நீங்கள் அமைச்சராக உயர்ந்து உங்களிடத்திலே இந்திய ஆட்சிப் பணியாளர்கள் பணியாற்றுவார்கள். ஆகவே அரசியலில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுங்கள் என்று அவர் சொன்னது எவ்வளவு சத்தியமான வார்த்தையாக இருந்தது என்பதை நினைக்காத பொழுதில்லை. பின்னாளில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவும், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை என்று 13இலாகாக்களுக்கு அமைச்சராகப் பணியாற்றிய போது, 20க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப்பணியாளர்களுடன் பணியாற்றியதையும் எண்ணிப்பார்த்து நான் நன்றியை நாளும், பொழுதும் சமர்ப்பித்துக் கொண்டே இருக்கிறேன். என்னை இந்த ஊருக்கு அடையாளப்படுத்தியது என்னைப் பெற்ற தாய், இந்த உலகத்துக்கு அடையாளப்படுத்தியது தமிழ்த்தாய், அரசியல் உலகத்தில் அறிமுகப்படுத்தியது புரட்சித்தலைவி அம்மா என்கிற தாய். இந்த மூன்று தாய்களுக்கும் என் வாழ்நாள் முழுதும் நன்றியை உரைத்துக் கொண்டே இருப்பேன்.

‘ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல'. வெட்டுப் பட்டு, வெட்டுப் பட்டுதான் ரப்பர் மரங்கள் பால் தருகின்றன. காயமோ, கண்ணீரோ, கவலையோ, சிரிப்போ எதுவரினும் பயணத்தைத் தொடர்கிறேன். இலக்கியமும், அரசியலும் என இரு கண்களாகப் பயணிக்கிறேன். கடந்து வந்த பாதையில் தோளோடு தோள் நின்று உதவியவர்கள் ஏராளம். மார்பிலும், முதுகிலும் குத்தியவர்கள் தாராளம் என்றாலும், தாக்குதலையும், தழுவுதலையும் ஒன்றாகக் கருதி பயணம் தொடர்கிறது. பாதை விரிகிறது.

அக்டோபர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com