என் நான்கு வாசகர்கள்!

என் நான்கு வாசகர்கள்!

எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படித்தான் வாய்த்திருக்குமாவெனத் தெரியவில்லை. எனக்கு இப்படியான அபூர்வ வாசகர்கள் வாய்த்திருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு மந்தமான காலையில் பெங்களூரிலிருந்து வீட்டிற்கு வந்து,

‘‘பேரு கீதா சார், சொந்த ஊர் ஊத்துக்குளி. இப்போ பெங்களூர்ல ஐ.டி. ல வேலை பாக்கறேன். உங்க ஒவ்வொரு எழுத்தையும் அங்குல அங்குலமா வாசிச்சிருக்கேன்'' என பேசிக்கொண்டே அவர் கொண்டு வந்திருந்த பையிலிருந்து எனக்கு வாங்கி வந்திருந்த உடைகளை எடுத்து மேசையில் வைக்க, நான் அப்பெரிய பையில் மீதியிருந்த உடைகளை பார்ப்பதை கவனித்து, ‘‘இதுவா சார்? இது காயத்ரி கேம்யூஸ் என்ற உங்கள் ஓவிய ஸ்நேகிதிக்கு...

இந்த புடவை பாட்டுக்கார லட்சுமி என்ற துக்கத்தின் தேவதைக்கு...

இது பினி பாஸ்கர் என்ற அப்புகைப்படக் கலைஞனுக்கு...'' அவர் அடுக்கிக்கொண்டே போக சட்டென கண்கள் நிறைந்து கீதாவை மங்கலாகப் பார்த்தேன்.

அவர்கள் எல்லாம் என்  ‘19.டி.எம். சாரோனிலிருந்து'

 புத்தகத்தில் வரும் நிஜப்பாத்திரங்கள்.

 ஒரு எழுத்தாளனின் கதாபாத்திரங்களுக்கும் சேர்த்து துணிகள் வாங்கி வந்த கீதாவின் மனநிலையை என்ன யோசித்தும் புரிந்து கொள்ளமுடியவில்லை. கீதா பழனிச்சாமி பிறகு கீதா சுரேஷ் ஆனபின்பும் இன்றளவும் அவர்களின் அன்பில் ததும்புகிறது 19.டி.எம்.சாரோன்.
‘‘பவா இப்ப நான் எங்கயிருக்கேன்னு சொல்லுங்க?'' என்ற தொலைபேசி குரல் முன்பு எப்போதோ கேட்டமாதிரி இருந்தாலும் அடையாளப்படுத்த முடியவில்லை. அதற்கு அவகாசம் தராமல் நான்,   ‘ஸ்ரீ' என்கிறேன்.

 அக்குரலும் அம்மனுஷியும் எனக்கு பரிச்சயமானதுதான். எப்போதும் படைப்பாற்றல் தெறிக்கும் ஒரு கட்டிடப் பொறியாளர் ஸ்ரீ.

 பெங்களூரிலிருந்து பணி செய்ய கோவை வந்திருந்தபோது வாழ்வைப்பற்றிய அதுவரை வகுத்திருந்த எல்லா வரையறைகளையும் மீறத்தலைப்பட்டவர்.

 காற்று மாதிரி சுதந்திரமாய் பயணங்களில் சுற்றித் திரிபவள். ஒரு கட்டுவிரியன் பாம்பை கழுத்தில் மாலையாய் போட்டு காட்டில் அலையும் ஸ்ரீயின் ஒரு புகைப்படம் என் சேகரிப்பில் உண்டு.

 ‘‘சொல்லு ஸ்ரீ.''

 ‘‘நான் எங்க நிக்கறேன்னு நீங்க சொல்லவேயில்ல''

 ‘‘எனக்கெப்படி தெரியும் ஸ்ரீ?''      

‘‘போன வாரம் நீங்க வந்து பேசின மதுரை அமெரிக்கன் கல்லூரி மரத்தடி''

‘‘ஏன்?''

‘‘சும்மாதான், நம்ம தல நின்ன மரத்தடி எப்படியிருந்திருக்குன்னு உணரத்தான்''

ஸ்ரீ மாதிரியான மனுஷிகளை வாசகிகள் என்பதோடு என்னால் வரையறுக்கமுடியவில்லை. அதைத் தாண்டி வந்து அப்படைப்பாளியின் சுக துக்கங்களில், குடும்பத்தில், குழந்தைகள் மீது, தன் பிரியத்தை பூ மாதிரி தூவிக் கொண்டிருப்பவள்.ஒரு படைப்பாளிக்கு அவன் எழுதிய கதைகளுக்கு இப்படிப்பட்ட பூத்தூவல்களும் உண்டுதானே!

திருச்சூருக்கருகில் உள்ளடங்கிய முண்டூர் என்ற குக்கிராமத்தை நாங்கள் சென்றடைந்தபோது மணி இரவு 12.30

அடுத்த நாள் காலை தாமதமாக எழுந்தபோது எனக்காக யாரோ மூன்று பேர் நீண்ட நேரம் காத்திருப்பதாகச் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை.ஆனால் அது உண்மைதான். ஒருவர் சூர்யா மாஸ்டர். மற்றவர்கள் அவரின் சகாக்கள்.

என்னைப்பார்த்த விநாடி சூர்யா மாஸ்டர் பேச ஆரம்பித்தார். ‘‘தேசாபிமானியில் வரும் உங்கள் பத்தி படிக்கிறேன்.எத்தனை மனோகரமான கட்டுரைகள் அது.'' என் ஆச்சரிய பாவத்தை பார்த்தபடி  அவர் தொடர்கிறார். நான் மறந்துபோன என் கதாபாத்திர நண்பர்களை என் கண்முன்னே கொண்டுவருகிறார். எழுத்தின் சுழிப்பு ஒரு நதியின் சுழிப்பைவிட சுதந்திரமானது என்பதை தன் ஐம்பது வருட வாசிப்பனுபவத்திலிருந்து பகிர்கிறார்.

தன் டூ விலரில் என்னைப் பின்னால் உட்காரவைத்து அச்சிறு கிராமத்தை சுற்றிக் காண்பிக்கிறார். தன் வீட்டின்  முற்றத்தில் காய்ந்த மிளகு, தேங்காய் என சகலத்தையும் எங்கள் வண்டியில் நிறைத்த அவ்வாசக மனம் இன்றளவும் என்னைத் திகைக்க வைப்பது.

கடந்தவாரம்  கைரளி தொலைக்காட்சியிலிருந்து நண்பர் பிரதிப் நாராயணன் ஒரு அதிகாலையில் அழைத்து கே.ஆர்.வினயன் என்ற அந்த புகழ்பெற்ற புகைப்படக்காரரின் திருவண்ணாமலை வருகையைப் பற்றி சொன்னார். இவ்வுரையாடல் முடித்து தொலைபேசியை  தனிப்பதற்கு முன் வினயன் தன் இரு தோழர்களோடு என் வீட்டிலிருந்தார்.

அடூரில் தொடங்கி மோகன்லாலின் ஒடியன் படம்வரை தான் புகைப்பட காரனாக பணியாற்றிய படங்களின் அனுபவ பகிர்தலில் நாங்கள் திளைத்திருந்தப்போது, மென் சுபாவமும், ஒரு புன்னகையால் உலகின் எல்லாப் பரிமாற்றங்களும் சாத்தியமே என உறுதியாய் நம்பியவருமான அனில் எங்களுக்கு கை சூட்டினூடே அறிமுகப் படுத்தப்பட்டார். அனில் மலையாளத் திரைப்படங்களுக்கு எழுதும் எழுத்தாளர். அவர் வசனம் எழுதிய படம் தான் கடந்த ஆண்டு  தேசிய விருது பெற்ற திலீப் நடித்த படம். தேர்ந்த இலக்கிய வாசிப்பாளன். எங்கள் உரைச்சக்கரம் சுழன்றது.

 மதிய உணவு வேளை வரை சக்கரம் நின்றபாடில்லை. என்னைப் பற்றிய அறிமுகத்தை ஷைலஜா மலையாளத்தில் கடத்தினாள். பேச்சினூடே மலையாளத்தில் ராஸ்பெரி பப்ளிகேஷ்ன்ஸ் சார்பில் வெளிவந்திருக்கும் என் எல்லா நாளும் கார்த்திகை, நட்சத்திரம் ஒளிந்துகொள்ளும் கருவறை கதாபாத்திரங்களையும் கேட்டபோது துள்ளிக் குதித்த அனில் அந்த உயரம் குறைந்த நாற்காலியிலிருந்து எழுந்து என் கைகளை இறுக்கிக் கொண்டார்.

‘‘சார் என் குரல் ஞாபகமில்லையா ?''

""....''

‘‘நான் அனில், உங்கள் சிறுகதைகளை மலையாளத்தில் படித்து முடித்த பின்னிரவில் உங்களை அழைத்து எனக்கு தெரிந்த அறைகுறைத் தமிழிலும் மலையாளத்திலும் சிக்கித்தவித்து மொழி வெளிவராமல் தவித்தேனே...''

என் காதுகளில் அப்பின்னிரவின் விசும்பலும், உரையாடலும் பிசிறின்றி மீண்டும் ஒலிக்கத் துவங்கியது.

‘‘ஓ. அந்த அனிலா நீங்கள்? உலகம் எத்தனை சின்னது அனில்.?''

‘‘ஆம் பவா சார். நான் எப்போதும் கனவிலும் நினைத்ததில்லை, உங்களை இப்படி ஒரு அசாத்தியமான சந்திப்பில் கைகோர்ப்பேனென''

 கீதா, ஸ்ரீ, சூர்யா மாஸ்டர், அனில் மாதிரியான வாசகர்கள் தான் என் ஜீவிதத்தை சதா ஈரமாக்கி வைத்திருப்பவர்கள்.

ஜனவரி, 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com