என்னுடைய ஏடிஎம் கார்டு அவரிடம்  தான் இருக்கும்!

என்னுடைய ஏடிஎம் கார்டு அவரிடம்  தான் இருக்கும்!
Published on

எனக்குத் திருமணமாகி இந்த மாதத்துடன் முப்பத்து ஐந்து வருடங்கள் ஆகிறது. பொதுவாக வீட்டிலிருக்கும் சமயங்களில் அனைவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். அன்றைக்கு நடந்த நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக் கொள்வோம். அலுவலகத்தில் நடந்த விஷயங்களை நான் சொன்னால், வீட்டில் நடந்த விஷயங்களை என்னுடைய மனைவி வசந்தி சொல்வார்.

என்னுடைய முழு சம்பளம் என்னவென்று என் மனைவிக்குத் தெரியும். என்னுடைய ஏடிஎம் கார்டு அவரிடம் தான் இருக்கும். வீட்டு செலவை அவர் தான் பார்த்து கொள்வார்.

எங்கள் இருவருக்கும் இடையில் சரியான செய்தி பரிமாற்றம் இருக்கும். என்னுடைய வேலையின் முக்கியத்துவம் அவருக்கு தெரியும். நேரத்திற்கு வீட்டிற்கு வரமுடியவில்லை என்றாலோ, அல்லது இரவு அலுவலகத்திலேயே தங்க வேண்டும் என்றாலோ அதற்கான காரணம் அவருக்கு தெரியும்.

வீட்டு வேலைகளும் அவ்வளவு சுலபம் இல்லை என்பது எனக்குத் தெரியும். வீட்டிற்குத்தேவையான பொருட்களை வாங்குவது, மகனை பார்த்துக் கொள்வது, உறவினர்களை பார்த்துக்கொள்வது என அத்தனை வேலைகளையும் அவர் கவனித்துக் கொள்வார். 

திருமணத்திற்கு முன்பாக அவ்வளவு நன்றாக உடை அணிய மாட்டேன். திருமணத்திற்குப் பிறகு தான் நல்ல உடைகளை அணிகிறேன். எனக்கான உடைகளை அவர் தான் தேர்வு செய்து, தையல் கடையில் கொடுத்துத் தைத்துக் கொடுப்பார்.

என்னுடைய உடம்பு, உடை என இரண்டும் திருமணத்திற்குப் பிறகு மாறியிருப்பதாக நண்பர்கள் சொல்வார்கள். இதற்குக் காரணம் என் மனைவி தான்.

பொதுவாக திருமண வாழ்க்கையில் கணவன்  மனைவி இருவருக்கும் இடையில் சில விஷயங்கள் ஒத்துப் போகாமல் இருக்கலாம். அதைப் பெரிது படுத்தாமல், ஒத்துப் போகாத விஷயத்தை இருவரும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். விட்டுக் கொடுத்து, ஒத்துப் போக வேண்டும்.

ஆகஸ்ட், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com