ஏன் சீரியலுக்கு எழுதுகிறேன்?    - ப்ரியா தம்பி

ஏன் சீரியலுக்கு எழுதுகிறேன்?    - ப்ரியா தம்பி

என்னுடைய சீரியல் வாழ்க்கை ஆரம்பித்து சரியாகப் பத்து ஆண்டுகள் ஆகின்றன. ‘வாவ், அந்த சீரியல் நீங்கதான எழுதறீங்க, ரொம்ப நல்லா இருக்கு, எப்படி எழுதறீங்க' என்கிற ஆச்சர்யம் ஒருபுறம்... ‘சீரியலா எழுதறீங்க. ஏன் எப்பவும் எல்லோரையும் அழ வைச் சிட்டே  இருக்கீங்க...', ‘சீரியல்லாம் எப்படித் தான் எழுதறீங்களோ' என்கிற நக்கல் மறுபுறம் என இருவிதமான விமர் சனங்களோடு தான் இந்த பத்து வருடங்கள் கடந்து போயிருக்கின்றன.

நான் ஒரு மெகா சீரியல் எழுத்தாளரானது, எல்லோரும் சொல்வது போல் விபத்தாக நடக்கவில்லை. என் மகளின் இரண்டாவது வயதில், நான் அவளுக்கு ஒற்றைப் பெற்றோரானேன். நான் அவளோடு அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தது. நான் அப்போது பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். போக வர நேரம் சேர்த்து, 12 மணிநேரம் பகலில் அவளை நான் இல்லாது விடுவது இயலாததாக இருந்தது. எனக்கு அடிப்படையில் எழுதத் தெரியும், வீட்டில் இருந்தே எழுதுவதை அடிப்படையாகக் கொண்ட வேலை செய்ய முடியுமா என யோசிக்கத் தொடங்கினேன். குடும்பம் நடத்துவதற்கான ஓரளவு நல்ல பணமும் அதிலிருந்து கிடைக்க வேண்டும். இந்தத் தேடுதலில் தான் நான் சீரியல் ரைட்டராக வந்து சேர்ந்தேன்.

இயக்குநர் திருச்செல்வத்தின் பொக்கிஷம் என்கிற சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்தது. அதில்தான் வசனம் எழுதத் தொடங்கினேன். அவர் நண்பர் என்பதால் தொடக்கம் சிறப்பாகவே இருந்தது. தொடர்ந்து நண்பர் கவிதாபாரதி

சொல்லி, விஜய் டிவியில் தர்மயுத்தம் என்கிற சீரியலில் வசனம் எழுதினேன். சீரியலின் கிளிஷேக்கள் எதுவும் இல்லாமல் வித்தியாசமான தொடர் என பாராட்டைப் பெற்ற தொடர் அது. ஆனால் வழக்கமான சீரியல் ரசிகர்களால் அதைப் பின் தொடர முடியவில்லை. 100 அல்லது 120 எபிசோடுகளில் அது நின்றுபோனது. விஜய் தொலைக்காட்சியில் ‘ஃபிக்‌ஷன் ஹெட்' ஆக இருந்த ரமணகிரிவாசன் என்னை தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில்

வசனம் எழுத வைத்தார். ஆஃபீஸ், 7 சி என்கிற வித்தியாசமான சீரியல்களின் காரணகர்த்தாவாக இவர் இருந்தார். இப்படி தொடக்கத்தில் எனக்கு உதவி செய்தவர்கள், நான் இங்கே நிலைத்து நிற்பதற்கு முக்கியமான காரணம்.

பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட, அதிகம் பெண்களை நேயர்களாக கொண்ட மெகா சீரியல்களின் கதை உருவாக்கம், இயக்கம் என முழுக்க தீர்மானிப்பது ஆண்கள் தான். பெண்கள் இப்போதுதான் வரத் தொடங்கி இருக்கிறார்கள். ஜா.தீபா, தமயந்தி, பத்மாவதி, என பெண்கள் இப்போது முன்னணி தொடர்களின் திரைக்கதைகளில் பணியாற்றுகிறார்கள். நான் எழுதத் தொடங்கும்போது, ‘‘நாங்க ஆம்பிளைங்க ஸ்கிரிப்ட் பண்ணா, ஜாலியா அப்படியே ரூம்ல டிஸ்கஸ் பண்ணுவோம். லுங்கி கட்டிக்கிட்டு, தம் அடிச்சிட்டு, சரக்கு அடிச்

சிட்டு டிஸ்கஸ் பண்ணுவோம். நீங்க ஒர்க் பண்ண வர்றதால காஃபி ஷாப்ல இப்படி உக்காந்து பேச வேண்டி இருக்கு பாருங்க'' என சின்னச் சின்ன கிண்டல்களை நான் கேட்டிருக்கிறேன்.

பொதுவாகவே சீரியல், சினிமா இரண்டில் இருப்பவர்-களின் உலகமும் இருட்டினால் வடிவமைக்கப்-பட்டது. இரவில் மட்டுமே நம்மால் சிந்திக்க முடியும், இரவில் மட்டுமே படைப்பூக்கம் கிட்டும் என்கிற ஒரு மாயை இங்கே இருக்கிறது. நான் முதலில் வசனம் தான் எழுதினேன் என்பதால், திரைக்கதைக்கு நான் இவர்களை சார்ந்தே இயங்க வேண்டி இருந்தது. அடுத்த நாள் படப்பிடிப்புக்கான காட்சிகளை முந்தைய நாள் இரவு பத்து, பதினொரு மணிக்கே முடிவு செய்வார்கள். அதன்பிறகே அது என்ன காட்சி என்பதை விளக்குவார்கள். அதன்பிறகு விடியவிடிய எழுத வேண்டும். இரவு தூக்கம் என்பது இல்லாமலே ஆனது. விடிந்ததும் குழந்தை, பள்ளிக்கூடம், சமையல், வீட்டுவேலைகள் என பகலிலும் அதிகம் தூங்க வாய்ப்பதில்லை. ஆண்கள் இந்த வீட்டு பொறுப்புகளில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவதால், அவர்களுக்கு இரவில் வேலை செய்வது அதிக பாரமாய் இருக்காது.

தொடர்ந்து ஒரே மாதிரியான வசனங்கள் எழுதியும், தூக்கம் இல்லாமலும் எனக்கு சீரியல் போரடிக்கத் தொடங்கியது. என் மகளும் ஒன்றாம் வகுப்புக்கு போகத் தொடங்கியிருந்தாள். நான் மீண்டும் ஆனந்த விகடனுக்கு வேலைக்குப் போகத் தொடங்கினேன். அப்போதுதான் விகடனில், ‘பேசாத பேச்செல்லாம்' என்கிற தொடரை எழுதினேன். பெண்கள் பற்றிய தொடர் அது. அந்த தொடரை படித்து விட்டு எங்கெங்கு இருந்தெல்லாமோ பெண்கள் எனக்கு ஃபோன் செய்வார்கள். அத்தனை கடிதங்கள் வரும். என் வட்டத்தில் இல்லாத, என் வட்டத்தில் நான் பார்க்காத வேறுவிதமான வாழ்க்கை கொண்ட பெண்கள் அவர்கள். பெண்களின் வாழ்க்கை நிஜத்தில் இப்படியிருக்க எந்த மாதிரியான பெண்களை சீரியலில் காட்டுகிறார்கள் என்கிற எண்ணம் மனதில் தோன்றியது. நிஜமான பெண்களை சீரியலில் காட்ட வேண்டும் எனில், சீரியலின் கதை, திரைக்கதை நம்மிடம் இருக்க வேண்டும் என்கிற தெளிவு வந்தது. இந்த நேரத்தில் மகளை பகலில் பார்த்துக் கொண்டிருந்த என் அம்மா, ஊருக்குப் போக நேரிட, அவளை பள்ளியில் விட, அவளை பள்ளியில் இருந்து அழைத்து வர, நான் வீட்டில் இருக்கவும் வேண்டியிருந்தது. மீண்டும் சீரியலுக்கு வந்தேன்.

என்னை நம்பி வாய்ப்பு தரும் ரமணகிரிவாசன் அப்போதும் வாய்ப்பு தந்தார். விஜய் டிவியில் நான் திரைக்கதை, வசனம் எழுதிய மௌனராகம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் அது வங்கக்  கதையை தழுவிய ஒரு கதை. அதில் மூலக்கதையில் என்னால் அதிகம் மாற்றம் நிகழ்த்த முடியவில்லை. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என்கிற தொடர்களை என்னை நம்பி ஒப்படைத்தது. இதுதான் எனக்கான காலம்... பெண்கள் என்றாலே பழிவாங்குபவர்கள், மாமியார் & மருமகள் சண்டை என்கிற நெகட்டிவ் ஃபார்முலாக்கள் ஒன்றுகூட இல்லாமல் இந்த இரண்டு சீரியல்களும் இன்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. சீரியல் என்றாலே பெண்களை ஒருபக்கம் வில்லியாகவும், இன்னொரு பக்கம் செருப்பை விட கீழானவர்களாகவும் காண்பித்தாலே வெற்றி பெறும் என்கிற ஃபார்முலாவை நாங்கள் மாற்றி அமைத்தோம். இயல்பான குடும்பங்களை, இயல்பான பெண்களை காண்பித்து வெற்றியும் கண்டோம், தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

நானே திரைக்கதை எழுதும்போது இரவுகளில் தூங்காமல் வேலை பார்க்கும் அவசியம் இல்லாமல் போனது. ஹோட்டல்களில் அறை எடுத்து, சிகரெட் பிடித்து, நான்குபேரோடு விவாதித்தால் தான் கதை வரும் என்கிற மாயை இல்லாமல் ஆனது. நான் என்னுடைய வீட்டில் எனக்கு இருக்கும் அன்றாட பணிகளுக்கு இடையே தான் என்னுடைய திரைக்கதை, வசனத்தை எழுதுகிறேன். இப்படித்தான் இந்த வேலையை செய்ய முடியும் என எந்த வரையறையும் இல்லை என்பதை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

‘ஏன் சீரியல் எழுதறீங்க?' என நக்கலாக என்னைப் பார்த்து கேள்வி கேட்பவர்கள் யாருமே நான் என்ன வேலை செய்கிறேன் என ஒரு நாள் கூட பார்த்ததில்லை என்பதால் அவர்களுக்கு நான் பதில் சொன்னதே இல்லை. இங்கே சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, இன்று குடும்பங்களின் (கணிசமான ஆண்களையும், குடும்பங்களையும் உள்ளடக்கிய) மிகப்பெரிய பொழுதுபோக்கு சீரியல்கள் தான். இத்தனை கோடிபேர் காண்கிற தொடர்களில் என்னால் மிகச்சிறு மாற்றத்தையேனும் நிகழ்த்த முடியும் எனில், நான் ஏன் அதை செய்யாமல் இருக்க வேண்டும்? ஐடியில் வேலை செய்வதை விட, ஒரு வங்கியில் வேலை செய்வதை விட இந்த வேலை எந்த விதத்திலும் குறைந்து போகவில்லை. இன்னும் சொல்லப் போனால் நான் ஒரு சீரியல் ரைட்டராக இருப்பதன் மூலம் சமூகத்தில் ஒரு  சின்ன மாற்றத்தை, ரசனையில் ஒரு சின்ன வெளிச்சத்தை என்னால் நிச்சயம் கொண்டு வர முடியும். ஆகவே, நான் என் வேலையை மிக பெருமையானதாகவே உணர்கிறேன். எல்லாவற்றையும் விட இந்த வேலை எனக்கு தரும் பொருளாதார சுதந்திரமும், நேர சுதந்திரமும் வேறு எந்த வேலையோடும் ஒப்பிட முடியாதது.

நான் என்னுடைய சொந்த ஊருக்கு செல்லும்போது, அந்த நடிகை அப்படியாமே, நடிகைகள் மோசமாமே, அதில் எல்லாம் எப்படி வேலை செய்யிறீங்க என்கிற கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறேன். என்னுடைய வேலை என்பது பிற எந்த வேலைகளையும் விட பாதுகாப்பானது... தொலைக்காட்சியில் பொறுப்பில் இருப்பவர்களோடு கதை விவாதம் செய்து, முடிவு செய்து, எழுதி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பினால் முடிந்தது வேலை. படப்பிடிப்புத் தளத்திற்கு செல்வது கூட என் ஆர்வம் சார்ந்தது மட்டுமே. என்னுடைய எழுத்து தரமானதாக இருந்தால், என்னை அது இத்துறையின் உயரங்களுக்கு அழைத்து செல்லும். வேறு எந்த குறுக்கீடும் எங்கும் இல்லை..

‘பாக்கியலெஷ்மியை பார்த்தா என்னைப் பார்த்த மாதிரியே இருக்கு.. எப்படி ஒரு ஹவுஸ் ஒய்ஃபோட ஆதங்கத்தை எழுதறீங்க.'. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்தாலே அப்படி ஒரு பாசிட்டிவ்வா இருக்கு' என்பது போன்ற உரையாடல்களே என்னை தொடர்ந்து இயங்க வைக்கின்றன. நான் இல்லாவிட்டால் இவ்விரண்டும் நடந்திருக்காது, ஆகவே நான் தொடர்ந்து சீரியல்களை எழுதுகிறேன்.

இத்துறையில் இன்னும் இன்னும் பெண்கள் வரவேண்டும் என்றே தொலைக்காட்சி நிறுவனங்கள் விரும்புகின்றன. அவர்கள் திறமையோடு இருந்தால், அவர்களை அங்கீகரிக்கவும் தயாராக இருக்கின்றன. ஏனெனில் இங்கு திறமையும், உழைப்பும் மட்டுமே மூலதனம். தொடர்ந்து பெண்கள் நிறைய இதில் வந்தால், இன்னும் தொலைக்காட்சியில் நேர்மறை குடும்பங்களை, யதார்த்த முகங்களைக் காணமுடியும் என்று நம்புகிறேன்.

ஆகஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com