ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி! பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக வெற்றி!

ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி! பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக வெற்றி!

விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியும், அரசு மேல்நிலைப் பள்ளியும்தான் எனக்கு அடிப்படைக் கல்வியையும் வாழ்க்கைக் கல்வியையும் வழங்கின.

கிராமத்துப் பள்ளி என்றாலும் தொடக்கப்பள்ளியில் ஓரளவு நல்ல கட்டமைப்பு வசதிகள் இருந்தன. நல்ல ஆசிரியர்களும் இருந்தனர். ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையில் இரு பிரிவுகள் இருந்தன. இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை நான் படித்தது எல்லாம் மிகவும் கடுமையான ஆசிரியர்கள் எனக் கருதப்பட்டவர்களின் பிரிவுகளில். படிப்பில் காட்டிய சுணக்கத்தாலும், குட்டிச் சேட்டைகள் அதிகம் செய்ததாலும் வாரம் ஒருமுறையேனும் அடிவாங்குவது வழக்கம். அடி மட்டுமல்ல. நாற்காலி அமர்வு என்று ஒரு தண்டனை உண்டு. சுவரில் முதுகுப்பக்கம் சாய்ந்து முழங்காலை மடித்து நாற்காலி இல்லாமலேயே, நாற்காலியில் அமர்வது போல் இருக்க வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு மேல் அவ்வாறு இருக்க முடியாது. சேட்டைகள் செய்தால் அந்த பாடவேளை முடியும் வரை அவ்வாறு இருக்க வைத்துவிடுவர். தாங்க முடியாது. அதனாலேயே எனது சேட்டைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. அன்று, இல்லாத நாற்காலியில் அமர்ந்ததுதான், இன்று நல்ல நாற்காலியில் அமர வைத்தது எனக் கருதுகிறேன்.

தொடக்கப்பள்ளிக் காலத்திலிருந்த மதிய உணவுத் திட்டம் ருசிகரமான அனுபவம். அப்போது கோதுமை உப்புமாவும், அரிசிக் கஞ்சியும் மாற்றி மாற்றித் தருவார்கள். கோதுமை உப்புமாவைத் தவறாமல் வாங்கி உண்டுவிடுவேன். அரிசிக் கஞ்சி அவ்வப்போது. பள்ளி வராண்டாவில் வரிசையாக மாணவர்களை உட்கார வைத்து, உணவிடுவர். அனைவருக்கும் பரிமாறப்பட்ட பின்னர் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை' என்ற குறளை ஒருமித்து கூறிய பின்னரே, சாப்பிட வேண்டும்.

ஐந்தாம் வகுப்பு வரை மர இருக்கைகளில் அமர்ந்து படித்து வந்த சூழ்நிலையில், ஆறாம் வகுப்பில் தரையிலும், வராண்டாவிலும் மரத்தடியிலும் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த பள்ளி புதிதாக மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால், பதினொன்றாம் வகுப்பு தொடங்கப்பட்ட சூழ்நிலையில், ஆறாம் வகுப்பு மாணவர்களிடமிருந்த வசதிகள் பறிக்கப்பட்டன.

பள்ளிப் பருவம் என்றாலே விளையாட்டு இல்லாமல் போகாது. ஊருக்கு வெளியே மேல்நிலைப் பள்ளிக்குரிய மிகப்பெரிய விளையாட்டு மைதானமிருந்தது. பள்ளி நேரம் முடிந்ததும், விடுமுறை நாட்களிலும் மைதானமே கதி என்று இருந்திருக்கிறேன். பெரும்பாலான நாட்களில் விளையாட்டை முடித்துவிட்டு அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் மேலிருந்து குதித்து, நீந்திக் குளித்துவிட்டு வீட்டிற்கு வந்தால், ‘ராணுவ மரியாதையுடன்' வரவேற்பு கிடைக்கும். அதனையும் கடந்து, அந்த வழக்கம் தொடர்ந்தது. ஆனால், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலுமான சில போட்டிகளில் வெற்றி பெற்றது மட்டற்ற மகிழ்சியைத் தந்தது.

ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டேன். ஆனாலும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியின் முதல் மாணவனாக என்னை வெற்றி பெற வைத்ததற்கு முக்கிய காரணம் அறிவியல் ஆசிரியர் கோபால் சாமி அவர்களும், கணித ஆசிரியர் குருசாமி அவர்களும் தான். மாலையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவர். பல சமயம், அருகிலிருந்த தேநீர் கடையிலிருந்து வடை வாங்கித் தருவர். ‘வடை வந்திருச்சி' எனக் கொண்டாடுவோம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு மாணவனையாவது நானூறுக்கும் மேல் மதிப்பெண் பெற வைக்கத் தொடர்ந்து மெனக்கிட்டனர். முப்பது ஆண்டுகால பள்ளி வரலாற்றில் எவரும் 80  விழுக்காடு மதிப்பெண் பெற்றதில்லை. கடைசியில், அவர்களுடைய விருப்பத்தை ஈடேற்றும் முதல் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சீராக சென்று கொண்டிருந்த கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஒரு ஆசிரிருடன் படிப்பு தொடர்பாக பெரும் போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்தப் பள்ளியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அறிவியல் பாடப் பிரிவிற்கு விலங்கியல் பாட ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. தாவரவியல் ஆசிரியரே அந்த பாடத்தையும் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் காலாண்டுத் தேர்வுவரை அவர் ஒரு பாடம் கூட நடத்தவில்லை.  அதனால், காலாண்டுத் தேர்வில் விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாமல் வெற்று விடைத்தாளை மடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். என்னைப் பின் தொடர்ந்து, மற்ற மாணவர்களும், அவர்கள் எழுதிய விடைகளை அடித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டனர். அது மாவட்ட கல்வி அதிகாரி வரை பிரச்னையாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான் என்று ஒழுங்கு நடவடிக்கை வரை  சென்றது.

அதனால் காலாண்டுத் தேர்வு முடிந்த உடன் அந்தப் பள்ளியிலிருந்து விலகி, அருகிலிருந்த திருவேங்கடத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். ‘சேட்டை ஏதும் செய்யக் கூடாது' என்ற கடுமையான நிபந்தனையுடன்  சேர்த்துக் கொண்டனர். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்விலும், முதல் மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றேன்.

எல்லாம் கடந்து கல்லூரியில் சேரும் போதுதான் என் வெற்றியையை முழுமையாக உணர்ந்தேன். பல புகழ்பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களிலும் இருந்து வந்த மாணவர்களிடையே, கிராமத்திலிருந்த அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கற்ற மாணவனாக நான். என்னைப் போல் அரசுப் பள்ளியில் இருந்து பலரும் அங்கு வந்திருப்பதை  உணர்ந்தேன். அது அரசு கல்வி நிறுவனங்களின் தரத்தையும் சிறப்பையும் எடுத்துக் கூறுவதாகவே இருந்தது.

இரா.திருப்பதிவெங்கடசாமி, ஐ.ஏ.ஏ.எஸ் தலமை தணிக்கை அதிகாரி, மகாராஷ்டிரா

நவம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com