ஒரு சொர்க்கபுரி

ஒரு சொர்க்கபுரி

ஓ.ஏ.கே.சுந்தர்

நாடோடி பாட்டுக்காரன்' படம் மூலமாக மூலம் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளையும் ‘விருமாண்டி' வழியாக ‘குசேலன்',‘பேராண்மை', ‘வேலாயுதம்' , ‘தலைவன்', ‘விருமன்‘'என்று செஞ்சுரியைத் தாண்டி வந்திருக்கிறேன். இதில் சில கன்னட மலையாளப் படங்களும் அடக்கம்.

என்னைப் பொருத்தவரை சினிமாவில் பணம் என்பது நாம் அடைகிற வெற்றியின் உயரத்திற்கு ஏற்பவே இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு வெற்றி யாருக்கு எப்போது வரும் என்பது யூகிக்க முடியாதது

தான் சினிமாவின் சீக்ரெட். அப்படி காத்திருக்க வேண்டி வரும்போது எவ்வளவு தூரத்துக்கு தாக்குப்பிடித்து இதே துறையில் நிற்கிறோம் என்பதுதான் நம் முன்னே இருக்கும் சவால். இன்னொரு பக்கம் சக கலைஞர்களுடன், குறிப்பாக இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுவும் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் நாம் ஏற்கெனவே வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தை விட குறைவான தொகைக்கு அழைக்கக்கூடும். இன்னும் சில சந்தர்ப்பங்களில் திடீரென ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களால் சொன்ன சம்பளத்தைத் தர முடியாமல் போகலாம். அது போன்ற சந்தர்ப்பங்களில் அதைப் புரிந்துகொண்டு பெருந்தன்மையாக நடந்துகொண்டால் பொருளாதார ரீதியாக  சினிமா நிச்சயம் ஒரு சொர்க்கபுரிதான்.

நிறம் பார்ப்பார்கள்    

சரண்யா ரவிச்சந்திரன் (நடிகை)

‘ஆரம்ப நாட்களில் எல்லாம் நான் நடித்த சில படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரம் என்பது தெரியாமலேயே நடிக்கப் போயிருக்கிறேன். ஒரு நாளுக்கு 1000 ரூபாய் என்றால் கைக்கு 750தான் கிடைக்கும். இதெல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன்னால். இப்போது என் வருமானம் ஓரளவு நன்றாகவே உள்ளது. நல்ல கதாபாத்திரங்களும் கிடைக்கிறது.

ஆனால், சினிமா என்று முடிவெடுத்து விட்ட பிறகு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரங்களில் நடித்து கிடைத்த வருமானம் எல்லாம் போதுமானதாக இல்லை. அதனால், டப்பிங், ஷார்ட் ஃபிலிம்ஸ், விளம்பரங்களில் நடிப்பது என மற்றவற்றிலும் கவனம் செலுத்தி சினிமாவிலும் வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். பெரிய நட்சத்திரங்கள் என்றால் அவர்களுக்கு என்று ஒரு பிசினஸ் இருப்பதால் அவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், நமக்கு 5000 சம்பளம் என்றால் கூட கொடுக்க அவ்வளவு யோசிப்பார்கள்.

இதைத் தாண்டி நிறத்தை வைத்துக் கூட சம்பள பாகுபாடு காட்டுவார்கள். இதை எல்லாம் நான் எதிர்கொண்டிருக்கிறேன். நமக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து 10000 & 15000 சம்பளம் வாங்குவது என்பது பெரிய விஷயம்தான். அதனால்,

சினிமாதான் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால், அதில் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்கும் வரை வருமானத்திற்கென வேறு சில வேலைகளையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் என் அட்வைஸ். சினிமாத்துறை என்பது கவர்ச்சிகரமானது. அங்கு நாம் நீடித்திருக்க நம்மைப் பராமரிப்பதும், வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருவதும் தவிர்க்க முடியாதது. இதற்கெல்லாம் பொருளாதாரம் அவசியம்.

பணம் இல்லாத பயணம்

முன் குறிப்பு: இயற்பெயர் வெள்ளைத் துரை. ஊர் கோவில்பட்டி. சினிமா இயக்குனர் கனவில் சென்னைக்கு வந்தவர். முதலில் இயக்குநர் ஜீ.வி.ஐயர் இயக்கிய தேசிய விருது பெற்ற

'ஆதிசங்கரர்' (சமஸ்கிருதம்) படத்தில் உதவி இயக்குநர். பிலிம் எடிட்டிங் கற்றவர். காலம் இவரை பத்திரிகை துறைக்கு தள்ளிவிட்டது.‘தராசு‘ பத்திரிகையில் துணை ஆசிரியர். 1988 ஆம் ஆண்டு நக்கீரன் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியர். பிறகு பல பத்திரிகைகளிலும் காட்சி ஊடகத்திலும் பணியாற்றினாலும் தனக்கு தெரிந்தவர்களின் கதை விவாதங்களில் இடையறாது ‘கலந்துகொண்டு' வந்தவர். இரு வாரங்களுக்கு முன்பு

சத்தமில்லாமல் தன் பயணத்தை முடித்துக் கொண்டார்.

‘எந்த வேஷத்துக்கும் பொருத்தமற்றது

என் முகம்

சுற்றிச்சூழ

நடக்கிறது நாடகம்‘

இவரது ‘சந்நதம்' கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற சுய அறிமுகம் இது.

இறுதிப்பயணத்துக்கு ஓரிரு தினங்கள் முன்பு சினிமா பொருளாதாரம் குறித்து இவருடன் உரையாடியதிலிருந்து: ‘ஒரு நண்பர் ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பின் மூலம் ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டுக்கும் ஜி.வி அய்யருக்கும் தேசிய விருது பெற்றுத்தந்த ‘ஆதி சங்கரா' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அந்த அனுபவத்தின்போது பொருளாதாரம் குறித்து புகார் சொல்ல ஒன்றுமில்லை. ஏனெனில் நானும் அப்படத்தில் பணியாற்றிய இன்னொரு உதவி இயக்குநரும் அய்யர் வீட்டில் தங்கி, உணவு உண்டு, அவரது சொந்த பிள்ளைகளைப்போல்தான் பார்த்துக் கொள்ளப்பட்டோம்.

அவரிடம் மேலும் சில படங்கள் பணியாற்றிவிட்டு தமிழில் தனியாகப் படம் இயக்க முயன்றபோதுதான் பொருளாதாரச் சிக்கல் குறுக்கே நின்றது. கொஞ்சகாலம் சம்பாதித்துவிட்டு திரும்ப சினிமாவில் முயற்சிக்கலாம் என்று பத்திரிகைகள் பக்கம் திரும்பி பதுங்கிய புலியாக மாறி பின்னர் பாயவே இல்லை.

ஆனால் இப்போது வரை கதை விவாதத்திற்கு திரைத்துறையில் உள்ள நண்பர்கள் அழைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கதை விவாதம் 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும்.

சாப்பிடும் உணவு ஒரு பிளேட்டின் விலை 3000ரூபாய் வரை கூட இருக்கும். நாம் குடிக்கும் சரக்கின் விலை பல ஆயிரங்கள் மதிப்புடையதாக இருக்கும். எண்டவர் காரில் வீட்டில் வந்து டிராப் பண்ணுவார்கள். வீட்டுக்குத் திரும்பும்போது பணம் மட்டும் பத்துப்பைசா கூட இருக்காது.'

சமாளிக்கத் தெரிய வேண்டும்  

சுஜா (உதவி இயக்குநர்)

‘நான் அனிமேஷன் படிப்பு முடித்து விட்டு ஷார்ட் ஃபிலிம்ஸ், தொலைக்காட்சி சீரியல்களில் வேலை என்றுதான் தொடங்கினேன். நான் படித்திருந்த அனிமேஷன் வேலைக்கு கார்ப்ரேட் பக்கம் வேலைக்கு சென்றிருந்தால் ஆரம்பத்திலேயே 25000 ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பார்கள். ஆனால், மீடியாவுக்குள் பிடித்துப் போய்தான் வந்தேன்.

சீரியலில் வேலை பார்த்தபோது ஒரு நாளுக்கு 200 ரூபாய் கொடுப்பார்கள். சனி, ஞாயிறு விடுமுறை, ஒரு அவசரத் தேவை என்றால் கூட விடுமுறை எடுக்க முடியாது. எடுத் தால் அன்றைய 200 ரூபாய் கட். அந்த சம்பளத்தை வைத்துதான் வீட்டிற்கான செலவு, கூடுதலாக நான் படித்த ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் என சமாளிக்க வேண்டி இருந்தது.

அதன் பிறகு, ‘திருட்டுப்பயலே', 'என்.ஜி.கே', 'நானே வருவேன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநர், அசோசியேட் என வேலை பார்க்கும் அளவுக்கு வளர்ந்தேன். ஓரளவு பொருளாதார ரீதியாகவும் சமாளிக்க முடிந்தது. ஆனால், இதற்கெல்லாம் மூன்று வருடங்கள் ஆனது. ஆரம்பத்தில் பொருளாதாரத்திற்காக சில விளம்பர படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், பணம்தான் முக்கியம் என ஓட ஆரம்பித்து விட்டால் நம் நோக்கம் அடிபட்டுவிடும் என்பது உண்மை.

பொருளாதாரம் என்பதைத் தாண்டி, பெண் உதவி இயக்குநர்கள் வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு முறையான பாத்ரூம், கேரவன் வசதி கூட இன்று பல இடங்களில் கிடையாது. அதனால், இந்தத் துறை பற்றித் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் எதிர்கொள்ள தயாராகவே வர வேண்டும்.

வாயில் சிகரெட் வாலில் நெருப்பு  

மாணி ஜி (திரைக்கதை, வசனகர்த்தா)

சினிமா...ஒரு வசீகரமான மாய அரக்கன் .. ஏ வி எம்  ஸ்டூடியோவின் முதல் கேட்டில் எதுவும் கேட்காமல் விட்டு விடுவார்கள். உடனே உங்களுக்குள் இருக்கும் ரஜினியும், கமலும், பாரதிராஜாவும், இளையராஜாவும் காலரை தூக்கி விட்டுக்கொள்வார்கள்.  ஆனால் இரண்டாவது கேட்டில் இருக்கும் வயது முதிர்ந்த ஒரு பாதுகாவலர், நீங்கள் தூக்கி விட்டிருந்த சட்டைக் காலரை பிடித்து வெளியே அனுப்பி வைப்பார்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர்கள் ஓடுகிற தடை தாண்டும் ஓட்டம் சினிமா.  உங்கள் அப்பாவோ, இல்லை வேறு யாரும்  சொந்தங்களோ சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டிருந்தால் உங்களுக்கு அந்த இரண்டாவது கேட்டின் முதிர்ந்த செக்யூரிட்டி தொப்பியை கழட்டி சல்யூட் அடித்திருப்பார்.

எனக்குத்தெரிந்த ஒரு உதவி இயக்குநர்... திருமணம் ஆகியும் சினிமாதான் லட்சியம் என்று காற்றில் கதை எழுதிக்கொண்டிருந்தார். ஒரு நாள் இரவு கதை விவாதம் முடிந்து குரோம்பேட்டையில் இருக்கும் தன் வீட்டுக்கு  மின்சார ரயில் பிடித்து இறங்கி, ஒரு குவார்ட்டர் ஓல்டு மங்க் ரம்முக்கு கட்டிங் பார்ட்னர் தேடி, அடித்து விட்டு மெலிதான விசில் ஒலியுடன் வீட்டுக்கு வந்தார். கதவு திறந்தே இருந்தது. படுக்கையில் அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் , கரு கலைந்து... மயக்கமாக கிடக்க... இவர் பையில் மீதி பத்து ரூபாய் மட்டுமே இருந்தது .. மறுநாள் கோடம்பாக்கம் டூ குரோம்பேட்டை ரிட்டர்ன் டிக்கெட் வாங்க வைத்திருந்த பணம்... கடைசியில் எப்படியோ மனைவியை காப்பாற்றி விட்டார். ஆனால் அடுத்த முறை அவர் கோடம்பாக்கம் டிக்கெட் வாங்கவில்லை. கிண்டிக்கு வாங்கினார்.

சினிமாக்காரர்கள் எல்லோரும் அநேகமாக  சொல்லும் வார்த்தை இது: எனக்கு சினிமாவை தவிர வேறு தொழிலே தெரியாது...

இனி அப்படி இருக்காதீர்கள் ..அட்லீஸ்ட் ட்ரைவிங் கற்றுக்கொள்ளுங்கள். அப்படியே ஷங்கருக்கோ, அட்லிக்கோ ட்ரைவராக போகும் வாய்ப்பிருக்கிறது.

சினிமாவில் சம்பாதிக்க முடியுமா ? வாயில் இருக்கும் சிகரெட்டை பற்ற வைக்க வாலில் நெருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்... ரெடியா?

பிப்ரவரி, 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com