அந்த நான்கு வயசுப்பையன் சென்னை காமராஜர் அரங்கத்தில் பியானோ வாசிக்க ஏறினான். இவ்வளவு சின்னப்பையன் பியானோ வாசிக்கப் போகிறானே என்று கூட்டம் கைதட்டி ஆரவாரிக்க, அவனுக்கு அச்சத்தில் அழுகை வந்தது. கண்ணீரோடு வாசித்தது டைட்டானிக் படப் பாட்டு. கைத்தட்டல் நிற்கவே இல்லை. குட்டையாக இருந்த அவனுக்கு பியானோ எட்ட வில்லை. எக்கி எக்கி வாசிக்கிறான். அவன் வாசிப்பை விட அவனது முயற்சியையும் உயரத்தையுமே கண்டு கூட்டம் வியந்துபோனது. நாலு வயதில் எக்கி எக்கி பியானோ வாசித்தவன், அந்த இசைக்கருவியில் இருக்கும் எட்டு கிரேடையும் ஆசியாவிலேயே 14 வயசுக்குள் தேர்வாகி முடித்த ஒரே நபர் என்ற பெருமையை பின்னாளில் சொந்தமாக்கிக் கொண்டான். லண்டன் ட்ரினிடி கல்லூரியில் இதற்கான விருது வாங்கினான். அந்த சின்னப் பையன்தான் அனிருத்!
மிகவும் சின்னவயதிலிருந்தே இசை வகுப்புக்கு தினமும் சென்றுகொண்டிருந்தவர் அனிருத். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுக்கும் பையன். அப்பா ஆசைப்பட்டது மகனை ஐஐடியில் படிக்க வைக்க. அம்மா ஆசைப்பட்டது பையனை நிதித்துறை முதலீட்டு ஆலோசகர் ஆக்க. ஆனால் அனிருத் மனசு இசையில்தான் லயித்திருந்தது. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே இசைக்குழு வைத்து இயங்கிக்கொண்டிருந்தார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கவும் வாய்ப்பு வந்தது. வீட்டில் அனைவருக்கும் அனிருத் சிங்கப்பூர் போகவேண்டும் என விருப்பம். ஆனால் தன் இசைக் கனவு காலியாகிவிடும் என்பதால் மூணே மூணு வருஷம் எனக்குக் கொடுங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். எதுவும் சாதிக்கவில்லையென்றால் நான் வெளிநாட்டுக்கே படிக்கப்போய்விடுகிறேன் என்று பேசிச் சம்மதிக்க வைத்தார் அனிருத். இசையை தன்னுடைய வாழ்க்கைப்பாதையாகக் கொண்டது அவரது சுயமான தேர்வு.
ஐஸ்வர்யா தனுஷின் குறும்படத்துக்கு இசை அமைத்ததைத் தொடர்ந்து தனுஷ் அதை சினிமாவாக எடுக்க விரும்பியபோது அனிருத்தையே இசை அமைக்கச் சொன்னார். ‘அய்யோ 19 வயசுலயா’ என்று தயங்கியவர் ஒரு வருஷம் கழிச்சு பண்றேன் என்றார். திரும்பவும் ஒரு வருஷம் கழித்து அதே வாய்ப்பு!
ஒய் திஸ் கொலவெறி பாட்டு கம்போஸ் பண்ணுகையில் யாரோ அதை செல்போனில் படம்பிடித்து யூட்யூபில் ஏற்றிவிட்டார்கள். அதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார் அனிருத். அதைச்சமாளிக்கவே ஒழுங்காக இவர்களே அந்தப் பாட்டை தனுஷ் பாடுவதாக அவசரமாக படம் பிடித்து, எடிட் செய்து யூட்யூபில் ஏற்றினார்கள். கூடவே ஒழுங்காக சமூக ஊடகங்களில் அதை ஒரு குழு ப்ரொமோட் செய்ய, அதன்பின்னர் கொலவெறிக்கு கொலவெறி பிடித்த ரசிகர் கூட்டம் உருவானது வரலாறு! ஒரு சறுக்கலை எப்படி சரிசெய்வது என்று யோசித் ததில் உருவானதுதான் இந்த வெற்றி!
கடந்த மூன்று ஆண்டில் வரிசையாக எட்டுப்படங்கள் இசையமைத்துவிட்டார். அதில் கத்தி, வேலை இல்லா பட்டதாரி, மான்கராத்தே போன்ற படங்களும் அடங்கும்.
இன்று 24 வயதாகும் அனிருத்துக்கு முன்னால் உலகம் வாய்ப்புகளுடன் விரிந்து கிடக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் உறவுக்காரர், திரைத்துறையில் ஊறிய குடும்பம் என்று பின்னணி வலுவாக இருந்தது மட்டுமே அவரது வெற்றிக்குக் காரணம் இல்லை. சின்னவயதில் இருந்தே இசை மீதிருந்த ஆர்வமும் உழைப்பும் உருவாக்கித் தந்த வலுவான திறமைதான் முதல் காரணம். ‘த்ரீ’ படத்துக்கு முன்பே ஒரு படத்துக்கு இசை அமைத்தார் அனிருத். ஆனால் அது வெளிவரவே இல்லை. அந்த தோல்விக்குப் பின் தான் வெற்றி கதவைத் தட்டியது!
சினிமாவில் கிடைத்த வெற்றிதானே என்று மட்டும் இதைப் பார்க்கக்கூடாது. நவீன தகவல் தொழில் நுட்பத்தின் காலகட்டம் இது. நல்ல திறமையும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, தகவல் தொழில்நுட்ப வழிகளையும் சரியாகப் பயன்படுத்தினால் பெரியதோ சிறியதோ வெற்றிகள் கிடைக்கும். இது எல்லாத்துறைக்கும் பொருந்தும். இதற்கு நம் கண் முன் நிற்கும் உதாரணம் அனிருத்!
செப்டெம்பர், 2015.