ஒரு நல்ல ஆண் எப்படி இருக்கணும்?

ஒரு நல்ல ஆண் எப்படி இருக்கணும்?

ஒரு கைப்பிடி அறிவு

ஒரு கைப்பிடி உணர்வு

சேர்த்தே அணுகு

 ஒரு போதும் பிறழாது நட்பு' னு அய்யா அறிவுமதியோட ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருது. நட்புக்கு மட்டுமல்ல. ஆண் பெண் உறவுக்கும் இது பொருந்தும்.

ஆண் பெண் என்ற பால் பேதம் பாக்காம, தான் ஆண் என்ற ஆணவத்த காட்டாம, அய்யோ பொண்ணுங்குற சலுகைய கொடுக்காம சக உயிரியா பார்க்குறதுக்கு நம்ம மண்ணுல இருக்குற ஆண்கள் பழகணுங்கறதுதான் என்னோட நெடுநாள் விருப்பமா இருக்குது.

முன்னவிட இப்போ ஆண்கள் கிட்ட நிறைய ஆரோக்கியமான மாற்றங்களைப் பார்க்குறேன். ஆனா இன்னும் மாற்றங்கள் தேவை. அறிவும் உணர்வும் ஆரோக்கியமா இருக்குற ஒரு தாய்கிட்ட இருந்துதான் ஒரு நல்ல ஆண் உருவாக முடியும்ங்கறது என்னோட நம்பிக்கை. ஒரு ஆணுக்கு “ஆண் திமிரை' ஊட்டி வளர்க்கறதும் பெண்களாத்தான் இருக்காங்கங்கறதும் அப்பட்டமான உண்மைதான் இல்லீங்களா?

ஒரு நல்ல ஆண் எப்படி இருக்கணும்?

தாய்மையோட இருக்கணும். சுதந்திரத்தை உணர்ந்தவனா இருக்கணும். தன்மானம் உள்ளவனா இருக்கணும். ஈகோவா? உறவா? னு செம்ம சண்டை நேரத்துல தோணும்போது உறவுதான்னு விட்டுக்கொடுக்குற மனசு இருக்கணும். இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். பட், எனக்கு இப்ப ஒரு கேள்வி தோணுது.

இதெல்லாம் உள்ள ஒரு ஆண் 'ஒரு நல்ல பொண்ணு எப்படி இருக்கணும்?' னு என்கிட்ட கேட்டா நான் என்ன  சொல்லுவேன்? இந்தக் கேள்வியோடவே நான் முடிச்சுக்குறேன்.

ஷீலா ராஜ்குமார்

அறிந்திலேன்

இசை

இந்த லோகத்தில் அதி ஆழத்திலும், அதி உயரத்திலும், அதி தூரத்திலும் ஒளிந்துள்ளது பெண்மனம்தான் என்று சொல்கிறார்கள். வெறும் நாற்பத்து நான்கு வருட வாழ்வால் அதைத் துப்பறிந்துவிட இயலாது. மேலும் என்னால் அவ்வளவு தூரம் ஓடமுடியாது. அவ்வளவு உயரத்திற்குப் பறக்க இயலாது. கடப்பாரை நீச்சலும் அடியேன் அறிந்திலேன்.

நாங்கள் பெண்கள்

சென்பாலன்

பிறந்த மூன்று வருடத்தில் யாரும்

சொல்லாமலே பிங்க் வண்ண கிண்டர் ஜாய் மிட்டாயை தேர்ந்தெடுக்கும் போதே ‘நாங்கள் பெண்கள்' என அழுத்தமாகப் பதிவு செய்ய ஆரம்பிக்கின்றனர். என்னதான் அருகில் இருந்து பார்த்தாலும், குற்றால அருவியில் குளிக்காமல் அதன் குளிரை, சுகத்தை உணர முடியாது. அதுபோல எவ்வளவு அருகில் இருந்துப் பார்த்தாலும் பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ள ஆணாக இருப்பதே தடையாக உள்ளது. பிங்க் நிற கிண்டர் ஜாய் முதல், பிரிந்து போகும் பிரேக் அப் வரை பெண்ணைப் பெண்ணால் மட்டுமே புரிந்து கொள்ள இயலுகிறது.

இவர்கள் எதைத்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

அராத்து

பெண் மனசு ஆழம் , படைச்ச ஆண்டவனாலேயே பெண் மனசைப் புரிஞ்சிக்க முடியாது என்றெல்லாம் பல்லாண்டுகாலமாக இதை ஒரு தீவிரவான தத்துவ முத்தாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எதைத்தான் ஒழுங்காகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? இதைப்போன்ற பேச்சுக் களெல்லாம் சுத்த பைத்தியக்காரத் தனமான உளறல்கள். ஆண் மனசை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறதா? புரிந்துகொள்ள முடியும் என்றால் சசிகலா, ஈ.பி.எஸ் இடம் முதல்வர் பதவியை கொடுத்திருப்பாரா?

ஒரு பைத்தியத்திடம் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது? நவீன வாழ்வு, ஆண் பெண் இருபாலாரையும் சுத்தமான அப்பழுக்கற்ற மெண்டலாக மாற்றி வைத்திருக்கிறது. இவர்களெல்லாம் என்ன எய்ன்ஸ்டீனா ? புத்தரா? ரொலாண்ட் பார்த் ஆ? புரிந்து கொள்வதற்கு ?

என்னைக் கேட்டால் ஆணை பெண்ணும் , பெண்ணை ஆணும் புரிந்துகொள்ள முயற்சிக்கவே வேண்டாம். இரண்டும் வெவ்வேறு உயிரினங்கள். இருவருக்குள்ளும் உறவோ, உரையாடலோ எதுவுமே தேவையில்லை, சாத்தியமும் இல்லை. அது இயற்கைக்கு முரணானதும் கூட. உயிர் நீட்டிப்புக்கு வேண்டியும் , இன்பம் துய்க்கும் தேவைக்காகவும் இருவரும் குறைந்தபட்ச புரிதலுடன், குறைந்தபட்ச பொறுப்புணர்வுடன் ‘அந்த' நேரத்தில் மட்டும் சேர்ந்து இயங்கினால் போதும். மற்றபடி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பதால் இந்த மானுட குலத்திற்கும், இந்த பூமிக்கும் ஒரு நன்மையும் விளையப்போவதில்லை.

மற்ற நேரங்களில் அவரவர் வழியில் தனித்து சுதந்திரமாக இயங்கினால், உலகின் பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.

பெண்களைப் புரிந்துகொள்வதில் அப்படி என்ன பிரச்னை?

ம.கா.சிவஞானம்

அப்படி என்ன பிரச்னையா? அது அவ்வளவு

சாதாரண விஷயமாக இருந்திருந்தால், இன்று எங்கள் பத்திரிகை ‘நம்பர் ஒன்' இடத்தில் இருந்திருக்குமே! (அதற்காக ‘நம்பர் ஒன்' இடத்தில்  இருப்பவர்கள் பெண்களை முழுதாகப் புரிந்துகொண்டவர்கள் என்று அர்த்தமல்ல).

வடக்கு தெற்காகத்தான் ஆணையும் பெண்ணையும் படைத்தது இயற்கை. குணங்களும் ரசனைகளும் ஒன்றுக்கொன்று நேர் எதிர். ஆண் பெரிய விஷயங்களை நோக்கிப் பயணிக்க, பெண் சின்னஞ்சிறு விஷயங்களுக்கும் பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறாள். என் கல்லூரிப் பருவத்தில் ராக்கி தினத்தில் ஒரு சகோதரி பரிசாகக் கொடுத்த பேனாவை ஏதோ கவனக்குறைவில் இன்னொரு சகோதரிக்கு நான் கொடுத்துவிட, அதனால் நிகழ்ந்த பாசப்போராட்டம் இன்னமும் என் நினைவில் அதே அதிர்ச்சியைத்  தருகிறது.

பெண்களை வாயை மூடவைத்துவிட்டு, ‘ஆறும் அது ஆழமல்ல..' என்று சோகராகம்...ம்ஹூம்..

சுகராகம் பாடிக் கொண்டிருக்கிறோம் நாம். இப்போதுதான் பெண்கள் வாய் திறந்து தங்கள் எண்ணங்களை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கே சும்மா அதிர்கிறது. முழுவதுமாக மனம் திறந்தால், ஆண் சமூகம் அவ்வளவுதான்.

எனக்கென்னவோ, புரியாமல் இருப்பதில் உள்ள சந்தோஷத்தை அனுபவிப்பதே கவித்துவமாக தெரிகிறது. பெண் புரியாத புதிராகவே இருந்துவிட்டு போகட்டும். ஏன் புரியவில்லை என்ற ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்!

பின்குறிப்பு: மல்லிகை மகளின் அட்டையில் ஆண்கள் படத்தைப் பிரசுரித்தால் ஆகும் விற்பனையைவிட பெண்கள் படத்தைப் பிரசுரித்தால் ஆகும் விற்பனையே அதிகம். இந்த புள்ளிவிவரத்தில் பெண்கள் குறித்து உங்களுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியக்கூடும்.

நவம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com