கடன் அன்பை முறிக்குமா?

கடன் அன்பை முறிக்குமா?

சில மாதங்களுக்கு முன் ஒரு மழை பெய்துகொண்டிருந்த நள்ளிரவில் நண்பருக்கு பேஸ்புக் மெசேஞ்சரில் ஒரு  மெசேஜ் வருகிறது. அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட பேஸ்புக் நண்பரான முருகேசன் அனுப்பி இருக்கிறார். பேஸ்புக் மூலமாக மட்டுமே அறியப்பட்டவர் இந்த நண்பர்.

‘சார் எனக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலை. அவசரமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அனுப்பினால் நாளைக்கே திருப்பித் தந்துவிடுவேன். என்னுடைய பர்ஸ் பணம் எதுவுமே இல்லாமல் ஓரிடத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். அவசரம்' இப்படி நீள்கிறது அந்த செய்தி.

இதை பார்க்கவும் நம்முடைய நண்பருக்கு பதட்டமாகிவிட்டது. என்ன இருந்தாலும் பல நூறு லைக்ஸ் போட்ட முருகேசனாச்சே. எத்தனையோ முறை கமென்ட்களில் அருமையான கவிதை சார் என்று பாராட்டிய பெருந்தன்மையான ஆள் ஆச்சே என்று உடனே பத்தாயிரத்தை அவர் சொன்ன அக்கவுண்டிற்கு அனுப்பிவிட்டார்.

அந்த நள்ளிரவில் அவர் மட்டுமல்ல பல்வேறு நண்பர்கள் முருகேசனுக்கு காசு அனுப்பினார்கள். அடுத்த நாள் முருகேசன் ஒரு பதிவு போடுகிறார். என் பெயரில் யாரோ போலியாக முகநூல் கணக்கு தொடங்கி என் நண்பர்களிடம் காசு கேட்கிறார்கள். யாரும் கொடுக்காதீர்கள் என்று... ஆனால் அவர் அந்த பதிவு போடுவதற்கு முன்பே பத்து பேர் பத்தாயிரம் பத்தாயிரமாக அனுப்பிவிட்டிருந்தனர். விடிந்தபோது அந்த போலி ஐடி காணாமல் போயிருந்தது.

இந்தக்காலத்தில் இப்படி ஒரு மோசடியா என்பதுதான் அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சிக்கு காரணம் மோசடியின் டெக்னிக்கோ ஏமாற்றப்பட்ட விதமோ அல்ல. பேஸ்புக் நட்புக்காக மெசேஞ்சரில் கேட்டால் உடனே பணமெல்லாம் கொடுக்கிறார்களா என்பதுதான்.

ஆமாம்... காலம் அப்படித்தான் நம்மை எல்லாம் மாற்றி வைத்திருக்கிறது! இன்று நண்பர்களுக்குள் பண பரிமாற்றம் என்பது தீவிரமான பரிசோதனைகளுக்கு பிறகே நிகழ்கிறது. உங்களுடைய ஙஅஃக்உ என்ன என்பதை நண்பர்களிடத்தில் அவசரத்தில் கடனாக பெற முடிந்த தொகையை வைத்து நிர்ணயித்துவிட முடியும்.

இன்றைய சமூகத்தில் நம் தராதரம் பார்த்துதான் நமக்கான கடன் நிர்ணயமாகிறதே தவிர நட்பு சார்ந்து அல்ல என்பதுதான் யதார்த்தம். காரணம் நண்பர்களிடம் வாங்குகிற அல்லது கொடுக்கப்படுகிற கடன் பெரும்பாலான சமயங்களில் மன வேதனைகளையே இருவருக்கும் தந்துவிடுகிறது.

நண்பரிடம் வாங்கிய கடனை சொன்ன நேரத்திற்கு திருப்பிக்கொடுக்க முடியாமல் படுகிற வேதனை ஒருபக்கம் என்றால்... கொடுத்த கடனை திரும்பக் கேட்க முடியாமல் படுகிற துயரம் இன்னொருபக்கம். தன்னுடைய தேவைக்கு பணமில்லாமல் திண்டாடினாலும் நண்பர்களிடம் கொடுத்த கடனை கேட்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிற எத்தனையோ பேர் இன்னமும் இருக்கிறார்/ள். நண்பர்களுக்கு கொடுக்கப்படுகிற கடன் இரண்டுபக்கமும் கூர்மையான கத்தி போன்றதே. எந்தப்பக்கம் இலகுவானதோ அந்த பக்கத்தை அது அறுத்துவிடத் தயங்குவதேயில்லை.

நாம் கேட்காமலிருப்பதை கடன் வாங்கிய நண்பர் Taken for granted எடுத்துகொள்கிறாரோ என்கிற எண்ணம் வந்துவிட்டால் அத்தோடு நட்பு முடிந்துவிடும். நம்முடைய நிலைமை தெரிந்தும் கொடுத்த காசை சும்மா சும்மா கேட்டு நச்சரித்துக்கொண்டிருக்கிறானே இவனெல்லாம் என்ன மனுஷனோ என்கிற எண்ணம் கடன் வாங்கிய நமக்கு வந்துவிட்டாலும் நட்புக்கு வேட்டுதான். அதனால்தான் பெரும்பான்மை நண்பர்கள் கொடுத்த கடனை திரும்ப கேட்கமாலேயே இருந்துவிடுவார்கள். அல்லது திண்டாட்டமான காலத்திலும் வேறு வழியின்றி வாங்கிய கடனை அடைக்கும்போது இயல்பாகவே நண்பர்களிடமிருந்து சிறிய விலகலும் வந்துடுவிடுகிறது!

நண்பர்களிடம் கடன் கேட்பதில் அநேக பிரச்னைகள் உண்டு. நண்பர்களிடம் கேட்டு இல்லை என்று மறுக்கப்படுகிற கடன்களுக்கு வலி அதிகம். அதிலும் கையில் பணம் வைத்துக்கொண்டே மறுக்கிற நண்பன் எளிதில் துரோகியாகி நம்மை உடைத்துப்போட்டுவிடுகிறான். நண்பர்களின் கடன்களுக்கு வட்டி இல்லை! ஆனால் நம்பிக்கையும் அன்பும் உண்டு. அதனாலேயே அக்கடன்களுக்கு மனச்சுமையும் அதிகமாகிவிடுகிறது.

வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதால் தற்கொலை செய்துகொண்டார் ஜெயசீலன். கடன்காரர்களை எதிர்கொள்வதை காட்டிலும் நண்பனை எதிர்கொள்வது அத்தனை சிரமமாக இருந்தது. இத்தனைக்கும் கடன் கொடுத்தவர் திருப்பிக்கேட்கவேயில்லை. நட்பை மதிப்பவனுக்கு கேட்கப்படாத கடன் உருவாக்கும் குற்றவுணர்வு மிகப்பெரியது.

ராஜசேகர் அப்படித்தான் ஊரெல்லாம் நண்பர்களுக்கு கடன் கொடுத்திருந்தார். ஆனால் திருப்பிக்கேட்க தயக்கம். கேட்காமல் இருப்பதாலேயே அவருடைய தோழமைகள் யாருக்கும் திருப்பிக்கொடுக்கிற எண்ணமும் வரவில்லை. ஒருநாள் திடீரென மாரடைப்பு வந்து ராஜசேகர் இறந்துவிட்டார். ஒற்றை நபர் வருமானம் கொண்ட குடும்பம் என்பதால், மனைவி போராடிக்கொண்டிருந்தார். அவருடைய டைரியில் நீண்ட பட்டியலொன்று இருந்தது. இன்ன இன்னாருக்கு இந்தந்த தேதியில் இவ்வளவு பணம் கொடுத்தேன் என்று... நண்பர்களிடம் போய் கேட்டபோது பாதி கூட வசூலாகவில்லை.

பிரபலமான பாடலாசிரியர் ஒருவருக்கும் அவருடைய மரணத்திற்கு பிறகு இது நடந்தது. வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மாற்றப்படாத காசோலைகளை வைத்திருந்தாராம். எதையுமே அவர் வங்கியில் போட்டு பணமாக்கவில்லை. காரணம் நட்புக்காக... அண்ணே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... பணம் வந்ததும் போட்டுக்கலாம் என்கிற சொல்லுக்காக. எத்தனையோ பிரபலமான பாடல்களை புனைந்த கவிஞனின் குடும்பம் வறுமையில் நின்றது!

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் கடைபோட்டிருந்தார் ஆறுமுகம். தன் நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர். யார் பணம் கேட்டாலும் கொடுத்துவிடுவார். எவ்வளவு கேட்டாலும். அண்ணா அவனே ஒரு டகால்ட்டி அவன்ட்ட போயி காசக்கொடுக்குறீங்களே என்று யார் அறிவுரை  சொன்னாலும் கேட்கமாட்டார். ‘'என்கிட்ட சும்மாத்தான இருக்கு. அவனுக்கு எதோ ஒரு வகையில யூஸாட்டுமே தம்பி'' என்பார். திருப்பிக்கொடுக்காவிட்டாலும் அவர் கேட்டவரில்லை. சில பிரச்னைகளால் அவருடைய கடையை இழந்து, தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழந்து நின்ற போதும் யார் காசு கேட்டாலும் எங்காவது புரட்டிக்கொடுக்கிறவராகத்தான் இருந்தார். யாரிடமும் கொடுத்த காசை திருப்பி கேட்கமாட்டார். அவர்களாக கொடுத்தால் வாங்கிக்கொள்வார்.

நண்பனின் படிப்புக்காக தன் வீட்டின் கடைசி குண்டுமணி தங்கத்தையும் கூட அடமானம் வைத்து காசுகொடுத்த சந்திரன்கள் இருக்கிறார்கள். தன் நண்பனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு அவனுடைய கடனையும் சேர்த்து அடைத்த ரகமத்துல்லாக்கள் இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஐடி கம்பெனியில் வேலை பார்த்த ராஜுவுக்கு ஒரே நாளில் வேலை போனது. அடுத்த வேலை கிடைக்க நாளாகிக்கொண்டே போனது. கையிலிருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. அந்த சமயங்களில் கூட நண்பர்கள் யாரிடமும் கைநீட்டி பணம் வாங்க மாட்டான். ஏன்

மச்சான் ஒரு வார்த்தை கேட்டா குடுக்கமாட்டனா என்று கேட்டு காசை கைகளில் திணிக்கிற போது, புன்னகையோடு அதை மறுப்பான். ‘கேட்டா நீ குடுத்துடுவ மச்சான் அத திருப்பி குடுக்க முடியாட்டி என்ன பண்றது? இப்ப குடுக்குற நிலைமைலயும் நான் இல்ல... நீ திருப்பியும் கேக்கமாட்ட. அதுதான் பிரச்னை. ஏன்னா நீ குடுக்கறது கடன் இல்ல என் மேல வச்சிருக்கிற நம்பிக்கைல ஒரு பகுதி. அது எப்பவும் முழுமையா இருக்கணும். அதுதான் முக்கியம். கடன் குடுக்க ஆயிரம் பேர் இருப்பான் ஆனா இப்படி ஒரு நட்பு கிடைக்காது மச்சான்.' என்பான்.

நண்பர்களுக்குள் கடன் என்பது நம்பிக்-கையின் ஒருபகுதி. இதை உணர்ந்து-விட்டால் எந்தக்கடனும் அன்பை முறிக்--காது. ஆனால் அன்பை முறிக்கிற கடன்கள் அந்த நம்பிக்கையின்மையின் கத்திகளால்தான் கழுத்தை அறுக்கின்றன.

 நண்பர்களிடம் வாங்குகிற கடன் என்பது காலத்தால் செய்த உதவி என்கிற நினைப்பு இருந்தால் அதை திருப்பி தந்துவிடவேண்டும் என்கிற எண்ணம் வந்துவிடும். இந்த புரிதல் ஒன்றே நட்புக்கு நல்லது. இல்லாது போனால் கடன் நட்பை முறிக்கும்.

ஜூலை, 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com