கட்சிகளும்,
மதில் மேல் பூனைகளும்...

கட்சிகளும், மதில் மேல் பூனைகளும்...

அந்திமழையின் அரசியல் சிறப்பிதழ்கள் வேறு விதமானவை. அரசியல் கட்சிகளை ஆழமாக விவரிக்கும் நான்கு சிறப்பிதழ்களில் இது நான்காவது.

நாற்காலி கனவுகளோடு ஓட்டரசியலில் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்ற நினைப்பவர்களுக்காக (ஏப்ரல் 2018) ஒரு சிறப்பிதழ்.

தனிமனித மற்றும் சித்தாந்த வேறுபாடுகளால் பிரிந்து உருவான தமிழகக் கட்சிகளின் கதையைப் பற்றி (செப்டம்பர் 2014) ஒரு சிறப்பிதழ்.

அரசியல் கட்சிகளின் மரணங்களைப் பற்றி பேசும் முதன் முயற்சியாக (செப்டம்பர் 2022) ஒரு சிறப்பிதழும் அந்திமழை வெளியிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் ஜனனம் பற்றிய சிறப்பிதழை தற்போது வெளியிடுகிறோம்.

“எந்த கட்சியாக இருந்தாலும் சமூகத்திற்கு நல்லது செய்ய விரும்புகிறவர்களின் ஆதரவாளன் நான்' இது கிரிக்கெட் வீரர் கபில்தேவின் கூற்று. இதே மனநிலையில் கட்சி சார்பற்ற மதில் மேல் நிற்கும் பூனையாக நடுநிலை வகிக்கும் மக்கள் இருபது சதவீதத்திற்கு மேல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்தந்த தேர்தல் சூழலில் கட்சி சாராத மதில் மேல் நிற்பவர்கள் மனமே வெற்றியினைத் தீர்மானிக்கிறது.

ஓர் அரசியல் கட்சியை எப்படி விவரிப்பது?

கிட்டதட்ட ஒத்துப்போகிற எண்ணங்களையோ அல்லது சித்தாந்தத்தையோ சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு அதிகாரத்தை கைப்பற்றி தங்களை சார்ந்தவர்களுக்கு தேவையானவற்றை அல்லது தங்கள் நம்பும் கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்பு என்று எளிமையாக கூறலாம்.

கி.மு 375  காலகட்டத்தில் வெளியானதாக கருதப்படும் பிளாட்டோ எழுதிய குடியரசு புத்தகத்தில் அரசியல் கட்சியின் ஆரம்ப சுவடுகள் தென்படுகின்றன. அரிஸ்டாட்டில் எழுதிய அரசியல் என்ற புத்தகத்திலும் இதே குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று உயிரோடுள்ள கட்சிகளில் வயதான இரண்டு கட்சிகளாக, ஒன்று 1828இல் தொடங்கப்பட்ட அமெரிக்காவின் ஜனநாயக கட்சியையும் (195 வயது) 189 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி (1834) யையும் குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் பழைய கட்சி காங்கிரஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

கட்சிகள் தோன்றும்போது கொண்டிருக்கும் கொள்கைகளில் இருந்து வெகு தொலைவிற்குப் போய்விடுகின்றன என்ற எண்ணம் உண்டு. கட்சிகளை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இது தமிழக,  இந்திய சிந்தனை மட்டுல்ல; உலக சிந்தனை  என்பது தெரிய வரும்.

“ஆரம்பத்தில் தூய்மையான அரசியல் கட்சியாகத் தோன்றுவது, கொஞ்சகாலத்துக்குப் பின் மிக மோசமானதாக மாறிவிடுகிறது. பிற ஊழல் வடிவங்களைப் போலவே இந்த கட்சியும் மோசமானதாக நடந்துகொள்கிறது. தன் எதிரிகளின் மீது சேறைப் பூசி தன்னை தூய்மையாகக் காட்டிக்கொள்கிறது. நேர்மை தவறி நடந்துகொள்கிறது.  உண்மையைத் தவிர மீதி வழிகள் மூலம் அதிகாரத்தைப் பெறுகிறது. ஒருபக்கம் ஆசைகளை நிறைவேற்றிக்கொடுத்தல், சலுகைகள் வழங்கல், வீண் புகழ்ச்சிகளைத் தருவது ஆகியவற்றைப் பயன்படுத்தும். மறுபுறம் ஏமாற்றுவேலை, கொடூரமாக நடந்துகொள்ளல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தொடர்ச்சியாக எதிரணியைக் குறை சொல்லி, தன்னை தேவதையாகக் காண்பித்து போலியாக நடந்துகொள்ளும். தான் மட்டும்தான் நாட்டிலேயே சிறந்த கட்சி என்ற கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ள வைக்க மக்களை குழப்பும்; வளைக்கும், அச்சுறுத்தும்; தன்னையே முன் வைக்கும்.  மக்களின் நன்மைக்காகவே செயல்படுவதாகச் சொல்லி தன் வழிமுறைகளை நியாயப்படுத்தி, நிம்மதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். ஆகவே அரசியல்  சடுகுடுவில் ஊடகங்களால் வில்லன்களாகக் காண்பிக்கப்படும் பலர் உண்மையில் நாயகர்களாக இருப்பர்.'

- க்றிஸ் ஜாமி ( அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர், இசைக்கலைஞர், பாடகர், வடிவமைப்பாளர், பாடலாசிரியர், இருப்பியல்வாத தத்துவவியலாளர்)

நமது இனக்குழு, நமது சமூகம், நமது அரசியல் கட்சி, நமது கடவுள் மற்றவர்களின் கடவுளை விட சிறந்தது என நம்புவதால் ஒருவரை ஒருவர் கொல்கிறோம்! -நீல் டொனால்ட் வால்ஷ் (அமெரிக்க எழுத்தாளர்)

அரசியலை நான் வெறுக்கிறேன். இரு அரசியல் கட்சிகளை பிடிக்காது. அவற்றில் சேரக்கூடாது. தனிமனிதனாக நடுவில் நிற்கவேண்டும். கட்சியில் சேர்ந்தால் சிந்திப்பது நின்றுவிடும்.

-ரே ப்ராட்பரி (அமெரிக்க எழுத்தாளர்)

மேலே கூறப்பட்டுள்ள மூன்று சிந்தனைகளும் உலகின் பழமையான கட்சியின் தாய்நாடான அமெரிக்காவில் வாழ்பவர்களின் மனதில் எழுந்தவை.

ஆனால் இந்த சிந்தனையைப் பற்றிக் கொண்டு அரசியல் கட்சிகளையும் தூற்றுவது எந்த நன்மையையும் தராது.

அரசியல் மாற்றம், முன்னேற்றத்திற்கான முதல் படி என்பது அரசியலைப் புரிந்து கொள்வதுதான். இந்த சிறப்பிதழில் இந்தியாவிலுள்ள பத்து கட்சிகளின் தோற்றம் பற்றி விரிவாக பதிவு செய்கிறோம்.

தோன்றிய போது தேர்ந்தெடுத்த பாதையில் கட்சிகள் பயணிக்கின்றனவா அல்லது விலகி தடம் புரண்டு போய்விட்டனவா என்ற கேள்விக்காக பதிலை வாசகர்களிடம் விட்டு விடுகிறோம்.

“அரசியல் கட்சிகள் நாட்டின் மற்றும் மக்களாட்சியின் சொத்துகள்; தலைவர்கள் அப்படி அல்ல. ஆகவே கட்சிகளை அழிக்க வேண்டாம்.. ஆனால் ஊழல்வாதிகளை, குற்றவாளிகளை அவற்றிலிருந்து நீக்கிவிடுங்கள். அரசியல் கட்சிகள் சந்தேகமே இல்லாமல் ஜனநாயகத்தின் தூண்கள். எந்த நாடும் தன் இலக்குகளையும் நலன்களையும் அவை இல்லாமல் அடைய முடியாது' இது எஹ்கான் சேகலின் வார்த்தைகள். யதார்த்தமானவையும் கூட.

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com