கட்சிகள் கம்பெனிகள் ஆகவே முடியாது!

கட்சிகள் கம்பெனிகள் ஆகவே முடியாது!

தில்லியில் ஒரு முக்கிய அரசியல் தலைவரை நட்பின் நிமித்தமாக சந்திக்கச் சென்றிருந்தேன். எனக்கு முந்தைய நேரம் ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வெளியே காத்திருக்க வேண்டாமென்று அந்த மென்பொருள் நிறுவன மீட்டிங்கில் என்னையும் கலந்துகொள்ளச் சொன்னார். எனது ஆலோசனையும் உதவுமென்பதற்காக.

அந்த நிறுவனம் விற்க வந்தது  ‘அரசியல் கட்சி மென்பொருள்' (Political Party Software).

1. தொண்டர்கள் ஈடுபாடு: கட்சிப்பணிகளை உடனுக்குடன் தெரிவித்து கட்சியின் ஊழியர்களை கட்சிப்பணியில ஈடுபடுத்துதல் (Engage Cadre-update party activities to engage party work force)

2. குழுக்களை நிர்வகித்தல்: நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி, மண்டலம், பூத் வாரியான குழுக்களை உருவாக்குதல் (Organize Groups – create parliament, assembly, Mandal and booth level groups)

3. நடவடிக்கைகளைக் கண்காணித்தல்: தொண்டர்கள் இடையே குழப்பம் ஏற்படாமல் இருக்க தகவல்கள் சென்று சேர்கின்றனவா என 24/7 கண்காணித்தல் (Monitor activities keep 24/7 surveillance on the information transfers to avoid disagreement between the members)

என்று தொடங்கி சென்றது அந்தக் கூட்டத்தின் பேசுபொருள்.  அரசியல் தலைவர் ஒருவரின் வீட்டில் இருக்கிறேன் என்பதை மறந்து ஒரு கார்ப்பரேட் தலைமை அலுவலகத்தில் இருக்கிற உணர்வு. அந்த மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தில் solution என்ற பிரிவில் கீழ் Industry  என்ற பிரிவு வருகிறது. அதன் கீழ் இருக்கும் பல பிரிவுகளில் Politics என்றும் ஒன்று இருக்கிறது. அந்த நிறுவனத்தின் பார்வையில் அரசியல் ஒரு தொழில். அரசியல் ஒரு தொழிலா என்று கேட்டால் அல்ல; அது ஒரு  சேவை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும்.

சரியாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் (Corporate) அம்சங்கள், அரசியல் கட்சியின் நிர்வாகத்திற்குள் வந்து பல காலம் ஆகிவிட்து.

ஒரு நிறுவனத்தை நடத்துவதைவிட ஓர் அரசியல் கட்சி நடத்துவது மிகவும் சவாலானது. குறிப்பாக இந்தியாவில்.

செப்டம்பர் 2013, ஷாங்காய் நிர்வாகவியல் நிறுவனம் ‘நவீன அரசியல் கட்சிகள் நிர்வாகம்'  என்று ஒரு கருத்தரங்கு நடத்தியது. அந்த அரங்கில் உலகில்  ஒன்பது நாடுகளில் உள்ள ஒன்பது கட்சிகளின் நிர்வாகம் பற்றி விரிவான கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. சமூக மாற்றத்

துக்கு கட்சிகளின் எதிர்வினை, உட்கட்சி பிரச்னையை கட்சிகள் எப்படி சமாளிக்கின்றன? கட்சிகளின் நிர்வாகம் அடையும் மாற்றங்கள் என பல விஷயங்கள் பற்றி கருத்தரங்கில் விரிவாகப் பேசப்பட்டது.

உலகெங்கும் உள்ள கட்சிகளின் நிர்வாகம் வேகமாக மாறி வருவது கடந்த இருபது ஆண்டுகளில் நிதர்சனம்.

இந்த மாற்றத்தைச் சரியாகப் பதிவு செய்யும் விதமாக விரிவான சிறப்பிதழ் வெளியிட வேண்டியதை முக்கியமாக கருதி அந்திமழை இந்த சிறப்பிதழை வழங்குகிறது.

எழுபதுகளின் இறுதியில் ரத்தன் டாடாவிடம் கிட்டத்தட்ட மூடக்கூடிய நிலையிலிருந்த டாடாவின் எம்ப்ரஸ் மில்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. மிகச் சிரமப்பட்டு ஒவ்வொரு தவறையும் சரி செய்த ரத்தன், நஷ்டத்திலிருந்து மில்லை ஓரளவு லாபகரமாக மாற்றி டிவிடண்ட் கொடுத்தார். மில்லை நவீனப்படுத்தி வெற்றிகரமாக மாற்றியமைக்க ஐம்பது லட்ச ரூபாய் தேவைப்பட்டது. ரத்தன் திட்ட வரைவை ஒப்புதலுக்கு அனுப்பினார்.

நானி பால்கிவாலா தலைமையிலான டாடாவின் மூத்த இயக்குநர்கள் ஒப்புதல் மறுத்துவிட்டு நிறுவனத்தை மூடுவது உத்தமம் என்றனர். 1986ஆம் ஆண்டில் எம்ப்ரஸ் மில் மூடப்பட்டது. ரத்தன் நொந்துபோனார்.

நிறுவனங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சில முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்க முடியாது.

அனேகமாக நல்ல நிறுவனங்களில் நிறுவனர்/ முதலாளியின் வாரிசுகள் நேரடியாக தலைமைப் பொறுப்பிற்கு வரமுடிவதில்லை. வாரிசுகளை பல்வேறு நிலைகளில் அனுபவம் பெறச் செய்வது தங்களை அவர்கள் நிரூபித்தபின் தான் தலைமைப் பதவிக்கும் வர விடுவார்கள்.

ஆனால், வெகுசில இந்திய கட்சிகளே இந்த நடைமுறையைச் செயல்படுத்துகின்றன.

மக்களுக்குத் தேவையான ஒரு பொருளையோ/ சேவையையோ கண்டடைந்து, அதற்கான கருத்தாக்கத்தை விளம்பர நிறுவனங்கள் மூலம் உருவாக்கி, பிரச்சாரம் மூலம் பிரபலப்படுத்தி, ஊழியர்கள் மூலம் விற்று வருமானம் ஈட்டி லாபம் சம்பாதித்து வளர்வது என கார்ப்பரேட் நிறுவனத்தைப் பற்றில்  சுருக்கமாக சொல்ல முடியும்.

நல்லாட்சி தருவோம்,  நாங்கள் வந்தால் பாலும் தேனும் ஓடும் என்ற  கோஷங்களை உருவாக்கி அவற்றைப் பிரபலப்படுத்தி தொண்டர்கள் மூலம் வாக்காளர்களை நெருங்கி, ஊடகங்கள் மூலம் தகவல்களை பரப்பி (அ) குழப்பி வாக்குகளை குவிக்கின்றன கட்சிகள்.

இரண்டிற்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பது போல் தோன்றினாலும் ஒன்றாக முடியாது ஏன்?:

1. நேரிடையான வெளிப்படையான வருமானத்தை கட்சிகள் ஈட்ட முடியாது.

2. யார் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதைத் துல்லியமாக கணிக்கமுடியாது.

3. தலைமையின் எண்ணத்தை தொண்டர்களுக்கு தெரிவிக்கும் முறை பலவிதமான ஊடகங்கள் வழியே செயல்படுத்தப்பட்டாலும் தொண்டர்களின் மனோநிலையைக் கண்டறியும் சரியான வழியை கட்சியின் தலைமைகள் கண்டுபிடிக்கவில்லை

4. வாய்ப்பு கொடுத்து வளர்க்கப்படும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை தலைவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்களா என்ற நிச்சயமற்ற தன்மை.

5. கொள்கைகளில் உறுதியாக இருப்பதா? வெற்றிக்காக உருமாறி நிறம் மாறி திசைமாறிப் போய் விடுவதா?

6. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம், குறிப்பாக அடிமட்டத் தொண்டர்களுக்கு எப்படி கொடுப்பது?

ஜனநாயகத்தில் கட்சிகள் வெல்வது எப்படி என்று சிந்திப்பதைவிட, தொலைநோக்கில் மக்களுக்கு எது நல்லது என்று யோசிப்பது முக்கியம். காலம் கடந்து வெல்வதற்கு கட்சிகள் லாப நோக்கமற்ற அறக்கட்டளைகள் எப்படி நடத்தப்படுகிறதோ அப்படி நடத்தலாம். பரந்துபட்ட மக்களுக்கான அரசை கட்சிகள் நடத்தும் போது அவர்களது தொண்டர்களின் வாழ்வும் செழிக்கும்.

சேவை செய்வதில் உறுதியாக இருக்கும் கட்சிகளை, மக்கள் ஆரத் தழுவும் போது நாடு மக்களும் நலமாக இருப்பார்கள்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com