கட்டுரைக்கு ஒரு பவுனை விட அதிக சன்மானம்!

கட்டுரைக்கு ஒரு பவுனை விட அதிக சன்மானம்!

ஒருவன் பெரிய கோடீசுவரனாக இருந்தான், பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை.

கோயில்கள் கட்டினான். அதிலும் அவன் செலவு செய்ததற்கு மேல் உண்டியலில் பணம் சேர்ந்தது. குளங்கள் வெட்டினான். அவற்றிலிருந்து அரசாங்கம் எடுத்துக் கொண்டு நஷ்ட ஈடு கொடுத்தது. இவ்வாறு  அறச் செயல்கள் செய்துங்கூட அவனுடைய பணம் குறையவில்லை.

தேர்தலில் நின்றான். அதில் கூட அவனுடைய பணத்தில் ஒரு பகுதிதான் அழிந்தது. குதிரைப் பந்தயத்துக்குச் சென்றான். அவன் கட்டிய குதிரைகள் எல்லாம் வெற்றி பெற்றன. பிற சூதாட்டமான பல தொழில்களைச் செய்தான்.ஒன்றிலும் அவன் பணம் கரையவில்லை.

கடைசியாக விளம்பர ஆசை மேலிட்டு, ஒரு பத்திரிகையைத் தொடங்கினான். பத்து ஆண்டுகளில் பணம் முழுவதும் காலியாயிற்று‘

நீங்கள் ஏன் ஒரு பத்திரிகை தொடங்க கூடாது? என்று பலரும் கேட்டதாகவும் அந்த கேள்விக்கு பதிலாக இந்த கதையை சோமலெ கல்கி நினைவு சொற்பொழிவில் குறிப்பிடுகிறார்.

1974 இல் மார்ச் மாதத்தில் மூன்று நாட்கள்  சோமலெ நிகழ்த்திய கல்கி நினைவு சொற்பொழிவுகள் தமிழ் இதழியலுக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பு.

1578 ஆம் ஆண்டு புன்னைக்காயலில் அமைந்த முதல் தமிழ் அச்சகம், 1831இல் தோன்றிய ‘தமிழ்ப் பத்திரிகை‘ தான் முதல் மாத இதழ் , 1859இல் ஆரம்பிக்கப்பட்ட ‘தினவர்த்தமானி‘ தான் முதல் வார இதழ்,1883இல் வார இதழாக தொடங்கப்பட்டு ‘சுதேசமித்திரன் ,  1898இல் நாளிதழாயிற்று என்பதான குறிப்புகளுடன் ஏராளமான அரிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார் சோமலெ.

தகவல் ஒன்று: பூரியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாசபை மாநாட்டிற்குச் சென்றிருந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பூரி யாத்திரை என்ற நகைச்சுவை கட்டுரையை ‘கல்கி‘ என்ற புனைப்பெயரில் எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினார். கட்டுரையை படித்து மகிழ்ந்த எஸ்.எஸ்.வாசன் அடுத்த இதழில் வெளியிட்டார், அந்த கட்டுரைக்கு சன்மானமாக கல்கிக்கு ரூ 25 கொடுத்தார். அப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை  இருபது ரூபாய் மட்டுமே.

தகவல் இரண்டு:

ஐந்து லட்சம் பிரதிகளை தாண்டி விற்பனையான குமுதம் இதழ் ஆரம்பத்தில் 2000 பிரதிகள் மட்டுமே விற்பனையாயிற்று. முதல் இரண்டு ஆண்டுகளில் 5000 பிரதிகள் அச்சிடப்பட்டு அவற்றில் 3000 பிரதிகள் திரும்ப வருவது வாடிக்கை. முதல் இருபது ஆண்டுகள் வரை குமுதம் நஷ்டத்தில் நடந்ததாம். ஆனால் தளராத எஸ்.ஏ.பி தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்றுள்ளார்.

“அந்த காலத்தில் ஒரு வழக்கம் உண்டு. யாரையாவது முக்கியமானவர்களைப் பார்க்கப் போகும் போது ஏதாவது கொண்டு போக வேண்டும், வெறுங்கையோடு போகக்கூடாது. எலுமிச்சம் பழமாவது கொண்டு போவது வழக்கம்.

தமிழ்நாட்டுக்கு  முதல் மந்திரியாக இருந்த ஓமந்தூர் இராமசாமியின் ஊரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது திண்டிவனம் என்னும் நகரம். தம் பண்ணையிலிருந்து மாட்டு வண்டியில் திண்டிவனத்துக்குப் போனார். அங்கு போய்ச் சேர்ந்ததும் ஒரு பெரியவரைப் பார்க்க விரும்பினார். பண்ணையிலிருந்து எலுமிச்சம்பழம் கொண்டு வராததால், திண்டிவனம் சந்தைக்குள் நுழைந்து எலுமிச்சம்பழம் வாங்கினார். அப்போது கூடையில் காய்கறி வைத்து விற்றுக் கொண்டிருந்த பெண்மணிக்கும் இவருக்கும் நடந்த உடையாடல் இது:

ஓமந்தூரார்: 4 எலுமிச்சம்பழம் கொடம்மா, என்னம்மா விலை?

பெண்மணி : பழம் 10 காசு சாமி,

ஓமந்தூரார்: 5 காசுக்கு கொடு அம்மா.

பெண்மணி : 5 காசுக்கு வேண்டுமானால் அதற்கு வேறு எலுமிச்சம்பழம் இருக்கு, தாரேன். இந்தக் கூடையில் இருக்கிறது நல்ல பழம்; நிறமானது; சாறு ரொம்ப பிழியலாம்; பம்பாய் மெட்ராசுக்கு எல்லாம் லாரிலாரியா போவுது. சாறு பிழிந்து பாட்டல் பாட்டலா சீமைக்கு விக்கிறாங்க; திண்டிவனம் பஜார் பூராவும் விசாரிச்சுப் பாரு, பெரியவரே; ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தோட்டத்துப் பழம்னு கேளு. ஒருத்தரும் 10 பைசாவுக்குக் குறஞ்சு தர மாட்டாங்க. இது பேரம் பண்ணுகிற சரக்கு இல்லை.

ஓமத்தூரார் பெயர் தெரிந்த அந்த பெண்மணிக்கு ஓமத்தூரார் முகம் தெரியாது. நம்மிடம் பழம் வாங்க வந்திருப்பது அந்தத் தோட்டத்து சொந்தக்காரர்தான் என்பதும்  தெரியாது!'

சோமலெ ஓமந்தூர் இராமசாமியின் வாழ்க்கை வரலாறை இப்படித்தான் சுவையாக ஆரம்பித்து எழுதியுள்ளார்.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்குப்பை கிராமத்தில், பிப்ரவரி 11, 1921 ஆம் ஆண்டு சோமலெ பிறந்தார்.

தொழில் நிமித்தமாக 1947 - 48இல் பர்மாவுக்கு பயணம் மேற்கொண்டார். அது அவருக்கு மாறுபட்ட அனுபவங்களைத் தந்தது. அதே சமயம் , உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே. செட்டியாரின் 'அமெரிக்க நாட்டில்'நூலைப் படித்ததும் அவருக்கு உலகச்  சுற்றுப் பயணம் செய்யும் ஆவல் ஏற்பட்டது. அதன் காரணமாக 1948இல் அவர் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஹவாய், சுவீடன், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து  எனப் பல நாடுகளுக்கும் பயணம் செய்தார்.

சோமலெ வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்கள் குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக விரிவாக ஆராய்ந்தார்.‘ வட மாநிலங்களில் தமிழர் ' என்ற நூலாக அது வெளியானது.1960 - களிலேயே அன்றைய பிரிக்கப்படாத தமிழக மாவட்டங்களான குமரி, நெல்லை, ராமநாதபுரம், மதுரை,சேலம் , கோவை, தஞ்சை, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, செங்கல்பட்டு , ஆகியவற்றைப் பற்றி சிறப்பான  நூல்களை எழுதியுள்ளார். கூகிள் இல்லாத காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள இந்த தொகுப்புகள் மிகச்சிறந்த செய்தியாளரால் எழுதப்பட்ட கட்டுரைகள் என்று எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

பத்திரிகை இயக்கத் தலைவர்கள் என்று ஏழு பெயர்களை சோமலெ குறிப்பிடுகிறார். ஜி.சுப்பிரமணிய ஐயர், தி.ரு.வி.க., டாக்டர் .பா. வரதராஜுலு நாயுடு, டி.எஸ். சொக்கலிங்கம், பெரியார் ஈ.வெ.ரா., ஏ.என். சிவராமன், சி.பா. ஆதித்தனார்  ஆகியோரே  சோமலெ குறிப்பிடும் ஏழு பத்திரிகை இயக்கத் தலைவர்கள் ஆவர்.

எது செய்தி, எப்படி எழுதவேண்டும் என்று சோமலெ கூறுவது,சிற்பம் சமைப்பது எப்படி ? என்று ஒரு கலைஞனிடம் கேட்டபோது, ‘பாறையை உற்றுப் பார்ப்பேன். எனக்கு அந்தப் படிமம் புலனாகும். பிற பகுதிகளை வெட்டி எறிந்து விடுவேன் . சிற்பம் தானே அமைந்து விடும்' என்று சொன்னாராம். அப்படி - தேவையான செய்திகளை மட்டும் தொகுத்து, அவற்றை முறையாகப் பொருத்திக் கொண்டால் , எந்த கட்டுரையும் - எந்த நூலும் எளிதாக - ஏற்றம் உடையதாக அமைந்துவிடும். இதுவே என் படைப்பூக்கம்  செழிக்கக் காரணமாயிற்று' என்பார் சோமலெ.

சாகித்திய அகாதெமி மற்றும் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி, சாத்தூர் இணைந்து நடத்திய சோமலெ நூற்றாண்டு விழாவில்   பங்கேற்று அந்திமழை இளங்கோவன்  வாசித்த கட்டுரையின் ஒரு பகுதி. விழாவில் சோமலெயின் மகள் மீனாட்சி சோமசுந்தரம், பாரதி-பாலன், கல்லூரி முதல்வர் சே.கணேஷ்ராம், இரா.காமராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டிசம்பர், 2021 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com