கணிப்புகளைக் கணித்தல்!

கணிப்புகளைக் கணித்தல்!

அது 2019 நாடாளுமன்றத் தேர்தல் காலகட்டம்.தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகித்திருந்தது. அப்போது, ‘மக்கள் யார் பக்கம்' என்ற தலைப்பில் பிரபல மூன்றெழுத்து சேனல் ஒன்று மெகா சர்வேயை எடுத்திருந்தது. மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் தமிழகம் - புதுச்சேரியில் சேர்த்து 8250 பேரிடம் கருத்துக்கணிப்பு முடிவுகளை எடுத்ததாக அந்த சேனல் அறிவித்தது. அதன் முடிவுகளைப் பார்த்து தைலாபுரமே தடதடத்தது.

‘8250 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்த ஒரு கோடி ரூபாய் வரையில் செலவாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை அந்த தொ.கா.வுக்கு கொடுத்தது யார்.. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? தி.மு.க.வின் பொய் பிரசாரத்தில் அந்த தொ.கா.வும் ஓர் அங்கமா?' என சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி. கருத்துக் கணிப்புகளைக் கண்டு அரசியல் கட்சிகள் மிரளுவதற்கு இந்தச் சம்பவம், ஒரு சோறு பதம்.

- இந்தியாவில் ஜனநாயகத் திருவிழாவாக தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் காலம் வந்துவிட்டாலே கருத்துக்கணிப்புகளுக்கு கால் முளைத்துவிடுகிறது. இந்தியாவில் 1957 - ல் இரண்டாவது பொதுத்தேர்தல் நடந்தபோது டி காஸ்டா என்பவர் நடத்தியதுதான் நம் நாட்டைப் பொறுத்தவரை முதல் தேர்தல் கருத்துக்கணிப்பு.

அந்த கணிப்பின் முடிவுகள் சரியாகவே அமைந்திருந்தன. இதைத் தொடர்ந்து தேர்தல் கருத்துக்கணிப்புகள் அணிவகுக்கத் தொடங்கின. ஆனால், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 1980ம் ஆண்டு பொதுத் தேர்தலில் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கவனம் ஈர்த்தன. பிரனாய் ராய், அசோக் லகிரி, டேவிட் பட்லர் ஆகியோர் எடுத்த கருத்துக்கணிப்புகள் பெரிதும் கவனிக்கப்பட்டன. 1996ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்புகள் பிரதான இடம் பிடித்தன.

இதன் தொடர்ச்சியாக, கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வதற்காக பல தனியார் நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களோடு ஊடக நிறுவனங்களும் இணைந்து கருத்துக்கணிப்புகளில் ஆர்வம் செலுத்தின. சர்வே ஏஜென்சிகளுக்கு செலவு செய்ய முடியாத பத்திரிகை நிறுவனங்கள், தங்கள் நிறுவன ஊழியர்களை வைத்து கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டன.

ஒருவேளை கருத்துக்கணிப்பு முடிவுகள் காலை வாரினாலும், ‘யாருக்கு வெற்றி?' என வாசகர்களிடம் போட்டி வைத்து, அதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கின. தற்போது சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால், யூட்யூபர்களும் தங்கள் பங்குக்கு கருத்துக்கணிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். எப்படிப் பார்த்தாலும் ‘யார் மனசுல யாரு' என்ற ஆர்வத்தை வெளிக்கொண்டு வருவது, தேர்தல் சித்து விளையாட்டுகளின் ஓர் அங்கம். தேர்தல் பந்தயத்தில் அரசியல் கட்சிகளுக்கும் இது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கணிப்பா... திணிப்பா?

கருத்துக்கணிப்புகள் என்பது அறிவியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் அமைய வேண்டும் என்பது விதி. கருத்துக்கணிப்பை நடத்துகிறவர், வாக்காளரை சந்தித்துப் பேசும்போது சில புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இவை இயந்திரத்தனமாக இல்லாமல் விஞ்ஞான முறையில் அமையும்போது கணிப்புகள் சொல்வது நடக்கின்றன. மாறாக, சீரற்ற இடைவெளியில் எடுக்கும்போது அவற்றின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.

உதாரணமாக, நகரங்களுக்கு செல்லும் கருத்துக்கணிப்பு நிறுவன பிரதிநிதிகள் ஓர் இடத்தில் ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு வாக்காளர்களிடம் படிவம் ஒன்றைக் கொடுத்து நிரப்பச் செய்கின்றனர். ஒரே இடத்தில் எடுக்கும்போது அவை சரியான கணிப்பை வெளியிட வாய்ப்புகள் அரிது. இதனால் மக்களின் மனநிலையை எடைபோட்டுப் பார்ப்பது கடினம். இன்றைய காலகட்டத்தில் கணிப்பை எடுக்கும் நிறுவனமோ, ஊடகமோ என்ன மனநிலையில் இருக்கிறார்களோ, அதையே வாக்காளரின் பார்வையாக திணிக்கும் போக்கு தொடர்ந்து நீடிக்கிறது.

கருத்துக்கணிப்புக்கென்று சில முறைமைகள் (Methodology) இருக்கின்றன. ஒரு தொகுதியில் வெறுமனே ஆயிரம் பேரிடம் சர்வே எடுக்கும்போது அவை முழுமையான உண்மைகளை வெளிக்காட்டும் வாய்ப்புகள் அரிது. இதனாலேயே கருத்துக்கணிப்பு முடிவுகளில் முன்னுக்குப் பின் முரணான முடிவுகள் வெளியாகின்றன. சில நிறுவனங்களின் கணிப்புகள் உண்மைக்கு அருகில் இருப்பதுபோலவும் சிலவற்றின் கணிப்புகள், நம்ப முடியாத ஒன்றாகவும் மாறிப் போய்விடுகின்றன.

இதற்கு 2009ஆம் ஆண்டு நடந்த சம்பவமே சாட்சி. அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 274 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும்' என ‘அவுட் லுக்' ஏடு அடித்து சொன்னது. ஆனால், அந்தக் கணிப்பு பொய்த்துப் போனதால், ‘வரும் காலங்களில் கருத்துக்கணிப்பே நடத்த மாட்டோம்' என அவுட் லுக் அறிவித்தது.

ஏமாற்று வேலையா, எக்ஸிட் போல்?

வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளரிடம், ‘யாருக்கு ஓட்டு?' எனக் கேட்டுப் பெறுவதுதான் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பு. இதில், வாக்காளரிடம் பெறப்படும் பதில்களின் மாதிரிகளை வைத்து, ‘யார் உள்ளே யார் வெளியே?' என முடிவுகள் வெளியாகின்றன.

‘தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளின் முடிவுகளோடு இது ஒத்து வருகிறதா?' என்பதை ஊடக நிறுவனங்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இவை அமைகின்றன. அதேநேரம், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126 எ' பிரிவின்படி வாக்குப்பதிவு முடிந்த பிறகு அரைமணி நேரம் கழித்துதான் இவை வெளியிடப்பட வேண்டும். இதற்குரிய கால அளவை மாநில தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பது வழக்கம். அதற்கு மாறாக, ‘வாக்காளர்களின் மனநிலை இதுதான்' என முன்கூட்டியே எக்ஸிட் போல் முடிவுகளை அறிவித்தால், அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

இதில், சில தகிடுதத்தங்களும் அரங்கேறுகின்றன. சில நிறுவனங்கள் அரசியல் கட்சிகளையும் தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை அணுகி, ‘உங்களுக்கு ஆதரவான முடிவுகளை வெளியிடுகிறோம்' எனக் கூறி பணம் பெறும் வேலைகள் நடக்கின்றன. ஊடகங்களைவிட சமூக ஊடக இன்ஃபுளூயன்சர்களின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களை திசைதிருப்பும் வேலைகள் எளிதாக நடக்கின்றன. தேர்தல் காலங்களில் மட்டுமே நடக்கும் இதேபோன்ற வசூல் மோசடிகளை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.

ஊடகங்களும் சமூக ஊடகங்களும் பெருகிவிட்ட நிலையில் இவை அதிகரிக்கவே செய்யும். ஆனால் தேர்தல்களை நிர்வகிப்பதற்காக கட்சிகளால் நியமிக்கப்படும் நிறுவனங்கள், இந்த கருத்துக் கணிப்புகளை ‘உருவாக்குவதன்' மூலம் மக்களின் மனதைத் திசை திருப்ப முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றன.

கணிப்புகளும் தவறுகளும் கட்சி சார்ந்த ஊடக நிறுவனங்கள் தாங்கள் ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவாகவே கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன. இவை கேலிக்கூத்தாக மாறியதற்கும் சில உதாரணங்கள் இருக்கின்றன.

உ.தா: ‘2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக வெல்லும்' எனவும் ‘290 தொகுதிகள் வரையில் அக்கட்சிக்குக் கிடைக்கும்' எனவும் எக்ஸிட் போல் முடிவுகள் அறிவித்தன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு 189 தொகுதிகள் கிடைத்தன. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சிமைத்தது.

இதையடுத்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் ‘காங்கிரஸ், பாஜக கூட்டணி முறையே 200 தொகுதிகளைக் கைப்பற்றும்' என எக்ஸிட் போல் முடிவுகள் அலறின. ஆனால், ‘மீண்டும் காங்கிரஸே ஆட்சியமைக்கும்' என எந்த முடிவுகளும் உறுதியாக தெரிவிக்கவில்லை. இந்தத் தேர்தலில் கூடுதலாக 61 இடங்களை காங்கிரஸ் பெற்றதுதான் ஆச்சர்யம்.

பொதுவாக எந்தவொரு பிரச்னையிலும் மக்களின் மனநிலை. அவர்களின் விருப்பம் ஆகியவற்றை அறிந்துகொள்ள அரசியல் கட்சிகளுக்கு கருத்துக் கணிப்புகள் உதவுகின்றன. இதுபோன்ற கணிப்புகள் ரகசியமாக எடுக்கப்பட்டு கட்சிகள் அவற்றை ரகசியமாகவே வைத்துக்கொள்கின்றன. ஆனால், பொதுமக்கள் மனநிலையில் அவர்களின் வாக்களிக்கும் விருப்பங்களை மாற்றி அமைக்கும் பிரசார உத்தியாக இந்த போலி கருத்துக்கணிப்புகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவை ஏற்படுத்தும் விளைவு என்பது லேசான கவன ஈர்ப்பு என்பதைத் தாண்டி எதுவும் இல்லை.

இப்படியும் சில சம்பவங்கள்!

2021 சட்டமன்றத் தேர்தலின்போது லயோலா கல்லூரி மாணவர்கள் தயாரித்ததாக கணிப்பு முடிவுகள் வெளியாக, ‘அப்படி எதையும் நாங்கள் செய்யவே இல்லை' என்று அக்கல்லூரி நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டது. பின்னர் அது முன்னாள் மாணவர்களின் கணிப்பு என்று சொல்லப்பட்டது.

2021 - இல் அதிமுக ஆதரவு தொலைக்காட்சி ஒன்றின் (அக்கட்சியின் தொலைக்காட்சி அல்ல) கணிப்புப்படி அதிமுக 43.9 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் திமுக கூட்டணி 41.5 % வாக்குகளைப் பெறும் என்றும் சொன்னது. 131 இடங்களை அதிமுக கூட்டணியும் 102 இடங்களை திமுக கூட்டணியும் கைப்பற்றும் என அந்தக் கணிப்பு அறிவித்தது. இப்போது அந்த காணொலி யூட்யூபில் காணக்கிடைக்கிறது. அந்த தொ.கா வேறு எப்படியும் கணிப்பை சொல்லியிருக்கவே முடியாது என்பது அரசியல் பார்வையாளர்களுக்குத் தெரியும். அதன் அரசியல் பின்னணி அப்படிப்பட்டது.

அதேபோல் இரண்டெழுத்து சேனல் ஒன்றில் அதிமுக கூட்டணிக்கு 124 இடங்களும் திமுக கூட்டணிக்கு 94 இடங்களும் ‘வழங்கப்பட்டன'. அதுதொடர்பான விவாதத்தில் அமர்ந்தவர்கள் அதிமுக சார்பானவர்களே. கணிப்பு நடத்திய குழுவினர்கள் அதிமுக சார்பானவர்கள் என்பது உலகம் அறிந்த உண்மையாக இருந்தது.

பெரும்பாலான பிற கணிப்புகள் திமுக சார்பானவையாகவே இருந்தன. இது தற்செயலாகவோ அல்லது ‘உருவாக்கப்பட்டவையாகவோ' இருந்திருக் கலாம். ஆனால் இவை சொன்னபடி திமுக கூட்டணியே வென்றது. எனவே, தேர்தல் திருவிழாவில் கருத்துக் கணிப்புகளின் ஆதிக்கத்தை வேரறுக்கும் வாய்ப்புகள் அரிதிலும் அரிது.

இதை இப்படி வேண்டுமானால் சொல்லலாம். ‘ஒரு சாதாரண குடிமகன்.. ஒரு சாதாரண வாக்குச்சாவடியில்.. ஒரு சாதாரண வாக்குச் சீட்டைப் போட்டு மாபெரும் ஜனநாயகத்துக்கு வழிவகுக்கிறான்' என்பார், வின்ஸ்டன் சர்ச்சில். அவை பெரு நிறுவனங்களின் சந்தை உத்தியாக மாறி, வாக்காளனின் மனநிலைக்கே வேட்டு வைப்பதும் அதை அரசியல் கட்சிகளும் இறுகப் பற்றிக் கொள்வதுவும்தான் கொடுமை.

2024இன் கணிப்புகளைக் கணிப்பதற்கு காத்திருப்போம்!

(நமது சிறப்புச் செய்தியாளர்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com