கனவுப் படிக்கட்டுகள்!

கனவுப் படிக்கட்டுகள்!

அன்று இரவு நள்ளிரவைத் தாண்டிய பின் தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுவன் திடீரென அழத் தொடங்கினான். அடுத்த அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அப்பா பதறி ஓடிவந்தார். அம்மா விழித்துக் கொண்டாள்.

ஏதாவது பூச்சி கடித்திருக்குமோ என்று சந்தேகப்பட்டார்கள். விளக்கைப் போட்டுப் பார்த்தார்கள் ஏதும் தென்படவில்லை. சிறுவனின் உடையைக் கழற்றிப் பார்த்தார்கள். எந்த அறிகுறியும் இல்லை. மெல்லிசாகவும் சில நேரம் ஓங்கி குரலெடுத்தும் சிறுவன் அழுவது தொடர்ந்தது.  பசித்திருக்குமோ என்று அம்மா பால் காய்ச்சிக் கொடுத்துப் பார்த்தாள். அந்த இரவு நீண்டுகொண்டேயிருந்தது. காலை ஆறு மணிவாக்கில் அம்மாவின் மடியில் சிறுவன் தூங்கிப் போனான். டாக்டரிடம் போகலாமா என்று யோசித்து அம்மாவும் அப்பாவும் மாலைக்கு தள்ளிப்போட்டார்கள்.

இந்த சம்பவத்தை தனது பத்திரிகை ஆசிரியரிடம் அப்பா பகிர்ந்து கொண்டார். அவர், ‘உங்க பையன் இரவுகளில் தூக்கத்தில் சிரிக்கிறதை கவனித்திருக்கிறீர்களா?' என கேட்டார்.

‘ஆமாம் தூக்கத்தில் சில இரவுகளில் மெலிதாகப் புன்னகைப்பான். சில இரவுகளில் கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பதைப் போன்று சிரிப்பான்'

‘குழந்தைகளின் கனவில் கடவுள் வருவார். வருபவர் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடி குஷிப்படுத்துவார். இது தொடரும், குழந்தைகள் தூக்கத்தில் மகிழ்ந்திருப்பார்கள். குழந்தைகளுக்கு இரண்டரை மூன்று வயதாகும் போது தினமும் விளையாட வரும் கடவுள், இனிமேல் வரமாட்டேன் என்று கூறி விடைபெறுவார். அன்று குழந்தைகள் தேம்பித் தேம்பி அழுவார்கள்'

ஆசிரியரின் விளக்கம் சுவாரஸ்யமாக இருப்பதாக நினைத்த அந்த அப்பா புன்னகைத்தார்.

1965ஆம் ஆண்டு பாடகர் மெக்கார்ட்னி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார், அழகான கனவொன்று வந்ததாம். கனவில் அவர் இனிமையான பாடலொன்றை வாசிக்கிறார். பின் விழித்துக் கொள்கிறார். அப்போது அவரது நினைவில் அந்த பாடல் நிழலாட அருகில் இருந்த பியானோவில் போய் அமர்கிறார். விரல்கள் தாமாகவே அந்த பாடலை இசைக்கின்றன. கனவில் பிரசவமான பாடலை மெக்கார்ட்னி தான் எழுதியது என நம்ப மறுக்கிறார். எப்போதோ தன்னை மிகவும் பாதித்த பாடலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நெருக்கமான பலரிடம் கனவுப்பாடலை  வாசித்துக் காட்டிவிட்டு இதை எங்கேயாவது கேட்டிருக்கிறீர்களா என்று விசாரித்திருக்கிறார். எல்லாரும் இல்லை என்று கைவிரித்த பின் தான் அதை தன் பாடலாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.  பீட்டில்ஸ் இசை குழுவின் புகழ்பெற்ற பாடலான ‘Yesterday” தான் மெக்கார்ட்னியின் ‘கனவு'ப் பாடல்.

எனது வேதியியல் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பல பாடங்கள் ஞாபகத்திலிருந்து ஆவியாக பறந்து விட்டன. ஆனால் அவர் சொன்ன ஒரு கனவு இன்றும் பசுமையாக. ப்ரெட்ரிக் ஆகஸ்ட் கிகுளே ஸ்ட்ரோனிட்ஸ் என்ற ஜெர்மன் அறிவியலாளர் கனவில் ஒரு பாம்பை கண்டார். அந்த பாம்பு தன் வாலை தானே தின்பது போன்ற கனவு காட்சி. அக்கால கட்டத்தில் பென்சீன் வேதிப்பொருளின் மூலக்கூறு அமைப்பைக் கண்டு பிடிக்க அவர் முயன்று கொண்டிருந்தார். வாலைக் கடிக்கும் பாம்பின் கனவு தான் அவர்  வளைய வடிவ பென்சீன் அமைப்பைக் கண்டுபிடிக்க உதவியதாம்.

பெர்சிய சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென்று மேற்குலகு  விரும்பியது. அதை வழிநடத்த சரியான ஆளாக முடிவு செய்யப்பட்டவர் மாசிடோனியாவின்  மன்னன் இரண்டாம் பிலிப். பெர்சியா மீது படையெடுக்க ஆரம்ப கட்ட திட்டமிடுதலின் போது இரண்டாம் பிலிப் கொல்லப்பட்டு இளம் வயதில் ஆட்சிக்கு வருகிறார், அவரது மகன் அலெக்சாண்டர்.

அலெக்சாண்டரின் வெற்றிப்பயணத்தில் பெர்சியாவும் ஒரு கனவாகத் தொடர்கிறது. அந்நாட்டை நோக்கிச் செல்லும் வழியில் ஒவ்வொரு பகுதியாக வெற்றிக்கொண்டுவரும் இவர் அடுத்ததாக ஜெருசலேம் மீது படையெடுக்க வேண்டும். படையெடுப்பு பற்றிய தகவல் ஜெருசலேமின் மதகுருக்களின் தலைமை குருவான ஜதுவா என்பவரை எட்டுகிறது.

போரிடத் தயாராக ஜெருசலேமை அலெக்சாண்டரின் படை நெருங்கும் போது எல்லையில் போர் வீரர்களுக்கு பதிலாக வாத்தியங்கள் முழங்க விருந்தும், மதுவும் தயாராக வரவேற்கிறது.

குதிரையை விட்டு கீழிறங்கும் அலெக்சாண்டர் விருந்தை நோக்கிச் செல்ல முற்பட, தனியாக போகக் கூடாது என்று சக தளபதிகள் தடுத்தனர். ஆனால் அவர்களை ஒதுக்கிவிட்டு தனியே  சென்றார் அலெக்சாண்டர்.

வரவேற்ற ஜதுவாவைப் பார்த்து அலெக்சாண்டர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய கனவில் உங்களைப் போன்றதொரு மதகுரு தோன்றி பெர்சியாவை வெல்வதற்கு உதவுவதாக கூறியதாக சொன்னார். ஜதுவாவும் தனது கனவில் கடவுள் வந்து அலெக்சாண்டருக்கு உதவச் சொன்னதாகக் கூறினார்.இதற்கு பின் அலெக்சாண்டர் பெர்சியாவை வெற்றி கொள்கிறார்.

அலெக்சாண்டரின் வாழ்வு இரண்டு கனவுகளின் பின்னணியில் புனையப்படலாம். ஒன்று பெர்சியாவை வீழ்த்த வேண்டுமென்கிற கனவு. மற்றொன்று ஜதுவா பற்றிய கனவு. ஜதுவாவைக் கண்டதாகச் சொன்ன  கனவின் வழியாக தனது போர்களின் தவறை நியாயப்படுத்த கடவுளை துணைக்கழைத்தார் அலெக்சாண்டர் என்ற குரல்களும் உண்டு. இதுபற்றிய கேள்விகளுக்கு “Myths are public dreams, Dreams are Private Myths"” என்கிற ஜோசப் கேம்பலின் வார்த்தைகள் பதிலாகிறது.

கனவு என்றால் தூக்கத்தின் போது ஒருவரின் சிந்தனையில் ஏற்படும் எண்ணங்கள், ஒரு மனிதரின் விருப்பமான ஆசை, அவரது லட்சியம், இலக்கு என்று அகராதி குறிப்பிடலாம்.

தூக்கத்தில் வரும் அனேகமானவை பயம் சார்ந்ததோ அல்லது ஆசை சார்ந்தோ நிகழ்வது தான்.

சிலரது / சில அமைப்புகளின் கனவுகள் (அ) ஆசைகள் விபரீதமாகவும் உள்ளன.

"Man is a genius when he is dreaming" என்கிறார் அகிரா குரோசோவா.

இந்த அந்திமழையில் வரும் சிறப்புப் பக்கங்கள் கனவுகளை 360 டிகிரியில் அலசுகிறது சுவாரஸ்யமாக. அமெரிக்க சிந்தனையாளர் குளோரியா ஸ்டீனெம்  சொல்கிறார், ‘ கற்பனையோ கனவோ இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒரு செயலின் மீதான பரவசமே இருக்காது. கனவு காணுதல் என்பதே ஒருவிதமான திட்டமிடல்தான்.‘

கனவு காணுங்கள். உங்கள் கனவு உலகை மேம்படுத்த திட்டமிடட்டும்!

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

அக்டோபர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com